‘அமெரிக்கா உலகின் வல்லரசு. அங்கு பாலாறும் தேனாறும் ஓடுகிறது, அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் டாலரில் சம்பாதிக்கிறார்கள், உலகின் எல்லா நாட்டவரும் அமெரிக்க குடிமக்கள் ஆக போட்டி போடுகிறார்கள், எல்லா நாடுகளும் அமெரிக்கா போல வல்லரசாக முயற்சிக்கின்றன’ என்பதுதான் நடுத்தர வர்க்கத்தின் கருத்தாக்கம்.
இந்தியா 2020-ல் வல்லரசாகி விடும் என்ற அப்துல் கலாமிய கனவு அமெரிக்கா போல இந்தியாவும் ‘முன்னேறுவது’ என்பதைத்தான் குறிக்கிறது. வல்லரசு என்றால் எப்படி இருக்க வேண்டும்? இராணுவ வல்லமை, விண்வெளி சாகசம், போர் என்றுதான் இத்தகைய ‘தேசபக்தர்கள்’ பட்டியலிடுவார்கள். கூடவே கொசுறு பின்னிணைப்பாக நாட்டு மக்கள் அனைவருக் கும் தரமான கல்வி, உடல் நலம் பேண அனைவருக்கும் கட்டுப்படியாகும் கட்டணத்தில் மருத்துவ வசதிகள், தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை வாய்ப்புகள் முதலியவற்றையும் கூறுவார்கள்.
அமெரிக்காவின் ஜனநாயகமும், சந்தைப் பொருளாதார மும், வல்லரசு வலிமையும் மக்கள் நலன் சார்ந்த துறைகளில் என்ன சாதித்திருக்கின்றன? அமெரிக்கா வின் மருத்துவத் துறையைப் பற்றி பார்ப்போம்.
அமெரிக்காவின் மருத்துவத் துறை, லாபம் தேடும் முதலாளித்துவ நிறுவனங்களால் திரிக்கப்பட்டு, முறுக்கப்பட்டு, உருத்தெரியாத ஜந்துவாக மாற்றப் பட்டிருக்கிறது. தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதை கேள்விப்பட்டிருக்கிறோம், தலையை கவட்டை வழியாக விட்டு கையை கீழே நீட்டி மூக்கை தொடுவதுதான் அமெரிக்க மருத்துவத் துறையின் செயல்பாட்டுக்கு சரியான உதாரணமாக இருக்க முடியும்.
மருந்துத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்.
மேலும்,
தமது மருந்துகளை அதிகம் பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கும் பிற சுகாதாரத் துறை ஊழியர் களுக்கும் விலையுயர்ந்த பரிசுகளை (லஞ்சம்) கொடுப்பது மருந்து ஆராய்ச்சியில் லாப நோக்கிற்காக மோசடி செய்வது மருந்து ஒழுங்கு முறை ஆணையத் தையும் ஊழல் மயமாக்குவது புதிய மருந்துகளுக்கான பரிசோதனைகளை தமது லாப நோக்கத்திற்கு ஏற்றபடி வடிவமைப்பது தமக்கு ஏற்றபடி சட்டங்களை உருவாக்க மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்குவது
என்று அந்த கிரிமினல்கள் விட்டு வைக்காத உத்திகள் எதுவும் இல்லை.
ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போது, தகுதி பெற்ற மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் கண்டறிந்த நோய்க்கூறுகளின் அடிப்படையில் அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது நவீன மருத்துவத்தின் மைய அம்சம். இந்த வேதி மருந்து களின் பயன்பாடு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. முதல் உலகப்போரில்தான் முதல் முதலில் காயங்களை குணப்படுத்த நவீன முறைகளை பயன்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்த 100 ஆண்டுகளில் மருந்துகளை
விற்கும் நிறுவனங்கள் பகாசுரன்களாக வளர்ந்து இப்போது உலகளாவிய சந்தையில் ஆண்டுக்கு 20 லட்சம் கோடி ரூபாய்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றன.
