நீடித்த இளமையோடும், நோயற்ற உடல் நலத்துடன் வாழ சித்தர்கள் பல கற்பவகைகளை
அருளியிருக்கின்றனர்.இவை யோக கற்பம், மருத்துவ கற்பம் என இரு வகையில்
அடங்கியிருக்கிறது. மருத்துவ காயகற்பங்கள் சிலவற்றை ஏற்கனவே சில பதிவுகளின்
ஊடே பகிர்ந்திருக்கிறேன். அந்த வகையில் முன்னரே மிளகு கற்பம் ஒன்றினை பகிர்ந்த நிலையில் இன்று அகத்தியர் அருளிய மற்றொரு மிளகு கற்பம் பற்றி பார்ப்போம்.
இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு....
கிருபையுள்ள மாதுரதி யமுர்தந்தன்னை
கேளடா வாங்கியொரு கரகத்திட்டு
கெணிதமுடன் பருமிளகாய் யெடுத்துக்கொண்டு
கேளடா அமுர்தரசத் தேனில்நன்றாய்க்
கெட்டியுடன் சட்டமதா யூறவைத்து
கேளடா நீரறவே யூறிற்றானால்
கேள்வியென்ன அந்திசந்தி ஐந்துகொள்ளே.
கொள்ளையிலே கபமகலும் வாசியேறும்
குருவான பதிதனிலே தீபங்காணும்
சுள்ளையிலே யகப்பட்ட பாண்டம்போலே
சோர்வான தத்துவங்கள் சுத்தமாகும்
பிள்ளையிலே உங்களைப்போல் பிள்ளையுண்டோ
பிலமான அமுர்தரசங் கொண்டதாலே
உள்ளெழுந்த மந்திரத்தின் சித்தியாலே
உத்தமனே சக்கரம்நின் றாடும்பாரே.
நல்ல பெரிய மிளகாக பார்த்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனை ஒரு
பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டுமாம். அந்த மிளகு மூழ்கும் வரை தேனை
ஊற்றி, அந்த பாத்திரத்தை மூடி ஒன்றினால் மூடி விட வேண்டும். மிளகானது தேனை
முழுவதுமாக உறிஞ்சி, பாத்திரத்தில் தேன் வற்றிப் போன நிலையில் அந்த மிளகை
எடுத்து பத்துப் பங்காகப் பிரித்துக் கொள்ள வேண்டுமாம். இதனை அந்தி சந்தி
வேளைகளில் ஒவ்வொரு பங்காக ஐந்து நாட்கள் தொடர்ந்து உண்ண வேண்டும்
என்கிறார்.
இவ்வாறு ஐந்து நாட்கள் உண்டால், கபம் நீங்கி வாசி மேல் நோக்கி ஏறுவதுடன்
புருவமத்தியில் ஒளி தென்படுமாம். அத்துடன் சூளையில் சுட்ட மண் பாண்டம் போல்
நமது உடல் சுத்தியடைந்து உறுதியாகும் என்கிறார் அகத்தியர். இந்த
கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.
No comments:
Post a Comment