Thursday, September 27, 2012

நலம் தரும் முத்திரைகள்!

  
   தன்வந்திரி அருளிய “தன்வந்திரி 1000” என்கிற நூலில் விவரிக்கப் பட்டிருக்கும் முத்திரைகளின் முதல் வகையான யோக முத்திரைகள் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதன் மற்ற வகையான தேக முத்திரைகளைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த முத்திரைகளைப் பற்றி தனது நூலின் 679 முதல் 713 வரையிலான பாடல்களில் விவரித்திருக்கிறார்.

முத்திரைகளை செயல்படுத்துவதில் விரல்களே பிரதானம் என்பதை முன்னரே பார்த்திருக்கிறோம்.கட்டை விரலானது நெருப்பையும், சுட்டு விரலானது காற்றையும், நடுவிரவிரலானது ஆகாயத்தையும், மோதிர விரலானது நிலத்தையும், சுண்டு விரலானது நீரையும் குறிக்கிறது.

நமது உடல் இயங்கத் தேவையான உயிர்சக்தியை நமது உடலிலுள்ள சக்கரங்களே உற்பத்தி செய்து தருகின்றன. எனவே இவற்றை சக்தி மையங்கள் என்று அழைக்கிறோம். இது மாதிரி மனித உடலில் சக்தி மையங்கள் 20000 க்கு மேல் இருப்பதாகவும், அவற்றில் முக்கியமானவை ஏழு என்றும் மற்றவை துணைச்சக்கரங்கள் என்று தன்வந்திரி கூறுகிறார்.

மூலாதாரம், சுவாதிச்டானம், மணிபூரகம், விசுத்தி, அனாகதம், ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகியன முதன்மை சக்கரங்கள் ஆகும்,இவை நலமாக இயங்கும் வரை உடல் நலமுடன் இருக்கும் என்றும், இவற்றில் ஏதும் தடைகள், தேக்கங்கள் உண்டாகும் பொது உடல் நிலையில் பாதிப்புக்கள் ஏற்படும் என்கிறார். இந்த பாதிப்புக்களை இலகுவாக நிவர்த்தி செய்யவே முத்திரைகள் பயன்படுகின்றன என்கிறார். இந்த முக்கிய சக்கரங்கள் நமது விரல்களினால் கட்டுப்படுத்தப் படுகிறது என்கிறார் .

பெருவிரல் மணிப்பூரகத்தையும், சுட்டுவிரல் அனாகதத்தையும், நடுவிரல் விசுத்தியையும், மோதிரவிரல் மூலாதாரத்தையும், சுண்டுவிரல் சுவாதிச்டானத்தையும் கட்டுப்படுத்தும் என்றும் மற்றைய இரண்டு சக்கரங்களான சகஸ்ராரம், ஆக்ஞை ஆகியவை ஞானச் சக்கரங்கள் என்றும் இவற்றை விரல்களால் கட்டுப்படுத்த முடியாதென்றும் குறிப்பிடுகிறார். நமது உள்ளங்கையில் ஒரு துணைச் சக்கரமும், விரல் மூட்டுகளில் ஒவ்வொரு துணைச் சக்கரங்கள் வீதம் பல சக்கரங்கள் இருப்பதாகவும் அவை இந்த முத்திரைகள் மூலம் தூண்டப்பட்டு மூல சக்கரங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கும் என்கிறார். ஆகவே இவற்றை தெளிவாக உணர்ந்தே முத்திரைகளைப் பயன்படுத்த தொடங்க வேண்டும் என்கிறார்.                        முத்திரைகள் வரிசையில் இன்று முதலாவதாய், நாம் இருகரங்களையும் கூப்பி வணக்கம் செய்வதே ஒரு முத்திரைதான்.தன்வந்திரி இதனை அஞ்சலி முத்திரை என்று சொல்கிறார். ஒவ்வொருவரும் தமக்கு அறிவை கற்பித்த குருவையும், தெய்வத்தையும் பிரம்மமாக எண்ணி இந்த முத்திரையை செய்யவேண்டும் என்கிறார்.



படத்தில் உள்ளவாறு வலது கையின் விரல்கள் இடது கையின் விரல்களுடன் இடைவெளியின்றி இணைத்து இருகைகளையும் ஒன்றோடொன்று சேர்த்து பிடித்தல் வேண்டும்.இந்த முத்திரையைப் பிடித்த கைகள் மார்புப் பகுதியின் மையத்தில் இருத்தி கண்களை மெதுவாக மூடி தலையை சற்றுக் குனிந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை நின்று கொண்டு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

நமது உடலில் வலப்பாகம் சிவனாகவும், இடப்பாகம் சக்தியாவும் இரண்டு ஆற்றல் மையங்களாய் உள்ளது. கைகளை இவ்வாறு இணைக்கும் போது புதிய அருட் சக்தி ஓட்டம் ஒன்று உருவாகி, பிராண சக்தியை நம்முள் நிலைகொள்ள செய்யும் என்கிறார்.