தனியார்மயம், தாராளமயம் விரிவடைந்த 1980களுக்கு முன்பு வரை மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவர்கள் மூலமாகவே மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்து வந்தன. அமெரிக்காவில் ரொனால்ட் ரீகனும், பிரிட்டனில் மார்கரெட் தாட்சரும் பிரதிநிதித் துவப் படுத்திய கார்ப்பரேட் அரசுகள், மருந்துகளை விளம்பரம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை வெகுவாக தளர்த்தி விட கடந்த 20 ஆண்டுகளில் மருந்து விளம்பரங்கள் பெருகியிருக்கின்றன.
இப்போது மருத்துவர்களால் பரிந்துரைக்க்கப்பட வேண்டிய மருந்துகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விளம்பரப்படுத்தப்படுகின்றன
மருந்து எதற்காக பரிந்துரைக்கப்பட்டதோ அந்த நோயைப் பற்றியோ, அதன் பாதிப்புகளையோ இந்த விளம்பரங்கள் பேசுவதில்லை. மருந்தின் பக்க விளைவுகளையும் பார்வையாளருக்கு விபரமாக காட்டுவதில்லை. பெப்சி கோலா, குர்குரே சிப்ஸ், குளியல் சோப்பு விளம்பரங்கள் போல இந்த மருந்து விபரங்கள் மக்கள் மத்தியில் உணச்சி பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை மருந்துகளின் பக்கம் தள்ளுகின்றன.
என்ன விளைவு? மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்தது. கூடவே மருந்துகளின் பாதகமான பக்க விளைவுகளால் லட்சக் கணக்கான பேர் பாதிக்கப்பட்டார்கள்.
அமெரிக்காவின் இறப்புகளுக்கான காரணங்களில் அது 5வது இடத்தை வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் பாதகமான மருந்து பக்க விளைவுகள் 1 லட்சம் பேரின் இறப்புக்கும் சுமார் 15 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றன.
எந்த மாதிரி மருந்துகள் அதிகம் விளம்பரப் படுத்தப் படுகின்றன?
’1998 முதல் 2004 வரையிலான ஏழு ஆண்டுகளில் புதிதாக ஒப்புதல் கொடுக்கப்பட்ட மருந்துகளில் 14% மட்டுமே ஏற்கனவே விற்கப்படும் மருந்துகளை விட சிறப்பானவை என்று சொல்லக் கூடிய புதிய வேதி சேர்மங்கள். பெரும்பான்மை, பழைய வேதிப் பொருட்களை சிறிதளவு மாற்றி உருவாக்கப்பட்டவை தான். சந்தையில் ஏற்கனவே கிடைக்கும் மருந்துகளை விட அவை எந்த வகையிலும் சிறந்தவை இல்லை. இவற்றை ‘ஈயடிச்சான்’ மருந்துகள் என்கிறோம்’ என்று விளக்குகிறார் ஹார்வார்ட் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மார்சிய ஏஞ்சல் .
இதைப் பற்றி புரிந்து கொள்ள லாப வேட்டை அடிப்படையிலான முதலாளித்துவ மருந்து உற்பத்தி சங்கிலியின் ஒரு விபரத்தைப் பார்க்க வேண்டும்.
ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்து, சோதனை செய்து, கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்து, அனுமதி வாங்கிய பிறகுதான் சந்தைப்படுத்த முடியும். உண்மை யான ஒரு புதிய மருந்தை உருவாக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகலாம். அவ்வளவு முயற்சி செய்து உருவாக்கிய மருந்துகளை போட்டி யாளர்கள் நகல் செய்து விற்க முடியாமல், மருந்தை உருவாக்கிய நிறுவனத்துக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு (20 ஆண்டுகள்) ஏகபோக உரிமை தருகிறது காப்புரிமை சட்டம்.
மருந்து நிறுவனங்கள் முதல் 20 ஆண்டுகளுக்கு மருந்தை அதிக விலைக்கு விற்று தனது முதலீட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கட்டுப்பாடுகள் நீங்கி விட போட்டி நிறுவனங்களும் உற்பத்தியில் குதித்து மருந்தின் விலை பல மடங்கு வீழ்ந்து விடும்.
புதிய மருந்து கண்டுபிடிக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு, அதை ஈடுகட்ட பல ஆண்டுகளுக்கு ஏகபோக விற்பனை உரிமை என்பது நோக்கம். லாபத்தை இன்னும் அதிகமாக்கிக் கொள்ள மருந்து நிறுவனங்கள் என்ன செய்கின்றன? பெருமளவு செலவு செய்யாம லேயே புதிய மருந்துகளை கண்டுபிடிக்க முடிந்தால், அவற்றை 20 ஆண்டுகள் அதிக விலைக்கு விற்க முடிந்தால்? அதைத்தான் செய்ய ஆரம்பித்தார்கள்.
