ஆன்மீகத் தன்மையைக் கொண்ட ஜீவன் இவ்வுலகிற்கு ஏன் வந்தான் என்னும் முக்கிய வினாவிற்கு ஸ்ரீல பிரபுபாதர் விடையளிக்கிறார்.
வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ஸ்ரீ ஸுக உவாச
ஆத்ம-மாயாம் ருதே ராஜன்
பரஸ்யானுபவாத்மன:
ந கடேதார்த-ஸம்பந்த:
ஸ்வப்ன-த்ரஷ்டுர் இவாஞ்ஜஸா
“ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, பரம புருஷ பகவானின் சக்தியால் பாதிக்கப்படாவிடில், தூய உணர்விலுள்ள தூய ஆத்மா பெளதிக உடலுடன் கொண்டுள்ள உறவில் எந்த அர்த்தமும் இல்லை. அந்த உறவானது ஒருவன் தனது உடலின் இயக்கத்தை கனவில் காண்பதைப் போன்றதாகும்.” (ஸ்ரீமத் பாகவதம் 2.9.1)
ஜீவன் வீழ்ச்சியடையவில்லை
கிருஷ்ணருடன் இருந்த ஜீவன், இந்த பெளதிக உலகில் எவ்வாறு வீழ்ச்சியடைந்தான் என்னும் வினாவினை பலரும் வினவுகின்றனர். அதற்கான விடை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஜீவனின் நிலையானது ஜட சக்தியில் அவன் மயக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது; உண்மையில், அவன் வீழ்ச்சியடையவில்லை. மேகக் கூட்டம் நகரும்போது அதற்குப் பின்னால் உள்ள நிலாவும் சேர்ந்து நகருவதைப் போன்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நிலா நகருவதே இல்லை. அதுபோலவே, பரமனின் ஆன்மீகப் பொறியாகிய ஜீவன் வீழ்ச்சியடைவதே இல்லை. ஆயினும், “நான் வீழ்ச்சியடைந்துள்ளேன், நான் பெளதிகமானவன், நான் இந்த உடல்,” என்று அவன் நினைத்துக் கொண்டுள்ளான்.
ஆத்மாவிற்கும் உடலிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதனை நம்மால் நன்கு உணர முடியும். உடல் மாற்றமடைகிறது; மடிகிறது. ஆனால், நான் மாற்றமின்றி அப்படியே இருக்கின்றேன். உடலுடன் நமக்கு தொடர்பு இருப்பதாக நாம் நினைப்பதற்கு கிருஷ்ணருடைய மாயா சக்தியே காரணமாகும். கிருஷ்ணரை நாம் மறக்கும்போதே, அந்த மாயா சக்தி வளர்ச்சியடைகிறது.
நாடகத்தில் நடித்தல்
வேறு விதமாகக் கூறினால், உடலுடனான நமது பொய்யான அடையாளத்திற்கு நமது மறதியே காரணமாகும். நாம் கிருஷ்ணரை மறக்க விரும்பினோம், கிருஷ்ணரைக் கைவிட்டு பெளதிக உலகில் அனுபவிக்க விரும்பினோம். எனவே, கிருஷ்ணர் அதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளார். நீங்கள் ஒரு நாடகத்தில் நடிக்கும்போது, “நான் ஓர் அரசன்,” என்று நினைத்தால், உங்களால் அரசனைப் போன்று அருமையாகப் பேச முடியும். ஆனால், “நான் ஒரு சீடன்” என்று நீங்கள் நினைத்தால், உங்களால் அவ்வளவு அருமையாகப் பேச முடியாது. எண்ணங்கள் இங்கே அவசியமாகின்றன. நீங்கள் அரசனின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தால், நீங்கள் உங்களை அரசனாக நம்புவதும் அந்த அரசனுக்குரிய துணிவுடன் இருப்பதும் அவசியமாகிறது, நீங்கள் ஒரு சீடன் என்பதை மறந்துவிட வேண்டும். அப்போதுதான் உங்களால் அருமையாக நடிக்க முடியும், பார்ப்பவர்களின் பாராட்டுதலையும் பெற முடியும். “நான் ஒரு சீடன், ஆனால் அரசனாக நடித்துக் கொண்டுள்ளேன்,” என்று நினைத்தால், உங்களால் நடிக்க முடியாது.
