Monday, October 29, 2012

திருமண தோஷத்தை நீக்கும் திருத்தலங்கள்



திருமணஞ்சேரி,

திருமணஞ்சேரி ஆலயம் திருமணமாகாத பெண்களுக்கு நல்லதொரு மணவாழ்க்கையை அமைத்துத் தரக்கூடிய சிறப்பு வாய்ந்த திருத்தலமாக இருக்கிறது. திருமணஞ்சேரி திருத்தலம் சென்று  இறைவன் அருள் வள்ளல் நாதரையும், இறைவி யாழினும் மென் மொழீயையும் தரிசித்து தங்களுடைய திருமண ஏக்கத்தை வேண்டுதலாய் வைத்தால் திருமணமானது விரைவில் வைகூடும் என்பது ஐதீகம்.
இதற்கு சான்றாக பல புராண கதைகளும் உள்ளன.  பண்டைய காலத்தில் மாகவிஷ்ணுவும் பரமேஸ்வரனும் பார்வதியை சாட்சியாக வைத்து சதுரங்கம் ஆட, அந்த ஆட்டத்தில் மாகாவிஷ்ணு ஜெயிக்க, பார்வதி தேவி தன் அண்ணன் ஜெயித்த சந்தோஷத்தில் பரமனை பார்த்து ஏளனமாக சிரித்து விட்டாராம். இதனால் கோபமடைந்த பரமன் நீ பூமியில் பசுவாக பிறப்பாயாக என  சபித்தாராம்.  தன் தவறை உணர்ந்த பார்வதி மன்னிப்பு கேட்க நீ மணச்சேரி கிராமத்தில் என்னை பூஜித்து வந்தால் உனக்கு சாப விமோசனம் கொடுத்து உன்னை மணந்த கொள்வேன் என்றாராம். பசுவான பார்வதியும்  அவ்வாறே மணஞ்சேரியில் நம்பிக்கையுடன் பரமேஸ்வரனை பூஜித்து வர சாப விமோசனம் கொடுத்து தேவியை திருமணம் முடித்துக் கொண்டாராம் பரமேஸ்வரன். திருமண ஏக்கத்தை போக்குவதால் மணச்சேரி என்ற ஊர் 
திருமணஞ்சேரி ஆயிற்று.

இத்திருத்தலத்தில் பூஜை  நேரத்தில் கன்னிப் பெண்கள் 3 மாலையையும், ஒரு எலுமிச்சம் பழத்தையும் கொண்டு வந்து அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். அர்ச்சகர்கள் அந்தமாலையை  இறைவனுக்கு சாற்றி எலுமிச்சம் பழத்தை இறைவனிடம் வைத்து இரண்டு மாலைகளையும் எலுமிச்சம் பழத்தையும் விபூதி, குங்கும பிரசாதத்தையும் திரும்பக் கொடுப்பார்கள். கன்னிப் பெண்கள் இறைவனிடம் மனமுருகி தனக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டுமென்ற கோரிக்கையை இறைவனிடம் வைத்து விட்டு மாலையையும் எலுமிச்சம் பழத்தையும் வீட்டுக்கு கொண்டு வந்து, பூஜையறையில் மாலையை  வைத்து விட்டு  எலுமிச்சம்பழத்தை மென்று தின்ன வேண்டும்.
தினமும் கோவிலிலிருந்து கொண்டு வந்த விபூதி குங்குமத்தை அவர்கள் மட்டும் நெற்றியில் வைத்துக் கொண்டே  வந்தால் திருமணமானது விரைவிலேயே கைகூடிவிடும். இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரரும், அவரது கரம் பற்றி நாணத்துடன் நிற்கும் கோகிலாம்பாள் அம்மையும் விரைவில் திருமணம் நடைபெற அருள்பாலிப்பார்கள் என்பது கண்கூடாக கண்ட உண்மை.

திருமணம் முடிந்தவுடன் கணவருடன் அந்த இருமாலைகளையும் கொண்டு வந்து இக்கோவிலின் திருக்குளத்தில் விட்டு விட்டு, கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையை முடித்துக் கொள்ள வேண்டும். வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் ஜாதி, மத வேறுபாடுகளின்றி எல்லா மதத்தினரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்வது இக்கோவிலின் சிறப்பாகும்.