தங்களுக்கு காப்புரிமை இருக்கும் மருந்துகளின் தனி உரிமக் காலம் முடியப் போகும் நேரத்தில் அதன் மூலக்கூறில் மிகச் சிறிய மாறுதல் ஒன்றை ஏற்படுத்தி புதிய பெயரில் அதிக விலையில் விற்க ஆரம்பித்தார் கள். அந்த புதிய பெயரிலான மருந்துதான் சிறந்தது என்று மக்களை நம்ப வைக்க பல கோடி ரூபாய்கள் விளம்பரத்தில் செலவிடுகிறார்கள். இதே உத்தியை போட்டியாளர்களும் கையாள, ஒரே மருந்தின் நான்கைந்து வடிவங்கள் பல மடங்கு விலை வேறுபாட்டுடன் கிடைக்கின்றன.
இதற்கு அரசின் சட்டங்களும் துணையாக இருக்கின்றன.
‘மருந்து நிறுவனங்கள் தமது மருந்துகளை அமெரிக்க உணவு மருந்து பொருட்கள் கட்டுப்பாட்டு ஆணையத் திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் போது அதே நோயை குணப்படுத்த பயன்படும் பழைய மருந்துகளோடு ஒப்பிட வேண்டியதில்லை. புதிய மருந்தை வெறும் மாத்திரை யுடன் ஒப்பிட்டால் போதும். அதாவது புதிய மருந்து ஒன்றும் இல்லாததை விட சிறந்தது என்று நிரூபித்தால் போதும்’
இதற்கு உதாரணமாக பிரைலோசெக் என்ற மருந்தை எடுத்துக் கொள்ளலாம். 1990களின் ஆரம்பத்தில் நெஞ்செரிச்சலுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய புதுமையான கண்டுபிடிப்பாக பிரைலோசெக் வெளி வந்தது. அதன் தனிப்பட்ட காப்புரிமை முடியும் காலம் வந்ததும் நிறுவனம் அதை எப்படி எதிர் கொண்டது அப்போது பிரைலோசெக்கின் விற்பனை பிரதிநிதியாக இருந்த ஜீன் கார்போனா விளக்குகிறார்.
‘ஆண்டுக்கு $6 பில்லியன் (சுமார் 25,000 கோடி ரூபாய்) வருமானத்தை இழக்கவிருந்தோம். எங்கள் நிறுவனத்தின் வரவு செலவு அறிக்கையின் லாபக் கணக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருந்தோம். எங்கள் நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
பழைய மருந்தை மிகச் சிறிதளவு மாற்றி அதே மாதிரியான நெக்சியம் எனற மருந்தை உருவாக்கி உரிமம் பெற்றார்கள்’
2004 வாக்கில் நெஞ்செரிச்சலுக்கான பிரபலமான ஊதா மாத்திரை மூன்று வடிவத்தில் கிடைத்தது. அவற்றின் விலைகள் பெருமளவு வேறுபட்டிருந்தன. கடையில் நேரடியாக வாங்கும் பிரைலோ செக்கை பயன்படுத் தினால் மாதம் $24 செலவாகும் (சுமார் ரூ 1000). மருத்துவரிடம் பரிந்துரை வாங்கி நெக்சியத்தை பயன்படுத்தினால் மாதம் $171 (சுமார் ரூ 8,000) செலவாகும்.
நோயாளிகளை அதிக லாபம் கிடைக்கும் மருந்துகளை வாங்க வைக்க விளம்பரங்களில் பணத்தை கொட்டுகின்றன மருந்து நிறுவனங்கள்.
இரண்டாவதாக, ஒரு நோய்க்கான அளவீட்டு வரை யறையை உயர்த்துவதன் மூலம் அந்த நோய்க்கான மருந்துகளின் சந்தையில் பல லட்சம் புதிய நுகர்வோரை சேர்த்து விடுகிறார்கள்.
