Monday, February 24, 2014

ஏகநாதர்

பரமசாதுவான ஏகநாதரை கோபத்திற்குள்ளாக்க வேண்டும் என்று பணக்காரன் ஒருவன் திட்டமிட்டான். அதற்காக ஒரு முரடனைக் கூப்பிட்டு ஏகநாதர் கோதாவரிக்கரையில் உட்கார்ந்து ஜெபம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கெதிரே உட்கார்ந்து ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை தாம்பூல எச்சிலை அவர்மீது துப்பு! என்று சொல்லி அனுப்பினான். முரடன் ஏகநாதருக்கு கோபமூட்டி விட்டால் நூற்றெட்டு ரூபாய்களைத் தருவதாகவும் ஆசை காட்டினான்.

அந்த முரடன் கோதாவரி ஆற்றங்கரைக்குப் போனான். பாண்டுரங்கனை தியானித்து ஜெபம் செய்து கொண்டிருந்த ஏகநாதரின் மேல் தாம்பூல எச்சிலை ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை துப்ப ஆரம்பித்தான். ஒவ்வொரு முறையும் அவர் எழுந்திருந்து பாண்டுரங்கனின் திருநாமத்தை சொல்லியபடியே கோதாவரி நதியில் நீராடிவிட்டு திரும்பி வந்து ஜெபம் செய்யத் தொடங்கினார். ஆனால், அவர் அவனை கோபிக்கவில்லை. நூற்றெட்டு தடவைகள் அப்படி செய்து முடிந்ததும் அந்த முரடன் ஏகநாதரின் காலில் விழுந்து, சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டான்.

எதற்காக மன்னிப்பது? உன்னால் எனக்கு புண்ணியம் அல்லவா கிடைத்தது. தினந்தோறும் பாண்டுரங்கனின் திருநாமத்தைச் சொல்லியவண்ணம் ஒருமுறை தான் கோதாவரி நதியில் நீராடுவேன். ஆனால், இன்று உன்னுடைய உதவியினால் நூற்றெட்டு தடவைகள் நீராடினேன் அல்லவா? எவ்வளவு புண்ணியம் கிடைத்திருக்கிறது? இதற்கு உதவியவன் நீ தானே? என்று பொறுமையுடன் சிரித்தபடியே பதில் கூறினார்.அந்த முரடன் கண்ணீர் சிந்தியபடி சுவாமி தங்களைப் போன்ற மகாத்மாவை நான் அவமானப்படுத்த எண்ணி இருக்கமாட்டேன். நான் ஓர் ஏழை. இதன் மூலம் தங்களுடைய கோபத்தை தூண்டி விட்டால் எனக்கு நூற்றெட்டு ரூபாய் கொடுப்பதாக ஒரு பணக்காரர் ஆசை காட்டினார். அதனால் தான் அப்படிச் செய்தேன் என்றான்.

அப்பா! இதை முதலிலேயே சொல்லி இருக்கக் கூடாதா! நீ ஒரு தடவை என்மீது துப்பியவுடனே நான் கோபப்பட்டிருப்பேன். உனக்கு பணம் கிடைத்திருக்குமே ஐயோ பாவம் என்று இரக்கப்பட்டார் ஏகநாதர்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...