Monday, September 17, 2012

சித்தர்கள்

தேரையர்

"வந்ததோர் தேரையர் தான் மகாசித்தர் நூலில் வல்லோர்
அந்த நல் அகத்தியருக்கு அருமையாய் வந்த பிள்ளை
குந்தக
மில்லா பிரம்ம குலத்தினில் வந்துதித்தார்
விந்தையாய் காய சித்தி மிகச் செய்து முடித்தார் பாரே"


- கருவூரார் வாத காவியம் -

இவரின் இயற் பெயர் இராமத்தேவன் என்றும், மருத்துவ ஆராய்ச்சிகளில் சிறந்த தேர்ச்சியுடைவர் என்பதால் தேரையர் என்று அழைக்கப் பட்டதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர் ஆகத்தியரின் சீடர் என்றும் இவரே பின்னாளில் தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் என்கிற சுவாரசியமான தகவலும் சொல்லப்படுகிறது.

மணி வெண்பா
மருந்துப் பாதம்
ஞான போதம்
பதார்த்த குண சிந்தாமணி
நீர்க்குறிநூல்
மாணிக்க கற்பம்
நோய்க்குறி நூல்
தைல வர்க்க சுருக்கம்
வைத்திய மகா வெண்பா


ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது.பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாள நாடு) சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.

இதுவரையில் சித்தர்களைப் பற்றி, சிறிய அளவிலான அறிமுகத்தினை பார்த்தோம். பிரிதொரு சந்தர்ப்பத்தில் மேலும் பல சித்தர்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன். அடுத்த பதிவில் புதியதொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

மச்சமுனி...




"சித்தான சித்து முனி மச்சனப்பா
சீருலகில் நெடுங்காலம் மிகுந்த சித்து
சத்தான திரேகமதை நம்பாமல் தான்
தாரனியிலிருந்த தொரு தனத்தை எல்லாம்
நித்தியமும் அகதிகட்கு அன்னந் தந்து
நிட்களங்க நிடேத வழி தெரிந்துமே தான்
பக்தியுடன் னம்பாளின் தரிசனாத்தால்
பாருலகை மறந்ததொரு சித்தனாமே"


- அகத்தியர் 12000 -

இவர் காக புசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”காலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற புராணகால கதை ஒன்றும் சொல்லப் படுகிறது.

மச்சமுனி சூத்திரம் 21
மச்சமுனி
தூல சூக்கும காரண ஞானம் 30
மச்சமுனி பெரு நூல் காவியம் 800
மச்சமுனி வைத்தியம் 800
மச்சமுனி கடைக் காண்டம் 800
மச்சமுனி சரக்கு வைப்பு 800
மச்சமுனி திராவகம் 800
மச்சமுனி ஞான தீட்சை 50
மச்சமுனி தண்டகம் 100
மச்சமுனி தீட்சா விதி 100
மச்சமுனி முப்பு தீட்சை 80
மச்சமுனி குறு நூல் 800
மச்சமுனி ஞானம் 800
மச்சமுனி வேதாந்தம் 800
மச்சமுனி திருமந்திரம் 800
மச்சமுனி யோகம் 800
மச்சமுனி வகாரம் 800
மச்சமுனி நிகண்டு 400
மச்சமுனி கலை ஞானம் 800


ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும், இத்துடன் இவர் மாயாஜாலங்களைப் பற்றி எழுதிய "மாயாஜால காண்டம்" என்னும் நூலும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன, திருப்பரங்குன்றத்தில் சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப் படுகின்றது.

கடுவெளிச் சித்தர்...


"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

"நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"


- கடுவெளிச் சித்தர் -

கடு வெளி என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கபட்டார்.

கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை, ஆனால் இவரின் வரலாறு யாருக்குமே தெரியாத பொக்கிஷம் போல ஆகி விட்டது.

கடுவெளிச் சித்தர் பாடல்
ஆனந்தக் களிப்பு
வாத வைத்தியம்
பஞ்ச சாத்திரம்


ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது. காஞ்சியில் சமாதியடைந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன.

சட்டை முனி...


