Thursday, September 26, 2013

அருள்மிகு பாகம்பிரியாள்நாயகி உடனுறை அகத்தீசுவரர் - அகத்தியான்பள்ளி




மரம்: வன்னி
குளம்: அகத்திய தீர்த்தம்

பதிகம்: வாடியவெண் -2 -76 திருஞானசம்பந்தர்

முகவரி: அகத்தியம்பள்ளி,
வேதாரணியம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம், 614810

வேதாரணியத்திற்குத் தெற்கே 2.கி.மீ.தூரத்தில் இருக்கின்றது.வேதாரணியத்திலிருந்து கோடியக்கரை செல்லும் பேருந்தில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அகத்தியர்கோயில் மூலத்தானத்திற்கு மேற்கில் உள்ளது. பழையவேலை செங்கல்லால், புதிய வேலை கருங்கல்லால் இயன்றது. அம்மன் உருவம் சிறியது.

கோயில் முப்பது ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. திருக்கயிலையில் வீற்றிருக்கும் அருட்கடலாகிய சிவபெருமானது திருமணக்கோலக் காட்சியைக் காணும்பொருட்டு அகத்தியர் தங்கித் தவஞ்செய்த பதியாதலின் அகத்தியான்பள்ளி என்னும் பெயர் பெற்றது என்பர்.

இது சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களுள் 126 ஆவது தலம்.
1. அகத்தியதீர்த்தம்: இது அகத்தீசுவரர் திருக்கோயிலுக்கு அண்மையில் மேல்புறத்துள்ளது.
2. அக்நிதீர்த்தம்: இது அகத்தீசுவரர் சந்நிதிக்குக் கிழக்கே சுமார் ஒருமைல் தூரத்திலுள்ள சமுத்திரதீர்த்த மாகும்.
3. அக்நிபுட்கரிணி: இது அகத்தீசுவரர் சந்நிதியில் உள்ள தீர்த்தம்.
4. எமதருமதீர்த்தம்: இது அக்நிபுட்கரிணிக்கு வடக்கேயுள்ளது.

அகத்தியர் பூசித்தது. சிவபெருமானின் திருமணக் கோலத்தை, அண்மையிலுள்ள திருமறைக்காட்டில் காட்டக், கண்டு வணங்கியது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் இயற்றும் பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மூவரையும் தமக்குப் புதல்வராகப் பெறுதற்குத் தவம் இயற்றி அவ்வாறே பெற்றது. எமதருமராசன் சீவன்முத்தி பெற்றது.

இத்தலத்தை வழிபட்டாலும் நினைத்தாலும் தீவினை நீங்கும் பெருமைவாய்ந்தது.
திருஞானசம்பந்தர் திருவாய்மலர்ந்தருளிய பதிகம் ஒன்று பெற்ற பெருமைக்குரியது இத்தலம்.


கல்வெட்டு:

கோயிலில்,சோழமன்னரில் திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரது இரண்டாம் ஆட்சியாண்டில் (29-1-1218) பொறிக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றும் பிற்காலப் பாண்டியர்களில் மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவரின் ஐந்து, முப்பத்தொன்று இவ்வாட்சியாண்டுகளில் பொறிக்கப் பெற்ற இரண்டு கல்வெட்டுக்களும், மாறவர்மன், திரிபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவரின் பதினைந்தாம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றும் ஆக நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவைகள் நந்தா விளக்குகளுக்கும் நித்திய வழி பாட்டிற்கும் நிலங்கள் அளிக்கப்பெற்ற செய்திகளைக் குறிப்பிடுகின்றன. இராஜராஜன் ஒரு விளக்கிற்காக 1,500 காசுகளும், மாறவர்மன் குலசேகரன் ஐந்தாமாண்டில் பொன் தானமும், முப்பத்தொன்றாமாண்டில் விழா நடத்த நிலதானமும் அளித்தனன்

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...