இருபத்தேழு நட்சத்திரங்களில் ஏழாவது இடத்தை பெறுவது புனர்பூச
நட்சத்திரமாகும். இதன் அதிபதி குருபகவானாவார். இது ஆண் நட்சத்திரமாக
கருதப்படுகிறது. புனர்பூச நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்கள் மிதுன
ராசியிலும், 4ம் பாதம் மட்டும் சந்திரனின் ராசியான கடகத்திலும் உள்ளது.
இதில் 1,2,3ம் பாதங்கள் உடலில் காது தொண்டை, தோள் மார்பு போன்றவற்றையும்,
4&ம் பாதம் நுரையீரல் மார்பு, வயிறு கல்லீரல் போன்றவற்றையும் ஆளுமை
செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய
முதலெழுத்துக்கள் கே, கோ, ஹ, ஹி ஆகியவை தொடர் எழுத்துக்கள் கெ,கை
ஆகியவையாகும்.
குணஅமைப்பு;
புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் என்பதால் பலருடன் நட்பாக
பழகும் இயல்பும், பொய் பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் இருக்கும்.
நன்றி மறக்காதவர்கள். பிறருக்கு நன்மை செய்யும் குணமிருக்கும். அழகான அங்க
லட்சனங்கள் அமைந்திருக்கும். சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நடப்பார்கள்.
எளிதில் உணர்ச்சி வசப்படகூடியவர்கள். அதிக தன் மானம் உள்ளவர்கள் என்பதால்
யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில்
ஈடுபாடு அதிகமிருக்கும். எதிரிகளிடம் எப்பொழுதும் கவனமாக நடந்து
கொள்வார்கள். ஒருவரை பார்த்தவுடன் அவரிடம் உள்ள நல்லது கெட்டதை புரிந்து
கொள்ளும் ஆற்றல் இருக்கும். பொதுவாகவே மௌனமாக எதையாவது சிந்தித்துக்
கொண்டிருப்பார்கள். படிப்பறிவு, எழுத்தறிவு இவற்றை விட அனுபவ அறிவே
அதிகமிருக்கும் மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள்.
குடும்பம்;
புனர்பூச நட்சத்திரகாரர்களுக்கு காதல் செய்ய கூடிய அமைப்பு உண்டு
என்றாலும் பெற்றோருக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் காதலையே தியாகம்
செய்வார்கள். திருமண வாழ்க்கை நன்றாக அமையும். சிக்கனமானவர் என்றாலும்
மனைவி பிள்ளைகளின் தேவையறிந்தும், உணர்வுகளை புரிந்து கொண்டும் செலவு செய்ய
தயங்க மாட்டார்கள். குடும்பத்தேவைகளை சரியாக பூர்த்தி செய்து
பிள்ளைகளுக்கும் முன்னுதாரணமாக நேர்மையுடன் வாழ்வார்கள். 37 வயதிலிருந்து
செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் அமையும்.
தொழில்;
புனர்பூச நட்சத்திரகாரர்கள் அரசு பணிகளில் இருப்பவர்களை விட, தனியார்
துறைகளில் பணிபுரிபவர்களே அதிகம். தெரியாது என்று எதையும் ஒதுக்கீடு
வைக்காமல் எந்த வேலையையும் எளிதில் கற்று கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள்.
யாருக்கும் அஞ்சாமல் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பலரை வழி நடத்தும்
ஆற்றல் உள்ளவர்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பைனான்ஸ் போன்ற
துறைகளிலும், வங்கி, வர்த்தகதுறை, நீதித்துறை மதம் சார்ந்த கல்வித்துறை
போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கதை கவிதை எழுதுவதிலும் கதைகள் சொல்வதிலும்
வல்லவர்களாக இருப்பதால் இதனாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டு
மற்றவர்களுக்கு கீழ் அடிமையாக பணிபுரிய விரும்ப மாட்டார்கள். உயர் பதவிகளை
வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
நோய்கள்;
சிலருக்கு சிறு வயதிலேயே முடக்கு வாதங்கள் ஏற்படகூடிய சூழ்நிலை
உண்டாகும். நுரையிரலில் பாதிப்பு உண்டாகும். அதிக இனிப்பு வகைகளை விரும்பி
உண்பதால் சர்க்கரை நோயும் தாக்கும்.
