Saturday, September 22, 2012

எந்த உணவு உடலுக்கு நல்லது? – சத்குரு விளக்கம்


 

`துரித உணவு (ஜங்க் புட்) சாப்பிடுவது மிகவும் சாதாரணமாகி விட்டது. அதனுடன் சேர்த்து கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானமும் குடிக்கிறார்கள். இதனால் பாதிப்பு வருமா?’ என்று, என்னிடம் பலரும் கேட்கிறார்கள்.
இதனால் நம் பொருளாதாரம் நன்றாக நடக்கும். நம் பொருளாதாரத்திற்கு இதெல்லாம் மிகவும் தேவைப்படுகிறது. இதனால் நோய்கள் வரும்போது மருத்துவமனைகள் எல்லாம் நன்றாக நடக்கும். மருந்தகங்களும் நன்றாக நடக்கும். நீங்கள் சீக்கிரம் இறந்தும் போகலாம்.
ஜங்க் என்றால் "எதற்கும் உதவாத” என்று அர்த்தம். இது எல்லாருக்கும் தெரியும்.
"எதற்கும் உதவாத உணவை சாப்பிடுகிறேன்,” என்றால் யார் என்ன செய்யமுடியும்? சாப்பிடுங்கள்!
நம் கலாசாரத்தில் கோடைகாலம், மழைக்காலம், குளிர் காலம் என்று ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற உணவை நிர்ணயித்து வைத்தார்கள். ஏனெனில் அந்தந்த காலத்திற்கேற்ற உணவைத்தான் நாம் சாப்பிட வேண்டும்.

Sun18

அது மட்டுமல்ல, இந்த உடல் என்பது மண்தான். மண்ணில் விளைந்ததுதான் இப்போது உடலாக மாறியிருக்கிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குள் விளைவதை மட்டுமே அவரவர் சாப்பிட வேண்டும். அதை ஆயுர்வேதம் "உங்களால் ஒரு நாளில் எவ்வளவு தூரம் நடந்து போக முடியுமோ அந்த இடத்திற்குள் விளைகிற உணவை மட்டும் சாப்பிட வேண்டும்” என்று குறிப்பிடுகிறது.
இது உங்களுக்கு நடைமுறையில் மிகவும் கடினமாக இருந்தால் நீங்கள் மிதி வண்டியில் ஒருநாளில் போகும் அளவிற்கு உள்ள நிலத்தில் விளைகிற உணவை சாப்பிடலாம்.
இது கூட கடினமாக இருந்தால், காரில் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் போக முடியுமோ அந்த அளவு உள்ள நிலத்தில் விளையும் உணவை சாப்பிடலாம்.
இப்போது நாம் அதையெல்லாம் மறந்து விட்டோம். இன்னும் சில நாட்களில் சந்திரலோகத்தில் காய்கறிகள் விளைவித்து அதையும் சாப்பிடுவோம்.
இது வியாபாரத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் இதை நம் உடல் ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் இந்த உடலுக்கும் நாம் வாழும் இந்த நிலத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
இந்த மண்ணுக்கு என்ன விதமான ஞாபகசக்தி இருக்கிறதோ அதே ஞாபகசக்தி இந்த உடலுக்கும் இருக்கிறது. இதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. இதனால்தான் நாம் ஆசிரமத்தில் அனைவரையும் நிலத்தில் படுக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
ஏனெனில் இந்த உடலும் நிலமும் ஒரு தொடர்பில் இருக்கும்போது ஆரோக்கியம் மேம்படுகிறது.
நம் ஆசிரமத்தில் உள்ள புத்துணர்வு மையத்துக்கு பலவிதமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வருகிறார்கள்.
ஒரு குழி தோண்டி அவர் கழுத்து வரை மண் நிரப்பி அவரை மூன்று மணி நேரம் அப்படியே வைத்திருந்து பின்னர் எடுத்தால் அவர் நோயே போய் விட்டது என்று சொல்கிறார். இதற்குக் காரணம் மண்ணுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புதான்.
இங்கு நோயாளிகள் வந்தால் "முதலில் போய் தோட்டத்தில் வேலை செய்யுங்கள்,” என்று நான் சொல்கிறேன். "செருப்பு போடாமல் வெறும் காலில் வேலை செய்யுங்கள்” என்று சொல்கிறேன்.
பூமியுடன் ஆழமான தொடர்பு ஏற்படும் போது உடல் தன்னை தானாகவே சார்ஜ் செய்து கொள்கிறது. ஏனெனில் இந்த உடல் பூமியின் பகுதிதான், மண்ணால் ஆனதுதான். மண்ணுடன் தொடர்பில் இருக்கும் போது உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது.


