தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ளது , அலங்கு நாய்.
தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சிப் பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது.
உலகப் புகழ்பெற்ற விலங்கியலாளரான டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும்போது, இப்படம் அலங்கு நாய்தான் என்பது உறுதியாகிறது. கோயிலின் உட்பிரகாரத்தில் வரையப்படும் அளவுக்கு அந்த நாய் தகுதி பெற்றிருந்தது அதன் முக்கியத்துவத்தையே நமக்கு உணர்த்துகிறது.
தமிழ்நாட்டு நாய் இனங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது
அலங்கு. “வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை” என்று நாய்கள்குறித்து தான் தொகுத்த அகராதியில் (Dogs-The Ultimate Dictionary of Over 1000 Dog Breeds) டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதியுள்ளார். தி நேக்கட் ஏப் (The Naked Ape: A Zoologist’s Study of the Human Animal) என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவரும் டெஸ்மாண்ட் மோரிஸ்தான்.
இன்று பேருக்குக் கூட ஒரு அலங்கு கிடையாது. வெளிநாட்டு நாய்களின் மோகத்தில், இந்திய நாய் இனங்களை உதாசீனம் செய்ததால் நம் நாட்டைச் சேர்ந்த நாய் இனங்களே மெதுவாக அழிந்து போயின. அவற்றில் முக்கியமானது அலங்கு. அந்த இனத்தைப் பார்த்த வெகுசிலரே உள்ளனர்.
முன்னாள் அமைச்சரும் வரலாறு, கல்வெட்டு, ஓவியங்களில் மிகவும் ஆர்வம் உடையவருமான தங்கம் தென்னரசுவிடம் இந்த ஓவியத்தின் நகல் ஒன்று இருந்தது. இதுகுறித்து பேசும்போது, “ஏற்கெனவே வரையப்பட்டிருந்த சோழர் கால ஓவியங்களின் மேல் நாயக்கர் காலத்தில் வேறு ஓவியங்களைத் தீட்டிவிட்டார்கள். யதேச்சையாகத்தான் பழைய ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன” என்றார் தங்கம் தென்னரசு.
ராணிப்பேட்டையில் அரசு கால்நடை மருத்துவராகப் பணியாற்றுபவரும், இந்திய நாய் இனங்களைக்குறித்து தகவல்களைச் சேகரித்து வைத்திருப்பவருமான கிஷோர்குமார், “இந்தியாவில் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சி அடைந்த நாய்களுக்குக் காதுகள் நிமிந்துதான் இருக்கும்” என்கிறார். இந்த வகை நாயின் உடலமைப்பு குறித்து விளக்கும் டெஸ்மாண்ட் மோரிஸ், இது 27 அங்குலம் உயரம் கொண்டது என்றும் நல்ல கட்டுமஸ்தான, சதைப்பிடிப்பு கொண்ட கால்களை உடையது மற்றும் இதன் காதுகள் எப்போதுமே நிமிர்ந்து நிற்கும் தன்மையைக் கொண்டவை என்றும் குறிப்பிடுகிறார்.
இந்த ஓவியத்தில் காணப்படும் அலங்கு நாயின் காதுகள் நன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. கூடவே அது தனது நெஞ்சை நிமிர்த்தியபடியும் நிற்கிறது. அலங்கு வகை நாயின் முதுகு நீண்டும், வால் நன்றாக வளைந்தும் காணப்படும். நடக்கும்போது நீட்டித் தனது எட்டுகளை எடுத்துவைத்து
நடக்கும்.
இதன் உடல் செவலை, கருப்பு மற்றும் நன்றாக வெளிறிய மஞ்சள் நிறங்களில்
காணப்படும். சில நாய்களின் மார்புப் பகுதியில் வெள்ளை நிறப் புள்ளிகள் கூட இருக்கும். பெரும்பாலான நாய்களின் முகம் கருப்பாக இருக்கும். எந்த நிறமாக இருந்தாலும் முடியே இல்லாதது போல் உடல் பளபளவென்று இருக்கும் என்று இந்த நாயை நேரில் பார்த்திருக்கும் சிலர் கூறுகின்றனர்
No comments:
Post a Comment