Wednesday, April 15, 2020

முத்து வடுக நாத துரை

கிழக்கிந்திய கம்பெனியின் உயர் அதிகாரி ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ், 1818ல் பினாங் வந்து இறங்கினார்.

ஓய்வெடுப்பதற்காக பினாங்கில் தங்கியிருந்த வெல்ஷைப் பார்க்க ஒரு பார்வையாளர் காத்திருந்தார்.

அவர் ஒரு முதியவர். தோல் சுருங்கி, தலை நரைத்து, உடல் மெலிந்து, கைகள் நடுங்க நின்று கொண்டிருந்த அந்த முதியவரை உற்றுப் பார்த்தான் ஜெனரல் வெல்ஷ்.

"யார்?'

முதியவரால் பதில் சொல்ல முடியாமல் உதடுகள் நடுங்கின. தன்னை வெல்ஷ் அடையாளம் கண்டு பிடித்து விடுவான் என்ற நம்பிக்கையோடு, ஆதரவற்ற கண்களால் ஜெனரல் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் அந்த முதியவர்.

அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

"யார் நீ?' இம்முறை கோபத்தில் வெடித்தது வெல்ஷின் குரல். பயத்தில், ஆடிப் போனார் அந்த முதியவர். கைகளை மடித்து, உடம்போடு ஒட்டிக் கொண்டு, கூனிக் குறுகிப் போய், உதடுகளும், கண்களும் துடிக்க, ஒரே ஒரு சொல் வெளிப்பட்டது முதியவரிடமிருந்து...

"துரைசாமி!'

அந்தப் பெயர் வெல்ஷின் முகத்தில் அறைந்தது. இவனா? இவனா? அந்த துரைசாமியா இவன்?

யார் இந்த "துரைசாமி"?...

எவ்வளவு தொலைவில் எதிரி இருந்தாலும், குறி தப்பாமல் ஈட்டி எறியும் வீரன்... கர்னல் பதவியில் இருந்த போது வெல்ஷுக்கு வளறித்தடி சுழற்றும் வித்தையைக் கற்றுக் கொடுத்த மாவீரன் சின்ன மருதுவின் மகன் தான் இந்த துரைசாமி...

பதினைந்து வயதுப் பையனாக, 1802ல் வெளி உலகக் கொடுமையின் சாயல் கூடப் படியாத குழந்தை முகத்தோடு, தூத்துக்குடியில் கப்பலேற்றப்பட்டு, தீவாந்தர தண்டனைக்காக நாடு கடத்தப்பட்ட அதே துரைசாமி தான்...

தடித்த ஆற்காடு நாணயத்தைத் தன் இரண்டு விரல்களால் வளைத்து எறிந்த பெரிய மருதுவின் பரம்பரையில் உதித்த அதே துரைசாமி தான்...

துரைசாமியைப் பார்த்து இரக்கப்பட்டான் ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ்; ஆனால், கம்பெனி விதிகளுக்கு எதிராக அவனால் துரைசாமிக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை. அவன் வெள்ளை கிறிஸ்தவ அதிகாரி. ஒரு காலத்தில் அவன் மருதுபாண்டியரின் நண்பன். பிறகு அவர்களை வேட்டை நாயாகத் துரத்திப் பிடித்து, தூக்கில் போட்டவனும் அவன் தான்.

கம்பெனி உத்தரவின் படி துரைசாமியைத் தூத்துக்குடி வரை கொண்டு சென்று, கப்பலேற்றி, "பிரின்ஸ் ஆப் வேல்ஸ்' என்ற தீவுக்கு நாடு கடத்தியவனும் அவன் தான்.

பதினாறு ஆண்டுகளில், தீவாந்தர தண்டனையும், கொத்தடிமை வாழ்க்கையும் ஆங்கிலக் கிறிஸ்தவர்களின் கொடுமைகளும் ஒரு இளைஞனை கிழவனாக்கி விட்ட கொடுமை வெல்ஷை உலுக்கியது. ஆனாலும், அவன் என்ன செய்வான். பாவம்!

இந்த மண்ணில் போராடி வீழ்ந்து, சருகாகி, உரமாகி மக்கிப் போன பல குடும்பங்களை, சிதிலமாகிப் போன அவர்களது பரம்பரைகளை ஒரு நொடி ஈரத்தோடு எண்ணிப் பார்க்கத் தான் நமக்கு நேரமில்லையே!

பினாங்கில் வெல்ஷம், துரைசாமியும் சந்தித்த அந்த நிகழ்ச்சி தான் மருதுபாண்டியர் வாரிசு பற்றி ஆதாரபூர்வமாகக் கிடைத்த கடைசிச் செய்தி!

மருது சகோதரர்களின் இளையவரான சின்னமருது மகன் துரைச்சாமியின் இயற்பெயர் முத்து வடுக நாத துரை என்றும் பின்னர் அப்பெயர் துரைச்சாமி என மருவியது...துரைசாமி உட்பட 11 விடுதலைப் போராளிகளைப் பிடித்துக் கொடுத்தால் 1000 கூலிச்சக்கரங்கள் ( 18ம் நூற்றாண்டு நாணயம்) பரிசாக வழங்க்கப்படும் என்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனித் தளபதி கர்னல் அக்னியூ பொது அறிவிப்பை பிரகடனப்பத்தினார். 

மருது சகோதரர்கள் 1801, அக்டோபர் 24 இல் தூக்கிலிடப்பட்ட பின்னர் 15 வயதே ஆன துரைச்சாமி உட்பட 72 விடுதலைப் போராளிகளை மலேயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) 1802, பெப்ரவரி 11 இல் தளபதி வெல்ஸ் நாடு கடத்தி அனுப்பி வைத்தார்

1818 ஆம் ஆண்டு தளபதி வெல்ஸ் (Colonel Welsh) பினாங்குக்குச் சென்ற போது உடல் நலம் குன்றிய தோற்றத்துடன் காணப்பட்ட துரைச்சாமியைக் காண நேரிட்டது. துரைச்சாமியின் இத்தோற்றம் வெல்ஸ் தம் இதயத்தில் கத்தி பாய்ந்தது போன்று இருந்தது எனக் குறிப்பிடுகின்றார்.

1891, மே 18 ஆம் நாள் போராளி துரைச்சாமியின் மகன் மருது சேர்வைகாரன் என்பான் மதுரைக் கலக்டரிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த மனுவில் துரைச்சாமியின் இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். துரைச்சாமி பினாங்கிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். 

அவர் ஆங்கில அரசிடம் பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கியிருக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால் திடிரென துரைச்சாமி நோய்வாய்ப்பட்டு சிவகங்கைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு காலமானார் என்று அவரது மகன் குறிப்பிடுகின்றார்.....

துரைசாமிக்குக் கிடைத்த சிறிது வெளிச்சம் கூட அவரோடு சிறைப்பட்ட மற்ற 71 பேருக்கும் கிடைக்கவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள்? விடை இல்லாத கேள்விகள் கொப்பளிக்கின்றன.

சுதந்திரப் போராட்டம் என்பது இப்படி வெளியே தெரியாமல் போன எண்ணிக்கையற்ற மனிதர்களின் உயிர்த் தியாகத்தால் உருவானது என்பதை அறியும் போது தான் சுதந்திரத்தின் உண்மையான மதிப்பை  முழுமையாக உணர முடியும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...