Thursday, April 30, 2020

முக்கூர் அழகிய சிங்கர்

படித்ததில் பிடித்தது---காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள முக்கூர் என்னும் ஊரில் ராஜகோபாலாச்சாரியார் என்னும் மகான் வாழ்ந்து வந்தார்.

அவர் ஒருமுறை காஞ்சிபுரத்தில் பேருந்து நிறுத்தத்தில் தம் நண்பரோடு பேருந்துக்காகக் காத்திருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த வழிப்போக்கர், முக்கூர் ராஜகோபாலாச்சாரியாரை வித்தியாசமாகப் பார்த்தார். “ஏன் அப்படிப் பார்க்கிறாய்?” என்று ராஜகோபாலாச்சாரியார் கேட்டார்.

“இல்லை! உங்களது குடுமி, நெற்றியிலுள்ள நாமம், உங்கள் பூணூல், பஞ்சகச்சம் இவற்றை எல்லாம் பார்த்தால் எனக்குச் சிரிப்பாக வருகிறது!” என்றார் வழிப்போக்கர்.

“இதில் சிரிப்பதற்கு என்ன உள்ளது?” என்று கேட்டார் ராஜகோபாலாச்சாரியார்.

அதற்குள் அவரது நண்பர், “சுவாமி! இவன் பெரிய நாத்திகன். நம் போன்றவர்களிடம் வம்பு செய்வது தான் இவன் வேலை! இவனிடம் பேச்சு கொடுக்காதீர்கள்!” என்று கூறினார். ஆனால் ராஜகோபாலாச்சாரியார் அதற்கெல்லாம் அஞ்சவில்லை.

“சொல்லப்பா! சிரிப்பதற்கு என்ன உள்ளது?” என்று கேட்டார்.

வழிப்போக்கர், “நீங்கள் வேதத்தை நம்புகிறீர்களா?” என்று கேட்டார். “நிச்சயமாக நம்புகிறேன்!” என்றார் ராஜகோபாலாச்சாரியார்.

“ஒவ்வொரு அந்தணரின் வலக்கையிலும் நெருப்பு இருப்பதாக வேதம் சொல்லியிருக்கிறது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்

. உங்கள் வலக்கையைக் காட்டுங்கள். அதிலுள்ள நெருப்பைக் கொண்டு என் பீடியை நான் பற்ற வைத்துக் கொள்கிறேன்! அவ்வாறு நெருப்பு வராவிட்டால் நீங்கள் அந்தணரே இல்லை.

உங்கள் குடுமியையும் பூணூலையும் வெட்டி எறிய வேண்டும்!” என்றார் வழிப்போக்கர்.

“பார்த்தீர்களா! இவனிடம் பேச்சு கொடுத்தால் இப்படித்தான் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்!” என்றார்

ராஜகோபாலாச்சாரியாரின் நண்பர். ஆனால் இதற்கெல்லாம் ராஜகோபாலாச்சாரியார் அசரவில்லை.

“தீயவர்களுக்கு நெருப்பாகவும், அடியவர்களுக்கு அமுதமாகவும் இருக்கும் அழகிய சிங்கரான நரசிம்மனை மனதில் கொண்ட நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்!

நெருப்பு தானே வேண்டும்? நிச்சயமாகத் தருகிறேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது!” என்றார்.

“என்ன சிக்கல்?” என்று கேட்டார் வழிப்போக்கர்.

“இப்போது சூரியன் அஸ்தமிக்கப் போகிறது. நெருப்பை வரவழைக்கும் மந்திரத்தை நான் சொல்லி முடிப்பதற்குள் சூரியன் அஸ்தமித்து விட்டால் அப்புறம் நெருப்பு வராது.

அதனால் உன் தாயை அழைத்துச் சூரிய அஸ்தமனத்தைக் கொஞ்சம் தாமதப் படுத்தச் சொல்!” என்றார் ராஜகோபாலாச்சாரியார்.

“என் தாயால் எப்படிச் சூரிய அஸ்தமனத்தைத் தாமதப்படுத்த முடியும்?” என்று கேட்டார் வழிப்போக்கர்.

“கற்புடைய பெண் தன் கற்பின் மேல் சபதம் செய்தால் சூரிய அஸ்தமனத்தையே மாற்றலாம் என்று மகாபாரதம் சொல்கிறதே. உன் தாயைக் கூப்பிடு!” என்றார் ராஜகோபாலாச்சாரியார்.

“என் தாயின் கற்பைப் பழிக்கிறாயா?” என்று கோபத்துடன் ராஜகோபாலாச்சாரியாரைத் தாக்க வந்தார் வழிப்போக்கர்.

“அக்காலத்தில் வாழ்ந்த பெரும் கற்புக்கரசிகளுடன் உன் தாயை ஒப்பிட்டு, அவளது கற்பைப்பற்றிப் பேசுவது தவறு என்று உனக்குப் புரிகிறதல்லவா?

அதுபோலத் தான் அக்காலத்தில் வாழ்ந்த சான்றோர்களின் தவ வலிமையோடு எங்கள் தவ வலிமையை ஒப்பிட்டு எங்கள் பூணூலை அறுப்பேன் என்று சொல்வதும் மிகத்தவறு.

அந்நாளில் வாழ்ந்த அந்தணர்கள் மிகுந்த தவ வலிமையுடன் இருந்தார்கள்.

அதனால் அவர்களால் தங்கள் கரத்தில் நெருப்பைக் கொண்டு வர முடிந்தது.

இன்று வாழும் நாங்களெல்லாம் அவர்களின் நிழலாகத்தான் உள்ளோம்.

இதை உனக்குப் புரிய வைக்கத்தான் நான் இவ்வாறு பேசினேனே ஒழிய உன் தாயை அவமதிக்கும் எண்ணத்தில் நான் சொல்லவில்லை!” என்று அமைதியாகச் சொன்னார் ராஜகோபாலாச்சாரியார்.

மேலும், “இறைவன் முன் அனைவரும் சமம்.

‘அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும் நொந்தவரே முதலாக’ என அனைவருக்கும் அருள்புரிய இறைவன் காத்திருக்கிறான்.

 அவன் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. அந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கு!” என்று அறிவுறுத்தினார்.

வழிப்போக்கர் அங்கேயே அவரை விழுந்து நமஸ்கரித்து விட்டுச் சென்றார்.

அங்கிருந்த மக்கள் எல்லோரும், “உங்களால் இந்த ஆசாமியிடம் இருந்து எங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது!” என்று ராஜகோபாலாச்சாரியாருக்கு நன்றி சொன்னார்கள்.

 “மிகுந்த வலிமையானவர்களையும் வீழ்த்துபவனான நரசிம்மன் தந்த வலிமையால் அவனை நான் வென்றேன்!” என்று பணிவுடன் கூறினார் ராஜகோபாலாச்சாரியார்.

பின்னாளில் அவர் தான் அஹோபில மடத்தின் 44-வது பீடாதிபதியான முக்கூர் அழகிய சிங்கராக வந்து திருவரங்க நாதனுக்கு ராஜகோபுரம் கட்டித்தந்தார்.

முக்கூர் அழகிய சிங்கர் கூறியதுபோல், வலிமையானவர்களையும் பெருவீரர்களையும்  வீழ்த்துபவராகத் திருமால் விளங்குவதால் ‘வீரஹா’ என்றழைக்கப்படுகிறார்.

 அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 168-வது திருநாமம். “வீரக்னே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், அனைத்து விதமான தடைகளையும் எதிர்ப்புகளையும் மீறி வெற்றி காண்பார்கள்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...