Tuesday, August 20, 2013

அனுஷம்


     
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினேழாவது இடத்தை பெறுவது அனுஷ நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனி பகவானாவார். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் விருச்சிக ராசிக்கு சொந்த மானதாகும். இது உடலில் சிறுநீர்ப்பை, பிறப்புறுப்பு, குதம், இடுப்பு பகுதி எலும்புகள் போன்றவற்றை ஆளுமை செய்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ந,நி,நு,நே ஆகியவை தொடர் எழுத்துக்கள் நா,நீ,நூ ஆகியவை.
குணஅமைப்பு;
அனுஷ நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் எப்பொழுதும் மாறுபட்ட மனநிலையை கொண்டிருப்பார்கள். எறும்புக்கும் தீமை நினைக்க மாட்டார்கள் என்றாலும் கொண்ட கொள்கைக்காக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டார்கள். பலருக்கு சுமை தாங்கியாக விளங்கினாலும், தங்களுடைய மனக் குறைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். யார் தவறு செய்தாலும் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என தயங்காமல் எடுத்துரைப்பார்கள். அழகான கூந்தலும் விசாலமான கூந்தலும் இவர்களுக்கு அழகு சேர்ப்பதால் அமையும். சட்டென கடின வார்த்தைகளை பேசினாலும் உடனே அதை சரி செய்து விடுவார்கள். கருமியாகவும் இருப்பார்கள். இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற கூற்றுப்படி பூமியில் இருக்கும் போதே புண்ணிய காரியங்களை செய்து சமுதாயத்தின் முன்னேற்றமடைவார்கள். எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். பசியை பொறுக்க மாட்டார்கள்.  இரவு பகல் பாராது உழைப்பார்கள். ஜாதி, மதம், இனம் இவற்றையெல்லாம் கடந்து அனைவரிடத்திலும் அன்பாக பழகுவார்கள் கவர்ச்சியான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்திமுப்பார்கள். பேச்சில் வித்தகர்கள். தெளிவாக பேசுவார்கள். தாம்பூல பிரியர்கள்.

குடும்பம்;
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிக  பாசம் கொண்டவர்கள். மனைவிக்கு மரியாதை கொடுப்பார்கள். பெற்றோரை பேணி காப்பார்கள். உடன் பிறந்தவர்களுக்காக எதையும் விட்டு கொடுப்பார்கள். பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். செல்வம் செல்வாக்கு அசையும் அசையா சொத்துக்கள் யாவும் சிறப்பாக அமையும். எல்லாரிடத்திலும் நட்பாக பழகுவதால் உற்றார் உறவினர்களின் ஆதரவைப் பெறுவார்கள் ஆழ்ந்த சிந்தனையில் எப்பொழுதும் முழ்கியிருப்பார்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் 29 வயதிலிருந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும். 40 முதல் 60 வயது வரை பொற்காலமாக அமையும். தன்னுடைய தாராள மனப்பான்மையை எப்பொழுதும் வீட்டில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

தொழில்;
     
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்காக இரவு பகல் பாராமல் உழைப்பார்கள். பலர் நாட்டிய பேரொளிகளாகவும், சிறந்த பாடகர் மற்றும் வசனகர்த்தாவாகவும் இருப்பார்கள். வாய் பேச்சில் வித்தகர்கள். மருத்துவம், வங்கி, காவல் துறை, தீயணைப்பு துறை, உளவுத்துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள். ஒரு சிலர் கட்டிட கலை, காண்டிராக்ட் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். பலராலும் பாராட்டப்படக் கூடிய அரிய பெரிய காரியங்களை செய்து பெரிய பதவிகளை வகிப்பார்கள். மக்கள் செல்வாக்கால் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றிலும் இடம் பெறும் வாய்ப்பு அமையும். சமுதாயத்தில் புகழ் பெருமை, செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும். தொழிலாளர்களுக்காக போராடுவதால் தொழில் சங்க தலைவராக இருப்பார்கள்.

நோய்கள்;
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலில் இடது கண் நரம்புகள் மற்றும் தலை நரம்புகளில் பாதிப்பு ஏற்படும். தலைவலியும், வயிற்றில் பிரச்சனையும் எப்பொழுதும் இருக்கும்.

திசை பலன்கள்;
     
அனுஷ நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசை முதல் திசையாக வரும். இதன் மொத்த வருட காலங்கள் 19 என்றாலும் பிறந்த நேரத்தை  கணக்கிட்டு மீதமுள்ள சனி தசா புக்திகளை பற்றி அறியலாம். சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் மேன்மை, பெற்றோருக்கு உயர்வு, அசையா சொத்து சேர்க்கை அமையும். பலமிழந்திருந்தால் குடும்பத்தில் சோதனையும் பெரியவர்களிடையே கருத்து வேறுபாடும் கல்வியில் மந்த நிலையும், சோம்பல் தனமும் உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் புதன் திசை காலங்கள் 17 வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும், கல்வியல் மேன்மையும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும், நல்ல ஞாபக சக்தியும் உண்டாகும்.
     
மூன்றாவதாக வரும் கேது திசை காலங்களில் அவ்வளவு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. உடல் நிலையில் பாதிப்பு, திருமண வாழ்வில் பிரச்சனை வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்.
     
நான்கவதாக வரும் சுக்கிரன் திசை 20 வருட காலங்களில் நல்ல மேன்மைகளை அடைய முடியும். பொருளாதார உயர்வும் அசையும் அசையா சொத்து சேர்க்கையும் உண்டாகும். பொன் பொருள் சேரும்.
     
சூரிய திசை 6 வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தந்தைக்கு சோதனைகள் ஏற்படும்.

ஸ்தல மரம்;
     
அனுஷ நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் மகிழம்பூ மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். இந்த நட்சத்திரத்தை கும்ப லக்னம் அமைந்த முன்னிரவில் 10 மணியளவில் தலைக்கு நேராக காண முடியும்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
அனுஷ நட்சத்திர நாளில் மஞ்சள் நீராட்டுதல், திருமணம், சீமந்தம் வாஸ்துபடி வீடு கட்ட தொடங்குதல், புது ஆடை ஆபரணம் அணிதல் உபநயனம் செய்தல், கல்வி கற்க தொடங்குதல், புது மனை புகுதல், தானியம் சேர்த்தல், விதை விதைத்தல், கதி வறுத்தல், தெய்வ பிரதிஷ்டை செய்தல் வாசற் கால் வைத்தல் போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்
திருவெற்றியூர்;
     சென்னைக்கு வடக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள புற்றிடங் கொண்டார், ஆதிபுரீசுவராக அருள் பாலிக்கும் ஸ்தலம். ஸ்தல விருட்சம் மகிழ மரம்.
திருவண்ணாமலை;
     திருமாலும் நான்முகனும் அடி&முடி தேடிய போது அவர்களுக்கு எட்டாமல் அண்ணாமலையாக இறைவன் தோன்றிய ஸ்தலம்.
நீடூர்;
     மயிலாடு துறைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் மகிழ வனம் கொண்ட ஊழிக் காலத்தும் அழியாதலால் நீடூர் ஆனது. லட்சுமி நாராயண பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

கூற வேண்டிய மந்திரம்
     ஓம் நாராயணாய வித்மஹே
     வாசுதேவாய தீமஹி
     தன்னோ விஷ்ணு பிரசோதயாத்
அனுஷ நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
     பரணி, பூசம்,பூராடம்,உத்திரட்டாதி, பூரம் ஆகியவை பொருந்தாது.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...