நாம் அனுபவிப்பாளரான கிருஷ்ணரின் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதால், கிருஷ்ணரும் அவ்வாறே ஆகட்டும் என்று அதற்கான வாய்ப்பினை நமக்கு வழங்கியுள்ளார். “நீ அரசனின் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறாய். சரி, அதற்கான பாதையில் நான் உனக்கு பயிற்சியளிக்கின்றேன்.”
இந்த பெளதிக உலகில் நாம் செய்ய வேண்டியது என்பது எதுவுமில்லை. ஆனாலும், “நான் இந்தியன், நான் அமெரிக்கன், நான் பிராமணன், நான் சூத்திரன், நான் இது, நான் அது, நான் இதனைச் செய்தாக வேண்டும், எனக்கு எண்ணற்ற கடமைகள் இருக்கின்றன,” என்றெல்லாம் நினைக்கும்படி மாயா சக்தியினால் நாம் பயிற்சியளிக்கப்படுகின்றோம். இவை அனைத்தும் அறியாமையே. இத்தகைய அபத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. இருப்பினும், நாம் இதனை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.
மேகக்கூட்டம் நகரும்போது நிலா நகருவதைப் போல தோன்றுகிறது; அதுபோலவே, ஆத்மா வீழ்ச்சியடைந்திருப்பதைப் போல தோன்றுகிறது.
கனவில் தோன்றும் புலி
இதுவே இங்கு விளக்கப்பட்டுள்ளது: ஆத்மமாயாம் ருதே ராஜன் பரஸ்யானுபவாத்-மன:, பரம புருஷ பகவானின் சக்தியால் பாதிக்கப்படாவிடில், தூய ஆத்மா பெளதிக உடலுடன் கொண்டுள்ள உறவில் எந்த அர்த்தமும் இல்லை. அந்த உறவானது ஒருவன் தனது உடலின் இயக்கத்தை கனவில் காண்பதைப் போன்றதாகும்.
கனவில் புலியைக் காணும் மனிதன், “புலி வருகின்றது, புலி வருகின்றது, என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்,” என்று அலறுகின்றான். ஆனால், அவனுக்கு அருகில் விழித்துக் கொண்டுள்ள மனிதனோ, “புலி எங்கே இருக்கின்றது? எதற்காக அழுகின்றான்?” என்று நினைக்கிறான். ஆயினும், கனவு கண்டு கொண்டுள்ள மனிதனைப் பொறுத்தவரையில், புலி தன்னைத் தாக்க வருவதாக உண்மையிலேயே நினைக்கின்றான்.
எனவேதான், இந்த உதாரணம் வழங்கப்பட்டுள்ளது, ந கடேதார்த ஸம்பந்த:, ஆத்மா உடலுடன் கொண்டுள்ள உறவு, கனவு காணும் மனிதனின் நிலையைத் தவிர வேறொன்றுமில்லை. புலி இருப்பதாக கனவு காண்பதால், அவன் ஒருவித பயங்கரமான சூழ்நிலையை தானே உருவாக்கிக்கொள்கின்றான். உண்மையில் பயப்படுவதற்கான காரணம் எதுவுமேயில்லை. அங்கு புலியே இல்லை. கனவின் மூலமாகவே சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றன.
அதுபோலவே, பெளதிக உலகையும் பெளதிகச் செயல்களையும் நாமே உருவாக்கிக் கொண்டுள்ளோம். “நான் அதிகாரி, நான் தொழிலதிபர், நான் இவன், நான் அவன். எங்களுக்கு அவனுடைய ராஜ தந்திரம் தெரியும், எங்களுடைய போட்டியாளரை நாங்கள் வெல்ல வேண்டும்,” என்றெல்லாம் நினைத்தபடி மக்கள் ஓடிக் கொண்டுள்ளனர். இவை அனைத்தும் கனவு காணும் மனிதனால் உருவாக்கப்படும் சூழ்நிலைகளைப் போன்றவையே, ஸ்வப்ன த்ரஷ்டுர் இவாஞ்ஜஸா.
இவ்வுலகில் நிகழும் ஜீவனின் உறவுகள் அனைத்தும் கனவில் நிகழும் புலியின் தாக்குதலைப் போலவே. கனவு முடிந்தால், எல்லாம் முடிவுறும்.
மாயையுடன் எப்போது வந்தோம்?
