Wednesday, September 19, 2012

அகத்தியர் அருளிய ஆசனங்கள்

அகத்தியர் அருளிய ஆசனங்கள் - கோமுகாசனம்

கோமுகம் என்றால் பசுவின் முகம். இந்த ஆசனத்தில் இருக்கும் பொழுது பார்த்தால் பசுவின் முகம் போல் தெரியும் என்பதால் இந்த பெயர் பெறுகிறது. 

"அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இந்த்க ஆசனத்தைப் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
ஆமப்பா கோமுகா சனத்தைக்கேளு
அங்கமுடன் முழங்கால்மேல் முழங்கால்போட்டு
தாமப்பா பாதம்ரெண்டில் கையையூணித்
தானிருக்க கோமுகா சனமதாச்சு


தரையில் அமர்ந்து காலை நீட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இடதுக் காலை மடக்கி வலதுக் காலின் அடியில் விட்டு வலதுப் பக்க புட்டத்தோடு ஒட்டியவாறு வைக்க வேண்டும். வலதுக் காலை மடக்கி இடதுக் காலின் மேல் கொண்டு வந்து இடதுப் பக்க புட்டத்தோடு ஒட்டியவாறு வைக்க வேண்டும்.

மெதுவாக மூச்சினை உள்ளிழுத்தவாறு வலதுக் கையைத் தூக்கி முதுகின் பின்புறமாக மடக்கிக் கொள்ள வேண்டும். இடதுக் கையை கீழ் வாட்டமாக மடித்து வலதுக் கை விரல்களை கொக்கி போல் பிடித்துக் கொள்ளவும் (அப்படிக் கைகளை பிடிக்க முடியாதவர்கள் பழகும் வரை தற்காலிகமாக துணியை இரண்டு கைகளுக்கும் நடுவில் பயன்படுத்தலாம்)

இந்த நிலையில் அமர்ந்து பின்னர் மூச்சை மெல்ல வெளியேற்றவும். பின் கை மற்றும் கால்களை மாற்றி ஆசனத்தை பழகலாம். துவக்கத்தில் ஒரு நிமிடம் தொடங்கி நாளடைவில் ஐந்து நிமிடம் வரை பழகலாம்.
கைகள், விரல்கள், மணிக்கட்டு, தோள்பட்டை, முதுகு, அடி வயிறு அனைத்தும் பலப்படும். நுரையீரல் விரிவடைதால் உள்ளிழுக்கப்படும் பிராணவாயு முழுமையாக உபயோகிக்கப்படுகிறது. கால்களில் ஏற்படும் தசை பிடிப்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வாயு பிடிப்புகளில் இருந்து நிவாரண அளிக்கிறது 

சவாசனம்

உயிரற்ற அல்லது உணர்வற்ற பிணம் போல உடலை தளர்த்த உதவும் ஆசனம் என்பதால் இந்தப் பெயர் பெறுகிறது. எத்தனை ஆசனங்கள் பழகினாலும் கடைசியாக செய்ய வேண்டிய ஆசனம் என்கிற வகையில் இந்த ஆசனம் முக்கியத்துவம் பெறுகிறது. சவாசனம் செய்தால் மட்டுமே மற்ற ஆசனங்கள் செய்த பலன் உடலுக்கு கிட்டும்.
பேணவே சவாசனத்தைச் சொல்வேன்
பேணிமனங் கொண்டபடி படுக்கனன்று
பூணவே ஒன்பதுக்கும் விபரஞ்சொன்னேன்
பூரணமா யிருந்துநீயும் மேன்மைகாணே.

விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும். கைகளைப் பக்கவாட்டில் நீட்டி படத்தில் காட்டியபடி வைத்துக் கொள்ளவும். கண்களை தளர்வாக மூடிக்கொள்ளவும். இந்த நிலையில் பாதம் துவங்கி மூட்டு, தொடை, இடுப்பு, வயிறு, மார்பு, கழுத்து,முகம் இவைகள் ஒரு நேர்கோட்டில் இருத்தல் அவசியம். 

உடலை எத்தனை தளர்த்த முடியுமோ அத்தனை தளர்த்தி அதாவது இறந்து போனவரின் உடல் எவ்வாறு அதுபோல உடலைசலனமின்றி 3 முதல் 5 நிமிடம் வரை இருக்க வேண்டும். இந்த சமயத்தில் மூச்சு மெலிதாகவும், சீராகவும் இருத்தல் அவசியம். மனதை வெறுமையாக்கி சிந்தனை எதுவும் இல்லாமல் வைத்திருக்க பழகவேண்டும். 

