1980-ஆம் ஆண்டில் அமெரிக்க தேசியப் பொருளாதார ஆராய்வுக் குழு தீர்க்கதரிசனத்துடன், ‘குடும்பங்களை அழிக்கும் வகையில் அரசாங்கத்தின் சமூகப் பொருளாதாரக் கொள்கைகள் அமைந்திருக்கின்றன. அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்’ என்று கூறியது. அதன் பிறகும் அந்தக் குழுவின் எச்சரிக்கையையும் பரிந்துரைகளையும் அமெரிக்க அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமல், அதே கொள்கைகளைக் கடைப்பிடித்தது. அது மட்டுமல்லாமல், குடும்பங்களை நிலைகுலைய வைக்கும் இக்கொள்கைகளைத் தீவிரப்படுத்தியது. அமெரிக்க அறிவு ஜீவிகளும், பத்திரிகைகளும், பொதுக்கருத்தை உருவாக்குபவர்களும் கூட, இந்தப் போக்கையே ஆதரித்து வந்தனர். இதற்குப் பின்னணியில் மூன்று சக்திகள் முக்கியமாக இருந்தன.
ஒன்று – குடும்பங்களைக் குலைக்கும் அத்துமீறிய தனி நபர் மற்றும் மனித உரிமை சிந்தனைகள், அதற்கான வாதங்கள், அமைப்புகள்; இரண்டு – பெண்களைக் கொச்சைப்படுத்தி, வக்கிரப்படுத்தும் பெண்ணுரிமை சிந்தனைகள், வாதங்கள், அமைப்புகள்; மூன்றாவது – இவற்றை எல்லாம் தங்களுடைய சொந்த நலனுக்காகத் தூண்டி பயன்படுத்தும் அமெரிக்கத் தொழில் அமைப்புகள், பெரிய பெரிய கம்பெனிகள். தொழில் அமைப்புகள் ஏன் குடும்பங்களை அழிக்க முயல வேண்டும்? காரணம், இதுதான் மேற்கத்திய கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தின் தற்காலிகமான பலமும், நிரந்தரமான பலவீனமும். முதலில் ‘எப்படி பொருள்கள் தயாரிக்கும் கம்பெனிகள் மறைமுகமாக குடும்பங்களைக் குலைக்கவும் கலைக்கவும் முயல்கின்றன. அதன் மூலமாக ஆதாயம் தேடுகின்றன’ என்று பார்ப்போம். பின்பு எப்படி தனி நபர் – மனித உரிமை மற்றும் பெண்ணுரிமை சிந்தனையாளர்கள், அமைப்புகள், போராளிகள்.... போன்றோர் குடும்ப அமைப்புகளைக் கலைத்து அழித்தார்கள் என்று பார்ப்போம்.
குடும்பங்கள் எந்த அளவுக்குக் குலைகின்றனவோ அந்த அளவுக்கு வியாபாரம் அதிகமாகிறது. அதனால்தான் பொருள்கள் தயாரிக்கும் கம்பெனிகள், குறிப்பாகப் பன்னாட்டுக் கம்பெனிகள், அதைப் பார்த்து உள்நாட்டுக் கம்பெனிகள் தங்களுடைய விளம்பரங்களில் குடும்பங்கள் என்றாலே, ‘கணவன், மனைவி, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்’ என்றே குடும்பங்களைச் சித்தரிப்பார்கள்.
அப்பா அம்மாவுடன், தாத்தா பாட்டியுடன் ஏதாவது ஒரு விளம்பரத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி தாத்தா, பாட்டியுடன் குடும்பங்கள் இருந்தால் எப்படி மேலும் கோடிக்கணக்கில் வீடுகளும், டி.வி. களும், ஏஸிகளும், கார்களும், மற்ற சாதனங்களும் வியாபாரம் ஆகும்? அதனால்தான் ஒரு குடும்பத்தில் சேர்ந்து வாழ்கிறவர்கள் எண்ணிக்கை குறையக் குறைய, வியாபாரம் அதிகம் ஆகிறது எனகிற அடிப்படையில், ‘குடும்பங்கள் என்றாலே கணவன், மனைவிதான். தாத்தா – பாட்டி, அப்பா – அம்மா கிடையாது’ என்ற ஒரு கருத்தை குறிப்பாக பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகள் உருவாக்குகின்றன.
அப்போது தாத்தா – பாட்டி, அப்பா – அம்மா என்ன செய்வார்கள்? மேற்கத்திய நாடுகளில் அவர்களும் தனித்தனி வீடுகளில் இருப்பார்கள். அல்லது முதியோர் இல்லத்தில் இருப்பார்கள். கம்பெனிகள் அவர்களுக்கும் தனித்தனியாக தேவையானப் பொருள்களை வியாபாரம் செய்யும். ஆக, குடும்பங்கள் சேர்ந்திருப்பது வியாபாரத்துக்கு நல்லதல்ல என்று கம்பெனிகளுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தங்கள் வியாபார உத்தியை குடும்பங்கள் பிரிவதற்காக பயன்படுத்துகின்றனர்.
