Thursday, November 8, 2012

ஐம்புலன்களும், நினைவாற்றலும்



நாம் பலவேளைகளில் ஞாபக மறதியால் அவதியுறுகிறோம். ஒரு பொருளை அல்லது ஒரு விஷயத்தை மறந்துவிட்டு அதனால் பல அவஸ்தைகளைச் சந்திக்கிறோம்.
நமது நினைவாற்றலில் நம்முடைய ஐந்து புலன்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
நினைவாற்றல் என்பது நம்முடைய மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த மனதில் பதிவு செய்யப்படுகிற பொருட்கள் எல்லாம் நம் புலன்கள் என்ற வாசல்படி வழியாக உள்ளே செல்லும் உணர்வுகள்தான்.
மரத்தைக் காட்டி, இது என்ன என்று கேட்டால் அது மரம் என்று சொல்கிறோமே அது நம் கண் என்ற புலனால் பதிவு செய்யப்படுகின்ற உணர்வு. நாம் ஏற்கனவே பார்த்திருக்கின்ற மரத்தின் தோற்றத்துடன் இப்போது பார்க்கும் மரத்தின் தோற்றமும் ஒத்துப் போவதால் இதைப் பார்த்தவுடன் மரம் என்று சொல்லிவிடுகிறோம்.
அதுபோல ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டவுடன், அந்தப் பாடலை இவர்தான் பாடியிருக்கிறார் என்று சொல்கிறோமே. ஏற்கனவே அந்தப் பாடகரின் குரல் நம் மூளையில் பதிந்திருக்கிறது. அது செவி வழி உணர்வு.
கண்ணை மூடிக்கொண்டு ஒரு லட்டைச் சுவைத்தால் கூட இது ஒரு லட்டு என்று கூறிவிடுகிறோம். அது நாக்கின் வழியான உணர்வு.
நாம் ஒரு தோட்டத்துக்குள் சென்றவுடன், இங்கு மல்லிகைக் கொடி இருக்கிறதா என்று கேட்கிறோமே அது மூக்கின் வழி உணர்வு.
அதுபோல் நம் உடலைத் தீண்டும் பொருளை வைத்து நாம் அந்தப் பொருளை அடையாளம் கண்டுகொள்கிறோம். அது பூனை, நாய், பாம்பு என்று அடையாளம் கண்டுகொள்கிறோம் அல்லவா? அது தோல் வழி உணர்வு.
ஆக, நமது புலன்கள் நம்முடைய நினைவாற்றலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அறியலாம்.
பொதுவாக நாம் ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டிருப்போம். உடலில் ஒரு புலன் உறுப்பில் ஏதேனும் குறைபாடுள்ளவர்கள் மற்ற புலன் உணர்வுகளில் அதிக ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள்.
உதாரணமாக, கண் பார்வையற்றவர்களுக்குச் செவி ஆற்றல் அதிகமாக இருக்கும். காரணம் அவர்களுக்குப் பார்வையே ஒலிதான். எனவே செவித்திறனை திரும்பப் திரும்பப் பயன்படுத்திக் கூர்மைப்படுத்தி வைத்திருப்பார்கள். அதனால் கண் பார்வை இல்லாதவர்கள் இசைத் துறையில் எளிதாக ஜொலிப்பார்கள். நம் புலன்கள் கூர்மையாக இருந்தால் நமது உள்வாங்கும் திறமை மட்டுமின்றி கற்பனைத் திறனும் அதிகரிக்கும்.
ஓவியர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் பார்வைத் திறனே வேறு மாதிரி இருக்கும். அவர்கள் கண்களால் எதையும் உள்வாங்குகிறார்கள். கண்களின் வழியே பார்க்கும் உருவங்களை மூளைக்கு எடுத்துச் செல்கிறார்கள். அதனால்தான் ஓவியர்கள் ஓர் உருவத்தைப் பார்த்தவுடன் அந்த உருவத்தை ஓவியமாகத் தீட்டி விடுகிறார்கள்.
அதைப் போல இசைப் பிரியர்கள், உலகைக் காது கொண்டு பார்க்கிறார்கள். ஸ்வர ஞானம் எனப்படும் குரலின் ஏற்ற இறக்கத்தை அவர்கள் சீக்கிரம் உள்வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு பாடலைக் கேட்டவுடன் அவர்களால் அந்தப் பாடலின் ஸ்வரம் என்னவென்று உடனே கூறிவிட முடிகிறது.
இப்படி ஐம்புலன்களின் வழியாக நாம் பழைய நிகழ்வுகளை நினைவில் கொண்டுவர முடியும் என்றாலும், கண் (பார்வை), செவி (கேட்பு) வழியாகத்தான் அதிகமான விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்கிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...