Tuesday, September 24, 2013

மஞ்சள்..


ஸ்ரீதேவியின் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்ற மங்கலகரமான பொருள்களில் மஞ்சளும் ஒன்று. மஞ்சளின் மங்கலத்தன்மையைப் பற்றி நிறைய எழுதலாம். முகத்தில் மஞ்சள் பூசுதல், மஞ்சள் துணியை அணிதல், மஞ்சள் நீரில் குளித்தல் முதலியவை மங்கலகரமான தெய்வீகத்தன்மை பொருந்திய காரியங்களாகப் பழைய நூல்கள் கருதுகின்றன.
அம்பிகையின் வழிபாட்டில் மஞ்சள் முக்கியமானது. சுமங்கலிகளின் சுமங்கலத் தன்மையின் சின்னமாகவும் மஞ்சளே திகழ்கின்றது.

திருமணம் பரியும் போது மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோத்துப் பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போடுகின்றனர். அவசரக் கோலக் கல்யாணத்தில் மஞ்சள் கயிற்றில் வெறும் மஞ்சளைக் கோத்து அணிவிப்பதும் அங்கீகரிக்கப்பட்டதொரு வழக்கமாகும். ஏழ்மையில் உழலும் சுமங்கலிகள் மஞ்சள் கயிற்றில் மஞ்சளைத் தாலியாகப் பூண்டிருப்பதைக் காணலாம்.

ஒரு பெண் திருமணமானவள் என்பதற்கு அசைக்க முடியாத சான்று பகரும் அடையாளச் சின்னங்கள் மஞ்சள் கயிறும் மஞ்சளும்.

நெல்லைக் கையால் தேய்த்து உமி நீக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படும் அரிசியின் முனை உடைந்திருக்காது. இப்படிப்பட்ட முனைமுறியாத அரிசியில் மஞ்சள் பொடியை நீரிட்டுப் பிசைந்து சேர்த்து செய்யப்படுவதே அட்சதை எனப்படுவது. ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் தாங்கி வழங்கும் சாதனமாக அட்சதை விளங்குகிறது. பூஜையின்போது மலர்கள் இல்லாமல் போனால் மலர்களுக்குப் பதில் அட்சதையை வைத்தும் பூஜையைச் செய்வதுண்டு.

மஞ்சளைக் காப்பாக மணிக்கட்டில் அணிந்து கொள்வது சில நிகழ்ச்சிகளில் காணப்படும். இதுதான் மஞ்சள் காப்பு எனப்படும். இப்போதெல்லாம் மஞ்சள்கிழங்கைக் கட்டாமல் வெறும் மஞ்சள் நூல் அல்லது கயிறைக் கட்டுகிறார்கள்.

மங்கலகரமான நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ், புதுக்கணக்கின் ஏடு முதலியவைகளில் மஞ்சள் தடவுகிறோம். மஞ்சள் பொடியில் தண்ணீர் கலந்து பிள்ளையார் பிடித்து அர்ச்சனை செய்கிறோம். வழிபாட்டில் பயன்படுத்தப்படும் மஞ்சளால் ஆன தற்காலிகமான உருவங்களை ஹரித்ரா பிம்பம் என்பார்கள். மஞ்சளாம் பிடித்துவைத்த பிள்ளையாரும் இந்த வகைதான்.

ஸ்ரீதேவியின் அடையாளமாக வலது பக்கமாகச் சுழன்றிருக்கும் ஸ்வஸ்திகா சின்னத்தை வரைந்து வழிபாட்டில் பயன்படுத்துவது உண்டு. மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி ஆகியோர் அணிந்திருக்கும் ஆடையை பீதாம்பரம் என்பார்கள்.

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்துக்கு சில தியான சுலோகங்கள் இருக்கின்றன. ஒரு ஜபத்துக்கு முன்னர் ஜபத்துக்குரிய தெய்வத்தை மனதில் ஆவாஹணம் செய்துகொள்ளவேண்டும். ஆவாஹணம் என்றால் மனதிற்குள்ளே எழுந்தருளப் பண்ணிக்கொள்ள வேண்டும். அந்த ஆவாஹணத்துக்கு உதவி செய்யக்கூடியது தியான சுலோகம். சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கிற உருவத்தை மனத்திரையில் உருவகப்படுத்தி ஏற்றிவைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு இது உதவும். ஸ்ரீலலிதாவுக்கு உரிய தியான சுலோகங்களில் ஒன்று இப்படி வரும்:

த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸிதவதனாம்
பத்மபத்ராயதாக்ஷீம்
ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலித ஹேமபத்மாம் வராங்கீம்....

பீதவஸ்த்ரம் என்பது பீதாம்பரம்தான். பீதாம்பரம் என்பது பொன்னால் ஆன ஆடை அல்லது பொன்னிற ஆடையைக் குறிக்கும். அல்லது மஞ்சள் நிற ஆடையையும் குறிக்கும். மந்திர சாஸ்திரத்திலும் மஞ்சள் நிறையப் பயன்படுத்தப்படுகிறது

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...