பின் குறிப்பு :-

இறைவனை அன்பால் வணங்குபவர்கள் மார்புக்கு நேராயும், ஞானத்தால் வழிபடுபவர்கள் நெற்றிக்கு நேராகவும், இறைவனிடம் சரணாகதி என்று வணங்குபவர்கள் தலைக்கு மேலாயும் இந்த முத்திரையை பிடித்து வணங்கலாம்.

லிங்க முத்திரை





படத்தில் உள்ளது போல, இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கைகளும் அழுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும் இதுவே லிங்க முத்திரையாகும்.இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து, அளவான உடல் எடையினைக் கொடுக்கும். மேலும் இந்த முத்திரை ஜலதோசதிற்கு சிறந்த நிவாரணமாக அமையும் என்கிறார்.

வயிறு சம்பந்தமான நோயுள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யகூடாது என்றும் எச்சரிக்கிறார்.


ருத்ர முத்திரை...



படத்தில் உள்ளதைப் போல பெருவிரல் நுனி , சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும்.இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடல் வலிமை குன்றியவர்களுக்கு உடல்வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, இருதயத்தையும் வலுப்படுத்தும் என்கிறார்.

பொதுவில் முத்திரைகளை யாரும் செய்யலாம், இதற்கென எந்த விதமான முன் தயாரிப்புகளும் தேவையில்லை. அமைதியான சூழலில் பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது இன்னமும் சிறப்பு. முத்திரைகளின் வகைக்கேற்ப குறைந்தது பத்து நிமிடம் முதல் முக்கால் மணி நேரம் வரை செய்ய வேண்டும். முத்திரைகளை தொடர்ந்து செய்து வருவதனால் மட்டுமே தேவையான பலன் கிட்டும். தகுந்த குருவின் மேற்பார்வையில் இவற்றை பழகி, பயன்படுத்துவது சிறப்பு.
 
 
அனுசாசன் முத்திரை



சுட்டு விரலை வளைவின்றி நேராக வைத்துக் கொண்டு, நடுவிரல் , மோதிரவிரல், சுண்டு விரல் ஆகியவற்றை பெருவிரலுடன் இணைந்து இருத்துவதே அனுசாசன் முத்திரையாகும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் மனமும் தெளிவடையும் முதுகுத்தண்டு வலுவடையும். அத்துடன் பல்வலி குறைந்து பற்கள் உறுதியாகும் என்கிறார்.


கருட முத்திரை



படத்தில் உள்ளவாறு இடது கையின் மேல் வலது கை வைத்து, இறுகிப் பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, பின்னர் மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடல் அசதி சோர்வு போன்றவை மறைவதுடன், உடல் புத்துணர்ச்சி பெருகும், நினைவாற்றல் அதிகரிக்கும், அத்துடன் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி பார்வை கூர்மையடையும்.இந்த முத்திரையை உணவு அருந்த முன்னர் (வெறும் வயிற்றில்) செய்தால் அதிகபலன் கிடைக்கும் என்கிறார்.

முகுள முத்திரை


வெகு இலகுவான முத்திரைகளில் இதுவும் ஒன்று நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்த்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.

நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்களா வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.

பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப் பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.


சுரபி முத்திரை


இந்த முத்திரையானது சற்று சிக்கலானது. அவதானமாக செய்ய வேண்டும்.

பெருவிரல்கள் இரண்டும் தொடாமல் படத்தில் உள்ள மாதிரி இருத்தல் வேண்டும், வலது ஆள்காட்டி விரல் நுனி இடது நடுவிரல் நுனியுடனும், வலது நடுவிரல் நுனி இடது ஆள்காட்டி விரல் நுனியுடனும், வலது மோதிரவிரல் நுனி இடது சுண்டு விரல் நுனியுடனும், வலது சுண்டு விரல் நுனி இடது மோதிரவிரல் நுனியுடனும் இணைந்து இருத்தல் வேண்டும் இதுவே சுரபி முத்திரையாகும். விரல்களில் அதிக அழுத்தம் தேவையில்லை.

