Friday, September 7, 2012

அஷ்டாங்க யோகம்:




ஈசன் திருவருளால் தெளிந்த ஞானத்தைப் பெற்று, அதனால் யோகத்தைக்
கடைப்பிடித்தால் பிறவாப் பேரின்பமாகிய முக்தி கிட்டும். ஈசன் சனகாதி
முனிவர்களுக்கு கூறிய யோக சாரம் ஜனகர், அத்திரி, வியாசர் முதலியோரால் உலகின் பிரசித்தமாயிற்று.

1. பற்றின்றி இருத்தல் இயமம். இது உண்மை பேசுவதாலும் ஒழுக்கம்
வழுவாமையாலும் பற்றற்ற தன்மையாலும் ஏற்படும். மனம், வாக்கு, காயம் இம்மூன்றாலும் பெண்களைத் தீண்டாது இருப்பது பிரம்மச்சரிய நெறி, தூய்மையாக இல்லறத்தை நடத்துவதும் பிரம்மச்சரிய நெறியைச் சேர்ந்ததே. வானப்பிரஸ்த ஆசிரமம் கடைபிடிப்போர் முற்றும் துறந்த சந்நியாசிகள், மனைவியருடன் காட்டில் உறைவர்.

2. பற்றற்று இருக்குமாறு உள்ளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது
நியமம். இதன் மூலம் சவுசம், தவம், மகிழ்ச்சி, ஜபம், சிவ பிரணிதானம்
ஆகியவற்றை அடையலாம். ஆசையின்மை என்ற மண்ணால், ஞான நீரில் உள்ளத்தை நீராட்டித் தூய்மை செய்தல் அகச்சவுசம் எனப்படும். புனித நீராடி, திருநீறு அணிதல் புறச்சவுசமாகும். தவம் என்பது சாந்திராயண விரதம் அனுஷ்டிப்பதாகும். அதாவது, வளர்பிறை அமாவாசை அன்று உபவாசம் இருந்து மறுநாள் முதல் நாள் ஒரு கவளம், இரண்டாம் நாள் இரண்டு கவளம் என்று கூட்டிக் கொண்டே சென்று பௌர்ணமி அன்று மறுபடியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்னர் தேய்பிறையில் நாளொன்றுக்கு ஒரு கவளமாக குறைத்துக் கொண்டே வந்து அமாவாசை தினம் திரும்பவும் உபவாசம் இருக்க வேண்டும். மறைநெறிகளில் நின்று ஆசிரம நிலைகளுக்கு ஏற்ப இருப்பது
மகிழ்ச்சி ஆகும். ஈசனைத் தியானித்தல் சிவப்பிரணிதானம் ஆகும்.

3. ஆசனம் : யோக நிலைக்கான அங்கங்களில் ஆசனமும் ஒன்று. அது
பத்மாசனம் போன்ற பல. அவற்றில் ஒன்றைக் கடைபிடிக்க வேண்டும்.

4. பிராணாயாமம் : ஏதேனும் ஒரு பொருத்தமான ஆசனத்தில் அமர்ந்து

பிராணாயாமம் செய்ய வேண்டும். அது மூன்று வகை. பிராணாயாமம் செய்யும் போது வியர்வை தோன்றினால் அதமம், மனதில் சஞ்சலம் இருந்தால் மத்திமம், சிந்தையில் மகிழ்ச்சி ஏற்படின் உத்தமம். ரேதஸ் மேல் நோக்கி எழும் மந்திரம் ஜபித்துப் பிராணாயாமம் செய்வது சகற்பம் என்றும், இன்றி செய்வது விகற்பம் என்றும் பெயர் பெறும். நம் உடலில் பத்து வித வாயுக்கள் உள்ளன.

1. உயிருக்கு அத்தியாவசியமானதால் இதயத்தில் தங்குவது பிராணவாயு.
2. கீழ்நோக்கிப் பிரிவது அபானவாயு.
3. உடலெங்கும் நிறைந்து இரத்த ஓட்டம், சீரணமான உணவு உடலில் பரவ
உதவுவது வியானவாயு.
4. உறுப்புகளின் சந்திகளில் தங்குவது உதானவாயு.
5. உடலைச் சமனப்படுத்தவது சமன வாயு.
6. விக்கல், கக்கல் ஏற்படக் காரணமானது கூர்ம வாயு.
7. தும்மலை உண்டாக்குவது கிரிகா வாயு.
8. கொட்டாவிக்கு உதவுவது தேவதத்தவாயு.
9. உடலை வீங்கச் செய்வது தனஞ்செய வாயு.
10. நாகன் வாயு - பாடுதல், கண் சிமிட்டல், மயிர்க்கூச்சலுக்கு உதவுவது.

இந்தப் பத்துவித வாயுக்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளல் மிகவும் அவசியம்.

5. பிரத்தியாகாரம் : இச்சைகளினால் பாதிக்கப்படும் ஐம்புலன்களைத் தடுத்து நிறுத்துவது இது.

6. புலன்களை அடக்கி மனதில் தெளிவை ஏற்படுத்தி ஒரு நிலையில்
நிறுத்துவது தாரணை.
7. ஆதியந்தமில்லாப் பரம்பொருளை மனக்கண்முன் நிறுத்தி நிலைப்பது
தியானம் ஆகும்.
8. ஈசனைத் தியானித்து மனம் உருகி மெய் மறந்த நிலையில் இருப்பது சமாதி ஆகும். இந்த எட்டும் யோக அங்கங்கள் ஆகும்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...