Thursday, July 30, 2020

பசுபதேஸ்வரர் திருக்கோவில்

ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது பசுபதேஸ்வரர் ஆலயம். காசிக்கு நிகரான பசுபதேஸ்வரர் கோவில் திருநெல்வேலி

பெயர் காரணம் 

ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. சிவபெருமான் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் எனபதால் காசி நகருக்கு ‘"#ஆனந்தவனம்’ என்னும் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசி நகரம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. ‘அறிவு தரத்தக்க ஒளி பொருந்திய நகரம்’ என்னும் பொருளில் காசி நகரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில் ‘மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு இணையாகாது’ என காசியின் பெருமையை ஈசன் கூறியுள்ளார். பண்டைய காலங்களில் கல்விக் கூடங்கள் பல அமைத்து, கல்வியிற் சிறந்த நகரமாக காசி விளங்கி இருக்கிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது #பசுபதேஸ்வரர்ஆலயம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு குடவரைக் கோவிலாகும். இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நுண்ணியக் கருவிகளைத் தொல்லியல்துறை கண்டு பிடித்து பாதுகாத்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை நகரை அடுத்துள்ள சேர்ந்தமரம் என்னும் ஊருக்கு மேற்கே, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் திருமலாபுரம். இவ்வூரில் புராண காலத்தோடு தொடர்புடைய நீண்ட நெடிய கிழக்கு நோக்கிய மலைத்தொடர் ஒன்று உள்ளது. இந்த மலை புராண காலத்தில் ‘#வருணாச்சிமலை’ என்றும், இப்பகுதியில் அமைந்திருந்த ஊர் ‘#வாரணாசிபுரம்’ என்றும், ‘#வருணாச்சிபுரம்’ என்றும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த மலைத்தொடர் ‘#சர்வேஸ்வரன்மலை’ எனவும், இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன் பெயர் ‘#பசுபதேஸ்வரர்’ எனவும் வழங்கப்படுகிறது. சிவபெருமானின் வழித்தோன்றல்களான பாண்டிய வம்ச மன்னர்கள், தங்கள் நாயகனின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக சுமார் 1,300 ஆண்டுகளுக்கு சர்வேஸ்வரன் மலைத்தொடரின் இருபுறமும் இரு குடவரைக் கோவில்களை உருவாக்கினர். கிழக்கு - மேற்காக நீண்டிருக்கும் சர்வேஸ்வரன் மலைத் தொடரின் வடக்குப் பகுதியிலுள்ள குடவரைக் கோவில் முழுமை பெற்றுள்ளது. தென்பகுதியில் உள்ள குடவரை முழுமை பெறவில்லை.

திருதலத்தின் சிறப்புகள் 

வடக்குப் பகுதியில், வடக்குப் பார்த்து அமைந்த முழுமைப்பெற்ற குடவரைக் கோவில், கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சுமார் 19 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட செவ்வக வடிவ அர்த்த மண்டபம் உள்ள இக்குடவரையில், கருவறை எட்டு சதுர அடியில் அமைந்துள்ளது. காசியிலுள்ள கருவறை போன்றே சிவலிங்கத்தை வலம் வந்து அர்ச்சகர் பூஜைசெய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

தரைமட்டத்தில் இருந்து சுமார் ஐந்தடி உயரத்தில் உள்ள இக்கோவிலுக்குள் ஏறிச் செல்வதற்கு மேற்குப் பகுதியில் இருந்தும், கிழக்குப் பகுதியில் இருந்தும் பாறைக் கற்களால் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் குடவரையின் உள்ளே புகாவண்ணம் குடவரையின் மேலே, பாறையில் புருவம் போன்ற காடி வெட்டப்பட்டுள்ளது
குடவரையில் மூன்று நுழைவு வாசல்கள் உள்ளன. நுழைவு வாசலில் காணப்படும் தூண்களின் மீது அழகிய பூ வேலைப்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசல்களுக்கு நேரே உள்ளே முன்மண்டபத்தில் நடராஜர், பெருமாள், விநாயகர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அதிலுள்ள சிவபெருமான் ஆடல் நிகழ்த்த, அவரது இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பூதங்கள் நிற்கின்றன. வலப்புற பூதத்தின் உடல் பெரு மளவு சிதைந்துள்ளது. கால்கள் மட்டும் எஞ்சியுள்ளன. நின்ற கோலத்தில் காணப்படும் இடப்பூதம் கரண்ட மகுடம் அணிந்து, செவிகளில் பனை ஓலைச் சுருள்களுடன் காட்சியளிக்கிறது. இடக்கையில் ஏந்தி, இடது தோளில் சாத்தியிருக்கும் நரம்பிசைக்கருவியை வலக்கைக் கோலால் இயக்கும் இப்பூதம் இறைவனைத் தலை உயர்த்திப் பார்த்தவாறு பூரித்து நிற்கிறது.

