நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் பிரிட்டிஸ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து நேரடியாகப் போராட்டத்தில் இறங்கினார். அவருக்கு எதிராக பல அபாண்டமான அவதூறுகள் எழுந்தன. அவற்றில் அரைப்பங்கை பிரிட்டிஷ் அரசு செய்தது என்றால் மிகுதிப் பங்கை அன்றைய இந்தியத் தலைவர்கள் செய்தார்கள் என்பதே வரலாற்று உண்மையாகும்.
‘சுபாஸ் சந்திரபோஸ் அவசரக்காரர்-ஆத்திரக்காரர்’
ஆனால் நேதாஜியோ ஒரு முழுமையான தேசபக்தனுக்குரிய அம்சங்கள் அனைத்தும் கொண்ட ஒரு தன்னிகர் இல்லாத் தலைவராக செயல்பட்டார். “இந்தியா வாழ்ந்தால் யாரே வீழ்வார்? இந்தியா வீழ்ந்தால் யாரே வாழ்வார்?” என்று முழங்கிய போராளி அவர்.
நேதாஜியின் வாழ்க்கை அனுபவங்களும் அபூர்வமானவையே! தியாக உணர்வும், துறவு மனப்பான்மையும், இளமைப்பருவம் முதலாகவே நேதாஜியின் வாழ்வொடு பின்னிப்பிணைந்து இருந்தன. தனது 16வது வயதில் துறவியாக விரும்பி தனது வீட்டை விட்டே வெளியேறினார். 24வது வயதில் மிகுந்த செல்வாக்கைக் கொண்ட உயர் பதவியான ஐ.சி.எஸ் உத்தியோகத்தை தூக்கி எறிந்தார். கட்டாக் நகரில் தாம் பிறந்த மாளிகையை தனது 35வது வயதில் தேசத்திற்காக அர்ப்பணித்தார். 42வது வயதில் முழுப்பெரும்பான்மைப் பலத்தோடு வெற்றி பெற்றிருந்த அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவியைத் தூக்கி எறிந்தார்.
44வது வயதில் தன் உயிரினும் மேலாகக் கருதிய பாரத தேசத்தை விடுவிக்க வேண்டும் என்பதற்காக தன் தேசத்தை விட்டே வெளியேறி, தன் உயிரையே பணயம் வைத்து ஜேர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள்.!
‘ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல’ என்று முழங்கியவர் நேதாஜி.
அதேநேரம் காங்கிரஸ் தவைர்கள் சிலரது செய்கைகள் நேதாஜியை மனம் நோக வைத்தன. என்பதையும் இங்கு நாம் குறிப்பிட விரும்புகின்றோம். சில சம்பவங்களை வெளியில் இப்போது அதிகம் பேசப்படாத சில சம்பவங்களை இங்கு நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.
1928ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த மராட்டிய மாநில காங்கரஸ் அரசியல் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய நேதாஜி, பூரண சுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்று பிரகடனம் செய்தார். ஆனால் மோதிலால் நேருவும் மகாத்மா காந்தியும் இந்தியாவிற்கு ஒரு பூரண குடியேற்ற நாட்டு அந்தஸ்து தந்தாலே போதுமானது என்ற ரீதியில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, பூரண சுதந்திர இந்தியா என்ற பிரகடனத்தை புறம் தள்ள்pனார்கள். ஆனால் இந்த பூரண சுதந்திர இந்தியா என்ற தீர்மானம் ஏற்கனவே 1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற 42வது காங்கிரஸ் மகாசபைக் கூட்டாத்தில் நிறைவேற்றப் பட்டிருந்தது. ஆகவே ஏற்கனவே நிறைவேற்றப் பட்டிருந்த தீர்மானத்திற்கு எதிராக மகாத்மா காந்தியும், மோதிலால் நேருவும் முடிவு எடுத்ததை நேதாஜி எதிர்த்தார். மகாத்மா காந்தியின் இந்த முடிவு பிழை என்றும் பூரணசுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்ற பிரகடனமே சரியானது எனறும் நேதாஜி வாதிட்டார். நேதாஜியின் தர்க்கம் தீர்க்க தரிசனமாகப் பின்னர் பலித்தது.
1929ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி லாகூரில் இந்திய காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அப்பொழுது பூரண சுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்ற பிரகடனத்தை மகாத்மா காந்தியே முன்மொழிந்தார் அதனை ஆதரித்துப் பேசிய நேதாஜி கீழ்வருமாறு கூறினார்.