"பாலனாம் சிங்களவ தேவ தாசி
பாசமுடன் பயின்றேடுத்த புத்திரன் தான்
சீலமுடன் சட்டை முனி என்று சொல்லி
சிறப்புடனே குவலயத்தில் பெருண்டாச்சு"


- போகர் 7000 -

சதுரகிரி தல புராணம், போகர் ஏழாயிரம், அகத்தியர் பன்னிரெண்டாயிரம் போன்ற நூல்களில் இவர் பற்றிய பல குறிப்புகள் இடம் பெறுகின்றன.

பொதுவாக சித்தர்கள் மறைபொருள் கொண்டு எழுதுவது வழக்கம். ஆனால் சட்டை முனியோ தமது அனுபவங்களை நேரடியாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

இவர் எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால் சட்டை முனி என்று அழைக்கப்பட்டார். இவர் போகருடைய சீடர் என்று சொல்லப் படுகிறது.

சட்டை முனி உண்மை விளக்கம் 51
சட்டை முனி கற்பம் 100
சட்டை முனி நிகண்டு 1200
சட்டை முனி முன் ஞானம் பின் ஞானம் 200
சட்டை முனி வாகடம் 200
சட்டை முனி சரக்கு வைப்பு 500
சட்டை முனி வாத காவியம் 1000
சட்டை முனி நவரத்தின வைப்பு


ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.

இவர் சீர்காழியில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகின்றது.

உரோம ரிஷி...

"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே "


- உரோம ரிஷி -

இவர் செம்படவ தந்தைக்கும், குறத்தாய்க்கும் பிறந்ததாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இவர் புசுண்ட முனிவரின் சீடராவார்.

போகர் சீனதேசத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுபோல, இவர் உரோமாபுரியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் இதனால் உரோம ரிஷி என்று அழைக்கப் பட்டார்.

இவர் கும்பகோணதிட்கு அருகிலுள்ள கூந்தலூர் என்னுமிடத்தில் தங்கியிருந்த பொது தாடி வழியாக பொன் வரவழைத்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

"உரோம ரிஷி ஞானம் " என்ற பெயரில் இவர் எழுதிய நூலில் மொத்தமாக பதின்மூன்று பாடல்களே இடம் பெற்றிருக்கின்றன.

வகார சூதிரம்
நாகாரூடம்
சிங்கி வைப்பு
உரோம ரிஷி வைத்தியம் 1000
உரோம ரிஷி சோதிட விளாக்கம்
உரோம ரிஷி காவியம் 500
உரோம ரிஷி குறுநூல் 50
உரோம ரிஷி முப்பு சூத்திரம் 30
உரோம ரிஷி இரண்டடி 500
உரோம ரிஷி பெரு நூல் 500
உரோம ரிஷி ஞானம்
உரோம ரிஷி பூஜா விதி
உரோம ரிஷி வைத்திய சூத்திரம்

உரோமரிஷி பஞ்சபட்சி சாத்திரம்

ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.

இவர் திருக்கயிலையில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகின்றது.

கோரக்கர்...

"சொல்லவே கோரக்கர் பிறந்த நேர்மை
சுந்தரனார் வசிஷ்ட மகா ஷியாருக்கு
புல்லவே காணக் குற ஜாதியப்பா
புகழாகான கன்னியவள் பெற்ற பிள்ளை
வெல்லவே அனுலோமன் என்னலாகும்
வேதாந்த கோரக்கர் சித்து தாமும்
நல்லதொரு பிரகாசமான சித்து "


- போகர் 7000 -

கோரக்கர் வசிட்டரின் மகன் என்று போகர் தனது போகர் ஏழாயிரத்தில் குறிப்பிடுகிறார்.

சட்டை முனி, கொங்கணவர் போன்றோரின் நெருங்கிய நண்பாராக இருந்ததாய் தனது நூலான கல்ப போதம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

புதுச்சேரி மாநிலத்திலுள்ள கோர்க்காடு என்ற ஊரில் இவர் தவம் செய்ததாகவும் அதனால் அந்த ஊருக்கு கோர்க்காடு என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப் படுகிறது.

இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு எளிமையாகாவும் பொருள் புரிந்து கொள்ள இலகுவாகாவும் உள்ளது குறிப்பிட தக்கது.