குடவரை கோவில் அமைந்த மலை

தமிழ்நாட்டில் எத்தனையோ குடவரை இருந்தாலும், ‘சிரட்டைக் கின்னரி’ (பழமையான வில்லிசைக் கருவி) இடம் பெற்றுள்ள ஒரே குடவரைக் கோவில், பசுபதேஸ்வரர் ஆலயம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நின்ற திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சங்கு, சக்கர தாரியாய் நான்கு திருக்கரங்களுடன் இங்கு வீற்றிருக்கிறார். அருகே அமர்ந்த நிலையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். பல்லவர் காலத்தை ஒட்டிய கோவில் என்பதால், பல்லவர் குகைக்கோவில்களில் காணப்பெறாத, சிறப்புமிக்க விநாயகர் புடைப்புச் சிற்பம் இங்குள்ளது. கருவறைக்கு நேர் எதிரில் கிழக்கு உட்பகுதி பாறைச்சுவற்றில், நின்ற நிலையில் பிரம்மா மூன்று சிரசு, நான்கு கரங்களுடன் காணப் படுகிறார்.

நுழைவு வாசலில் உள்ள கனமான தூண்கள், விரிந்த தாமரைப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தரங்கப் பொதிகைகள் (தோரணம் போன்ற அமைப்பு) நுழைவு வாசலுக்கு மேன்மேலும் அழகு சேர்க்கின்றன. முன்மண்டப விதானத்தில் பழங்கால ஓவியங்களின் (அன்னம், தாமரை மலர், வேட்டுவேர், சிம்மாசனம்) வண்ண எச்சங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.

முன்மண்டபத்திலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறையில் பாறையில் வடிக்கப்பட்ட ஒற்றைக் கற்பீடத்தில் பசுபதேஸ்வரர் அழகாகக் காட்சி தருகிறார். குடவரைக் கோவில் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே முறையான அபிஷேக, ஆராதனை சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன என்பதை சிவலிங்கம் உணர்த்துகிறது.

காலத்தால் பழையதும், கீர்த்தியால் செழுமை பெற்றதும், மனித உயிர்களை மெய் மறக்கச் செய்து, வேண்டுவன தந்து உலகம் உய்யக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார், பசுபதேஸ்வரர் இவருக்கான நித்யபூஜை சிறப்புடன் நிகழ்வுற, வல்லவ தேவன் என்ற பாண்டிய மன்னன் மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குளங்களை தானமாக வழங்கியுள்ளான். இத்தகவல் குகைக்கோவில் இடது தூண் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு மன்னர்களின் 2 கல்வெட்டுகள் உள்ளன.

வழிபாடு 

சுயம்புலிங்கம்போல் குடவரையில் உள்ள சிவலிங்கத்துக்கும் அதீத ஆற்றல் உண்டு என்பதால், பிரதோஷ வழிபாட்டில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமிதோறும் நடைபெறும் கிரிவலத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி தினங்களில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து மகிழ்கின்றனர். திருக்கார்த்திகை தினமான இன்று (23-11-2018) வெள்ளிக்கிழமை காலையில் உலக நலன், உலக ஒற்றுமை, உலக நல்வாழ்வு, உலக ஆரோக்கியம் கருதி ‘மகா ருத்ர யாகம்’ நடைபெறுகிறது.

பசுபதேஸ்வரரை வழிபடுவோருக்கு எல்லா விதமான தோஷங்கள், சாபங்கள் நீங்கி, சகல யோகங்களும் ஏற்படுவதால், இப்பகுதி மக்கள் ஈசனை ‘சர்வேஸ்வரன்’ எனவும் அழைக்கின்றனர். திருமணம், வாரிசு ஆகிய பிரார்த்தனைக்காகவும், சிறந்த கல்வி, உயர்பதவி பெறவும் வேண்டிப் பயன்பெறுகின்றனர். மழை பொழியவும், மன பயம் அகலவும் இங்கு வேண்டியதும் கைமேல் பலன் கிட்டுகிறது என்பது ஐதீகம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பனை) ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டுள்ளது இக்குடவரைக் கோவில். சாலையில் இருந்து கோவில் வரை செல்லும் மண்பாதையின் இருபுறமும் தல விருட்சமான பனை மரம் அணிவகுத்து நிற்பது கொள்ளை அழகு!

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

துன்பங்களைப் போக்கி, இன்பங்களைத் தந்து, நிறைவில் முக்தியைத் தரவல்ல சர்வேஸ்வரனாம் பசுபதேஸ்வரரை, வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்ய வாருங்கள்!

அமைவிடம்

சங்கரன்கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சேர்ந்தமரம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து மேற்குத் திசையில் 3 கி.மீ. தூரத்தில் பசுபதேஸ்வரர் குடவரைக் கோவில் அமைந்துள்ளது. கடையநல்லூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சுரண்டை செல்லும் வழியில் இவ்வாலயம் இருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக 60 கி.மீ. பயணித்தும் இக்கோவிலுக்கு வரலாம்.

ஓம் சிவாய நம 
சர்வம் சிவமயம் 
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும் 
அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும் 

                

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...