‘அன்று இத்தீர்மானத்தை எதிர்த்த அதே மகாத்மாஜியால் அன்று முன்மொழியப்பட்டு எங்களது தீர்மானம் பண்டித மோதிலால் நேருவால் ஆமோதிக்கப்பட்டு அன்று நிறைவேறுவதை காண நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் இந்தத் தீர்மானத்தை கிடப்பில் போட்டு விடாமல் உள்ளபடியே நாம் செயல்பட வேண்டுமானால் அதற்கு நான் கூறும் ஒரு திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளும்படி இந்தச் சபையை நான் கேட்டுக் கொள்கின்றேன்.’
‘பரிபூரண சுதந்திரத் திட்டம்’ வெற்றி பெற்று இங்குள்ள பிரிட்டிஸ் ஆட்சியை நாம் சிறிதும் மதிக்கக் கூடாது பிரிட்டிஸ் அரசாங்கத்தை திணறச் செய்வதற்காக அயர்லாந்தில் அமைக்கப்பட்டது போல ஒரு சுதந்திர இந்திய போட்டி அரசாங்கத்தை நாம் அமைக்க வேண்டும்’ என்று ஒரு திருத்தத்தை நேதாஜி கொண்டு வந்தார். சுபாஸ் சந்திரபோஸின் திருத்தத்திற்கு பதில் அளித்துப் பேசிய மகாத்மாகாந்தி, “சுபாஸ் கூறுவது சிறந்த யோசனைதான்! ஆனால் இன்று அதற்கு வேண்டிய மக்கள் சக்தியும் சாதனங்களும் கிடைக்குமா என்பதைச் சற்று சிந்தித்தல் அவசியம்”- என்று கூறி நேதாஜியின் திருத்தத்தை நிராகரித்தார். நேதாஜி கொண்டு வந்த அத்திருத்தம் தோல்வியுற்றது.
அதுமட்டுமல்ல-அன்றைய தினம் இன்னுமொரு முறைகேடான விடயமும் அந்த லாகூர் மாநாட்டில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவிற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலை ஜனவரி 2ம் திகதி காலையில் நடக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ஜவகர்லால் நேரு அறிவித்திருந்தார். ஆனால் சுபாஸ் சந்திரபோசும் மற்றைய வங்காளத் தலைவர்களும் இல்லாத நாளான ஜனவரி முதலாம் திகதியன்றே செயற்குழு உறுப்பினர் தேர்தலை நேரு நடாத்தி விட்டார். அதாவது அறிவிக்கப்பட்ட நாளுக்கு ஒரு நாள் முதலாகவே இத்தேர்தல் நடாத்தப்பட்டது. இதனால் செயற்குழு உறுப்பினர் பட்டியலில் நேதாஜியின் பெயர் இடம் பெறவில்லை. சரியாக சொல்லப்போனால் நேதாஜிக்கு ஆதரவாளர்களைத் தவிர்த்து அவருக்கு எதிரானவர்களை அந்தத் திடீர் தேர்தல் அங்கத்தவர்களாக நியமித்திருந்தது.
செய்தியை அறிந்த நேதாஜி திடுக்கிட்டு போனார். ஜவகர்லால் நேருவா இப்படிச் செய்தார் என்று நேதாஜியால் நம்பவே முடியவில்லை. அடுத்தநாள் மாநாட்டில் பேசிய நேதாஜி செயற்குழு உறுப்பினர் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி வன்மையாக இச்செயலைக் கண்டித்தார். காங்கிரஸ் செயற்குழு, மிதவாதிகளின் கைப்பொம்மையாகச் செயல்படுவதாகக் கூறிய நேதாஜி ‘காங்கிரஸ் ஜனநாயக கட்சி’ என்ற புதிய கட்சியை அமைப்பதாக அன்றைய தினம் தெரிவித்தார்.