திருவிடந்தை,

சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் உள்ளது திருவிடந்தை ஆலயம். திருமணமாகாதவர்கள் இவ்வாலயத்திற்குச் சென்று இருமாலைகள் வாங்கி இறைவன் இறைவிக்கு சாற்றி, அந்த மாலைகளை திரும்பப் பெற்று வீட்டிற்கு கொண்டு வந்து தினமும் தொட்டு வணங்கிவர தடைபட்டுக் கொண்டிருக்கும் திருமணத் தடைகள் விலகி கைகூடும்.

ஸ்ரீவில்லபுத்தூர்,

மதுரையிலிருந்து குற்றாலம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் சூடிக்கொடுத்த சுடர்மணியாம் ஆண்டாள் பிறந்து இறைவனை மணாளனாக கைபிடித்தார். இத்திருத்தலத்திலும் இறைவனை வேண்டி, மாலை சாற்றி, பூஜைகள் செய்து வழிபட்டால் விரைவில் பழுத்தில் மணமாலை விழும் என்பது ஐதீகம்.

அழகர்கோவில்,

மதுரையில் அழகர் சன்னதியில் உள்ள இறைவனை எப்பொழுதும் மணக்கோலத்தில் காணலாம். ஈரேழு உலகில் உள்ள தேவர்களும், முனிவர்களும் சேர்ந்து இறைவன் இறைவிக்கு திருமணம்  செய்து வைத்து கண்டுகளித்த இடமாக இது விளங்குகிறது. இதனால் மணமாகாதவர்கள் இங்கு வந்து அம்மை அப்பனை வணங்கினால் திருமணம் வெகு சிறப்பாக கைகூடும்.

திருச்செந்தூர்,

ஆறுபடை விடுகளில்  ஒன்றான முருகனின் திருத்தலம் இது. திருமணத்திற்கான பலத்தை கொடுக்கக்கூடிய மங்கள குருபகவானே இங்கு வந்து முருகனின் அருளை பெற்றுச் சென்றதாக வரலாறு.  அது மட்டுமின்றி செவ்வாய் தோஷம்த்திற்கும் சிறந்த பரிகார ஸ்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது. எனவே இங்கு சென்ற கடலில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டால் மணமாகாதவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும்.

திருப்பரங்குன்றம்,

இங்கு முருகனுக்கு தினமும் திருமணக்கோலம். எனவே திருமணமாகாதவர்கள் இத்திருத்தலத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்.

வைத்தீஸ்வரன் கோவில்,

இங்கு முருகப் பெருமான் முத்துகுமார சுவாமி என்ற பெயரில் வீற்றிருக்கிறார். சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது அவரின் 3 வது கண்ணில் இருந்து வியர்வை துளியானது பூமியில் விழுந்தது. அதிலிருந்து தோன்றியனே  அங்காரகன் எனும் செவ்வாயாவார். இத்திருத்தலம் செவ்வாய்க்கு சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.  எனவே செவ்வாய தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு சென்று முருகப் பெருமாளையும், அங்காரகனையும் வழிபட்டால் திருமண தோஷங்கள் விலகி திருமணம் வெகு விரைவில் கைகூடும்.

உமாமகேஸ்வரன் ஆலயம்,

கேரள மாநிலம் கொல்லத்திலுள்ள இவ்வாலயத்தில் இறைவனும் இறைவியும் இன்பமான இல்வாழ்வினை வாழ்ந்து மக்களுக்கு சிறப்பான இல்லற வாழ்வை அருளிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாலயம் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் மாலை அணிவித்து, குங்கும அர்ச்சனை செய்தால் விரைவில் மண வாழ்க்கை அமைந்து இனிமையான இல்வாழ்க்கை உண்டாகும்.

திருநாகேஸ்வரம்,

ஒருவரின் ஜாதக ரீதியாக களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்குவதற்கு இராகு பகவானை பூஜிப்பது நல்லது. நவகோள்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயைவிட புதனும் புதனைவிட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனைவிட சந்திரனும், சந்திரனை விட சூரியனும் இவர்கள் அனைவரைவிட  ராகு கேதுவும் பலம் பொருந்தியவர்களாக உள்ளார்கள். சூரிய சந்திரனையே பலம் இழக்க செய்யும் ஆற்றல் ராகு கேதுவுக்கு உண்டு. ராகு கேதுவுக்கு ராசி கட்டத்தில் சொந்த வீடு என்று எதுவும் இல்லை. அவர் எந்த ராசியில் அமைந்துள்ளாரோ, எந்த கிரகத்தின் சேர்க்கை பார்வைப்பெற்றுள்ளாரோ அதற்குத் தகுந்த பலன்களை ஏற்படுத்துவார்.

