Tuesday, October 9, 2012

ராம நாமாவை சொல்லுங்கள்!


மக்களின் வாக்கிலே பகவான் நாமா வர வேண்டும். இது, அடிக்கடி வர வேண்டும். வேறு எதையெல்லாமோ பேசி, காலத்தை வீணாக்கக் கூடாது. வாழ்நாளில் ஒரு வினாடி போய் விட்டாலும், திரும்பவும் வராது. இதை நினைவுபடுத்தி வாழ வேண்டும். இப்படி, பகவான் நாமாவை சொல்லிச் சொல்லி பழக வேண்டும்.
பகவான் நாமாவில் ராம நாமாவுக்கு பெருமையும், முக்கியத்துவமும் கொடுத்துள்ளனர். காசி மாநகரில் ஒரு செல்வந்தன் இருந்தான். விதி வசத்தால் அவனுக்கு தொழுநோய் ஏற்பட்டது. என்ன செய்தாலும், நோய் குணமாகவில்லை. அவனது சுற்றத்தார், அவனை கங்கை கரையில் கொண்டு வந்து விட்டனர்.
அந்த இடத்துக்கு அடிக்கடி நீராட வருவார் பத்மநாபர் என்ற மகான். கபீர்தாசரை குருவாக அடைய வேண்டும் என்று எண்ணினார். கபீர்தாசரையும் கண்டு அவரது சீடராகி, ராமநாம பிரபாவத்தை பிரசாரம் செய்து வந்தார். அவர் வந்த சமயம், தொழுநோயால் வருந்தும் செல்வந்தனும் அங்கு வந்து கங்கையில் விழுந்து மரிக்கப் போவதாகச் சொன்னான். அதைக் கேட்ட பத்மநாபர், "அப்படிச் செய்யாதே… ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தாலே போதும்; உன் நோய் போய் விடும்…’ என்றார்.
செல்வந்தனும், கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு, ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்து, நோய் நீங்கப் பெற்று சுகம்அடைந்தான். இந்த விஷயத்தை பலர் ஓடிவந்து, கபீர்தாசரிடம் கூறினர். ஆனந்தப்பட்டு பத்மநாபரைக் கூப்பிட்டு, "ராம நாமாவை ஒரு தரம் சொன்னாலே போதுமே… ஏன் மூன்று முறை சொல்லச் சொன்னீர்கள்?’ என்று கேட்டார் கபீர்தாசர்.
அதற்கு பத்மநாபர், "அந்த செல்வந்தன், இந்த காசி ÷க்ஷத்ரத்தில் இவ்வளவு காலம் இருந்த போதும், ஒரு நல்ல குருவை தேடி உபதேசம் பெறாமல் இருந்ததற்காக ஒரு முறையும், அவனது நோய் நீங்க ஒருமுறையும், அனைவரும் இந்த ராம நாமத்தின் பெருமையை உணர்ந்திட ஒருமுறையும், ஆக மூன்று முறை சொல்லச் செய்தேன்…’ என்றார் பத்மநாபர்.
அது சரி, இப்படி ராம நாமாவை ஒருமுறை சொன்னாலே போதும் என்றால், நாட்டில் இவ்வளவு வியாதிக்காரர்கள் எப்படி உண்டாயினர் என்ற கேள்வி எழலாம். ராம நாமாவினால் எப்படிப்பட்ட வியாதியும் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையோடு ஜெபம் செய்தால், கட்டாயம் பலன் உண்டு.
கும்பகோணத்துக்கு அருகில் கோவிந்தபுரம், ராம சித்தாந்தத்துக்கு உதாரணமான இடம். முடிந்தால் தரிசித்து வாருங்கள்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...