Thursday, November 6, 2014

படுகொலையைத் தூண்டினாரா பாலகங்காதரர்?



                            பால கங்காதர திலகர் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என கர்ஜித்த அந்த கம்பீரமும் தேச விடுதலைக்காக சிறை சென்ற தியாகமும்தான். ஆனால் சிலருக்கோ அப்படி அல்ல. திலகர் பெருமானைக் குறித்து கேவலமான பழிகளையும் பொய்களையும் பரப்புரை செய்யும் சிலர் இருக்கிறார்கள். திலகர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. திலகர் தீண்டாமையை எதிர்த்து செய்யப்பட்ட பிரகடனத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். ஆனால் அவர் தீண்டாமையை ஆதரிக்கவில்லை. “இறைவன் தீண்டாமையை ஆதரிக்கிறானென்றால் அந்த இறைவனை எதிர்க்க வேண்டும்.” என்றார். [1] விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் கலந்து கொள்ள தலித்துகளுக்கு தடை இருந்த போது அவரே ஒரு தலித் சிறுவனை கையைபிடித்து கூட்டிக் கொண்டு வந்து் சதுர்த்தி மண்டலுக்கு அழைத்து வந்தார்.[2] பெண்களுக்கான திருமண வயது உயர்த்தப்படும் சட்டத்தை அவர் ஆதரிக்கவில்லை. ஆனால் அவரது பெண்களுக்கு 16 வயது ஆகும் வரை திருமணம் செய்து கொடுக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் இது ஒரு புரட்சி. எனில் ஏன் திருமண வயதை உயர்த்தும் சட்டத்தை அவர் ஆதரிக்கவில்லை? அவரது வார்த்தைகளில், “நான் அதை எதிர்த்ததற்கு அடிப்படை காரணம், மக்களிடம் முழுமையான பொறுப்புடன் நடக்காத ஒரு (அன்னிய) அரசாங்கம் இத்தகைய விஷயங்களில் சட்டம் இயற்றக் கூடாது என்பதுதான்.” ஒரு குறிப்பிட்ட விஷயம் சமூக சீர்திருத்தம் குறிப்பாக பெண் விடுதலை குறித்த அவரது பார்வையை தெளிவாக காட்டும். சட்ட ரீதியில் திருமண வயது நிர்ணயிக்கும் சட்டத்தை எதிர்த்தவர் பால கங்காதர திலகர். ஆனால் அதற்கு பதிலாக சமுதாயத்தில் பின்வரும் சமூக மாற்றுத்திட்டத்தை அவர் முன்வைத்தார்: 1. பெண் ணின் திருமண வயது கட்டாயமாக 16க்கு கீழே இருக்கக் கூடாது; ஆணின் திருமண வயது கட்டாயமாக 20க்கு கீழெ இருக்கக் கூடாது. 2. 40 வயதுக்கு மேல் திருமணம் செய்யும் ஆண் கட்டாயமாக விதவையைத்தான் திருமணம் செய்ய வேண்டும். 3.வரதட்சிணை கொடுக்கவோ வாங்கவோ கூடாது 4. விதவைகளை மொட்டையடிக்கும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். இவற்றை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தனது ஊதியத்தில் 10 சதவிகிதம் இந்த சீர்த்திருத்தங்களை மக்களிடம் கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும்.” [3]அரசாங்கம் சாராத மக்கள் வழி சீர்திருத்தத்தை திலகர் சிலாகித்தார்.