கோரக்கர் கல்ப போதம்
கோரக்கர் காள மேகம்
கோரக்கர் கபாடப் பூட்டு
கோரக்கர் ஞான சோதி
கோரக்கர் முனி ஜென்ம சித்து
கோரக்கர் பஞ்ச வர்த்தம்
கோரக்கர் சந்திர ரேகை
கோரக்கர் நமனாசத் திறவுகோல்
கோரக்கர் பிரம்மமா ஞானம்
கோரக்கர் கற்ப சூத்திரம்
கோரக்கர் தாண்டகம்
கோரக்கர் மூலிகை
கோரக்கர் வசார சூத்திரம்
கோரக்கர் சூத்திரம்
கோரக்கர் அட்ட கர்மம்
கோரக்கர் முத்திநெறி
கோரக்கர் கற்பம்
கோரக்கர் மலை வாகடம்
கோரக்கர் முத்தாராம்
கோரக்கர் ரஷ மேகலை
கோரக்கர் முனி ஆன்ம சித்து


ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.

இவர் பேரூரில் சித்தியடைந்ததாக சொல்லப் படுகிறது.

பாம்பாட்டிச் சித்தர்...




"கானலை மான் நீரெனவே கண்டு செல்லல் போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பர்
மேனிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மேய்யன்பதம் நாடுவாரேன்று ஆடுபாம்பே!"

"தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே - சிவன்
சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே!
ஆடு பாம்பே! தெளிந்து ஆடு பாம்பே சிவன்
அடியினைக் கண்டோம் என்று ஆடு பாம்பே"


- பாம்பாட்டிச் சித்தர் -

பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருக சீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றும், சட்டை முனியின் சீடர் என்றும் போகர் தனது போகர் 7000 என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

மூலாதரத்தில் இருக்கும் குண்டலினியை உறங்கிக் கிடக்கும் பாம்பு என்று சித்தர்கள் சொல்வர். இந்த குண்டலினி சக்தியானது சுழிமுனை நோக்கி ஏறுவதை, பாம்பு புற்றிலிருந்து ஏறுவது போல என குறியீடாக சொல்வர். இதையே கருத்தாக கொண்டு குண்டலினி சக்தியை மேல் எழுப்புவதை பற்றிய பாடல்கள் பல பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார்.

இவரின் பல பாடல்களில் ஆடு பாம்பே என குண்டலினியை விளித்து பாடியதை அவதானிக்கலாம்.

பாம்பாட்டி சித்தர் பாடல்
சித்தரா ரூடம்
பாம்பாட்டி சித்தர் வைத்தியம்


ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.

இவர் தவம் செய்த குகை மருதமலையில் இன்றும் காணப்படுவதாக சொல்லப் படுகின்றது.

இவர் விருத்தாசலத்தில் சமாதியடைந்ததாகவும் சொல்லப் படுகிறது.

சுந்தரானந்தர்...



"சொல்லவே சுந்தரானந்த ரப்பா
தொல்லுலகில் கேசரியாம் வித்தை தன்னை

புல்லவே அதீதமென்ற மாண்பருக்கு

புகழுடனே புகட்டியதோர் சித்துமாகும்"


- போகர் -

இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், அகமுடையார் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.

இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு.

இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது.

இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது.

இவர் சுந்தரானந்தர் சோதிட காவியம் என்னும் பெரும் நூலையும்,

சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் தாண்டகம்

சுந்தரானந்தர் முப்பு

சுந்தரானந்தர் சிவயோக ஞானம்

சுந்தரானந்தர் அதிசய காராணம்

சுந்தரானந்தர் பூஜா விதி

சுந்தரானந்தர் தீட்சாவிதி

சுந்தரானந்தர் சுத்த ஞானம்

சுந்தரானந்தர் கேசரி

சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்

சுந்தரானந்தர் காவியம்

சுந்தரானந்தர் விஷ நிவாரணி


ஆகிய நூல்களையும் எழுதியுள்ளதாக தெரிகிறது.

இவர் மதுரையிலே சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது.

பிண்ணாக்கீசர்...




"கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல்
தேவமாதா இரவல் - ஞானம்மா

தெரியா அலைவாரே.!"


"இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்

துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா

சொன்னால் வருமோசம்.!"


- பிண்ணாக்கீசர் -

இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிண்ணாக்கர் என அழைக்கப்பட்டார்.

இடைச்சி வயிற்றில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.

பாம்பாட்டிச் சித்தருக்கு சீடராக இருந்த இவாருக்கு மச்ச முனி சீடராக இருந்ததாக சொல்லப் படுகிறது.

இவரது பாடல்களில் ஞானம்மா என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம்.

இவர்,

பிண்ணாக்கர் மெய்ஞானம்
பிண்ணாக்கர் ஞானப்பால்

பிண்ணாக்கர் முப்பூச் சுண்ணச் செயநீர்


ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது.

இவர் கேரளத்திலுள்ள நங்குனாசேரி என்னுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.

புலஸ்தியர்...




"உருவான புலஸ்தியரின் மார்க்கம் கேளு
ஓகோகோ நாதர்கள் அறிந்ததில்லை
கருவான தேவரிஷி தன் வரத்தால்
கமலமுனி தன் வயிற்றில் பிறந்த பேரன்
திருவான அகத்தியருக் உகந்த சீடன்
தீர்க்கமுள்ள சிவராஜ புனித யோகன்
பருவான திருமந்திர உபதேசந்தான்
பாருலகில் புலஸ்தியர் என்றறைய லாமே".

- போகர் 7000 -

கமலமுனியின் பேரன்தான் புலஸ்தியர் என்றும், அகத்தியருக்கு பிரியமான சீடன் என்றும், சிவராஜ யோகியான இவர் திருமந்திர உபதேசம் பெற்றவர் என்றும் போகர் தனது போகர் 7000 என்னும் நூலில் சொல்லியிருக்கிறார்.

திரணபிந்துவின் மகள் ஆவிருப்பு என்பவளை இவர் மணந்ததாகவும், இவருக்கு விசித்திர வாசு என்று ஒருமகன் பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இவர்,

புலஸ்தியர் வைத்தியவாதம்
புலஸ்தியர் வாத சூத்திரம்
புலஸ்தியர் வழலைச் சுருக்கம்
புலஸ்தியர் ஞான வாத சூத்திரம்
புலஸ்தியர் வைத்தியம்
புலஸ்தியர் கற்ப சூத்திரம்

ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது.

பொதிகை மலைச் சாரலில் உள்ள பாபநாசம் என்னும் இடத்தில் சமாதியடைந்த இவர், தேரையாருக்கு உபதேசம் செய்ய வெளியே வந்து, அவருக்கு போதித்து விட்டு இரண்டாவது முறையாக ஆவுடையார் கோவிலில் சமாதியாடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

இடைக்காட்டுச் சித்தர்...




"மனம் என்றும் மாடு அடங்கின்
தாண்டவக் கோனே! முத்தி
வாய்த்தனென்று எண்ணேடா
தாண்டவக் கோனே!".

"அல்லும் பகலும்நிதம் - பசுவே!
ஆதி பதந்தேடில்
புல்லும் மோட்சநிலை - பசுவே!
பூரணங் காண்பாயே".

"தோயாது இருந்திடும் பால்கற
தொல்லை வினையறப் பால்கற
வாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும்
வயிறார உண்டிடப் பால்கற"

- இடைக்காட்டுச் சித்தர் -


மதுரைக்கு அருகே உள்ள இடைக்காடு என்னும் ஊரில் பிறந்ததனால் இடைக்காடர் என்று அழைக்கப் பட்டார் என்றும் இவர் ஆயர் குலத்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

இவரது பாடல்களில், தாண்டவக்கோனே, பால்கற, கோனாரே, பசுவே, குயிலே என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம்.

இடைக்காடருக்கு ஞானத்தை உபதேசித்தவர் போகர் என்றும், போகர் சமாதி கொள்ளப் போகும் முன்னர், புலிப்பாணியை பழனியிலும், இடைக்காடரை திருவண்ணாமலையிலும் இருந்து இறைச்சேவை செய்ய பணித்ததாக சொல்லப் படுகிறது.

