நம் புலன்கள் ஒவ்வொன்றும் நமக்கு பொக்கிஷங்கள் போல. அவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் இந்த உலக வாழ்க்கை சிரமம்தான். இப்படியான சிரமங்கள் பெரும்பாலும் கண்கள் மற்றும் காதுகளால்தான் ஏற்படுகின்றன. இத்தகைய சிரமங்களை போக்கத்தான் மருத்துவம் இருக்கிறது. ஆனால், ஒரு சில குறைபாடுகளைத் தவிர்த்து மற்ற பாதிப்புகளை சரி செய்வது மருத்துவத்துறைக்கு இன்னும் எட்டாக் கனியாகவே இருப்பது துரதிஷ்டவசமானது.
உதாரணமாக, காதுகளை தாக்கும் நோய்கள் அல்லது விபத்துகளால் பாதிக்கப்படும் கேட்கும் திறனை சொல்லலாம். நம் காதுகள் ஒரு சப்தத்தைக் கேட்டு, அதை இனம்கண்டு உணர வேண்டுமானால், காதுக்குள் செல்லும் எந்திர ஒலி அதிர்வுகள் முதலில் மின்சார சமிக்ஞைகளாக மாற்றப்பட வேண்டும். பின்னர், அந்த மின்சார சமிக்ஞைகள் அர்த்தமுள்ள ஒலியாக மூளையால் புரிந்துகொள்ளப்படும்.
எந்திர ஒலி அதிர்வுகளை மின்சார சமிக்ஞைகளாக மாற்றும் முக்கியமான வேலையை மூளையிலுள்ள `ஸ்பைரல் காங்கிலியான்’ நரம்புகளே செய்கின்றன. ஆனால், இந்த நரம்புகள் சேதமடைந்தாலோ அல்லது இறந்துபோனாலோ அவற்றுக்கு மாற்று என்று எதுவும் கிடையாது. இதனால், ஆடிட்டரி நியூரோபதி எனும் காது கேளாமை குறைபாடு ஏற்படும். உலக காது கேளாதவர்களில் சுமார் 10 சதவீதம் பேரையும், இங்கிலாந்தில் சுமார் 3 லட்சம் பேரையும் பாதிக்கிறதாம் இந்த ஆடிட்டரி நியூரோபதி.
காது கேளாதவர்களுடன் சேர்த்து, உலக காது மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களையும் இம்சித்து வரும் இந்த ஆடிட்டரி நியூரோபதிக்கு, ஸ்டெம் செல்கள் மூலம் ஒரு தீர்வினை கண்டுபிடித்திருக்கிறது இங்கிலாந்திலுள்ள ஷெப்பீல்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு ஒன்று.
`ஜெர்பில்’ என்றழைக்கப்படும் பாலைவன எலிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதற்கட்ட ஆய்வில், சோதனைக்கூடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட `ஆட்டிக் நரம்பு ஸ்டெம் செல்கள்’, ஜெர்பில்களின் கேட்கும் திறனை மீட்டுத் தந்துள்ளன.
இந்த ஆய்வுக்காக, ஜெர்பில் எலிகளின் கேட்கும் திறன் ஊவாபெய்ன் எனும் மருந்துகள் மூலம் முதலில் அழிக்கப்பட்டது. பின்னர், மனித கருவில் இருக்கும், உடலின் எல்லா வகையான திசுக்களாகவும் மாறும் திறனுள்ள, கரு ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கப்பட்ட 50 ஆயிரம் ஆட்டிக் நரம்பு ஸ்டெம் செல்கள், சுமார் 18 ஜெர்பில்களின் ஒரு காதுகளுக்குள் மட்டும் ஊசி முலம் செலுத்தப்பட்டது. 10 வாரங்கள் கழித்து, மூன்றில் இருபங்கு ஜெர்பில்களின் கேட்கும் திறன் சீரானது. அதாவது, ஜெர்பில்களின் கேட்கும் திறன் சுமார் 46 சதவீதம் சீரடைந்தது என்கிறார் ஆய்வாளர் மார்செலோ ரிவோல்டா.
சுலபமாக புரியும்படி சொல்வ தானால், தெருவில் வேகமான செல்லும் ஒரு லாரியினுடைய இரைச்சலை மட்டுமே கேட்கக்கூடிய மனிதர் களின் கேட்கும் திறன், ஒருவருடன் உட்கார்ந்து ஒரு விவாதத்தை மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றமடைந்தது என்று எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் ரிவோல்டா.
மேலும், ஜெர்பில்களின் காதுக்குள் செலுத்தப்பட்ட ஆட்டிக் ஸ்டெம் செல்கள், ஸ்பைரல் காங்கிலியான் நரம்புகளாக வளர்ந்ததால் தான் கேட்கும் திறன் மீண்டது என்பது ஜெர்பில்களின் போஸ்ட் மார்டத்துக்குப்பின் தெரியவந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, காது கேளாமைக்கான முக்கியமான காரணமாக கருதப்படுவது, காதுக்குள் இருக்கும் காக்லியா பகுதியிலுள்ள ரோம உயிரணுக்கள் அழிந்து போவதுதான். இதற்கான தற்போதைய சிகிச்சைக்கு காக்லியர் உட்பொருத்திகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், காக்லிய பகுதி ரோம உயிரணுக்களுக்கு நிகரான ரோம உயிரணுக் களையும் சோதனைக் கூடத்திலேயே உருவாக்கி அசத்தியிருக்கிறது ரிவோல்டாவின் ஆய்வுக்குழு.
முக்கியமாக, காதுகளிலுள்ள ஸ்பைரல் காங்கிலியான் நரம்புகள் பாதிக்கப்பட்டு கேட்கும் திறனை இழப்போருக்கு, மூளைக்குள் அறுவை சிகிச்சை செய்து உட்பொருத்திகளை பொருத்த வேண்டும். மிகவும் ஆபத்தான இந்த சிகிச்சையை விட்டால் அவர்களின் கேட்கும் திறனை மீட்க வேறு வழியேயில்லை.
ஆனால், இன்னும் பல மேலதிக ஆய்வுகளுக்குப்பின், தற்போது எலிகளில் வெற்றியடைந்துள்ள இந்த ஸ்டெம் செல் சிகிச்சை மனித ஆய்வுகளிலும் வெற்றியடையும். அதன்பிறகு, நரம்புகள் மற்றும் காக்லியா பகுதி குறைபாடுகளால் கேட்கும் திறனை இழந்துபோகும் 80 முதல் 90 சதவீத மக்களுக்கு நம்மால் சிகிச்சை அளிக்க முடியும் என்று உறுதியாகச் சொல்கிறார் ஆய்வாளர் மார்சலோ ரிவோல்டா.
No comments:
Post a Comment