                          சமூகக் கொடுமைகளை எதிர்த்து போராடுவதை விட பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடுவதை அவர் முக்கியமாக கருதினார். ஏனெனில் தீண்டாமையையும் இதர சமூக அநீதிகளையும் ஒழிக்க பிரிட்டிஷ் அல்லாத சுதேசி அரசாங்கம் தேவை என அவர் கருதினார். அன்றைய காலகட்டத்தில் மிதவாத காங்கிரஸ்காரர்கள் லோகமான்ய பாலகங்காதர திலகர் மீது வைத்த குற்றச்சாட்டே அவர் ‘தாழ்ந்த சாதிகளின் தலைவர்’ என்பதுதான்.[4] சுவராஜ்ஜியம் என்பது எண்ணை ஆலைத் தொழிலாளர்களுக்கும் வெற்றிலை பாக்கு விற்பவர்களுக்குமான சுவராஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்று திலகர் கூறினார். சமூக சீர்திருத்தங்களைவிட முதலில் முக்கியம் அரசியல் விடுதலை என்கிற திலகரின் நிலைபாட்டுடன் விதல்பாய் படேல், டாக்டர்.ஜெயகர், பாரதி, சாவர்க்கர் போன்ற தீவிர திலகர் ஆதரவாளர்களே கூட அவருடன் மாறுபடுகின்றனர். இவற்றையெல்லாம் மீறி கேள்விக்குள்ளாக்க முடியாதது அவரது நெருப்பனைய தேசபக்தி. அதற்காக அவர் செய்த தியாகங்கள். ஆனால் திராவிட கும்பல் அதை எப்படி பார்க்கிறது? இதோ ‘விடுதலை’ இதழில் வந்த ஒரு கட்டுரை. தலைப்பு ‘ எலிவளை எலிகளுக்கே’ அதிலிருந்து:

                                          இந்த நேரத்தில் ஸ்ரீமான் பாலகங்காதர திலகர் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கும்போது சில பல தகவல்கள் நம்மை நோக்கிச் சிரிப்பை உமிழுகின்றன…அந்தத் தகவல்கள் ஆசிரியரின் கற்பனையல்ல; மூல ஆதாரங்களுடன் அதனை விளக்கியுள்ளார். தக்காணத்தில் யானைத் தலையை உடைய இக் கடவுள் (விநாயகன்) பிரபலமானதாகப் புனிதத்தன்மை பெற்றிருந்தது. அதோடு, மொகலாய ஆதிக்கத்தோடு போரிட்டு மேற்கு வாயிலில் ஒரு அரசை உண்டாக்கிய மராட்டியர்களின் தலைமை வீரனான சிவாஜியின் வழிபாட்டு மரபுடைய தாகவும் இது இருந்தது. இதில், முன்னதன் வழியாக திலகர், மிகவும் மத அடிப்படையிலான ஒரு விழாவில் சமுதாய, அரசியல் உட்பொருளை உள் நுழைக்க விரும்பினார். … திலகர் முயற்சியால் ’Ganesh Festival’’ (பிள்ளையார் விழா) என்பது ரொம்பவும் தீவிரமாகி, இந்த விழா பெரிய அளவில் நடக்க ஆரம்பித்தது. இப்படிப் பெரிய அளவில் விழா நடத்தும்போது, காலரா, பிளேக் போன்ற நோய்கள் வருவது அந்தக் காலத்தில் மிகவும் சர்வ சாதாரணம். இப்போதுதான் சுகாதார அறிவு வளர்ந்து மருத்துவ வசதிகள் பெருகியிருப்பதால் காலரா, பிளேக் எல்லாம் தடுக்கப்பட்டிருக்கின்றன. அதுமாதிரி, ஒரு முறை மகாராஷ்டிரத்தில் புனா பக்கத்தில் தீவிரமாகப் பிளேக் நோய் வந்துவிட்டது. பிளேக் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியும். எலி செத்து விழுந்து, அந்த செத்த எலிகள் மூலம் இந்த பிளேக் நோய் பரவும், எலிகளைக் கொன்றால்தான் இந்தப் பிளேக் நோயைத் தடுக்க முடியும். அந்தக் காலத்தில் வெள்ளைக் காரன் மக்களெல்லாம் பிளேக் நோயில் சாகக் கூடாது என்பதற்காக எலிகளைக் கொல்லும் இயக்கத்தைத் தீவிரப்படுத்தினான். உடனே, திலகர், நம்முடைய மதத்தை அழிப்பதற்காக வெள்ளைக் காரன் திட்டமிட்டு இறங்கி விட்டான் என்று எலி ஒழிப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். முட்டாள்தனமாக அவர் சொல்லவில்லை; அயோக்கியத் தனமாகச் சொன்னார். அதுதான் மிகவும் முக்கியமானது. பிள்ளையாருடைய வாகனம் எலி. அந்தப் பிள்ளையாருடைய வாக னத்தை அழிக்க வேண்டுமென்று வெள்ளைக்காரன் சொன்னான் என்றால் _ நம் கலாச்சாரத்தில், இந்து மதத்தில் கை வைத்துவிட்டான் என்று அர்த்தம்; ஆகவே விடக்கூடாது என்று பிரச்சாரம் பண்ணினார். பிளேக் நோய் பரவுவதைப் பற்றி கவலைப்படவில்லை அவர்…. இதனுடைய விளைவு எப்படி இருந்தது துர்காதாஸ் கூறுகிறார்….இதன் தமிழாக்கம்: புனேயில் பிளேக்கை ஒழிக்கும் அதிகார பூர்வமான நடவடிக்கை களைக்கூட இந்தியர்களுடைய மத இயல்புணர்ச்சியின் மீதான ஒரு சீற்றம் என்று திலகர் கருதினார். ஆகவே வன்முறைக்கு இவருடைய இந்த இயல்பான வெறுப்புணர்ச்சியே உண்மைக் காரணமாகும். இதற்காக, புனே மாவட்டத்தில் திடீரென்று ஏற்பட்ட பிளக் நோயை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு வெள்ளையர்களை கொலைக்கு உள்ளாகும்படி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பதினெட்டு மாத சிறைத் தண்டனையைக்கூட அனுபவித்தார். (காங்கிரஸ் வரலாறு மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியா யங்களும் -கி.வீரமணி)[5]