இடைக்காடர் ஞான சூத்திரம் 70
இடைக்காடர் வைத்தியம் 64
இடைக்காடர் பூஜா விதி 27

ஆகிய நூல்கள் இவர் இயற்றியதாக சொல்லப்படுகிறது.

இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்ததாய் சொல்லப் படுகிறது.

புலிப்பாணிச் சித்தர்...




"ஆள்தவே காலங்கி கடாட்சத்தாலே
அப்பனே வேங்கை தனில் ஏறிக்கொண்டு
தாழ்ந்திடவே ஜலம் திரட்டி புனிதவானும்
சாங்கமுடன் தரணியிலே சுற்றிவந்தான்".

- போகர் -

போகருடைய சீடார்களில் ஒருவர், தமிழகத்தி பொன் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறார்.

போகர் நவபாஷாணதைக் கொண்டு பழனி முருகன் சிலையை வடிக்கும் போது இவர் அவருக்கு உதவியாக இருந்ததாக சொல்லப் படுகிறது.

போகர் சமாதியடைய முன்னர் இவரை அழைத்து தமக்குப் பின் தண்டாயுதபாணி கோவில்ப் பூசை , புனஸ்காரங்களை இவரே செய்யவேண்டும் என்று பணித்ததாகவும் சொல்லப் படுகிறது.

இவர்,

புலிப்பாணி வைத்தியம் 500
புலிப்பாணி சோதிடம் 300
புலிப்பாணி ஜாலம் 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் 200
புலிப்பாணி பூஜா விதி 50
புலிப்பாணி சண்முக பூஜை 30
புலிப்பாணி சிமிழ் வித்தை 25
புலிப்பாணி சூத்திர நாணம் 12
புலிப்பாணி சூத்திரம் 9

ஆகிய நூல்களை இயற்றியாதாக சொல்லப்படுகிறது.

இவர் பழனி அருகில் வைகாவூர் எனுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.

அகப்பேய் சித்தர்...




"உன்னை அறிந்தக்கால் - அகப்பேய்
ஒன்றையும் சேராயே
உன்னை அறியும்வகை- அகப்பேய்
உள்ளது சொல்வேனே".

"நாச மாவதற்கே - அகப்பேய்
நாடாதே சொன்னேனே
பாசம் போனாலும் - அகப்பேய்
பசுக்களும் போகாவே".

"ஐந்துதலை நாகமடி - அகப்பேய்
ஆதாயங் கொஞ்சமடி
இந்த விடந்தீர்க்கும் - அகப்பேய்
எம் இறை கண்டாயே".

- அகப்பேய் சித்தர் -

”நான்” என்ற அகந்தையை பேயாக உருவகித்து பாடியதால், இவர் அகப்பேய் சித்தர் என்று அழைக்கப் பட்டார்.

இவர் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்றும், வணிக குலத்தவர் என்றும் மாறு பட்ட கருத்துக்கள் உண்டு.

அகப்பேய் சித்தர் பாடல் 90.
அகப்பேய் சித்தர் பூரண ஞானம் 15.

ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப்படுகிறது.

அகப்பேய் சித்தர் திருவையாறில் சமாதியாடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

பத்திரகிரியார்...





"வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம்?"

"நவசூத்திர வீட்டை நான்என்று அலையாமல்
சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம்?"

"புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?"

- பத்திரகிரியார் -

பட்டினத்தார் வடமாநிலங்களில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவரை கள்வன் என்று பழிசுமத்தி கழுவிலேற்ற உத்தரவிட்ட அதே பத்திரகிரி மன்னன் தான் இந்த பத்திரகிரியார்.

அரசனாக இருந்த இவர் சுக போகங்களை துறந்து சித்தரானவர்.

ஒருநாள் அவர் அருகில் வந்த பெண் நாய்க்குட்டி ஒன்றிற்கு சிறிது உணவிட்டாராம், அன்றிலிருந்து அந்த நாய் அவரை பின்தொடர்ந்து அவர் பார்வை பட்டு விமோசனம் அடைந்து, பின்னர் அது காசி மன்னனின் மகளாக பிறந்து முற்பிறவி நினைவுடனேயே இருந்து பத்திரகிரியாரையே மணந்ததாக சொல்வர்.