இந்த ஆசனம் உடல் களைப்பையும், மனச் சஞ்சலத்தையும் போக்கப் பயன்படுகிறது. தசைகள் புத்துணர்வு பெறும். ஆசனங்கள் செய்யும்போது சோர்வு ஏற்பட்டால் இடையிடையே சவாசனம் செய்யலாம். மனோசக்தி வளரும். உடல் நாடி நரம்புகள் நமது ஆளுகைக்கு வந்துவிடும். மனம் ஒருமைப்படுத்தப்படும்.

அகத்தியர் அருளிய ஆசனங்கள் - பத்ராசனம், பாதஹஸ்தாசனம்.

அகத்தியர் அருளிய ஆசனங்களின் வரிசையில் இன்று பத்ராசனம் மற்றும் பாதஹஸ்தாசனம் பற்றிய தகவல்களை பார்ப்போம்.
பத்ராசனம்

பத்ரம் என்றால் அனுகூலம். இதனை பழகுவோர் உடலுக்கு அனுகூலமான பலன்களை தரும் ஆசனம் என பொருள் கொள்ளலாம். இந்த ஆசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.
பாரப்பா பத்திரா சனத்தைகேளு
பதிவாக வஜ்ஜிரதிலிருந்து காலைரெண்டும்
காரப்பா நன்றாகதானகட்டி பிரகாலிலமர்ந்து
கண்ணறிந்து தானோக்க ஆசனமுமாச்சு

வஜ்ராசனத்தில் அமர்ந்து முடிந்தளவு கால்களை அகட்டி கைகளை முன் பக்கம் ஊன்றி, அப்படியே குதிகால்களில் அமர்ந்து கால் விரல்களை உயர்த்திக் கொள்ளவும்.சில வினாடிகள் இந்த நிலையிலிருந்து பிறகு கால் விரல்களை தளர்த்தி பழைய நிலைக்கு வர வேண்டும்.

கால் விரல்கள், தொடைகள், கால்கள், கால்மூட்டுகள் வலுப்பெறும்.  மனம் ஒருமுகப்படுவதற்கு உதவும். தியானம் பழக ஏற்ற ஆசனம். மூட்டுவாதத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். முதல் சக்கரமான மூலாதார சக்கரத்தை இந்த ஆசனம் தூண்டி விடும். 
பாதஹஸ்தாசனம்

பூணடா பாதஹஸ்தா சனத்தைக்கேளு
பூரணமாய் நின்றுநீயும் பாதம்நோக்கி
தாமப்பா குனிந்துநீயும் பாதம்பற்றி
தானிருக்க பாதஹஸ்தா சனமுமாச்சு.

நேராக நிமிர்ந்து நின்று கைகளை உயர தூக்கவும். மூச்சை மெல்ல வெளியிட்டவாறே குனிந்து கால் பாதத்தை தொடவும். பின் மெல்ல தலையை காலுடன் ஒட்டியவாறு சேர்த்து வைக்கவும்.இந்த நிலையில் முடிந்த அளவு இருந்த பின் மூச்சை மெல்ல வெளியேற்றியவாறே தலையை நிமிர்த்தவும்.
தலைக்கு ரத்தம் பாய்வதால் சிரசாசனம் செய்த பலனை இந்த ஆசனம் கொடுக்கும். கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் இதனால் வலுப்பெறும். முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும். உடல் முழுவதுமான ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. 

அகத்தியர் அருளிய ஆசனங்கள் - வஜ்ராசனம், புஜங்காசனம்.

அகத்தியர் அருளிய ஆசனங்களின் வரிசையில் இன்று வஜ்ராசனம் மற்றும் புஜங்காசனம் பற்றி பார்ப்போம்.

வஜ்ராசனம்

வஜ்ரம் என்றால் வைரம் அல்லது வலிமை என பொருள் கொள்ளலாம். நமது உடலிற்கு வயிரம் போல் உறுதி தரும் ஆசனம் என்பதால் இப் பெயர் பெறுகிறது. இதனை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

சாரப்பா வஜ்ஜிர ஆசனத்தைக்கேளு
சங்கையுடன் பரடுமேல் பரடுபோட்டு
சேரப்பா புட்டத்தில் குதிகால்வைத்து
செம்மையுடன் தானிருக்கத் திறந்தானாமே.