உண்மை என்ன? இதைக் குறித்து சற்று விரிவாகவே காணலாம்.

                       1877 இல் பெரும் பஞ்சம் தக்காணத்தை ஆட்டிப்படைத்தது. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் தொடர்ந்து விவசாயிகள் மீது வரி விதித்து கொடுமைப்படுத்தியது. ஏழை விவசாயிகள் துன்பப்ட்டனர். பல விவசாய தொழிலாளர்கள் . கிராமங்களிலிருந்து புலம் பெயர்ந்து பம்பாய், பூனா போன்ற பெரும் நகரங்களுக்கு ஆலைத் தொழிலாளிகளாக குடிபெயர்ந்தனர். பெரிய குடிசைப்பகுதிகள் இந்த நகரங்களில் உருவாக ஆரம்பித்தன. இவ்வாறு குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தலித் சமுதாயத்தினர். ஆனால் நகரங்களிலும் நிலை மோசமானதாகவே இருந்தது. வாடகைகள் மிக அதிகமாக இருந்தன. நிலத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாதபடி இருந்தது. உணவு தானியங்களின் விலையும் அதிகம். ஆனால் ஆலைத் தொழிலாளிகளின் ஊதியமோ குறைவாக இருந்தது. 35 ஆண்டுகளில் ஆலைத் தொழிலாளர்களின் ஊதியம் ஐந்து சதவிகிதம் அதிகரித்தது. ஆனால் உணவு தானியங்களின் விலையும் நிலமும் ஐம்பது சதவிகிதம் அதிகமானது.அடிமட்ட தொழிலாளர்கள் – கிராமங்களிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்- மிக மோசமான சுகாதாரக்கேடான சூழலில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.[6]