நேதாஜியின் அரசியல் வாழ்க்கை போராட்டமும், சிறைவாசமுமாகத் தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்து இந்திய சுதந்திரப் பேராட்டத்திற்காக அவர் ஆதரவு திரட்டியும் வந்தார். வியன்னா நகரில் நேதாஜி இருந்தபோது ஜவகர்லால் நேரு கடிதம் ஒன்றை நேதாஜிக்கு எழுதினார். லட்சுமணபுரியில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மகாசபைக்கு சுபாஸ் சந்திரபோஸ் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று நேரு வேண்டியிருந்தார். ஆனால் பம்பாய் துறைமுகத்தை நேதாஜி வந்தடைந்த போது அவரைப் பயங்கரவாதி என்றும், பயங்கரவாதத்தை பரப்புகின்ற தலைவர் என்றும் பிரிட்டிஸ் அரசு குற்றம் காட்டிக் கைது செய்தது.
சுமார் 11 மாதங்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும் 1937ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதியன்று கல்கத்தாவில் காங்கிரஸ் கட்சித் தலைவராக நேதாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டாவது உலக மகாயுத்தம் அப்போது ஆரம்பமாகியிருந்தது. இந்த யுத்தத்தில் இங்கிலாந்து முக்கிய பங்கு வகிக்கும் இத்தருணத்தில், அதற்கு இடையூறு செய்வது போல் சுதந்திரத்திற்கான கிளர்ச்சிகளைச் செய்யக்கூடாது என்பது மகாத்மா காந்தியின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் சுபாஸ் சந்திரபோஸோ வேறு கருத்தினைக் கொண்டிருந்தார்.
“இந்த யுத்தத்தில் இந்தியாவின் அனுமதியை இங்கிலாந்து கேட்கவில்லை கேட்காமலே யுத்தத்தில் நமது நாட்டைப் பிணைத்தவர்களுக்காக, நாம் ஏன் தயங்க வேண்டும்?. ஏன் தயவு காட்டவேண்டும்? நம்முடைய சுதந்திரத்தைப் பெறுவதற்காக கடவுள் தந்த அருமையான வாய்ப்பு இது. இதுவே தகுந்த தருணம் இதனை நழுவ விடுவது மதியீனமாகும்”- --என்பதே நேதாஜியின் நிலைப்பாடாக இருந்தது.
போராட்டம் இன்றிச் சுதந்திரத்தை பெற யாராலும் முடியாது. போராடித்தான் சுதந்திரத்தை பெறவேண்டும் குறைந்த பட்ச செயல் திட்டம் ஒன்றை வைத்துக் கொண்டு காங்கரஸ் கட்சி சுதந்திரப் போராட்டத்தைத் துரிதப்படுத்த வேண்டும். என்றும் நேதாஜி வற்புறுத்தி வந்தாலும். இந்த வேளையில் மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வந்தது. நேதாஜிக்கு எதிராக பட்டாபி சீத்தாராமையா நிறுத்தப்பட்டார்.
பட்டாபி சீத்தாராமையருக்கு ஆதரவாக காந்திஜி ஜவகர்லால் நேரு, ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல், கிருபளானி போன்ற நாடறிந்த தலைவர்கள் இருந்தார்கள். 1939ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் திகதி அன்று காங்கரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மகத்தான வெற்ற்p அடைந்தார். நேதாஜியின் வெற்றி மகாத்மா காந்திக்கும், மற்றவர்களுக்கும் பேரதிர்ச்சிpயை அளித்தது. நாட்டு மக்களுக்கோ அது அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் நிலைமை மோசமானது. இவ்வேளையில் மகாத்மா காந்தியும் தனது கருத்தை வெளிப்படையாகவே சொன்னார். “சுபாஸ் சந்திரபோஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராகக் கூடாது என்பதற்காகவே நான் பட்டாபி சீத்தாராமய்யாவை தேர்தலில் நிற்கச் சொன்னேன். எனவே பட்டாபியின் தோல்வி, என்னுடைய தோல்வி என்பதை ஒப்புக் கொள்கிறேன்”- என்று மகாத்மா கூறினார். மகாத்மா காந்தியின் அறிக்கையைப் பார்த்து நேதாஜி திடுக்குற்றார். தமது வெற்றியை மகாத்மா காந்தி தன்னுடைய தோல்வி என்று குறிப்பிட்டதை எண்ணி நேதாஜியின் மனது வேதனையுற்றது.