முதலில் உடலை தளர்த்தி கால்களை நீட்டிவாறு அமர வேண்டும். பிறகு ஒரு காலை மடித்து அந்த குதிகால் புட்டப் பகுதியைத் தொடுவதுபோல அமர வேண்டும். அதே போலவே மற்றொரு காலையும் மடித்துக் கொள்ள வேண்டும்.குதிகால்களை ஒரு பீடம் போலக் கருதி, புட்டத்தை அதன் மீது பதித்து அமர்ந்து கொள்ள வேண்டும்.
முதுகுத் தண்டு வளையாத விதத்தில் நேராக அமர்ந்த பின்னர், கைகள் இரண்டையும் முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மூச்சை இயல்பான ஓட்டத்தில் வைத்திருக்க வேண்டும்.சில வினாடிகள் இந்த நிலையிலிருந்து பிறகு கால்களை விலக்கிப் பழைய நிலைக்கு வர வேண்டும்.

இந்த ஆசனம் முழங்கால்களின் மூட்டுகள் நன்றாக அசைந்து மென்மையாகச் செயற்படுவதற்கு இது உதவுகிறது.திரும்பத் திரும்ப இந்த ஆசனத்தைச் செய்யும் போது முழங்கால்கள் நல்ல உரம் பெற்ற நிலையில் கீல்வாயு போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் இருக்கின்றன.பிறப்பு உறுப்புகளுக்கு கூடுதலாக குருதி பாய்கிறது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

புஜங்காசனம்

புஜங்கம் என்றால் பாம்பு. இந்த ஆசனத்தில் இருக்கும் பொழுது பார்ப்பதற்கு பாம்பு படம் எடுத்தாற் போல் தெரியும். இந்த ஆசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

நாமப்பா புஜங்கமென்ற ஆசனத்தைக்கேளு
நாட்டமுடன் இருகாலும்நீட்டி கைகளூன்றி
ஓமப்பா தலையுடன்உந்திவரை உயர்த்திக்கொண்டால்
உத்தமனே புஜங்கமென்ற வுறுதிபாரே.

குப்புறப்படுத்து கைகளை உடலுடன் ஒட்டியவாறு வைத்துக் கொள்ளவேண்டும். படுத்தவாறே கைகளை உயர்த்தி தோள்பட்டை அருகே ஊன்றிக் கொள்ள வேண்டும். பின்னர் மெல்ல தலையை உயர்த்தவும். வயிறு முதல் கால் வரை தரையில் ஒட்டியவாறு வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவு கழுத்துக்குக் கீழும், தோள்களுக்கு மத்தியிலுள்ள முதுகுத் தண்டையும் இயன்ற அளவு வளைக்க முயலவும். முழங்கால்கள் ஒட்டியே இருக்க வேண்டும்.

இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடம் வரை இருந்த பின்னர் வயிறு, மார்பு, தலை என ஒவ்வொரு நிலையாக மீண்டும் முதல் நிலைக்கு மெல்ல வரவும்.இந்த ஆசனத்தை பழகிடும் போது முதுகெலும்பு, தோள்பட்டை, அடிவயிறு பலப்படும். மார்பு நன்றாக விரிவடையும். ஊளைச்சதை கரைந்து உடல் எடை குறைக்கலாம்.. முதுகெலும்பின் வளையும் தன்மை அதிகரித்து இளமை காக்கப்படும். குண்டலினி சக்தியும் விழிப்படையும்.

மேலும் முதுகுத் தண்டு, மலச்சிக்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும், கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உறுப்புகளை தூண்டி சிறப்பாக செயல்பட வைக்க இந்த ஆசனம் உதவுகிறது.

அகத்தியர் அருளிய ஆசனங்கள் - மயூராசனம்.