‘உங்கள் இரத்த அழுத்தம் ஒரே நாளில் இயல்பு நிலையிலிருந்து உயர் அழுத்த நிலைக்கு போயிருக்கலாம். புதிய அரசு பரிந்துரைகளின் படி இலட்சக்கணக்கான பேருக்கு இரத்த அழுத்த பரிசோதனை தேவை. உங்களுக்கு?’ என்று முழங்கியது ஒரு சிபிஎஸ் தொலைக்காட்சி செய்தி அறிக்கை.
இன்னொரு சிபிஎஸ் செய்தியில் ‘நேற்று வரை உங்களுக்கு கொலஸ்டிரால் பிரச்சனை இல்லை என்றால் இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். புதிய பரிந்துரைகள் கொலஸ்டிராலை குறைக்கும் மருந்துகளான ஸ்டாடின்களின் சந்தையை பெருமளவு பெருக்குகின்றன. புதிய வரையறைகளின் படி கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் தமது வாழ்நாள் முழுமைக்கும் ஸ்டாடின் மருந்துகளை சாப்பிட வேண்டியிருக்கும்’ என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கொலஸ்டிரால் பற்றிய புதிய பரிந்துரைகள் ஒன்பது நிபுணர்களால் உருவாக்கப்பட்டன. அவர்களில் ஆறு பேர் இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து சிறப்புரை கட்டணம், ஆராய்ச்சி உதவி, மற்றும் பிற வழிகளில் பண உதவி பெறுபவர்கள் என்று பின்னர் தெரிய வந்தது.
நன்றாக இருப்பவர்களையும் நோயாளியாக அறிவித்து தமது மருந்து விற்பனைகளை விற்கலாம் என்பதுதான் முதலாளித்துவ சந்தை பொருளாதாரத்தின் efficiencyயின் விளைவு.
மூன்றாவதாக ஒரு மருந்தை இன்னொரு நோய்க் கூறுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம் என்று காட்டி விண்ணப்பித்தால் அதன் காப்புரிமை காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது சட்டத்தின் ஒரு ஷரத்து. புதிய புதிய நோய்களை தேடி கண்டுபிடித்து, அவற்றை சரி செய்ய தமது மருந்துகளை வாங்கி சாப்பிடுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகின்றன மருந்து நிறுவனங்கள்.
பதின்ம வயது சிறுவர்கள் நான்கு பேர் மத்தியில் கூச்சப்படுவது ஒரு நோயாக விளம்பரப் படுத்தப் படுகிறது. வீட்டிலும் அலுவலகத்திலும் எப்போதும் டென்ஷனாக இருப்பது ஒரு நோய் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது ஒரு நோய் இந்த நோய்களுக்கு நீள நீளமான பெயர்கள் சூட்டி, அவற்றை சரிசெய்ய தமது மருந்துகளை மருத்துவர்களிடம் கேட்டு பெறுமாறு விளம்பரங்கள் செய்கிறார்கள். உதாரணமாக கூச்ச சுபாவத்திற்கு Social Anxiety Disorder என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
‘பலர் கூடியிருக்கும் இடத்துக்குள் போய் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள தயக்கமாக இருக்கிறதா! வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்டால் பதில் தெரிந்தாலும் எழுந்து சொல்வதற்கு கூச்சமாக இருக்கிறதா! அலுவலக ஊழியர்கள் கூட்டத்தில் கருத்தை சொல்ல நடுக்கமாக இருக்கிறதா!. என்ன செய்ய வேண்டும்?’ என்று போகிறது ஒரு விளம்பரம்.
புரோசேக் வகை மருந்துகள் மன அழுத்தத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டன. இந்த மருந்துகள் இப்போது பல வகையான மனநிலைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. அனுமதிக்கப்படும் ஒவ்வொரு புதிய அறிகுறியும் இந்த மருந்துகளின் லாபத்தை அதிகரிப்பதால் அப்படி புதிதாக புனையப்படும் ‘நோய்கள்’ பொதுமக்களிடையே வெகுவாக சந்தைப்படுத்தப்படுகின்றன.
இந்த புதிய ‘நோய்கள்’ தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்கிறார்கள், பத்திரிகைகளில் சிறப்புக் கட்டுரைகள் வெளிவர வைக்கிறார்கள். நேற்று வரை நன்றாக இருந்து இருந்த ஒருவர் இந்த விளம்பரங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்த்த பிறகு தனக்கு ஏதோ தீர்க்க முடியாத நோய் இருப்பதாக உணர்ந்து மருந்துக்களை வாங்கும் வாடிக்கையாளராக மாற்றப்பட்டு விடுகிறார்.
