Tuesday, September 24, 2013

தலைவலிக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்.!



தலைவலி நோய்க்கான அறிகுறி, கம்ப்யூட்டரையே உற்றுப்பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாயுக்களை நுகர்வது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். வலியானது, தலையின் இரு பக்கங்களின் பின் பகுதியில் ஆரம்பித்து முன்பக்கம் பரவும். மந்தமாகவோ, தலையைச் சுற்றி இறுக்குவது போன்றோ காணப்படும்.

சீஸ், சாக்லேட், எம்.எஸ்.ஜி (மோனோ சோடியம் குளுட்டோமைட்) சேர்க்கப்பட்ட உணவுகள் உண்ணுவதால் 'ஒற்றைத் தலைவலி’ (Migraine) ஏற்படுகிறது. முதலில் தலையின் ஒரு புறத்தில் 'தெறிப்பது’ போல ஏற்பட்டு, தலை முழுவதும் பரவும். தலைவலி வருவதற்கு முன்பே அறிகுறி (Aura) தோன்றும்.

இதைத் தவிர சைனஸ் பிரச்னையாலும், மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பும், காய்ச்சலினாலும் தலைவலி வரலாம். மூளைக் கட்டி, மூளை நோய்கள், பக்கவாதம், மூளை ரத்தக் குழாய்களின் அமைப்பில் குறைபாடுகள், உயர் ரத்த அழுத்தம் போன்ற முக்கியமான நோய்களின் வெளிப்பாடாகவும் தலைவலி காணப்படுகின்றது.

தலைவலிக்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வதாலும், சரியான நேரத்தில் உணவு உண்ணுதல், சரியான நேரத்தில் தூங்குதல், மதுபானம், புகைபிடிப்பதைத் தவிர்த்தல், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்ளுதல் போன்றவை தலைவலிக்கான சாத்தியங்களைக் குறைக்கும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

சித்தரத்தை, கசகசா சம அளவு எடுத்துக் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து உண்ணலாம்.

1 கிராம் வெள்ளை சங்குபுஷ்பத்தின் வேர்ப்பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.

புதினா இலைப்பொடி, ஓமம் சம அளவு கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.

அவரை இலைச் சாற்றுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறி அதில் கொட்டைப்பாக்களவு உண்ணலாம்.

நன்னாரி வேர், வெட்டிவேர் இவற்றை சம அளவு சேர்த்து பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்துக் கற்கண்டு சேர்த்து உண்ணலாம்.

கொத்தமல்லி விதை, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து, நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம்.

சீரகம், சுக்கு, ஏலம், நெல்லி வற்றல் சம அளவு எடுத்துப் பொடித்து, சர்க்கரை சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

கருஞ்சீரகப் பொடியுடன் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு உண்ணலாம்.

அமுக்கரா, வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் பாலில் கலந்து பருகலாம்.

கழற்சிப் பருப்பு, சுக்கு சம அளவு பொடித்து அதில் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்ந்து உண்ணலாம்.

ஒரு டம்ளர் மாதுளம் பழச்சாறுடன், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.

வாய்விடங்கம், தும்பை இலை சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்துக் கற்கண்டு சேர்த்து உண்ணலாம்.

வெளிப் பிரயோகம்:

கொத்துமல்லி விதையை சந்தனத்துடன் சேர்த்து அரைத்துப் பூசலாம்.

சுக்கை, தாய்ப்பால் விட்டு அரைத்துப் நெற்றியில் பூசலாம்.

நந்தியாவட்டைப் பூவை நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.

குங்குமப்பூவை தாய்ப்பாலில் அரைத்து நெற்றியில் பூசலாம்.

கிராம்பை நீர்விட்டு மையாக அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டிலும் பூசலாம்.

சாம்பிராணி தைலத்தைப் பூசலாம்.

சித்திர மூல வேரைப் பஞ்சு போல இடித்து நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சித் தலைக்கு தடவலாம்.

செம்பைப் பூவை நல்லெண்ணயில் விட்டுக் காய்ச்சித் தலைக்குத் தேய்க்கலாம்.

வால் மிளகைப் பன்னீரில் அரைத்து நெற்றியில் பூசலாம்.

சேர்க்கவேண்டியவை:
பிளம்ஸ், மாதுளை, அன்னாசி, கீரைகள், முளைவிட்ட தானியங்கள்.

தவிர்க்கவேண்டியவை:
துரித வகை உணவுகள், தயிர், எண்ணெய், பலாப்பழம், கொய்யா, சீதாப்பழம்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...