பத்திரகிரியார் பாடல்கள் பெரும்பாலும் "எக்காலம்?" என்ற கேள்வியுடன் முடிவதாக அமைகின்றன.

இவர் திருச்செட்டாங்குடியில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.

அழுகணிச் சித்தர்...

"வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ!"

- அழுகணிச் சித்தர் -

அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகணிச் சித்தர் என்று ஆகிவிட்டது.

இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள்.

இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மை.

பொதுவாக இவர் தனது பாடல்களில் "உன்னை அறியாமல் உலகத்தில் உள்ளவைகளை அறிவதால் எந்தவிதப் பயனுமில்லை" என்னும் கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.

இவர்,

அழுகணி சித்தர் பாடல் 200
ஞான சூத்திரம் 24
அழுகண் வைத்தியம்
அழுகண் யோகம்
அழுகண் ஞானம்

ஆகிய நூல்களை இயற்றியதாக சொல்லப் படுகிறது.

நாகப் பட்டினத்தில் உள்ள நீலாய‌தாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இவர் சமாதி இன்றும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அழுகணிச் சித்தர் ஜீவசமாதி......

சிவவாக்கியார்...




"
நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி
வந்து முனுமுனுவென்று

சொல்லும் மந்திரம் ஏதடா?
"

- சிவவாக்கியார் -

சித்தர்களுள் சிறந்தவராக கருதப்படுபவர் சிவவாக்கியார். தாயுமானவர், பட்டினத்தார் ஆகியவர்களால் பாராட்டப் பட்டவர். சிவவாக்கியார் கலப்புத் திருமணத்தில் பிறந்தவர்.

பிறக்கும் போதே "சிவ" "சிவ" என்று சொல்லிக் கொண்டு பிறந்த படியால் சிவவாக்கியார் என்று அழைக்கப் படுவதாக சொல்லப் படுகிறது.

போகர் தனது சப்தா காண்டத்தில் சிவவாக்கியார் தை மாதத்தில் வரும் மகநட்சத்திரத்தில் பிறந்ததாக சொல்லியிருக்கிறார்.

நாடிப் பரீட்சை என்னும் நூலும் சிவவாக்கியாரல் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.

சிவவாக்கியார் கும்பகோணத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.

போகநாதர்...



தமிழ் கடவுளான பழநி தண்டாயுத பாணியை வழிபட்ட போகர், வேட்கோவர் குலத்தில் பிறந்ததாக கருதப் படுகிறார். தற்போது பழநியில் அருள்பாலிக்கும் தண்டாயுத பாணியின் சிலையினை நவபாசானம் என்கிற ஒன்பது விஷங்களினால் ஆன கூட்டுக் கலவையினால் உருவாக்கியவர் இவர் என்றும் கூறப் படுகிறது.

போகர் ஆகாய மார்க்கமாக செல்லக் கூடிய ஊர்தியை உருவாக்கி சீன தேசம் சென்றதாகவும், அங்கு போதிக்கும் பணியை மேற்கொண்ட போகருக்கு சீனாவில் "போ-யாங்" என்ற பெயர் வழங்கப் பாட்டதாகவும் சொல்லப் படுகிறது.

"சித்தான சித்து முனி போக நாதன்
சிறந்த பதினெண் பேரில் உயர்ந்த சீலன்
கத்தநேனும் காலாங்கி நாதர் சீடன்
கனமான சீனபதிக் குகந்த பாலன்
முத்தான அதிசயங்கள் யாவற்றும்தான்
மூதுலகில் கண்ட முதல்வன் சித்தன்
நித்தமுமே மாசில்லாக் கடவுள் தன்னை
மாநிலத்தில் மறவாத போகர் தானே"

என்று அகத்தியரே இவர் பெருமையைப் பாடியுள்ளார்.

இவர் கைலாய மலை அருகே தங்கி இருந்த காலத்தில் எழுதிய ஏழாயிரம் பாடல்கள் தான் பின்னாளில் போகர் சப்த்த காண்டம் என்று அழைக்கப் படுகிறதாம்.

இது தவிர....

