Saturday, May 2, 2015

“காலனிய கால மதப்பிரச்சாரத்தில் கிறிஸ்தவர்கள்”



பிரம்ம வித்யா’ இதழில் (15.11.1888) ‘சுதேசி’ என்ற பெயரில் ஒரு அன்பர் எழுதியுள்ள கட்டுரை. இக்கட்டுரை முனைவர் மு.வையாபுரி அவர்கள் தொகுத்தளித்துள்ள “காலனிய கால மதப்பிரச்சாரத்தில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள்” என்கிற புத்தகத்தில் பக்கம் 146 முதல் 151 வரையில் இடம் பெற்றுள்ளது. நமக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்கின்ற அக்கட்டுரையின் சுருக்கம்: -

1888 ஆம் வருடம் நவம்பர் மாதம் 11ஆம் தேதி பாலக்காட்டில் இரதோற்சவத்தில் பதினாயிரம் ஜனங்கள் சேர்ந்தார்கள். அன்று பரிசுத்த விசிஷ்டாத்வைத பரமத கண்டன வேங்கடகிரி சாஸ்திரியாரவர்கள் இந்து மதப் பிரசங்கம் செய்தார்.

மறுநாள் அக்கிராமத்தில் இரதோற்சவத்தில் பாதிரிகள் முப்பது பேர் பரிவார ஜனங்களுடன் நமது மத தூஷணஞ் செய்து பிரசங்கஞ் செய்தார்கள்.

மேற்படி சாஸ்திரியாரவர்களும் கூடச் சென்ற ஏழு பேரும் கிறிஸ்து மதக் கண்டனமாகப் பிரசங்கஞ் செய்யவே பிறகு தங்கள் காரியஞ் சித்தியாகவில்லை யாதலால் போய்விட்டார்கள். மேற்படி எழுவரில் ஒருவர் மலையாளியும், ஆறுபேர் பிராமணர்களுமாம். அவ்வறுவரில் நான்கு பெயர் இங்கிலீஷ் படித்தவர்களும், இருவர் ஸமஸ்கிருத வித்துவான்களுமாம்.

மூன்றாம் நாள் தேர்த்திருவிழாவில் சாஸ்திரியாரவர்களிடம் பாதிரியார் சென்று ஐயாவே!! தங்களிந்து மதத்தில் குற்றங் கூறுவதில்லை, அப்படியே கிறிஸ்து மதத்திலும் குற்றங்கூறாதிருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்குச் சாஸ்திரியார் எங்களுடைய திருவிழாவில் எங்கள் மதத்தை ஸ்தாபித்தும் கிறிஸ்து மதத்தைக் கண்டித்தும் பிரசங்கஞ் செய்வோம். உங்கள் கையாலான மட்டும் எங்கள் மதத்தைத் தடையின்றிக் கண்டிக்கலாமென்றார். பாதிரிமார் ஆனால் முப்பதடி தூரம் நிற்கவேண்டுமென்றார். சாஸ்திரியாரங்ஙனஞ் செய்தனரில்லை.

பின்பு பாதிரியார், வெள்ளைக்கார இனிஸ்பெக்டரையும் மகம்மதீய கான்ஸ்டேபிலையும் கூட்டி வந்து காட்டிக் கொடுக்க, சாஸ்திரியார் இன்ஸ்பெக்டரை நோக்கி, “நாங்களோ இந்துக்கள், இவர்களோ கிறிஸ்தவர்கள். இக்கிறிஸ்தவர்கள் எங்களுற்சவத்தில் எங்கள் கோவிலுக்கருகில் பயபக்தியோடு சுவாமியைத் தரிசிக்க வரும் எங்கள் ஜனங்களுக்கு வெட்கமுண்டாகவும், இரத்தக் கொதிப்புண்டாகவும், வாயில் வந்தபடி எங்களுற்சவத்தையும், எங்கள் தெய்வத்தையும், எங்கள் சாமியார்களையும், எங்கள் சாஸ்திரங்களையும் ஏன் தூஷிக்கின்றார்கள்? அவர்களுக்கிங்கென்ன வேலை?

நாங்கள் எங்கள் திருவிழாவில் எங்கள் ஜனங்களை நோக்கி, ஹிதமாயும், நீதியாயும், உலகின் கண்ணுள்ள மதங்களெல்லாவற்றிலும் இந்துமத மேயுயர்ந்ததென்றும் பாதிரிகள் சொல்லும் பொய்மொழிகளைக் கேட்டு மெய்யென்று நம்பிப் பிரமித்து நமது மதத்தைவிட்டுக் கிறிஸ்து மதத்திற்குப் போகாதீர்களென்றும் உபதேசிக்கிறோமேயன்றி, ஞாயிற்றுக்கிழமையில் பாதிரிகளுடைய கிறிஸ்து கோவிலுக்கருகில் போய் நின்று உபதேசிக்கின்றோமா?

இல்லையே.

ஜனங்கள் கூடுகிற திக்குகளிலெல்லாம் இவர்கள் பிரசங்கிக்கிற வழக்கமென்றால் மகம்மதீயருடைய அல்லா பண்டிகையில் இவர்கள் போய் ஏன் பிரசங்கிப்பதில்லை?

இந்துக்கள் சத்தியமும் க்ஷ்மையும் சௌசன்யமும் உடையவர்கள் என்றதனாலேயே விளங்குகின்றதல்லவா?

உங்களைப் போலீசு உத்தியோகஸ்தர்களாக ஏற்படுத்தி, இந்துக்கள் உற்சவகாலத்தில் அனுப்பியது பாதிரிகளுக்கு அனுகூலஞ் செய்யவும் இந்துக்களுக்கு பிரதிகூலஞ்செய்யவுமா?

