பிள்ளையார் எழுதிய மஹாபாரத கதை தெரியும் இது சிவன் எழுதிய திருவாசக கதை
ஒரு நாள் பிற்பகல். சிதம்பரத்தில் ஒரு ஆஸ்ரமத்தில் அமர்ந்து சிவனை த்யானம் செய்து கொண்டிருந்தார் மணி வாசகர். வாசல் கதைவை யார் தட்டுகிறார்கள் என்று எழுந்து கதவைத் திறந்த மணிவாசகர் முன் ஒரு வயதான பிராமணர். சிவ பக்தர் என்பது அவர் அணிந்த விபூதி பூச்சு, ருத்திராக்ஷம், உணர்த்தியது.
”வாருங்கள் உள்ளே. கைகால் அலம்பிக்கொண்டு அமர்ந்து மணிவாசகர் அளித்த தீர்த்தம் அருந்தி சுற்று முற்றும் பார்த்தார் பிராமணர்.
”ஐயா தாங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், நான் உங்களுக்கு எப்படி உதவட்டும்?” என்றார் மணிவாசகர்
”நீங்கள் தானே வாதவூரர் என்பவர். பாண்டிய ராஜாவின் மந்திரி, சிவபக்தர்”
”ஆமாம். ஒருகாலத்தில். ”
”எனக்கு நீங்கள் பாடும் திருவாசகம் எனும் பாடல்கள் ரொம்ப பிடித்தது.யார் யாரோ அதைக் கேட்டவர்கள் மூலம் அறிந்ததும், நேரிலேயே உங்களை வந்து சந்தித்து உங்கள் வாயினால் அதை கேட்கவேண்டும் என்ற எண்ணம் இன்று தான் பூர்த்தி யாயிற்று. நீங்கள் அதைப் பாடப் பாட, சொல்ல சொல்ல அதை எழுதி வைத்துக் கொள்ளவேண்டும் என்ற முடிவோடு வந்திருக்கிறேன்.இந்த சம்சார சாகரத்திலிருந்து விடுபட இதைவிட சிறந்த ஒரு பாராயண புத்தகம் இருக்கமுடியாதே”
அவர் ஒரு சாதாரண அந்தணர் இல்லை என்று மணிவாசகர் உணர்ந்தவர் ”ஓஹோ இதுவும் நடராஜா, உன் திருவிளையாடலோ ” என்று அதிசயித்தார்.
”சுவாமி. நான் திருவாசகம் பாடுகிறேன். நீங்கள் எழுதிக் கொள்ளுங்கள்”.
பாடல்கள் கடல்மடையென வெளிவந்தது. ஓலைச்சுவடிகள் நிரம்பின. பிராமணர் அதி வேகமாக அவற்றை சுவடிகளில் பொறித்தார்.
”வாதவூரரே , திருச்சிற்றம்பலத்தான் மீது திருவெம்பாவை பாடிய நீங்கள் அவன் மீது ஒரு கோவையார் பாடுங்கள் அதுவும் வேண்டும். எல்லோருக்கும் பிடிக்கும்.”
”ஆஹா தங்கள் கட்டளை”.
மணிவாசகரின் செய்யுள்கள் ஓலை ஏறின.
ஓலைகள் சுருளாக்கி சுற்றப்பட்டு சிதம்பரேசன் ஆலயத்தில் சிற்சபையின் பஞ்சாக்ஷர படிகளில் வைக்கப்பட்டன.
”பரமேஸ்வரா, என் மனம் கனிந்து, திறந்து, உன் மீது பாடியவைகளை நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று கண்மூடி வேண்டிய மணிவாசகர் கண் திறந்து பிராமணர் எங்கே என்று தேடினால் அங்கே யாருமில்லையே.
அவர் எங்கே போனார் என்று தேடினார் மணிவாசகர். எங்கும் தென்படவில்லை. யாரைக் கேட்டாலும் அப்படி ஒருவரைப் பார்க்கவே இல்லையே என்கிறார்கள்.
மறுநாள் அதிகாலையில் ஆலயத்தை திறந்த, தில்லை அம்பல நடராஜன் பூஜை செய்யும் தீட்சிதர்கள் ”யார் இங்கே ஏதோ ஓலைச்சுவடிகள் ‘ வைத்தது என்று பிரித்து பார்க்கிறார்கள்.
படித்தால் அற்புதமான தமிழில் திருவாசகம், திருக்கோவையார் பதிகங்கள். முடிவில் ” ‘மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்” என்று கையெழுத்திட்டு பெயர் பொறித்திருந்தது.
ஆலயத்தில் கூட்டம் சேர்ந்தது. அனைவரும் அதிசயித்தார்கள். என்ன நடந்தது இங்கே. அதன் பொருள் என்ன நீங்கள் தான் உரைக்க வேண்டும் என்று அவர்கள் மணிவாசகரை வேண்ட அவர் அமைதியாக எல்லோரையும் பார்த்தவாறு என்ன சொன்னார்?
” இதுவும் என் ஈசன் நடராஜன் திட்டம். எல்லாம் அவன் செயல். அவன் அருள். உங்கள் கேள்விக்கெல்லாம் அதன் ”பொருளே” அர்த்தமே இது தான் வாருங்கள்” என்று அவர்களை திருச்சிற்றம்பல நடராஜன் சந்நிதி அழைத்துச் சென்ற வாதவூரார் ”பொருள்” இதுவே” என நடராஜனைக் காட்டி தானும் அவன் திருவடிகளை அடைந்து மறைந்தார்
No comments:
Post a Comment