இந்த கொடூரமான சூழலில் ஆலைத் தொழிலாளர்களுக்காகவும் ஏழை விவசாயிகளுக்காகவும் ஆதரவாக தொடர்ந்து எழுதி வந்தவர் பால கங்காதர திலகரே. வீர சிவாஜி முதல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வரை அவருக்கு சாதாரண மக்களை அரசியல் சக்தியாக மாற்றுவதற்கான வழிமுறைகளாக இருந்தன. ஒருபக்கம் தீவிர தேசிய பெருமித உணர்ச்சியையும் மறுபுறம் அடித்தட்டு மக்களின் மிக முக்கியமான வாழ்வாதார பிரச்சனையையும் பேசிவந்தார் திலகர். காலனிய ஆதிக்கத்தில் வீழ்ந்து கிடந்த மக்களை விழிப்புற செய்ய இதைவிட நல்ல ஒரு வழி கிடையாது என்பதுதான் உண்மை. பல மாவட்டங்களில் வரி வசூலிப்போர் விவசாயிகளால் விரட்டி அடிக்கப்பட்டனர். 1896 இல் பூனா மாவட்ட உதவி கலெக்டர் தனது அறிக்கையில் ‘ஒரு பைசா கூட வசூலிக்க முடியவில்லை’ என கூறுகிறார். கொலபா மாவட்டத்தில் 4000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்து கலகங்களில் ஈடுபட்டனர்.[7]

இதே காலகட்டத்தில்தான் 1896 இல் ஹாங்காங்கில் இருந்து பம்பாய் வந்த கப்பலொன்றின் மூலமாக பிளேக் நோய் இந்தியாவை வந்தடைந்தது. நகரங்களில் சுகாதார வசதி செய்யப்பட வேண்டுமென்கிற கோரிக்கையைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நிர்வாகம் புறக்கணித்தே வந்தது. இப்போது பஞ்சம் பிழைக்க மாநகரங்களுக்கு பொருளாதார அகதிகளாக கிராமங்களிலிருந்து மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் பம்பாய் பூனா ஆகிய நகரங்களிலோ பிளேக் நோய் தாண்டவமாடியது. இந்நிலையில் திலகரின் செயல்பாடு எப்படி இருந்தது? திலகரின் முயற்சியில் அவரும் பிற சமூக ஆர்வலர்களுமாக ‘ஹிந்து பிளேக் மருத்துவமனை’ ஒன்றை உருவாக்கினார்கள். ஒவ்வொரு நாளும் இருமுறை இந்த மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள பிளேக் நோயாளிகளின் நலனை விசாரிப்பதில் திலகர் அக்கறை உடையவராக இருந்தார். பிளேக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவ அணிகளுடன் அரசாங்க அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். நிவாரண முயற்சிகளில் பங்கு பெற்றார். [8]ஆனால் பிரிட்டிஷுக்கு வேறு பிரச்சனைகள் இருந்தன. பிளேக் நோயினால் பம்பாய் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு தடை ஏற்படலாம் என்பது முக்கியமானதாக இருந்தது. எனவே உலகத்துக்கு பிளேக் நோயை கடுமையாக தடுத்து நிறுத்துவதாக தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. பிரிட்டிஷ் பத்திரிகைகள் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என எழுதின. உதாரணமாக ஸ்பெக்ட்டேட்டர் எனும் பத்திரிகை இல் பிளேக் நிவாரணத்துக்காக ஏன் முழு நகரத்தையும் எரித்து சாம்பலாக்கக் கூடாது என கேள்வி எழுப்பியது. [9]