நீங்களே "ஜங்க் புட்” என்று சொல்லி விட்டீர்கள். அதற்கு மேல் நான் என்ன சொல்வது?
சுவைக்காக ஏதோ ஒரு நாள் சாப்பிட்டால் பரவாயில்லை. ஆனால் உப்பு, காரம் எதுவும் இல்லாமல் மேற்கத்திய நாடுகளில் சாப்பிடுகிறார்கள் என்பதால் அதையே நாமும் தினமும் சாப்பிடுவது சரியானது அல்ல. இதனால் என்ன பாதிப்பு வரும் என்று தெரிந்துகொள்ள வேண்டும் எனில் நீங்கள் அமெரிக்கா சென்று பார்க்கலாம்.
அமெரிக்காவில் இருக்கும் ஒரு பத்திரிகையாளர் புத்தகம் எழுதினார். அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை வரை சுமார் 3000 கிலோ மீட்டர் தூரத்தை 30 நாட்களில் கடந்து வழியில் கிடைக்கும் எல்லா சாலையோர உணவையும் உண்டு, உடலுக்கு என்ன நடக்கிறது என்பதை பரிசோதனை செய்து அந்த புத்தகத்தில் எழுதினார்.
30 நாட்களில் அவர் நியூயார்க் வந்து சேரும் முன்பு அவருக்கு ரத்த கொதிப்பு வந்து விட்டது. அவரது எடை 17 கிலோ அதிகமாகியது. அவருக்கு லேசான சர்க்கரை வியாதியும், ஆண்மை குறைவும் ஏற்பட்டது. இன்னும் அவருக்கு வேறென்னவெல்லாம் பாதிப்பு ஏற்பட்டதென்று ஒரு அட்டவணை போட்டார்கள். அதை அவர் அந்த புத்தகத்தில் விவரமாக எழுதியுள்ளார். இது போன்ற உணவை தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை அந்த புத்தகத்தை படித்தால் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானம் பற்றி சொல்வதனால் இந்த உடல் என்னும் இயந்திரத்திற்கு ஆக்ஸிஜன்தான் தேவை. கார்பன் டை ஆக்ஸைடு தேவையில்லை என்பது ஒரு சிறு குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் நான் கார்பன் டை ஆக்ஸைடையே குடித்து கொள்கிறேன் என்று சொன்னால் என்ன செய்வது? வாழ வேண்டும் என்ற ஆசை இல்லையென்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.
விளம்பரங்களில் சொல்வதை எல்லாம் உண்மை என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு நன்றாக வாழவேண்டும் என்ற ஆசை இல்லை என்றுதான் அர்த்தம்.
அது மட்டுமல்ல. நாம் உணவு உண்ணும்போது தண்ணீர் குடிக்க கூடாது. அப்படிக் குடித்தால், செரிமானத்திற்காக நம் உடலில் சுரக்கும் நொதிகள் நீர்த்துப் போய்விடும் என்பார்கள். அதிலும் நீங்கள் சொல்லும் குளிர்பானம் தண்ணீருடன் சர்க்கரையும் சேர்ந்தது. எனவே ஜீரணம் மிகவும் பாதிக்கப்படும்.
சர்க்கரை மட்டுமல்ல, கார்பன் டை ஆக்ஸைடு வேறு சேர்த்து சாப்பிடுகிறீர்கள். இருக்கும் விஷம் போதாது என்று இன்னொன்றும் சேர்த்து அருந்திவிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது அப்படி வேலை செய்யாது.
உடல் என்ற இந்த இயந்திரத்திற்கு என்ன வேண்டுமோ அதை கொடுத்தால் இந்த இயந்திரம் நல்லபடியாக நடக்கும். அதற்கு எது வேண்டாமோ அதையெல்லாம் கொடுத்தால் பிறகு அது நம்மைப் போட்டுப் பார்க்கும் (சிரிக்கிறார்).
ஏற்கனவே நாம் பாதிப்பில் இருக்கிறோம். நாம் சம்பிரதாயமாக சாப்பிடும் உணவிலேயே முக்கியமான அம்சங்களை எடுத்துவிட்டு சாப்பிடும் தன்மை இப்போது வந்துவிட்டது. வெறும் சாதம் மட்டுமே சாப்பிடுகிறார்கள். சிறிதளவு புளி, உப்பு, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரிசியை சுவையாக சமைத்து சாப்பிட்டுவிட்டால் உடலுக்கு தேவையானது கிடைத்துவிடாது. அது நமது சம்பிரதாய சாப்பாடும் அல்ல.
ஒரு தலைமுறை அல்லது இரண்டு தலைமுறைக்கு முன் இந்த நாட்டில் மக்கள் எப்படி சாப்பிட்டார்களோ அப்படி சாப்பிட்டு பாருங்கள். ஆரோக்கியம் என்பது தானாகவே கிடைக்கும். அதில் சந்தேகமே கிடையாது.
நான் சொல்வது என்னவென்றால், இந்த உடலுக்கு எப்படி தேவையோ, இந்த உடல் எதை சாப்பிட்டால் சுகமாக இருக்கிறதோ அதை சாப்பிடுங்கள் என்கிறேன்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...