பாதிரிகள் இந்துக்களிடத்து, வாதஞ் செய்து வெற்றி பெறச் சக்தியில்லாத போது, உங்களையிட்டுக் கொண்டு வந்து, எங்களைக் காட்டிக் கொடுக்க, அவர்களுக்கு நீங்கள் சாதகஞ்செய்யவும், இந்துக்களுக்குப் பாதகம் புரியவுமா?

நிற்க. பாதிரிகள் எங்களுற்சவகாலத்தில் வந்து செய்யும் தூஷணப் பிரசங்கத்தால் கலகங்களுக்கு ஆஸ்பதமாகின்றது.

அவர்களோ சம்பளத்துக்கு வந்து பிரசங்கஞ் செய்கிறார்கள்.

நாங்களோ சத்தியமாயும், சமாதானமாயும், இராச பக்தியுடனும் ஆத்தும ரக்ஷிப்படையவும் பிரசங்கம் புரிகின்றோம். இவை முதலாகப் பலவாறாகக் கூறினார்கள்.

அதன் பின் மேற்படி இன்ஸ்பெக்டர் பாதிரிமாரைப் பார்த்து நீங்கள் இந்து உற்சவத்தில் இந்து தேவாலயங்களுக்குச் சமீபத்தில் பிரசங்கிக்கக்கூடாது. அப்படிச் செய்வீர்களேயானால் உங்களைப் பிடித்துச் சார்ச் செய்வேன். போங்கள் என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டு சாஸ்திரியார் முதலியவர்களை நோக்கி, உங்களிஷ்டம் போல பிரசங்கஞ் செய்யுங்கள் என்று கூறி, விடை பெற்றுச் சென்றனர்.

இந்து மதவிஷயத்தில் தலைப்பட்டுக் கொண்டு அதையிகழ்ந்து இந்துக்களை அக்கிரமமாய்க் கிறிஸ்துவராக்கக் கருதாது பாதிரிமார்கள் இருப்பார்களானால் அவர்களை நாம் புகழ்ந்து கூறத்தக்கவர்களாக இருக்கின்றோம்.

இந்துக்கள் தங்களினத்தார் புறமதமான அவைதிக, மிலேச்ச கிறிஸ்துமதத்தில் செல்லாதிருக்க ஆங்காங்கு சபைகளை உண்டாக்கி, எதேதோ நல்ல வேலை செய்து வருகின்றார்கள். வந்தும் அங்கே ஒருவன் கிறிஸ்தவனானான். இங்கே ஒருவனானான் என்ற படிக் கூச்சலெழும்புகின்றது.

சென்னை இந்து டிராக்ட் சொசைட்டியார் அல்லும் பகலும் சேவை செய்து பயனைக் காணோம். பகைவர் முயற்சி மலையாயிருக்கிறது. நம்மவர் முயற்சி கடுகாயிருக்கின்றது.

எப்படிக் காரியஞ் சாதகமாகும்.

இந்து டிராக்ட் சொசைட்டியார்க்கு எவ்வளவு பணம் வருகிறதோ, அவ்வளவு காரியம் வஞ்சகமின்றிச் செய்கின்றார்கள். அதற்குப் பணமுள்ளவர்கள் கைகொடுத்தால் இன்னும் பெருவேலைகள் செய்து வைரிகளையோட்டுவார்கள்.

1,00,000, 2,00,000 லக்ஷம் செலவழித்துக் கோவில்கட்டி, உற்சவஞ் செய்து மகா பத்திமான்களாயிருக்கும் இந்துக்களுடைய பிள்ளைகள், மிஷன் ஸ்கூல்களில் படிக்கிறார்கள்.

பெண்களோ நமக்கு வைரிகளாக பாதிரிகளுடைய பள்ளிகளையே தேடிப் போகின்றார்கள். அவர்கள் வீடுகளிலோ மாட்டுக்கறித் தின்னும் கிறிஸ்தவச்சிகள் போய்ப் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறார்கள், தையலும் கற்றுக் கொடுக்கிறார்கள். நாளை பிள்ளையும் பெண்ணும் கிறிஸ்தவர்களாகத் தடையாது?

இப்படிப்பட்ட தனவந்தர்கள் பலபேர் யேகோபித்து ஆண்பிள்ளைகளுக்கும். பெண் பிள்ளைகளுக்கும் பாடசாலை வைக்கப்படாதா?

கிறிஸ்து மதத்தை வேரோடு களையப்படாதா?

அதனிமிருத்தம் பிரசங்கிகளை யேற்படுத்தப்படாதா?

தாங்கள் செய்யாவிடினும் இதற்காக முன்வந்திருக்கும் சபையார்க்குப் பணசகாயஞ் செய்யப்படாதா?

எத்தனையோபேர் பணத்தைச் செலவழிக்காமல் பூதம்போல் காத்துச் செத்தபின்பு குடி, சூது, விபசாரம் இவற்றின் பொருட்டு பிள்ளைகள் வாயிலாக அழிக்கின்றார்கள்.

இவர்கள் வித்தியா தருமத்திலும், கிறிஸ்துமதத்தைத் தாக்கி இந்து மதத்தை நிலைநிறுத்தும் பெறும் புண்ணியத்திலும் செலவழிக்கப்படாதா?

இல்லாவிடில் யாவரும் கிறிஸ்தவராய் விடுவோமா?”


Thanks to Harsh Thamizh ji: And Ananda Ganesh ji

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...