கருடனே! மனிதர்கள் வாழும் மானுஷ்ய லோகத்திற்கும் யமபுரிக்கும் இடையில் எண்பத்தாறாயிரம் காதம்( 1காதம் =7km ) இடைவெளியுள்ளது.
அந்த யம லோகத்தில் யெழும் எமதர்மராஜன் கூற்றவன் உலகத்தினர் ஒவ்வொருவருக்கும் ஆயுட்காலம் முடிந்ததும் ஜீவனைப் பிடித்து வரும்படியாகத் தன தூதர்களிடம் கூறுவான். விகாரமான மூவகைத் தூதர்களை ஏவியனுப்புவான். வாழ்நாள் முடிந்த ஜீவனைப் பாசத்தால் கட்டிப் பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைத்து யமலோகத்திற்குச் செல்வார்கள். ஆவி உருவ சீவர்களை யமபுரித் தலைவன் கால தேவன் முன்னால் நிறுத்துவார்கள். அவர் அத்தூதர்களை நோக்கி, ஏ கிங்கரர்களே! இந்த சீவனை மீண்டும் கொண்டு போய் அவன் வீட்டிலேயே விட்டு பன்னிரெண்டாம் நாள் கழிந்த பிறகு முறைப்படி மீண்டும் நம் திருச்சபை முன்பு நிறுத்துங்கள் என்று கட்டளையிடுவான். உடனே ஒரு நொடி நேரத்திற்குள் சீவனின் இல்லத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். ஆவி வடிவுடைய அந்த உயிர் சுடுகாட்டிலே தன் சிதைக்கு பத்து முழ உயரத்தில் நின்று, தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரியும் தன் உடலைப் பார்த்து, அந்தோ! ஐயையோ! என்று ஓலமிட்டு அழும். தீயிலோ உடல் எரிந்து வெந்து சாம்பலாகும் போது தன் உறவு பொருள் மீது இருந்த ஆசையானது ஒழியாது. சீவனுக்குப் பிண்டத்தலான சரீரம் உண்டாகும். புத்திரன் பத்து நாட்கள் போடும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உண்டாகும்.
அவன் வாழ்ந்த வீட்டின் முன்பு நின்று அங்கு இருப்பவர்களைப் பார்த்து பசி தாகத்தால் ஆ..ஆ... என்று கதறி பதறி நிற்பான். பன்னிரெண்டாம் நாளில் பிராமணர் மூலமாய் புத்திரனால் கொடுக்கப்பட்டவற்றை உண்டு பதின்மூன்றாம் நாளன்று பிண்டவுருவத்தில் பாகத்தால் பிணித்து கட்டிப் பிடித்துக் கொண்டு போகும் போது தன் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்து கதறிக் கொண்டே யம லோகத்தை அடைவான். பிண்ட சரீரம் பெற்ற சீவனன், யம கிங்கரர்களால் பாகத்தால் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காத வழி இரவுபகலுமாக நடந்து செல்ல வேண்டும். அவன் போகும் வழியில் கல், முள், அடர்ந்த காடுகளைக் கண்டு பிண்ட சீவன் பசியாலும், தாகத்தாலும் வருந்தித் தவிப்பான்.
வைவஸ்வத பட்டணம் என்ற பட்டணமுண்டு. அங்கு அச்சம் தரும் மிகவும் கோரமான பிராணிகளுக்கு இருப்பிடமாகவும், துக்கத்தையே கொடுப்பதாகவும் அமைந்திருக்கும். பாபம் செய்தவர்கள் மிகப் பலர் எப்போதும் ஆ, ஆ, ஊ, ஊ என்று ஓலமிடுவார்கள். அங்கு வெப்பத்தால் கொதிக்கும் கொதிநீர்தான் காணப்படும். குடிக்க ஒரு துளித் தண்ணீர் கூடக் கிடைக்காது. அருந்துவதற்கு அருகதையற்ற ரத்தம் பொழிவதாக இருக்கும். நான் உயிரோடிருந்த போது எத்தனை பாவங்கள் செய்தேன். ஞானிகளையும், பாகவத சந்நியாசிகளையும் ஏசிப் பேசிப் பரிகாசம் செய்தேன். அவற்றையெல்லாம் இப்போது அனுபவிக்கின்றேன். மலை போன்ற ஆயுதத்தால் யமகிங்கரர்கள் இரக்கமில்லாமலே என்னை அடித்துப் புடைக்கிறார்களே! அந்தோ! உடலுமில்லாமல் ஆவியாய் அவதியால் அலறித் தவிக்கிறேன். ஒவ்வொரு குரலுக்கும் தூதர்கள் அவனைத் துன்புறுத்த அவன் அவர்களால் யமபுரிக்கு இழுத்துச் செல்லப்படுவான்! என்று திருமால் கூறியருளியாதகச் சூதபுராணிகர் கூறினார்.
No comments:
Post a Comment