மயூரம் என்றால் மயில். இந்த ஆசனத்தில் இருக்கும் பொழுது பார்த்தால் மயில் நிற்பது போல் தெரியும் என்பதால் இந்த பெயர் பெற்றது.மிகவும் நிதானமாக கவனத்துடன் பழக வேண்டிய ஆசனம் இது. இந்த ஆசனத்தைப் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
காணவே மயூரா சனத்தைக்கேளு
கருணையுடன் கைரெண்டுந் தரையிலூன்றி
ஊணவே முழங்கையை உந்தியிலேவைத்து
உகந்து நின்ற சிம்மமபோல் உறுதிகொள்ளு

- அகத்தியர்.

முதல் மண்டியிட்டுக் குதிகால் மீது நிமிர்ந்து உட்கார வேண்டும். இதன் பிறகு இரண்டு கை விரல்களும் கால்பக்கமாய் இருக்கும் வகையின் தரையில் அழுத்தமாய் பதிக்க வேண்டும். பின்னர் மெதுவாய் உடலை முன்னே சரித்து வயிற்றுப் பகுதியை முழங்கைகளின் மேல் தாங்கிய பின்னர் ஒவ்வொரு காலாக மெதுவே பின்னோக்கி நீட்டிட வேண்டும்.இந்த நிலையில் முழங்கைகள் மேல் தொப்புளின் அடிப்பகுதியில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். உடலின் எடை இரண்டு முழங்கைகளிலும் சீராக பரவும் படி இருத்தல் அவசியம். 

இப்போது கால்களை மெல்ல மெல்ல மேலே உயர்த்தி, உடலை முன்னோக்கி சாய்த்தால் படத்தில் உள்ளதைப் போல நிலை இருக்கும். உடலை மெதுவாக முன்னால் நீட்டினால் கால்கள் உயரக் கிளம்பும். தரைக்கு இணையாக உடல் அமைந்த பிறகு தலையாக உயர்த்தி அண்ணாந்து பார்க்க முயல வேண்டும். இந்த நிலையில் பத்து முதல் பதினைந்து விநாடிகள் இருக்க வேண்டும். பிறகு மெல்ல மெல்லத் தொடக்க நிலைக்கு வர வேண்டும்.
மண்டியிட்டு அமர்ந்திருக்கும்போது காற்றை உள்ளுக்கு இழுக்க வேண்டும்.கைகளை விரித்து உள்ளங்கைகளைத் தரையில் அமர்த்தும் சமயம் காற்றை வெளிவிட வேண்டும்.கால்களைப் பின்னால் கொண்டு செல்லும் சமயம் மூச்சை உள்ளுக்கு இழுத்து வயிற்றைக் கெட்டியாக்கிக் கொள்ள வேண்டும். இந்த ஆசனத்தை எந்த அளவுக்கு நிதானமாகவும் அவசரப்படாமலும் செய்கிறோமோ அந்த அளவுக்குப் பயன் அதிகமாகக் கிடைக்கும். துவக்கத்தில் உதவிக்கு யாரேனும் கூட இருப்பது அவசியம். 

இந்த ஆசனத்தின் மூலம் முக்கியமாக மஞ்சள் காமாலை நோய் குணமாகும். மேலும் மலச்சிக்கல், மூலநோய், நீரிழிவு போன்ற பிணிகள் வராமல் தடுக்கலாம். தொந்தி கரைந்து வயிறு தட்டையாகும். பொதுவாக உடலில் உள்ள அதிகப்படியான தசைகள் கரைந்து உடல் கட்டாக அமையும். இந்த ஆசனத்தின் மூலம் கல்லீரலின் செயற்பாடு வலுவடையும். குடல்கள் நன்றாக அழுத்தப்படுவதால் அவற்றின் இயக்கம் சீரடையும். மணிக்கட்டுகளும் முன் கைத் தசைகளும் வலிமை பெறும். இந்த ஆசனத்தின் பலன் துரித காலத்திலேயே தெரியும். 

அகத்தியர் அருளிய ஆசனங்கள் - முத்ராசனம்.

பத்மாசனத்தை தொடர்ந்து இன்று அகத்தியர் அருளிய முத்ராசனம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
காணடா ஆசனத்தை விரித்துச் சொல்வேன் 
கருவாக முத்ர ஆசனத்தைக் கேளு
தோணடா பத்மாசனதில் இருந்துகொண்டு
தானாக பின்னோக்கி கரங்கள்கோர்த்து
முத்தாக முன்னோக்கி குனிந்துகொள்ள
மயங்காதே முத்ர ஆசனமுமாச்சு

- அகத்தியர்.