‘இந்த அமைப்புக்கு மூளையே இல்லை. அதன் நோக்கம் லாபம் மட்டும்தான். அது எதைப்பற்றியும் கவலைப் படாமல் தனது சந்தையை விரிவுபடுத்துகிறது’ என்கிறார் கேதரீன் கிரெய்டர் என்ற பத்திரிகையாளர்.
‘இது உங்கள் மாத விலக்குக்கு முந்தைய வாரம். எரிச்சலையும் மனநிலை மாற்றங்களையும் பொருமல்களையும் எதிர் கொள்கிறீர்கள். இது பிஎம்எஸ் என்று நினைக்கிறீர்களா? அது பிஎம்டிடி ஆக இருக்கலாம். Premenstrual Dysphoric Disorder – மாதவிலக்குக்கு முந்தைய கோளாறாக இருக்கலாம்’ என்று ஒரு நடுத்தர வயது பெண்ணை காட்டி விளம்பரப்படுத்தியது எலை லில்லி என்ற நிறுவனம்.
இந்த விளம்பரம் மூலம் புரோசேக் மருந்துக்கான தனது சந்தையை விரிவுபடுத்தியது. பச்சையாக இருந்த புரோசேக் மருந்தின் நிறத்தை இளம் சிவப்பாக மாற்றி, அதற்கு சாராபெம் என்று பெயர் கொடுத்து அதை மாதவிலக்குக்கு முந்தைய மன அழுத்தத்துக்கான மருந்தாக சந்தைப்படுத்துவதற்கு ஒப்புதல் பெற்றது.
இந்த மருந்தை பற்றி பெண்களுக்கு ‘அறிவுறுத்த’ எலை லில்லி நிறுவனம் $30 மில்லியன் (சுமார் ரூ 150 கோடி) செலவழித்தது என்கிறது ஏபிசி செய்தி. சாராபெம் தீர்ப்பதாக சொல்லும் பிரச்சனை உண்மையில் இருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.
கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மக்களை சோதனைக் கூட எலிகளை விட கேவலமாக நினைத்துக் கொண்டு தமது மருந்துகளை எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் விற்பதற்கானவைதான் இத்தகைய முயற்சிகள்.
தமது மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு பரிசுகள் வழங்குவது மக்களுக்கு பரவலாக தெரிய வந்து அது விமர்சிக்கப்பட்டதும், கல்வி என்ற போர்வையில் மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்க ஆரம்பித்தன மருந்து நிறுவனங்கள்.
‘வெள்ளை கோட்டு அணிந்த ஒரு மருத்துவக் கல்லூரி மாணவரை அழைத்து அவரது பைகளை சோதித்தால் அவர் பைகளில் வைத்திருக்கும் பல பொருட்கள் பிராண்ட் பொறித்தவையாக இருக்கும். பேனா, ஸ்டெதஸ்கோப் டேக், காம்பஸ் மற்றும் மருத்துவ பணிகளுக்காக பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் இதில் அடங்கும். மருத்துவர்களும் மாணவர்களும் இப்படி விளம்பரம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்வது போல நடந்து கொள்கிறார்கள்’ என்கிறார் டாக்டர் பாப் குட்மேன்.
மருந்து விற்பனையில் பணத்தை எங்கு செலவழித் தாலும் அது நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கும் என்று விற்பனை பிரதிநிதிகள் அறிவுறுத்தப் படுகின்றனர். இலவச மாதிரிகளை கொடுப்பதிலோ, ஷேம்பேனுடனான விருந்து கொடுப்பதிலோ, நியூயார்க் போய் வருவதற்கு விமான டிக்கெட்டுகள் வாங்கிக் கொடுப்பதிலோ, பணத்தை செலவழிப்பதற்கு தனது நிறுவனம் முழு சுதந்திரம் அளித்திருந்ததாக ஜீன் கார்பானோ சொல்கிறார்.
கற்றுக் கொள்வதற்கான ஒரு செமினாரின் பகுதியாக ஷேம்பேன் பரிமாறப்படலாம், மருத்துவர் களுக்கு 18 சுற்று கோல்ப் விளையாட்டு ஏற்பாடு செய்யப்படலாம், $1000 மதிப்புடைய ஸ்காட்ச் விஸ்கி ஒவ்வருவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படலாம். எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என்பதுதான் அவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது.
