திருவண்ணாமலை என்று சொன்னாலும், இம்மலையில் ஏற்றப்படும் தீப ஜோதி யைத் தரிசித்தாலும் முக்தி கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.
இம்மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. எட்டு மைல் சுற்றளவுள்ளது.
கிருதயுகத்தில் இம்மலை அக்னி மலையாகவும்; திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்; துவாபரயுகத்தில் தங்க மலையாகவும்; கலியுகத்தில் ஞானிகள், சித்தர்கள் பார்வையில் மரகத மலையாகவும்- பாமர மக்களுக்கு கல் மலையாகவும் காட்சி தருகிறது. இம்மலையில் ஏராளமான மூலிகைகளும் குகைகளும் உள்ளன. இம்மலை கடலில் மறைந்து போனதாகக் கருதப்படும் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி' என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர் பால்பிரண்டன் அவருடைய ஆய்வு நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். இவர் மகான் ரமண மகரிஷியிடம் ஆசிபெற்றவர்.
எரிமலைக் குழம்புதான் இறுகிப்போய் மலையாகி உள்ளது என்று நவீன விஞ்ஞான ஆராய்ச்சியும் கூறுகிறது.
இமயமலையைவிட திருவண்ணாமலை மிகவும் பழமையானது என்பதை ஆதாரத்துடன் டாக்டர் பீர்பால் சகானி என்ற புவியியல் அறிஞர் நிரூபித்துள்ளார்.
இம்மலை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் பஞ்சகிரியாகக் காட்சி தருகிறது. இத்திருக்காட்சியை கிரிவலம் வரும்போது தரிசிக்கலாம்.
கீழ்திசையிலிருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். மலையைச் சுற்றும் வழியில் இரண்டாகத் தெரியும். மலையின் பின்னால் மேற்கு திசையிலிருந்து பார்த்தாலும் கௌதம ஆசிரமத்திற்கு எதிரிலிருந்து பார்த்தாலும் மூன்று பிரிவாகத் தெரியும். இதை திரிமூர்த்தி தரிசனம் என்று போற்றுவார்கள்.
இந்தத் திரிமூர்த்தி தரிசனம் காணும் சாலையோரம், சேஷாத்ரி சுவாமிகள் தன்னை முழுவதுமாக மண்ணால் மூடிக்கொண்டு தவமிருந்த இடம் உள்ளது. இந்த இடத்தில் மட்டும் மண், கறுப்பு- சிவப்பு நிறத்தில் காணப்படும் அதிசயத்தைக் காணலாம். அங்கிருந்து சற்று நடந்தால் தொடர்ச்சியாக நான்கு மலையைப்போல் காட்சி தரும். வலம் வந்து முடிக்கும் தறுவாயில் மலை ஐந்து முகங்களுடன் காணப்படும்.
திருமால், பிரம்மா ஆகியோரின் அகந்தையை நீக்கி சிவபெருமான் லிங்கோத்பவராக- ஜோதிப் பிழம்பாகக் காட்சி தந்த திருத்தலம் இது. இந்த ஜோதி திருவுருவத்தின் வெம்மை தாங்காமல் தேவர்கள் வருந்தித் துன்பப்படவே, சிவபெருமான் மலையாகி நின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
இம்மலையில் தவமிருந்த பார்வதிக்கு சிவபெருமான் தன் உடலில் பாதி இடத்தை அளித்து, அர்த்தநாரீஸ்வரர் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றார்.
இம்மலை உச்சியில் தீபம் ஏற்றி வலம் வந்த சிறப்பினை பார்வதிதேவி பெற்ற நாள் திருக்கார்த்திகை என்று புராணம் கூறுகிறது.
திருவண்ணாமலை வலம் வருவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். ஒருமுறை வலம் வரவேண்டும் என்று நினைத்து ஓரடி எடுத்து வைத்தால் ஒரு யாகம் செய்த பலனுடன் உலகை வலம் வந்த பலனும்; இரண்டடி எடுத்து வைத்தால் ராஜசூய யாகப் பலனுடன் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும்; மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகப் பலனுடன் தான- தர்மங்கள் பல செய்த புண்ணிய பலன்களும்; நான்கு அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் செய்த பலன்களும் கிட்டும் என்று அருணாச்சலப் புராணம் கூறுகிறது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள கோவில்களையும் லிங்கங்களையும் தரிசித்தால் பேறுகள் பல பெறலாம் என்றும் புராணம் கூறுகிறது.
கிரிவலப் பாதையில் முதலில் தரிசனம் செய்ய வேண்டிய லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் அருள்புரியும் இந்திர லிங்கத்தை வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
தென்கிழக்கு திசையில் வலது பக்கம் உள்ளது இரண்டாவது லிங்கமான அக்னி லிங்கம். செங்கம் சாலையில் தாமரைக்குளம் அருகே அமைந்துள்ள இந்த லிங்கத்தை வழிபட்டால் நோய் பயம் நீங்கும்; உடல் ஆரோக்கியமாகத் திகழும்.
மூன்றாவதான எம லிங்கம் தெற்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தின் அருகே சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி எம லிங்கத்தை வழிபட எமபயம் நீங்கும். இறுதிக் காலத்தில் எமவாதனை வாட்டாது.
தென்மேற்கு திசையில் நான்காவதான நிருதி லிங்கம் உள்ளது. இங்கிருந்து மலையைப் பார்த்தால் இறைவனும் இறைவியும் இணைந்த தோற்றம்போல் ஓர் அபூர்வ காட்சியைத் தரிசிக்கலாம். இங்குள்ள தீர்த்தம் சனி தீர்த்தம் எனப்படுகிறது. இந்த லிங்கத்தை வழிபட சனியின் தாக்கம் குறையும்.
ஐந்தாவதான வருண லிங்கம் மேற்கில் உள்ளது. இங்கு வருண தீர்த்தம் உள்ளது. வருண லிங்கத்தை வழிபட்டால் தீராத நோய்கள் நீங்கும்; நீரிழிவுத் தாக்கம் இருந்தால் கட்டுக்குள் அடங்கும்.
ஆறாவதான வாயு லிங்கம் வடமேற்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தைத் தரிசித்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும்; மூட்டுவலி, முழங்கால் வலி இருந்தால் நாளடைவில் குணமாகும்.
வடதிசையில் உள்ளது ஏழாவதான குபேர லிங்கம். இந்த லிங்கத்திற்கு காசுகளை (நாணயங்கள்) அர்ப்பணித்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.
எட்டாவது லிங்கமான ஈசான்ய லிங்கம் வடக்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட துன்பங்கள் போகும்.
இந்த அஷ்ட லிங்கங்களுக்கு எதிரில் உள்ள நந்திகள் லிங்கத்தைப் பார்த்த வண்ணம் காட்சி தராமல் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையே சிவபெருமான் என்பதால் அனைத்து நந்திகளும் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளன.
மேலும், கிரிவலப் பாதையில் ஏராளமான கோவில்கள் உள்ளன. விநாயகர், துர்க்கை முதலான ஆலயங்களையும் வழிபட்டுப் பேறுகள் பெறலாம்.
கிரிவலம் வருவோர் திருவண்ணாமலையை மட்டும் வலம் வராமல், "அடி அண்ணாமலை' என்று அழைக்கப்படும் மலையையும் சேர்த்து வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வந்தால் எதிர்பாராத நல்ல பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை
No comments:
Post a Comment