இப்படித்தான் அமெரிக்காவில் குடும்பங்களை கம்பெனிகள் முதலில் பிரிக்க ஆரம்பித்தன. 1950-ல் ஒரு அமெரிக்கக் குடும்பத்தில் 3.5 பேர் இருந்தனர். இப்போது 2.5 நபர்கள் மட்டுமே. இதனால் அமெரிக்காவில் 3.5 கோடி அதிக வீடுகள், ஏஸிக்கள், டி.வி.கள், கார்கள், குளிர்சாதனப் பெட்டிகள்... தயாரிப்பும் விற்பனையும் அதிகம் ஆகியது.
சென்ற இதழில் குறிப்பிடப்பட்ட, எப்படி குடும்பங்களின் முக்கியமான பணிகளான உணவு சமைப்பது, சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்ற பணிகளை குடும்பங்கள் செய்யாமல், இக்காரியங்கள் எல்லாம் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் கைக்குப் போய் விட்டன என்று அங்கலாய்க்கிறது. தவிர, அமெரிக்காவில் உணவு தயாரிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளான ‘மாக்டொனால்ட்ஸ்’, ‘பர்கர் கிங்’, ‘நெஸ்லே’ போன்றவை அமெரிக்கக் குடும்பங்களின் அடுப்பங்கரையை காலி செய்து, அக்குடும்பங்களுக்கு உணவு சமைத்து வினியோகிப்பதை வியாபாரமாக்கி, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றன. இதற்கு தனி நபர் – பெண்ணுரிமை இயக்கங்கள் துணை நின்றன.
இது பற்றி மேலும் கூறுகிறது அமெரிக்க ஆய்வுக் குழு: ‘அப்படி பொருள் தயாரிப்பவர்கள் மற்றும் வியாபாரிகள், குடும்பங்களின் மாமூலான வேலைகளைக் கூட வியாபாரமாக்கி, குடும்பங்களைப் பொறுப்பில்லாத அமைப்புகளாக – குறிப்பாக பெண்களைப் பொறுப்பற்றவர்களாக மாற்றியது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் குழந்தை பாதுகாப்பு, அவர்களின் படிப்பு, குடும்பங்களில் உள்ளவர்கள் எதிர்காலம்... போன்ற மிக முக்கியமான பொறுப்புகள் எல்லாவற்றையும் அரசாங்கமே ஏற்று வருகிறது. அதாவது அரசாங்கம் குடும்பங்களைப் பொதுவுடமையாக்கி இருக்கிறது.
இப்படியே போனால், பிறக்கிற குழந்தைகளைப் பேணுகிற பொறுப்பும் தாய் – தந்தையரிடமிருந்து அரசாங்கத்துக்குப் போய் விடுகின்ற வாய்ப்பு இருக்கிறது. இப்படி குழந்தைகளைப் பேணும் அடிப்படையான வேலைகள் கூட குடும்பங்களில் நடக்கவில்லை என்றால், குடும்பங்கள் என்பதற்கு என்ன பொறுப்பு இருக்கும்? அதேபோல், வேலையற்ற இக்குடும்பங்கள் எப்படி நிலைத்திருக்கும் என்கிற கேள்விகளையும் எழுப்பியது அந்த ஆய்வுக் குழு.
ஆண் பெண் சேர்க்கைக்காக ஒரு இடம் தேவை என்கிற அளவுக்கு மட்டும், மேற்கத்திய நாடுகளில் குடும்பங்களின் நிலை மாறிவிட்டன. அதற்கு மேலும் விகாரங்கள் – திருமணமில்லாமல் சேர்ந்திருப்பது, திருமணமில்லாமல் குழந்தைகளைப் பெறுவது, குழந்தைகள் வேண்டாம் என்று ஒப்பந்தமிட்டுக் கொண்டு ஆண் பெண் சேர்க்கை, ஓரினச் சேர்க்கை என்று உருவானதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?