ஆரம்பத்தில் இந்த முத்திரை செய்வது சிரமமாக இருந்தாலும் படிப்படியாக பழக்கப்பட்டுவிடும். நன்கு பழக்கப் பட்ட பின் இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

இந்த முத்திரை உடலை வலுவடையச் செய்யும் சிறுநீரகக் கோளாறு நிவர்த்தியாகும். சிந்தனை தெளிவாகும் உயர்ந்த எண்ணங்கள் மனதில் தோற்றுவிக்கும் என்கிறார். அத்துடன் இந்த முத்திரையானது யோகம் பயில்வோருக்கு மிகவும் உகந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

ஞான முத்திரை



மேலே படத்தில் உள்ளது போல சுட்டு விரல் நுனியால் பெருவிரல் நுனியை சற்று அழுத்தமாக தொட்டு, மற்ற விரல்கள் மூன்றும் வளைவின்றி நேராக ஒன்றோடொன்று சேர்ந்தபடி இருப்பதே ஞான முத்திரையாகும்.இதனை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.

பெருவிரல் நெருப்பையும் , சுட்டுவிரல் காற்றையும் குறிப்பாதால் இவை இரண்டும் இணைந்து மனதில் உள்ள தீய சிந்தனைகளை அகற்றி ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் என்கிறார் தன்வந்திரி. மேலும் மனம் ஒருமுகப் படுவதுடன், கோபம் பிடிவாதம் பொறுமையின்மை போன்றவை மறையும். எதனையும் இலகுவாக கற்றுக்கொள்ளும் தன்மை அதிகரிக்கும்

ஞானமுத்திரையை செய்து கொண்டே, தியானம் செய்தால் பல அற்புத சித்திகள் கை கூடுமாம்


குபேர முத்திரை




மேலே படத்தில் உள்ளவாறு பெரு விரல் நுனியுடன் சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை இணைப்பதே குபேர முத்திரை ஆகும். அதிகமாய் அழுத்தம் தராது.விரல்களை சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.

இந்த முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார்.

சங்கு முத்திரை



இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதிய வைத்து, அதனை வலது கை விரல்களால் (பெருவிரல் தவிர்த்து) அதை இறுக மூட வேண்டும். வலது பெருவிரலானது இடது கையின் மற்றைய நான்கு விரல்களை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இதுவே சங்கு முத்திரையாகும்.(படம் மேலே இணைக்கப் பட்டுள்ளது)

இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

பெருவிரல் நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களில் ஒன்றை இயக்கம் விரல் இது மற்றைய நான்கு பஞ்ச பூதங்களையும் ஒன்றிணைக்கும் இதுவே இந்த முத்திரையின் செயற்பாடு என்கிறார் தன்வந்திரி. இந்த முத்திரை யானது மணிபூரகத்தை சிறப்பாக செயல்பட வைத்து குரலை வளமாகும் . மேலும் திக்குவாய், தொண்டை நோய்கள் போன்ற குறைபாடுகளையும் நீங்கும் என்கிறார்.

சுவகரண முத்திரை



தன்வந்திரி, தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்ற நூலில் சுவகரண முத்திரையை செயல் படுத்திடும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

"சாற்றுவது சுவகரண முத்திரையைக் கொண்டு
சங்கையுடன் சம்மென்று தியானஞ்செய்யில்
பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ்சித்தி
சகலகலை சாத்திரமுஞ் சித்தி
தோற்றியதோர் ஆதார மூலஞ்சித்தி
திருவாசி ஆனதொரு வாசிசித்தி
தோத்திரமாய் நின்றதொரு பூசைசித்தி
சுகமான ஆறான முத்திரையுஞ்சித்தே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

சுவகரண முத்திரையை இரு கரங்களிலும் செய்து கண்களை மூடி மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து சம் என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பத்துக் கோடி மந்திரமும், சகல சாத்திரங்களும், ஆதாரமான மூலப் பொருளும் சித்தியாவதுடன் வாசியும் சித்திக்கும் என்கிறார்.

இந்த யோக முத்திரைகளை தினமும் அதிகாலையில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் செய்து வர உடலில் உள்ள பஞ்சபூத அம்சங்கள் நிலைபெறும். இதனால் கிடைக்கும் நன்மைகள் கணக்கில் அடங்கா....யோக முத்திரைகளை முறையாக, குருமுகமாய் பயிற்சினை தொடங்கி, தொடர்ந்து பழகி வருதல் சிறப்பு.


யோனி முத்திரை




யோனி முத்திரையை செயல்படுத்தும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"செய்யப்பா யோனி முத்திரையைக் கொண்டு
தீர்க்கமுடன் றீங்கென்றே தியானஞ்செய்யில்
மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ்சித்தி
மேலான அண்டமொடு புவனஞ்சித்தி
மய்யப்பா மையமென்ற சுழினைசித்தி
மாலொடு லட்சுமியும் தனங்கள்சித்தி
பையப்பா யோனி முத்திரயைப் பெற்று
பக்தியுடன் சிவயோகம் பணிந்து காணே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் உள்ளவாறு ”யோனி முத்திரை”யை இரு கரங்களிலும் செய்து, கண்களை மூடிக் மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”றீங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்திட தேவாதி தேவர்களுடன், அண்டமும், புவனமும் சித்தியாவதுடன், லட்சுமியும், பொன் பொருட்களும், மையமான சுழினையும் சித்தியாகும் என்கிறார்.


