Tuesday, September 10, 2013

கந்தர் அந்தாதி-அருணகிரிநாதர்


ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்று இந்த கந்தர் அந்தாதி. இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல் வேண்டுமெனத் தோன்றுகிறது. நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல் கவனிக்கத்தக்கது. இந்நூலைப் பாடியவர் அருணகிரி நாதர்.

பெரும்புலமை வாய்ந்த பாரதம் பாடிய வில்லிபுத்தூரார், தமது கல்விச் செருக்கால், தம்மோடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒருமுறை தருக்கம் உண்டாயிற்றென்றும், அப்போது ஆசுகவியாக அருணகிரிநாதர் பாடிய நூல் தான் கந்தர் அந்தாதி என்றும் அந்நூலுக்கு உரையை வில்லிபுத்தூரார் உடனுக்குடன் கூறி வந்தார் என்றும் கூறுவர். அவ்வாறு கூறி வரும் போது ‘திதத்த’ எனத் தொடங்கும் 54வது செய்யுளுக்கு வில்லிபுத்தூரார் உரை கூற இயலாது திகைத்து தோல்வியுற்றார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே.

அதற்கு அருணகிரிநாதரே உரை அருளினார் என்றும் கூறுவர். பின்பு ஏனைய பாடல்களுக்கு வில்லிபுத்தாரே உரை கூறினார் என்றும் கூறுவர். வில்லிபுத்தார் உரை கூற முடியாமல் தோல்வியுற்றாலும் அருணகிரிநாதர் அவருடைய காதை அறுத்து இழிவுபடுத்தாமல், இனி கருணைக்கு விரோதமான இவ்வழக்கத்தை விட்டுவிட வேண்டும் என புத்தி சொல்லி அவர் கையிலிருந்த குறடை எறியச் செய்தார் என்றும் கூறுவர். இக்கருணையைக் கருதியும் ‘கருணைக் கருணகிரி’ என்னும் வழக்கு எழுந்தது.

அருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார் என்றும், காவிரிப் பூம்பட்டினத்தில் பிறந்தார் என்றும் சொல்கின்றனர். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...