ஒருவர் ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்து விட்டால் அனைத்துவிதமான நற்பலன்களையும் அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும். ஆண்டியையும் அரசனாக மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர் ராகு. அதுவே, ராகு பலம் பெறவில்லை என்றால் இதற்கு தலைகீழ பலன்களை அடைய நேரிடும். ஒருவரது ஜாதகத்தில் 7ம் இடத்தில் ராகு இருந்தாலும், 7ம் அதிபதி ராகுவின் நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலும், திருமண வயதில் ராகு திசை நடைபெற்றாலும் திருமணம் நடைபெற தாமதமாகிறது. 5 ம் இடத்தில் ராகு இருந்தால் புத்திர பாக்கியம் உண்டாக தடை தாமதம் உண்டாகிறது. ஆகவேதான், களத்திர தோஷம், புத்திர தோஷம் நீங்க ராகுவை வழிபடுவது சிறப்பு.

சிறப்பான சிவனருள் பெற்ற ராகுவானவர் திருநாகேஸ்வரத்தில் மட்டுமே நாகவல்லி, நாக கன்னி என இரு தேவியருடன் தனிக்கோவில் கொண்டு மங்கள ராகுவாக அமைந்துள்ளார். குறை தீர்க்க தன்னைத் தேடிவரும் பக்தர்களுக்கு  சிறப்பாக அருள்பாலித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறார். இங்கு ஐந்தலை அரசு எனும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறிவிடும். இத்திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில்  அன்பர்கள் வந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்கின்றனர். தங்களது பல்வேறு தொல்லைகளிலிருந்து விடுபட்டு இன்பம் பெற்றிட இங்கு  வரும் பக்தர்களுக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்யவும், விளக்கேற்றவும் ஒரு கட்டணத்தை வசூலித்து ஆலய நிர்வாகமே அனைத்து வித  ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து தருகிறது. தோஷங்கள் விலக ராகுவை வழிபடுவோம். பல தொல்லைகளிலிருந்து விடுபடுவோம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம்

நமக்கு வரக்கூடிய சங்கடங்களை நீக்க சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். அதிலும் குறிப்பாக கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்தவர்கள், தங்களுக்கு உண்டாகக்கூடிய திருமணத்தடையை  போக்கிக் கொள்ள இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்ளலாம். கேது திசை புக்தி நடப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும். சங்கடஹர சதுர்த்தி என்பது சந்திரன் உதயமாகும் போது விநாயகரை வழிபட்டு சந்திரனுக்கு பூஜை செய்வதாகும்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் காலையிலிருந்து விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். இரவு சந்திரனுக்கு பூஜை முடிந்தபின் அந்த நெய்வேதிய பிரசாதத்தை மட்டும் உண்டு தனிமையில் படுத்து உறங்க வேண்டும்.  இப்படி திருமணமாகாதவர்கள் கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விரதத்தை மேற்கொள்வது மூலம் நல்ல மண வாழ்க்கை அமையும். அதிலும்  மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தியானது மிகவும் விஷேசமானது. அது செவ்வாய் கிழமையாக இருந்து விட்டால் மிக மிக  விஷேசமான நாளாக கருதப்பட்டு மஹா சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வோம். எல்லா வளங்களையும் பெற்று பயன் பெறுவோம்.

கீழப்பெரும்பள்ளம்,

வானகிரி என வழங்கப்படும் இத்திருத்தலத்தில் கேது பகவான் கூப்பிய கரங்களுடன் இத்தலத்து இறைவனாகிய சிவன் நாகநாத சுவாமியை வணங்கும் விதமாக அமைந்துள்ளார். பாம்புகளின் தலைவனாகிய வாசுகியும் இங்கு வந்து வணங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.  கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள், புத்திரதோஷம் உள்ளவர்கள், திருமணம் தடைபடுகிறவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். வட மேற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார் கேதுவின் மனைவி சித்ரலேகா. இத்திருத்தலத்தில் வந்து முறைப்படி வழிபட்டால் இல்லற வாழ்க்கையானது நன்றாக அமையும். கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு  வந்து வழிபட்டால் எல்லா தடைகளும் விலகி சிறப்பான வாழ்க்கை அமையும்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...