Tuesday, August 20, 2013

பூராடம்



இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபதாவது இடத்தை பெறுவது பூராட நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பூராட நட்சத்திரம் தனுசு ராசிக்குரியதாகும். இது உடல் பாகத்தில் தொடை, இடுப்பு, நரம்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பூ, த, ப, டா ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஸ, எ, ஏ ஆகியவையாகும்.
குண அமைப்பு;
     
பூராட நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் வாசனை திரவியங்கள் மீது அதிக ஆசை வைத்திருப்பார்கள். ஆடை ஆபரணங்களை அணிவதிலும் ஆர்வம் இருக்கும். தங்களுடைய கனிவான பார்வையால் அனைவரையும் தன் வசம் வைத்திருப்பார்கள். பூராடம் போராடும் என்ற கூற்றிற்கேற்ப எந்த பிரச்சனைகளை கண்டும் பயப்படாமல் எப்பாடு பட்டாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவார்கள். மந்திரியோ மண் சுமப்பவனோ எந்த பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். சூதுவாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு படுத்துவார்கள். எந்த வொரு விஷயத்தையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் கூட ஒரு நளினம் இருக்கும். பூராடத்தில் நூலாடாது என்ற பழமொழி இருந்தாலும் இது தவறானதாகும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் நூல் என்பதை பாட நூலாக கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போக போக சரியாகி விடும்.

குடும்பம்;
     
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சரியான ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே நல்லது. சிலருக்கு மறுமண அமைப்பு கொண்டிருப்பார்கள். பிள்ளைகளின் மீது அதிக பாசம் இருக்கும். அவர்களுக்காக வாழ்க்கை துணையையே ஒதுக்கி விடுவார்கள்.  சுவையான உணவை விரும்பி உண்பார்கள். தாய் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். பொய் சொல்லாதவர்கள். பெற்றோரின் ஆசைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். நண்பர்களை தங்கள் பக்கம் வைத்திருப்பார்கள். பூராடம் நூலாடாது என்பதற்கும் மணவாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லை. அமைதியை அதிகம் விரும்புவதால் பூக்கள், அருவிகள் மற்றும் பசுமையை கண்டால் மனதை பறி கொடுப்பார்கள் உற்றார் உறவினர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். அனைவரையும் முழுமையாக நம்பினாலும் அனுபவத்திற்கு பிறகு சரியாகி விடும்.

தொழில்;
     
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள், யோகம் தியானம் போன்றவற்றிலும், தற்காப்பு கலைகளிலும் ஆர்வம் இருக்கும். கணக்கு வணிகவியல், பொது மேலாண்மை, துப்பறிதல், நீதி, மக்கள் தொடர்பு, பேஷன் டெக்னாலஜி, தொலை தொடர்பு, சற்று சூழல் ஆகிய துறைகளில் சம்பாதிக்கும் யோகத்தைப் பெறுவார்கள். சுய மரியாதையும், சுதந்திரத்தை விரும்பவராகவும் இருப்பதால் தன்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாத நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவார்கள். ஏற்ற தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகி அனைத்து திறமைகளையும் வெளிபடுத்தி செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். அயல் நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டு. அரசியலிலும் செல்வாக்கு அதிகரிக்கும்.
நோய்கள்;
     
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தைராய்ட், சிறுநீரகக் கல் வயிற்றுப் புண், கீல் முட்டு வாதம், சர்க்கரை வியாதி ஆகியவை உண்டாகும். ஜீரண கோளாறு, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
திசை பலன்கள்;
     
பூராட நட்சத்திரதில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சுக்கிரன் என்பதால் முதல் திசையாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்களாகும். என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இளம் வயதிலேயே சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் வாழ்வில் சுபிட்சம், கல்வியில் மேன்மை, சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும், சுக வாழ்வு பாதிப்படையும்.
     
இரண்டாவதாக வரும் சூரிய திசை காலங்கள் 6 வருடமாகும். இத்திசையில் சிறு சிறு உஷ்ண சம்மந்தம்ப் பட்ட பாதிப்புகள் ஏற்பட்டாலும், கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். பேச்சாற்றல் ஏற்படும்.
     
மூன்றாவதாக வரும் சந்திர திசையில் குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் தோன்றி மறையும். தாய்க்கு சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.
     
நான்காவதாக வரும் ராகு திசை 18 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் முற்பாதி முன்னேற்றத்தையும், பிற்பாதியில் கண்டங்களையும் உண்டாக்கும். எதிலும் கவனம் தேவை. மாரக திசையாக அமையும்.

விருட்சம்;
     
பூராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள வஞ்சி அல்லது நாவல் மரமாகும். இந்த நட்சத்திரத்தை மீன லக்னம்  உதயமாகி ஒன்றரை நாழிகை கடந்த பின்னர் வானத்தில் காண முடியும் ஆகஸ்ட் மாதத்தில் இரவு 10 மணியளவில் தென்படும்.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்
      ஆடு மாடு கன்று வாங்குதல், வண்டி வாகனம் வாங்குதல், ஆடை ஆபரணம் வாங்குதல், கடன்களை பைசல் செய்தல், மருந்து உண்ணுதல், பரிகார பூஜை செய்வது, கிணறு குளம் வெட்டுதல் போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்
சிதம்பரம்;
      கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்தலம், பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாயத்தை குறிக்கும். சிதம்பர ரகசியம் இங்கே விஷேசம், சபாநாயகராக அருள் பாலிக்கும் இறைவனோடு அன்னை சிவ காம சுந்தரியும் அருள் பாலிக்கிறார். பழமையும் பெருமையும் நிறைந்த புண்ணிய ஸ்தலம்.
நகர்;
      திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில் உள்ள திருத்தலம் அப்பிரதீசுவரர் அருளாசி செய்யும் அற்புத ஸ்தலம்.
கடுவெளி;
      தஞ்சை மாவட்டம் திருவை யாருக்கு வடக்கில் 3.கி.மீ தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் உள்ளது. ஆகாச புரீசுவரர் அருள் புரியும் ஸ்தலம்.

கூற வேண்டிய மந்திரம்
     
ஓம் பஸ்சிமேசாய வித்ம ஹே
      பாசஹஸ்தாய தீமஹி
      தந்நோ வருண ப்ரசோதயாத்!!

பொருந்தாத நட்சத்திரங்கள்

      பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை பூராட நட்சத்திரத்திற்கு பொருந்தாது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...