எனவே, “நாம் எப்போது இந்த பெளதிக சக்தியின் தொடர்பிற்கு வந்தோம்?” என்று யாரேனும் வினவினால், அதற்கான விடை, நாம் அந்தத் தொடர்பிற்கு வரவே இல்லை என்பதே. வெளிப்புற (மாயா) சக்தியின் ஆதிக்கத்தினால், நாம் அதனுடன் தொடர்பு கொண்டுள்ளதாக நினைத்துக் கொண்டுள்ளோம். உண்மையில், நாம் வீழ்ச்சியடையவில்லை, வீழ்ச்சியடையவும் முடியாது. சூழ்நிலைகளை மட்டுமே நாம் உருவாக்கியுள்ளோம். உண்மையில், அந்தச் சூழ்நிலைகளையும் நாம் உருவாக்கவில்லை, கிருஷ்ணரே அச்சூழ்நிலைகளை நமக்கு வழங்குகின்றார். ஏனென்றால், நாம் கிருஷ்ணரை நகல் செய்ய விரும்புகின்றோம், எனவே, அதற்கான வாய்ப்பை கிருஷ்ணர் வழங்கியுள்ளார்: “நீ என்னை நகல் செய்ய விரும்புகின்றாய், மேடையில் அரசனைப் போல நடிக்க விரும்புகின்றாய். அவ்வாறே நடிப்பாயாக, அவ்வாறே செய்வாயாக, மக்களும் அருமையான அரசன் என்று கைதட்டுவர்.”
பெளதிக உலகில் உள்ள ஒவ்வொருவருமே ஏதாவதொரு பாத்திரத்தில் நடித்துக்கொண்டுள்ளனர். நான் பிரதம மந்திரியாக விரும்புகின்றேன். நான் ஒரு பெரும் தொழிலதிபராக விரும்புகின்றேன். நான் தலைவராக விரும்புகின்றேன், நான் ஒரு தத்துவவாதியாக விரும்புகின்றேன், நான் விஞ்ஞானியாக விரும்புகின்றேன். இத்தகைய அபத்தமான பாத்திரங்களில் நடிப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம், கிருஷ்ணரும் சரி என்று இதற்கான வாய்ப்பினை நமக்கு வழங்குகின்றார்.
உடலுடன் அனைத்தும் மடிகின்றன
ஆயினும், இவை அனைத்தும் அபத்தமே. வெறும் கனவே. நீங்கள் கனவு கண்டு விழிக்கும்போது, அடுத்த நொடியில் கனவு மறைந்துவிடுகின்றது, கனவில் கண்ட அனைத்தும் மறைந்துவிடுகின்றன. புலியும் இல்லை, காடும் இல்லை. அதுபோலவே, உடல் இருக்கும் வரையில், “நான் ஒரு பொறுப்புமிக்க தலைவன், நான் இவன், நான் அவன்” என்றெல்லாம் நாம் நினைக்கின்றோம். ஆனால், உடல் அழிந்தவுடன் இந்த எண்ணங்கள் அனைத்தும் மறைந்துவிடுகின்றன.
கிருஷ்ணர் கூறுகின்றார், ம்ருத்யு ஸர்வ ஹரஸ் சாஹம், “நானே எல்லாவற்றையும் அழிக்கும் மரணம்.” நமது முந்தைய பிறவியின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை நான் ஓர் அரசனாக இருந்திருக்கலாம். பிருகு சம்ஹிதையின் மூலமாக நான் எனது முற்பிறவியில் ஒரு பெரிய மருத்துவராக இருந்ததாக கணிக்கப்பட்டது; நான் மிகவும் நல்லவனாக பாவங்களற்றவனாக இருந்திருக்கின்றேன். நான் அவ்வாறு இருந்திருக்கலாம், ஆனால் அவ்வாறு இருந்ததில் எனக்குச் சற்றும் நினைவில்லை. நான் மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவராக, மிகச்சிறந்த அனுபவம் மிக்க மருத்துவராக இருந்திருக்கலாம், ஆனால் அதெல்லாம் தற்போது எங்கே? அனைத்தும் மறைந்துவிட்டன.