போகர் 12000
போகர் நிகண்டு 1700
போகர் வைத்தியம் 1000
போகர் வைத்தியம் 700
போகர் சரக்கு வைப்பு 800
போகர் ஜெனன சாகரம் 550
போகர் கற்பம் 360
போகர் கற்பம் 300
போகர் உபதேசம் 150
போகர் இரண வாகடம் 100
போகர் நானா சாராம்சம் 100
போகர் கற்ப சூத்திரம் 54
போகர் வைத்திய சூத்திரம் 77
போகர் மூப்பு சூத்திரம் 51
போகர் ஞான சூத்திரம் 37
போகர் அட்டாங்க யோகம் 24
போகர் பூஜா விதி 20
போகர் மாந்திரீகம் 74

என்கிற நூல்களையும் இயற்றியதாக கூறப் படுகிறது.

பழுத்த ஞானியான போகர் இறுதியாக வந்து தங்கிய இடம்தான் பழநி. தற்போது பழநி கோவில் வளாகத்திலேயே அவருடைய சமாதி இருக்கிறது.

திருமூலர்...




யோக மார்க்கமும், ஞானத் தேடலும் உள்ளவர்கள் திருமந்திரத்தைப் பற்றி அறியாமல் இருக்க முடியாது, திருமந்திரத்தை அறிந்த அளவு அதை இயற்றிய திருமூலரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. திருமூலர் பற்றி பல கதைகள் வழக்கத்திலுள்ளன. அதில் எதை நம்புவது என்பதில் ஐயம் எழுவது இயற்கையே. ஆகவே அது பற்றிய தேடல்களை விட்டு விடலாம். திருமூலர் என்ற ஒரு சித்தர் வாழ்ந்தது உண்மை, அது போதும்..

இவர் நந்தீசரின் சீடராவார்.

இவரால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்களின் தொகுப்பை "மந்திர மாலை" என்று அழைத்தனர். பிற்காலத்தில் அவற்றை ஆராய்ந்த சான்றோர் அதை திருமந்திரம் என்று பெயரிட்டு ஒன்பது பகுதிகளாக வகுத்தனர்.

திருமந்திரம் என்று அழைக்கப்படும் அந்த நூலில் பல யோக ரகசியங்களையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் சொல்லியிருக்கிறார்.

தாமறிந்த உண்மைகள் உலகத்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருந்தார் இவர்.

"யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே"

- திருமந்திரம் -

இவர் திரு மந்திரம் மட்டு மல்லாது,

திருமூலர் காவியம் 8000
திருமூலர் சிற்ப நூல்100
திருமூலர் சோதிடம் 300
திருமூலர் மாந்திரீகம் 600
திருமூலர் சல்லியம் 1000
திருமூலர் வைத்திய சாரம் 600
திருமூலர் வைத்திய காவியம் 1000
திருமூலர் வைத்தியக் கருக்கிடை 600
திருமூலர் வைத்தியச் சுருக்கம் 200
திருமூலர் சூக்கும ஞானம் 100
திருமூலர் பெருங்காவியம் 1500
திருமூலர் தீட்சை விதி 100
திருமூலர் தீட்சை விதி 8
திருமூலர் தீட்சை விதி18
திருமூலர் யோகா ஞானம்16
திருமூலர் கோர்வை விதி 16
திருமூலர் விதி நூல் 24
திருமூலர் ஆறாதாரம் 64
திருமூலர் பச்சை நூல் 24
திருமூலர் ஞானம் 84
திருமூலர் ஞானோபதேசம் 30
திருமூலர் நடுவணை ஞானம் 30
திருமூலர் ஞானக் குறி 30
திருமூலர் சோடச ஞானம் 16
திருமூலர் ஞானம் 11
திருமூலர் குளிகை 11
திருமூலர் பூஜாவிதி 41
திருமூலர் வியாதிக் கூறு 100
திருமூலர் முப்பு சூத்திரம் 200... என்ற நூல்களும் இயற்றியதாக சொல்லப் படுகிறாது.

இவர் மேலை சிதம்பரம் என்னும் இடத்தில் சமாதி அடைந்ததாக சொல்லப் படுகிறது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...