மேலும் இப்போது பெரிய சவாலாக உருவாகியிருக்கும் சந்தைப் பொருளாதாரத்தைப் பற்றி ஒரு சித்தாந்த ரீதியான ஒரு பிரச்னையையும், அப்போதே தீர்க்கதரிசனமாக எழுப்பியது அமெரிக்கத் தேசியப் பொருளாதார ஆய்வுக் குழு. இந்த சந்தைப் பொருளாதாரம் தனிநபர் உரிமையின் ஆதாரத்தில் அமைந்தது என்பதை ஒப்புக் கொண்டு, அந்த ஆய்வுக் குழு மேலும் கூறியது: ‘சந்தைப் பொருளாதாரம் தனி நபர் உரிமையின் அடிப்படையில் உருவாகி வளர்ந்தாலும், கடந்த 200 ஆண்டுகளாக அது பெரிய அளவில் வெற்றி அடையக் காரணம், குடும்பங்களுக்கு குணங்களையும், கலாசாரத்தையும் உருவாக்கி, வளர்த்து மக்களைப் பண்படுத்தும் அமைப்புகள் இருந்ததுதான். அப்படிப்பட்ட குடும்பங்களை அழிய விட்டால், தனி நபர் உரிமை அடிப்படையிலான சந்தைப் பொருளாதாரமும், ஜனநாயகமும் அழிந்து விடும். மேலும் தனி நபர் உரிமை, அரசியல் உரிமை, கலாசார உரிமை – என எல்லாமே அழிந்து விடும்.’ என்கிறது அந்தக் குழுவின் அறிக்கை.
அந்தக் குழு முடிவில் இப்படி கூறியது : ‘வருகிற 10 ஆண்டுகளுக்கு அமெரிக்கா, பொருளாதார முறையினால் சமுதாயத்தில் (குடும்பங்களில்) என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பது பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்றது. அதைத்தான் அமெரிக்க அரசு செய்யவில்லை. அந்தக் குழு கூறிய சிறந்த கருத்துக்களுக்கு அமெரிக்க அரசாங்கம் செவிமடுக்காததால்தான், இன்று ஆபத்து அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்காவிலிருந்து உலகமெங்கும் ஏற்றுமதியாகி வரும் அமெரிக்கக் கலாசார – சமுதாய – பொருளாதாரக் கொள்கைகளால், உலகுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. குடும்பங்கள் குலைந்து, கலைந்து, கம்பெனிகளின் கையில் சிக்கிக் கொண்டதும், பின்பு அரசாங்கத்துக்கு அடிமையானதும்தான் இந்த ஆபத்துக்கு அடிப்படைக் காரணம்.
குடும்பங்கள், அரசாங்கத்துக்கு அடிமையாவது ஆபத்து என்பதை, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே பாகவத புராணத்தில் வியாச பகவான் தெளிவாகக் கூறியிருக்கிறார். கம்சனின் மாமனார், ஜராசந்தனின் ஆலோசகரான பாஹுகா என்கிற அறிவுஜீவியிடம் கம்சன், ‘தான் எப்படி மக்களை அடிமைப்படுத்துவது?’ என்று கேட்டான். அதற்கு பாஹுகா இப்படி கம்சனுக்கு அறிவுரை கூறினார் : “உன்னுடைய கஜானாவைத் திறந்து மக்களுக்கு பணத்தைக் கொடுத்து, அவர்களை உழைக்காமல் ஜாலியாக வாழ வகை செய்; அவர்களுடைய குடும்பங்களைக் குலைத்து, கலைத்து அழித்து விடு; பெண்களை தங்கள் கற்பைவிட, உடல் இன்பத்தை அனுபவிப்பதே முக்கியம் என்று நினைக்க வை.
“அப்பா – அம்மா, தாத்தா – பாட்டி எல்லோரும் கிழங்கள். உபயோகம் இல்லாதவர்கள் என்று பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடு; வரம்பில்லாமல், தான் மட்டும் அனுபவிப்பதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்று மக்களை நம்ப வை; அப்படிச் செய்து விட்டால், அவர்கள் தர்மம், நியாயம், கடமை, தவம் இவை எல்லாவற்றையும் எள்ளி நகையாடுவார்கள்; இவற்றைப் பற்றி பேசுகிறவர்களைப் பைத்தியக்காரன் என்று நினைப்பார்கள்; இப்படி மக்களை நிலைகுலைய வைத்து விட்டால், ஆடு மாடுகள், எப்படி மேய்ப்பவன் சொன்னபடி நடக்கின்றனவோ, அப்படி நீ சொன்னபடி அவர்கள் நடப்பார்கள். நீ அவர்களுக்கு கசையடி கொடுத்தாலும் அதைப் பிரசாதம் போல ஏற்றுக் கொள்வார்கள்.” பாஹுகாவின் இந்த சிறந்த பொருளாதாரக் கொள்கைகளை நம் நாடு ஏற்காததால்தான், நாம் பிழைத்தோம். இன்று மேற்கத்திய நாடுகள் குறிப்பாக, அமெரிக்கா பாஹுகாவின் பொருளாதாரத்தை முழுமையாக ஏற்று, குடும்பங்களை அழித்து, பெண்களைக் கொச்சைப் படுத்தி, குடும்பங்களை வியாபாரிகளுக்குக் காவு கொடுத்து, அரசாங்கத்துக்கு அடிமையாக்கி இருக்கிறது. பாஹுகாவிடமிருந்து நாம் தப்பித்தோம். ஆனால் அமெரிக்கா மாட்டிக் கொண்டது.
நன்றி: துக்ளக்
No comments:
Post a Comment