இவ்வாறே பெளதிகத்துடனான நமது உறவும் கனவைப் போன்றதே. நாம் வீழ்ச்சியடையவில்லை. எனவே, எந்த நொடியிலும் நம்மால் நமது கிருஷ்ண உணர்வைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். “ஜடத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் கிருஷ்ணரின் நித்திய சேவகன்,” என்பதைப் புரிந்து கொண்ட உடனேயே நாம் விடுதலை பெற்று விடுகின்றோம். சில நேரங்களில் தாங்க முடியாத பயங்கரமான கனவு உண்டாகும்போது, நாம் விழித்துக்கொள்கின்றோம். அதுபோலவே, எந்த தருணத்திலும் நம்மால் பெளதிக உறவைத் துறந்துவிட முடியும்; கிருஷ்ண உணர்வை அடைந்தவுடன் அது சாத்தியமாகும். “கிருஷ்ணரே எனது நித்திய எஜமானர், நான் அவரது சேவகன்.” இதுவே வழிமுறை.
எல்லாவற்றையும் அழிக்கும் மரண தேவனாக பகவான் கிருஷ்ணர் விளங்குகிறார்.
மாயையிலிருந்து விடுபடுதல்
கிருஷ்ணர் கூறுகின்றார், மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே, “ஒருவன் என்னிடம் சரணடைந்த உடனேயே மாயையைக் கடக்கின்றான்.” மக்கள் கட்டுண்டவர்களாக, அடைக்கப்பட்ட நிலையில் உள்ளனர். மாயாவாதிகள் (அருவவாதிகள்) முக்தியடைவதற்காக தவங்களையும் விரதங்களையும் மேற்கொள்கின்றனர். யோகிகளும் கூட பரமனுடன் ஐக்கியமாவதற்கே முயல்கின்றனர். இவ்வாறாக பற்பல முயற்சிகள் மேற்கொள்ளப்
படுகின்றன. ஆயினும், சரணடைந்தவுடன் வீழ்ச்சியுற்ற நிலையிலிருந்து விடுபடுதல் என்பது எளிமையான வழிமுறையாகும். “இதுவரை மாயையின் கனவில் இருந்தபோதிலும், உண்மையில் நான் கிருஷ்ணருக்குச் சொந்தமானவன்,” என்று நினைப்பதன் மூலமாக ஒருவன் நொடிப்பொழுதில் உடனடியாக விடுவிக்கப்படுகின்றான்.
கிருஷ்ணரின் உத்தரவைப் பின்பற்றுவதன் மூலமாக நம்மால் நொடிப் பொழுதில் விடுதலை அடைய முடியும். ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ. இதுவே உண்மை. நாம் வீழ்ச்சியடையவில்லை, வீழ்ச்சியடைந்துள்ளதாக நினைத்துக் கொண்டுள்ளோம். எனவே, முதலில் நாம் இத்தகைய அபத்தமான எண்ணங்களைக் கைவிட வேண்டும், அப்போது முக்தி பெறுவோம்.
மக்கள் கேட்கலாம், “இதயத்திலிருக்கும் கிருஷ்ணர் ஒருவருக்கு ஒருவிதமான உணர்வையும் மற்றொருவருக்கு வேறொரு விதமான உணர்வையும் வழங்குவது ஏன்?” இஃது அவருடைய கருணையாகும். நான் கிருஷ்ணரை மறக்க விரும்புவதால், கிருஷ்ணர் அதற்கான வாய்ப்பினை வழங்குகின்றார்.
ஏன் மறதியை வழங்குகிறார்?
கர்மிகள் (சாதாரண பெளதிகவாதிகள்), மாயாவாதிகள், போலி யோகிகள் முதலியோர் கிருஷ்ணரை மறக்க விரும்புகின்றனர். எனவே, கிருஷ்ணர் எந்தெந்த வழிகளில் அவரை மறக்கலாம் என்பதற்கான அறிவை வழங்குகின்றார். நீங்கள் கிருஷ்ணருடனான உறவைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பினால், அவர் உங்களுக்கும் அறிவை வழங்குவார். ததாமி புத்தி-யோகம் தம் யேன மாம் உபயாந்தி தே, “என்னிடம் வந்தடைவதற்கான அறிவை நானே வழங்குகின்றேன்.” உங்களுடைய விருப்பத்தின்படி கிருஷ்ணர் உங்களுக்கு வசதிகளை வழங்குகின்றார்.
இப்பொழுது இயற்கையாக எழும் அடுத்த வினா: பகவான் ஏன் ஜீவன்களுக்கு அத்தகு உணர்வையும் மறதியையும் ஏற்படுத்துகிறார் என்பதாகும். இதற்கான விடை யாதெனில், பகவானின் அம்சங்களான ஜீவன்கள் தமது தூய உணர்வில் நிலைபெற்று பகவானின் அன்புத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்பதே பகவானின் உண்மையான விருப்பம். ஆனால், ஜீவன் சிறிதளவு சுதந்திரம் உடையவனாக இருப்பதால், அவன் பகவானுக்குத் தொண்டாற்ற விரும்பாமல், பகவானைப் போன்று சுதந்திரமாகச் செயல்பட விரும்பலாம்.