திசை பலன்கள்;
புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக குரு திசை வரும்.
குரு திசை மொத்தம் 16 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து
கணக்கிட்டு குரு திசை எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்பதனை அறியலாம். குரு
பலம் பெற்று அமைந்து பிறக்கும் போதே குரு திசை வருமேயானால் கல்வியில் நல்ல
மேன்மை, பெற்றோர் பெரியோர்களை மதிக்கும் பண்பு, எடுக்கும் காரியங்களை
சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் குடும்பத்தில் சுபிட்சமான நிலை
உண்டாகும்.
இரண்டாவதாக வரும் சனி திசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் இத்திசை
காலங்களில் சொந்த தொழில் செய்யும் யோகம், பூமி மனை வாங்கும் யோகம்,
செய்யும் தொழிலில் உயர்வு சமுதாயத்தில் பெயர் புகழ் மேன்மையடையும் வாய்ப்பு
போன்றவை உண்டாகும்.
மூன்றாவது திசையாக வரும் புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும்.
இத்திசை காலங்களில் சற்று நன்மை தீமை கலந்த பலன்களை பெற முடியும்.
நான்காவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில்
ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு சமூக நல சேவைகளில் நாட்டம்
கொடுக்கும். என்றாலும் ஆரோக்கிய ரீதியாகவும் சில பிரச்சனைகள் உண்டாகும்.
ஐந்தாவதாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும். இத்திசை
காலங்கள் வாழ்வில் பலவிதமான முன்னேற்றத்தை கொடுக்கும். சுகவாழ்வு சொகுசு
வாழ்வு யாவும் உண்டாகும்.
மேற்கூறிய தசா காலங்களில் அந்த கிரகங்கள் பலம் பெற்று சுபர் பார்வையுடன்
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை அடைய முடியும். இல்லை
எனில் வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்தே முன்னேற வேண்டியிருக்கும்.
புனர்பூச நட்சத்திரர்களின் ஸ்தல விருட்சம் மூங்கிலாகும். இதை வழிபட்டு
வந்தால் நற்பலன்களை அடையலாம். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாதத்தில் சுமார்
பன்னிரெண்டு மணியளவில் வானத்தில் காண முடியும்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;
விவாகம், சீமந்தம், பூ முடித்தல், புதிய ஆபரணம் வாங்குதல், பெயர்
சூட்டுதல், பந்த கால் நடுதல் கிரக பிரவேசம், வியாபாரம் தொடங்குதல், மாடு
வாங்குதல், அதிகார பதவிகளை ஏற்று கொள்ளுதல், வேத சாஸ்திரங்களை கற்றல்
போன்றவற்றை புனர்பூச நட்சத்திரத்தில் செய்யலாம்.
வழிபாட்டு ஸ்தலங்கள்
திருந்து தேவன் குடி;
கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நண்டாங் கோயிலில் குடிகொண்டுள்ள அருமருந்துடையார். அருமருந்து நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.
திருவேட்களம்;
கடலு£ர் மாவட்டம், சிதம்பரத்திற்கு கிழக்கில் 3,கி.மீ தொலைவிலுள்ள பாசுபதேசுவரர் அன்னை நல்ல நாயகி எழுந்தருளியுள்ள திருக்கோயில்
திருவெண்ணெய் நல்லூர்
விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூருக்கு தென்கிழக்கில் 20.கி.மீ
தொலைவிலுள்ள இருபாபுரீசுவரர்&மங்களாம்பிகை அருள் பாலிக்கும்
திருத்தலம்.
திருப்பாச்சூர்;
சென்னைக்கு மேற்கில் 50.கி.மீ தொலைவிலுள்ள தீண்டாத் திருமேனியாக
மூங்கில் அடியில் முளைத் தெழுந்த பாசூர்நாதர் திருக்கோயில் ஆகியவையாகும்.
இக்கோயில்களில் எல்லாம் மூங்கில் ஸ்தல மரமாக உள்ளது.
கூற வேண்டிய மந்திரம்;
ஓம் தசரத குமாராய வித்மஹே
ஸ்தா வல்லபாய தீமஹி
தன்னோ ராம ப்ரசோத யாத்
No comments:
Post a Comment