அபான முத்திரை




அபான முத்திரையினை செயல்படுத்திடும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"சித்தான அபான முத்திரையைச் செய்து
தீர்க்கமுடன் கிலியென்று தியானஞ்செய்ய
வத்தான பூரணமாய் சிவயொகஞ்சித்தி
மகத்தான கற்பூர தீபஞ்சித்தி
வித்தான பிரமனொரு சரசுவதியுஞ்சித்தி
வேத மயமான சிவயொகஞ்சித்தி
சத்தான அபான முத்திரயினுடமகிமை
சங்கையுடன் கண்டுசிவ யோகஞ்செய்யே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் உள்ளவாறு அபான முத்திரையை இரு கைகளிலும் செய்து, கண்களை மூடிக் கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”கிலி” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பூரணமான சிவயோகமும், வேத மயமான சிவயொகமும் சித்தியாவதுடன் பிரம்மன், சரசுவதி அருளும் சித்தியாகும் என்கிறார்.



 “திருவினி”



 திருவினி முத்திரையின் மகத்துவம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"காணவே திருவினி முத்திரையைக் கொண்டு
கருணையுடன் வங்கென்று தியானஞ்செய்யில்
பூணவே ருத்திரர் முதல் சகல செந்தும்
பூலோக ராசரோடு வசியமாகும்
தோணவே சந்தான சவுபாக்கியம்
சுத்தமுடம் ஐந்தறிவுஞ் சித்தியாகும்
பேணவே ருத்திரியும் சித்தியாகும்
பிலமான திருவினியால் சித்தியாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் காட்டியுள்ளவாறு திருவினி முத்திரையினை இரு கைகளிலும் அமைத்து, கண்களை மூடி, மனதினை ஒருமுகப் படுத்தி மனக்கண்ணால் புருவ மத்தியை கவனித்து பார்த்து ”வங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய ருத்திரன் முதலான அனைத்து தெய்வங்களுடன், பூலோக அரசர்களும் வசியமாவதுடன் புத்திர பாக்கியமும், ஐந்தறிவும், உருவத்தை மாற்றும் தன்மையும் சித்திக்கும் என்கிறார்.

யோக்முத்திரை வரிசையில் மூன்றாவதான இந்த முத்திரையை பிரம்ம முகூர்த்தத்தில் ஏழு நிமிடங்கள் செய்திடல் வேண்டும்.

மோகினி முத்திரை



"ஆமப்பா மோகினி முத்திரையைச் செய்து
அருள் பெருக்கும் புருவமதில் மனக்கண்சாற்றி
ஓமப்பா யகாரமுடன் உகாரங்கூட்டி
உத்தமனே மகாரமென்ற மவுனத்தேகி
காமப்பால் கானற்பால் சித்தியாகும்
கருணைதரு மனேன்மணியுஞ் சித்தியாகும்
வாமப்பால் பூரணமுஞ் சித்தியாகும்
மகத்தான நால்பதமுஞ் சித்தியாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் உள்ளது மோகினி முத்திரை, இந்த முத்திரையினை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கண்களை மூடி, மனக் கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”ஓம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நான்கு பாதங்களும், பரம்பொருள் பற்றிய தெளிவும், கருணையுள்ள மனோன்மணித் தாயின் அருளும் சித்தியாகும் என்கிறார்.


சோபினி முத்திரை




"பாரப்பா சோபினி முத்திரையைச் செய்து
பக்தியுடன் அம்மென்று தியானஞ்செய்ய
நேரப்பா சொல்லுகிறேன் சர்வலோகம்
நிசமான ஆதாரஞ் சித்தியாகும்
மேரப்பா மேருகிரி தீபஞ்சித்தி
மெய்யான மயேச்வரனும் மீச்வரியுஞ்சித்தி
காரப்ப சோபினி முத்திரையினாலே
கண்ணடங்கா போதசிவ யோகமாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -


மேலே படத்தில் இருப்பது சோபினி முத்திரை. இந்த முத்திரையை இரு கைகளில் வைத்துக் கொண்டு கண்களை மூடி கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”அம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நிஜமான ஆதாரப் பொருளை உணர்வதுடன், மகேச்வரன், மகேச்வரி அருள் கிடைப்பதுடன், சிவயோகம் சித்திக்கும் என்கிறார்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...