நோய்க்கு பொருத்தமான மருந்தை பரிந்துரைக்கும் மருத்துவர் மருந்து நிறுவனங்களுக்கு தேவையில்லை. அவர்களது மருந்தை மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும், அதுதான் அவர்களின் நோக்கம்.
மருந்துத் துறை அமெரிக்காவின் அதிகார அமைப்பு களையும் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறது. ‘ஒவ்வொரு மாநில தலைமை செயலகத்துக்குள்ளும் வாஷிங்டனிலும் அவர்கள் நுழைந்திருக்கிறார்கள். பல கோடி டாலர்கள் செலவழித்து தமக்கு சாதகமான சட்டங்கள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்து கொள்கிறார்கள்’ என்கிறார் ஜீன் கார்பானோ.
1980களுக்கு முன்பு புதிய மருந்துகளுக்கான மருந்தக பரிசோதனைகள் தேசிய ஆரோக்கிய கழகத்தின் கண்காணிப்பில் அதன் செலவில் நடத்தப்பட்டன. பல்கலைக் கழகங்கள் தனியார் பணத்தை வாங்குவதை அவமானமாக நினைத்திருந்தன. 1980களில் ரீகன் அரசாங்கம் அரசு ஒதுக்கீடுகளை குறைத்து விட மருந்து நிறுவனங்கள் இந்த பரிசோதனைகளுக்கு நிதி அளிக்க ஆரம்பித்தன. 1991 வரை இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1990களில் இந்த பரிசோதனைகள் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேறி லாப நோக்கமுடைய தனியார் நிறுவனங்களின் பிடியில் சிக்கின.
‘இப்போது 90% கிளினிகல் டிரையல்கள் மருந்து நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. கிளினிக்கல் டிரையல்களுக்கான நடைமுறைகளை வகுக்கும் நிபுணர்களில் 50% பேர் மருந்து நிறுவனங்களிடம் ஊதியம் பெறுகிறார்கள். மருத்துவக் கல்வித் துறையில் பணியாற்றும் 70% மருத்துவர்கள் மருந்து நிறுவனங்களுடன் தொடர்பு உடையவர்கள்’.
இந்த பரிசோதனைகளின் முடிவுகளையும், தரவுகளையும் நிறுவனங்கள் முழுமையாக வெளியிடுவதில்லை.
உதாரணமாக, உயர் ரத்த அழுத்ததுக்கான மலிவான மாத்திரைகளை அதிக விலையில் விற்கப்படும் மருந்துகளுடன் ஒப்பிட்டு பிரிட்டிஷ் மருத்துவ இதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஆண்டுக்கு $30 முதல் $50 வரை மட்டும் செலவு வைக்கும் மலிவான மருந்துகள் மற்ற விலை உயர்ந்த மாத்திரைகளை விட சிறப்பாக செயல்படுகின்றன என்ற ஆராய்ச்சி முடிவுகள் அந்தக் கட்டுரையில் வெளியாகியிருந்தன.
இதைப் பற்றி மருந்து நிறுவனத்தின் விற்பனை மேலாளரை கேட்ட போது, ‘இது ஒரு பிரச்சனையே இல்லை, எங்களிடம் $55 மில்லியன் விளம்பரப் பணம் இருக்கிறது. எங்கள் விளம்பரங்களுக்கு மத்தியில் இந்த ஆய்வு விபரத்தை யாரும் கவனிக்கப் போவதில்லை ‘ என்று நம்பிக்கையுடன் சொன்னார். அப்படித்தான் நடந்தது.
உலகின் மிகவும் ‘முன்னேறிய’ நாடான அமெரிக்காவில் அறிவியல் ஆராய்ச்சி, மக்களின் சுகாதாரம், நாட்டின் சட்டங்கள் என்று அனைத்தையும் தமது இலாப வெறிக்கு பலி கொடுத்தும் பசி அடங்காமல் உலகெங்கும் தமது கரங்களை விரித்துக் கொண்டிருக்கின்றன இந்த பன்னாட்டு மருந்து நிறுவனங்கள்.
No comments:
Post a Comment