நாள்: நவம்பர் 20, 2003
இடம்: திருமலை-திருப்பதி
செய்தி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திருமலையில் வழிபாடு.
இடம்: திருமலை-திருப்பதி
செய்தி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திருமலையில் வழிபாடு.
பலரும் அப்துல் கலாமை,ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர், கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர், இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
சற்றே வித்தியாசமாக, திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு!
பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம்.தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம். தெழி குரல் அருவித் திருவேங்கடம் இன்று பணக்காரத் தோற்றம் காட்டினாலும், அதன் ஆன்மா என்றுமே எளிய பக்தி மட்டும் தான்!
"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!" என்பது ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை!
இப்படி மானுடம், தமிழ் என்று இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் திருமலை நாயகன், நம் அப்துல் கலாம் ஐயாவையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லையே!
முன்பு ராபர்ட் க்ளைவ், தாமஸ் மன்றோ, பீவி நாஞ்சாரம்மா, பீதா பீவி என்று அனைவரையும் கவர்ந்தவன் தானே அவன்! அதனால் தான் போலும், அவன் அனுபவத்தை நேரிலே பெறுவதற்காகத் திருமலைக்கு வருகை புரிந்தார் நாட்டின் முதற் குடிமகன். ஆனால் அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும் தன் வருகையின் படோபடத்தால், தொல்லை தர விரும்பவில்லை அவர். அதனால் விடியற்காலை, வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார்.
நாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் "இஸ்டி-கபால்" மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார்.
இனி என்ன? நேரே தரிசனம் தான்!
ஆனால் கலாம் தயங்கி தயங்கி நிற்கிறார்.
அதிகாரிகளே "அதை" மறந்து விட்டார்கள்!
ஆனால் இது பற்றி எல்லாம் முன்பே தெரிந்து கொண்டு வருபவர் தானே நம் தலைவர்!
"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார். மாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்! இப்படி ஒரு வழக்கம் தேவையா?
இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே! இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே!
முன்பு முகம்மதிய ஆட்சிக் காலத்தில்....
திருவரங்கம் படையெடுப்பு, திருப்பதி கோவில் கொள்ளை, ஆலயங்களுக்குத் திறை வசூல், மறுத்தால் கோவில் உடைப்பு என்றெல்லாம் இருந்த போது, ஆலய நிர்வாகிகள் அமைத்த சட்டதிட்டம்.
ஐயா சாமீ....நீ உள்ளே வந்து உயிரை வாங்காதே-உனக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைப் பக்தர்களிடம் வசூலித்துக் கட்டி விடுகிறோம், என்று "அக்ரீமெண்ட்" அவலம்!
அப்போது கூட ஜீயர்கள் என்னும் வைணவத் துறவிகள்,
இதனால் உண்மையான மாற்றுமத பக்தர்கள் உள்ளே வந்து பெருமானைச் சேவிக்க முடியாது போய் விடுமே என்று எண்ணினர்; அதிகாரிகளிடம் சொல்லி ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். அது தான் இந்தக் கையொப்பப் படிவம்! உறுதிமொழி வாங்கிக் கொண்டு உள்ளே விடுவது!
நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை! அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே! ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.வரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை! படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்?
கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்!
சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு. முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார். அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!
திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!
மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா? அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! - இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!
அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்!
வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்! நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை! அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்!அட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா! இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா?
"இந்தியா" என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்! அருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார். அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம். இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.
எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,....அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில்!
பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம்!
அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்!
கோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர்!
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!
ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா? - அந்த நாள், கோவில் பக்தர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!
No comments:
Post a Comment