காந்தியடிகளின் விருப்பத்தை அறிந்த மற்றைய காங்கரஸ் தலைவர்கள் நேதாஜியுடன் ஒத்துழைக்க மறுத்தார்கள். நேதாஜி தன்னுடைய கடமையை செவ்வனே செய்ய முடியாத நிலையை காங்கரஸ் கட்சிக்குள் சிலர் உருவாக்கினார்கள. ஆகவே வேறு வழியின்றி நேதாஜி தன்னுடைய தலைமைப் பதவியை இராஜினாமா செய்தார். கல்கத்தாவில் உள்ள ஹஸ்ரா பூங்காவில் நேதாஜி நிகழ்த்திய நான் ஏன் இராஜினாமா செய்தேன் என்ற சொற்பொழிவு, செறிவும், பொருத்தமும் நிறைந்த பிரசித்தமான ஒன்றாகும்.
நேதாஜியோ வாளாவிருக்கவில்லை. ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் கைழுத்திட்டார். இந்திய நாட்டில் வேரூன்ற்pய அன்னிய ஆட்சியை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்த மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தில் கூறியிருந்தன.
நேதாஜி பல நாடுகளுக்கும் சென்று, இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டியெழுப்பி பயிற்சி கொடுத்தார். பயிற்சி முற்றுப்பெற்ற வீரர்களைப் பகுதி பகுதியாக பிரித்தார். சிங்கப்பூர், பர்மா, மலேயா, தாய்லாந்து நாடுகளுக்குத் தன்னுடைய படை வீரர்களை அனுப்பினார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் அங்கத்தவர்களாக ஜான்சிராணி என்கின்ற பெண்கள் படையும் பாலர் படையும் இருந்தன. பன்ன்pரண்டு வயத்pற்கு மேல் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட இளையவர்களின் படையே பாலர் படையென அழைக்கப்பட்டது. இந்தப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையவர்கள் இருந்தார்கள்.
இரண்டாவது உலகப்போரில் ஜப்பான் கைப்பற்றிய அந்தமான் நிக்கோபர் தீவுகளை ஜப்பான் அரசு நேதாஜியிடமே கையளித்தது. 1943ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி இந்தியாவின் மூவர்ணக் கொடியை அந்தமான் தீவில் நேதாஜி பறக்க விட்டார்.
1944ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதியன்று நேதாஜியின் இராணுவம் இந்திய மண்ணில் கால் பதித்தது. நாகலாந்து மணிப்பூர் சமஸ்தானங்களைக் குறிவைத்து படைகள் முன்னேறின. இடைவிடாது போரிட்டு மணிப்பூரின் பல பகுதிகளை இந்திய தேசிய இராணுவம் கைப்பற்ற்pயது. மணிப்பூரின் தலைநகரம் இம்பால் அதைக் கடந்து விஸ்ணுபூர் என்று நேதாஜியின் இராணுவம் முன்னனேறியது. விஸ்ணுபூர் பிடிபட்டால் பிறகு வங்காளம் டெல்லி என்று முன்னேற வாய்பிருந்த வேளையில் ஜப்பான் அமெரிக்காவிற்கு அடிபணிந்தது. நேதாஜியின் படை பர்மாவுக்கு பின்வாங்க நேர்ந்தது. நேதாஜியோ கலங்கவில்லை. நாம் ஆடிய முதல் ஆட்டம் இது. இதில் தோற்றுப் போனாலும் இத்தோல்வியே இனிவரும் வெற்ற்pகளுக்கு படிக்கல்லாக அமையும். என்று முழங்கினார். ஆனால் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதியன்று சரியாக 61 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் நேதாஜி உயிர் இழந்ததாக அறியப்பட்டது.
நேதாஜி அஞ்சா நெஞ்சம் படைத்த தீர்க்கதரிசியாக விளங்கினார். ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்து 61 ஆண்டுகளுக்கு முன்பு நேதாஜி கூறியது அப்படியே நடக்கின்றது. “அமெரிக்க எஜமானனின் கைப்பிடிச் சங்கிலியில் பிணைக்கப்பட்ட ஏவல் நாயாகவே எதிர்காலத்தில் பிரிட்டன் விளங்கும்” என்று நேதாஜி அன்றே சொன்னார்.
சற்று ஆழமாக கூர்ந்து நோக்கினால் நேதாஜியின் தூண்டுதலும் போராட்டங்களும், கருத்துக்களும் நடவடிக்கைகளும்தான் காந்தியடிகள் ஆக்கிரோசமான பாதையை உத்வேகத்துடன் தேர்ந்தெடுக்க காரணமாக இருந்தது என்பது புலனாகும்.
No comments:
Post a Comment