பத்மாசனத்திற்காக என்ன நிலையில் அமர்ந்திருந்தோமோ, அதே நிலையில் அமர்ந்து முத்ராசனத்தை செய்ய வேண்டும். பிறகு கைகளை முதுகுப் பக்கமாகக் கொண்டு வந்து, வலது கை மணிக்கட்டுப் பகுதியை இடது கையால் பற்றிக் கொள்ள வேண்டும். இந்தப் பிடிப்பு இலேசாகவும், இலகுவாகவும் இருக்க வேண்டும். முரட்டுத் தனமான பிடிப்பு கூடாது. இவ்வாறு கைகளைப் பிணைத்துக் கொண்ட பிறகு நிதானமாகவும் மெதுவாகவும் முன்புறம் குனிய வேண்டும். நன்றாகக் குனிந்து முன்னாலிருந்து தரையைத் தொடும் நிலைக்கு வர வேண்டும். பிறகு பழையபடி பத்மாசன நிலைக்கு வந்துவிட வேண்டும்.

முன்புறம் குனியும் போது மூச்சைத் இயல்பான கதியில் தாராளமாக வெளிவிட வேண்டும். நிமிரும் போது சீரானகதியில்மூச்சை உள்ளுக்கு இழுக்க வேண்டும்.இந்த ஆசனத்தைச் செய்யும் சிலர் கைகளைப் பின்புறம் கட்டுவதற்குப் பதிலாக, கைகளால் கால்களின் கட்டை விரலைப் பற்றியவாறு குனிந்து நிமிருவது உண்டு. ஆசனம் பழகும் போது கவனம் சிதறாமல் ஒரு முகமாய் மூச்சை கவனித்து செய்து வர வேண்டும்.

யோக முத்திராசனம் செய்வதன் காரணமாக ஜீரண உறுப்புகளின் செயற்பாடுகள் தூண்டப்பட்டு குடல் இயக்கும் சீராகிறது. நீடித்த மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு இந்த ஆசனத்தை பழக தீர்வு கிடைக்கும். இடுப்பு, வயிற்றுப் பாகங்கள் உறுதியகி, பொலிவான அமைப்பைப் பெறவும் இது உதவுகிறது.
முக்கியமாய் வயிற்றில் புண்(Ulcer) அல்லது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், முதுகுவலி உடையவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

அகத்தியர் அருளிய ஆசனங்கள் - பத்மாசனம்.

ஆசனங்கள் என்பவை உடலும் மனமும் சார்ந்த அறிவின் இயல். உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் பேணிப் பாதுகாக்க எண்ணற்ற ஆசனங்களை நமது முன்னோர் நமக்கு அளித்துச் சென்றிருக்கின்றனர். அவற்றின் சிறப்பை உணர்ந்து தொடர்ந்து பழகுவோர் உயர்வான எண்ணப் போக்குடனும், பொலிவான உடலோடும் நம் மத்தியில் வாழும் ஆவணங்களாய் இருக்கின்றனர்.

சிறப்பான ஆசனங்கள் பல இருந்தாலும் அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" எனும் நூலில் ஒன்பது ஆசனங்களை முன்னிறுத்துகிறார்.

சித்தமுடன் நேமவகை பத்துக்கண்டு
தெளிந்துசிவ யோகமது திற்மாய்நிற்க
வெத்தியுள்ள ஆசனந்தா னொன்பதப்பா
விபரமுடன் சொல்லுகிறேன் விரும்பிக்கேளு
பத்தியுள்ள பாதகஸ்தங்கோ முகமும்பத்மம்
பதிவான புஜங்கபத்திரம் முத்ரமொடுவச்சிரம்
முத்தியுள்ள மயூரமொடு சவமதுவுமைந்தா
முதலான நவக்கிரகம் ஒன்பதுஆசனமே.

ஆசனமாய் நின்றதொரு ஒன்பதையுங்கண்டு
அதிலிருந்து தவசுசிவ யேகாஞ்செய்தால்
பூசணமாய் நின்றிலங்கு மாசனந்தான்மைந்தா
புத்தியுட னாசனமே லிருந்துகொண்டு
வாசனையாய் மனதுகந்து வாசிபார்த்து
மனமகிழ்ந்து சிவயோக நிலையில்நின்று
நேசமுடன் பிரணாயஞ் செய்துகொண்டு
நிச்சயமாய்க் கற்பூர தீபம்பாரே.

