முதலிலேயே
ஒரு விஷயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன். யார் மனதையும் புண்படுத்த இதை
எழுதவில்லை. என்றாலும் இம்மாதிரியான வற்புறுத்தல் மனதைக் காயப்
படுத்துகிறது.
முந்தாநாள் எங்க குடியிருப்பு வளாகத்தில் எங்க குடியிருப்பின் எதிரே குடி இருக்கும் பெண்மணி திருச்சி செல்வதற்காக அம்மாமண்டபம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்திருக்கிறார். அவருக்குக் கொஞ்சம் தோல் பிரச்னை உண்டு. ஆகவே கைகளை மணிக்கட்டு வரை மூடிய வண்ணம் ரவிக்கை அணிவார். அதைக் கவனித்த ஒரு பெண்மணி என்ன, ஏது என விசாரிக்கிறார். அவரும் ஏதோ கேட்கிறாங்களே என தன் பிரச்னையைச் சொல்ல, உடனே அந்தப் பெண்மணி அவருடைய பேச்சை வைத்து அவர் அரங்கன் மேல் கொண்டிருக்கும் பக்தியை உணர்ந்து,
"இந்தப் பிரச்னைக்கு உங்க அரங்கனால் என்ன பண்ண முடியும்? அவர் தான் மீளா உறக்கத்தில் இருக்கிறாரே! நீங்க எங்க மதத்தில் சேருங்க. எங்க கடவுள் உடனே குணப்படுத்துவார். பத்தே நாட்களில் உங்க தோல் சரியாயிடும். கண்ணை மூடிட்டு இருக்கும் கடவுளை ஏன் நம்பறீங்க? அவரால் எல்லாம் குணப்படுத்த முடியாது! உங்க வீட்டுக்கு வந்து எல்லார் கிட்டேயும் பேசறேன். வீட்டு விலாசம் கொடுங்க. இந்தக் குறிப்பிட்ட பணிக்காக நாங்க இந்தக் குறிப்பிட்ட சங்கத்திலே இருக்கோம். " அப்படினு சொன்னதோடு இல்லாமல் அரங்கனைப் பற்றியும் கொஞ்சம் ஏதேதோ பேசி இருக்காங்க. அவங்களோட மதத்தில் சேர்ந்தால் எல்லாம் சரியாகும்னு சொல்லி சேரச் சொல்லி வற்புறுத்தி இருக்காங்க. எங்க சிநேகிதிக்குப் பயம் வந்து அப்போது வந்து நின்ற ஒரு பேருந்து எங்கே போகுதுனு கூடப்பார்க்காமல் ஏறிட்டாங்களாம். நல்லவேளையா அந்த அம்மா பின் தொடரவில்லை.
இதோடு இல்லாமல் சமீப காலமாக வெளிநாட்டு மத போதகர்களுக்கான விசா சட்டங்களும் தளர்த்தப் பட்டு அவங்க எத்தனை காலம் வேணும்னாலும் இருக்கலாம் என்கிறாப்போல் மாற்றி இருப்பதாகச் சில மடல்களும் தெரிவிக்கின்றன. இது அரசாங்க விஷயம். விட்டு விடுவோம். நமக்குத் தேவையில்லை. ஆனால் தெருவோடு போகிறவங்களைக் கூப்பிட்டு மதம் மாறச் சொல்வது நியாயமா?
நம் சார்ந்திருக்கும் மதத்தில் நமக்கே நம்பிக்கை இல்லை என்றால் தான் இன்னொரு மதத்தில் இருப்பவர்களை நம் மதத்துக்கு இழுக்கத் தோன்றும் என எனக்குப் படுகிறது. அதே போல் மதம் மாறுபவர்களும் முதலில் அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் கடவுளர் மேல் நம்பிக்கை இல்லை என்பதால் தான் இன்னொரு மதக் கடவுளைத் தேடிப் போகின்றனர். இவர்கள் எப்படி பின்னர் தாங்கள் சார்ந்திருக்கும் மதக் கடவுளை நம்புவார்கள்?
இப்படி மாறச்சொல்லிக் கட்டாயப் படுத்த வேண்டாமே. அவரவராக இஷ்டப் பட்டு வந்து மாறுவது தனி. அது சொந்த விஷயம். ஆனால் தெருவில் போகிற வருகிறவர்களை அழைத்து வலுக்கட்டாயமாக மதம் மாறச் செய்வது என்பது கொஞ்சம் கூட ஏற்கக் கூடியதாக இல்லை. இதைப் போல இன்னும் சிலதும் இருக்கு. ஆனால் ரொம்பவே குற்றம் காணுகிறாப்போல் வேண்டாம்னு விட்டுட்டேன்.
"............எங்கள் சமய நூல்கள் எதையும் படிக்காமலேயே எங்களை மிகக் கேவலமாக விமர்சிக்கத் துணியும் உங்கள் முட்டாள்தனத்தை என்னென்பது"
இவ்வாறு கம்பீரமாகக் கேட்டார் இந்த ஹிந்து மதக் காவலர்.
No comments:
Post a Comment