ஜீவன் ஒருபோதும் கடவுளாக முடியாது, ஆனால் மாயையின் ஆதிக்கத்தினால், “நான் கடவுள்” என்றோ, “சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதின்
மூலமாக நான் கடவுளாக ஆகிவிடுவேன்,” என்றோ மக்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆயினும், அவர்களால் ஒருபோதும் கடவுளாக முடியாது. இது சாத்தியமே இல்லை. அனைவருமே கடவுளாகலாம் என்றால், கடவுள் என்பதற்கு அர்த்தமே இல்லை.
ரஸகுல்லா கடவுள்
“நான் இலட்சாதிபதி ஆவேன், கோடீஸ்வரன் ஆவேன், முதலமைச்சர் ஆவேன், பிரதமர் ஆவேன்,” என்று கூறும் கர்மிகள் இவற்றை அடைவதற்காகப் போராடுகின்றனர்.
யோகிகளோ, “நான் கடவுளாவேன்,” என்று எண்ணுகின்றனர். இது மற்றொரு வகையான போராட்டமாகும். இது மாயையே. கிருஷ்ணர் அவர்களுக்கு சில யோக சித்திகளை வழங்கலாம். இந்தியாவில் தங்கத்தை வரவழைக்கும் ஓர் அயோக்கியன் இருக்கின்றான். மக்களும் அவனைப் பார்த்து, “இவரே கடவுள், இவரே கடவுள்,” என்று அவன் பின்னால் ஓடுகின்றனர். சிறிதளவு தங்கத்தை உருவாக்குவதால், அவன் கடவுளாகின்றான்.
மற்றொரு யோகியோ இரண்டு ரஸகுல்லாவை தோற்றுவிக்கிறான். பத்து ரூபாய் மதிப்புள்ள இரண்டு ரஸகுல்லாவை தோற்றுவிப்பதால் அவன் கடவுளாகின்றான். பாருங்கள்! இதுவே மாயை. கடையில் பத்து ரூபாய் கொடுத்தால், இரண்டு ரஸகுல்லாவை வாங்கிவிடலாம், ஆனால் அவனோ அந்த பத்து ரூபாயினால் கடவுளாகியுள்ளான். “இவரே கடவுள், இவரால் ரஸகுல்லாவை தோற்றுவிக்க முடிகின்றது,” என மக்கள் நினைக்கின்றனர். இந்த மக்களுக்கு அறிவே இல்லை. ரஸகுல்லாவை சமையலறையில் எளிதில் சமைக்க முடியும், ஆனால் முட்டாள்களோ, “ஆஹா, என்னே யோகியின் அற்புதம்!” என்று நினைக்கின்றனர்.
இவ்வாறாக, கிருஷ்ணர் ஒருவருக்கு சில யோக சித்திகளை வழங்கினால், உடனே அவன் தான் கடவுளாகி விட்டதாக நினைத்துக்கொள்கிறான். சில முகஸ்துதியாளர்களும், “ஆமாம், நீங்கள் கடவுளேதான்,” என்று புகழ்கின்றனர். இத்தகைய யோகிகளும் கர்மிகளைப் போன்று கனவில் உள்ளவர்களே. ஆனால் மரணம் வந்தவுடன் அனைத்தும் முடிந்துவிடுகின்றன.
இவற்றைப் புரிந்துகொள்வதில் ஏதேனும் சிரமம் உள்ளதா? இந்த ஸ்லோகம் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு ஸ்லோகத்தையும் படியுங்கள், கவனத்துடன் தினமும் படியுங்கள், அறிந்து புரிந்துகொள்வதற்கு முயலுங்கள். இதனால் பெருமளவில் பயனடைவீர்கள். தினந்தோறும் நூற்றுக்கணக்கான அடிகள் முன்னேறுவீர்கள். இவை மிகவும் முக்கியமான ஸ்லோகங்கள், வியாஸதேவரால் எவ்வளவு அருமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டே வரிகளில் அனைத்து விஷயங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. இதுவே சாஸ்திரம். மிக்க நன்றி