அவை முறையே....

பத்மாசனம், பத்திராசனம், கோமுகாசனம், மயூராசனம், புஜங்காசனம், முத்ராசனம், வச்சிராசனம், பாதகஸ்தாசனம், சவாசனம்.

இந்த ஒன்பது ஆசனங்களையும் அறிந்து உணர்ந்து பழகி தவசு மற்றும் சிவயோகம் செய்தால் புருவமத்தியில் கற்பூர தீபம் போன்ற ஒளி தென்படுமாம். அந்த ஒளியைத் தரிசித்தால் அனைத்தும் சித்தியாகும் என்கிறார்.

இன்று அகத்தியர் அருளிய முதலாவது ஆசனமான பத்மாசனம் பற்றி பார்ப்போம்.

பத்மாசனம்

பத்மம் என்றால் தாமரை. தாமரையின் இதழ்கள் போல் கால்களை மடித்து வைத்திருப்பதால் இப் பெயர் பெறுகிறது. நீரிலேயே இருந்தாலும் அதில் முழுகாமல் இருக்கும் தாமரையைப் போல உலக சுகங்களில் முழுகாமல் காப்பாற்றும் ஆசனம் எனவும் பொருள் கொள்ளலாம்.

உறுதியுள்ள பத்மமதை சொல்லக்கேளு
உண்மையுடன் பாதம்ரெண்டும் துடைமேலேற்றி
சுருதியுடன் கைரெண்டும் முழந்தாள்வைத்து
சுத்தமுடன் தன்னகத்தை சுகமாய்ப்பார்க்க
பரிதியுள்ள பத்மாசன மிதென்று
பதிவான வேதாந்தப் பெரியோரெல்லாம்
வரிதியுடன் யெக்கியமா முனிதான்சொல்ல
மகத்தான ஆசனத்தை மகிழ்ந்தார்காணே.


சமமான தரையில் ஜமக்காளம் போன்ற ஏதாவது ஒரு விரிப்பை மடித்துப் போட்டு உட்கார வேண்டும். பிறகு கால்களை நன்றாக நீட்டித் தளர்த்திக் கொள்ள வேண்டும்.முதலில் வலது காலை இழுத்து மடித்து இடது தொடையின் மீது வைக்க வேண்டும். பிறகு அதே போன்று இடது காலை படிய மடித்து வலது தொடையின் மீது வைக்க வேண்டும். குதிகால்கள் இரு புறமும் அடி வயிற்றை நன்கு தொட்டுக் கொண்டிருப்பது போல அமைவதுதான் சரியான நிலையாகும்.

முதுகைச் நன்றாக நிமர்த்தி, கை விரல்களைச் சின் முத்திரையில் இரு முழங்கால்களின் மீது நேராக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கண்கள் மூக்கு நுனியைக் கூர்மையாக நோக்க வேண்டும். இந்த நிலையில் சில நிமிட நேரம் இருந்த பிறகு மெதுவாகக் கால்களை விடுவித்து முதலில் இருந்த தளர்வு நிலைக்கு வர வேண்டும்.

இந்த ஆசனத்தில் ஈடுபட்டிருக்கும் போது கவனம் சிதறாமல் பழக வேண்டும். துவக்கத்தில் குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம். பழகப்பழக இந்த கால அளவை அதிகரித்துக் கொள்ளலாம். தியான நிலைக்கு மிகவும் வசதியான ஆசன முறை இது. மனதை ஒரு நிலைப் படுத்துவதற்கான பயிற்சிக்கும் இந்த ஆசனம் நல்ல முறையில் பலனைத் தரும்.

நமது நுரையீரலின் இயக்கத்தை ஊக்கப்படுத்தவும், முழங்கால் மூட்டுகள் தொடர்பான பிணிகளை விலக்கவும், தொடைப் பகுதி மற்றும் குதிகால் நரம்புப் பகுதியும் இதனால் வலிவடையும். உடலிலும் மனதிலும் சுறுசுறுப்பான உணர்வு மேலாட இது உதவும்.பத்மாசன முறையில் பயிற்சி பெற்றுவிட்ட பிறகு தரையில் உட்கார வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பத்மாசன அடிப்படையிலேயே அமருவது நல்ல வழக்கமாக இருக்கும்.


No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...