இத்தகைய சூழலில் ராண்ட் எனும் அதிகாரி பிளேக் நிவாரணத்துக்காக பதவியேற்றான். அவனுக்கு ’புதிய கொள்ளை நோய் சட்டம்’ (New Epidemic Act) வானளாவிய அதிகாரங்களை அளித்திருந்தது. இதன்படி ‘பிளேக் இருப்பதாக சந்தேகிக்கும் எந்த நபரையும் அவன் தனிமைப்படுத்தலாம். குடும்பத்திலிருந்து பிரித்து வேறு இடத்துக்கு கொண்டு செல்ல முடியும். பிளேக் இருப்பதாக கருதும் எந்த சொத்தையும் அவன் அழிக்கலாம். பிளேக் இருப்பதாக கருதும் எந்த வீட்டையும் இடித்து தரைமட்டமாக்கலாம்…’[10] கொள்ளை நோயை தடுக்க மிக சிறப்பாக உருவாக்கப்பட்ட அதிரடி அதிகாரங்கள் தனக்கு அளிக்கப்பட்டிருப்பதாக ராண்ட் பெருமையாக சொல்லிக் கொண்டான். ராண்டின் நடவடிக்கைகளை அமுல்படுத்த பிரிட்டிஷ் ராணுவம் களமிறக்கப்பட்டது.

கேசரியின் தலையங்கங்களில் எலிகள் பிள்ளையாரின் வாகனம் அவற்றை கொல்கிறார்கள் என்றெல்லாம் எதுவும் இல்லை. அதில் இருப்பதிலேயே அசட்டுத்தனமான வாதம் என நாம் சொல்வதானால் அது சாதிக்கட்டுப்பாடுகள் அரசு மருத்துவமனை உணவுத் தயாரிப்பில் அனுசரிக்கப்படுவதில்லை என்பது மட்டும்தான். ஆனால் அதையும் கேசரி பொருட்படுத்தவில்லை. 1897 பிப்ரவரியில் திலகர் எழுதிய ’கேசரி’ கட்டுரையில் பிளேக் நிவாரணத்தில் அரசாங்கத்துடன் முழுமையாக ஒத்துழைக்கும்படி கேட்கிறார். வீட்டில் பிளேக்கால் இறந்தவர்கள் இருந்தால் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துங்கள். அரசு மருத்துவமனைகளுக்கு செல்லுங்கள். தேவையற்ற தயக்கம் காட்டாதீர்கள் என்றெல்லாம் கூறுகிறார்.[11] மார்ச் 1897 இல் கேசரியில் எழுதிய திலகர் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை குறித்து மெல்லிய ஒரு கேள்வியை மட்டுமே கேட்கிறார். ஆனாலும் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. இதில் பிரிட்டிஷ் ராணுவவீரர்கள் இந்துக்களின் பூஜை அறைகளில் மரியாதை இன்றி நுழைகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை திலகர் எதிர்கொண்ட விதம் முக்கியமானது: வெளிநாட்டவர்களான அவர்களுக்கு நம் நாட்டு பண்பாடு பழக்க வழக்கங்கள் தெரியாது. எனவே அவர்கள் உடன் வரும் இந்தியர்கள் இதை அவர்களுக்கு உணர வைப்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.” ஆனால் ஏன் ராணுவத்தினர் இதற்கு பயன்படுத்தப் படவேண்டும் என்பதை திலகர் கேள்விக்கு உள்ளாக்கினார். [12]

ஆனால் இரு மாதங்களில் நிலை மாறியது. தொடர்ந்து மக்கள் ராணுவத்தினரின் அத்து மீறல்கள் குறித்து கடிதங்களை எழுதி அனுப்பினர். பிரிட்டிஷ் அரசின் செயல்பாடுகள் குறித்து பல அச்சங்கள் மக்களுக்கு ஏற்பட்டன. சில சாதி சார்ந்தவை – பொருளற்றவை. உதாரணமாக சூத்திரர்கள் கொடுக்கும் உணவை உண்ண வேண்டியிருக்கிறது என்பது போன்றவை. ஆனால் பிற அச்சங்களோ மிகவும் முக்கியமானவை. ஆதாரபூர்வமானவை. ராண்டும் அவனது ராணுவமும் பெண்களை குழந்தைகளை கூட விட்டுவைக்கவில்லை. அவர்கள் பலவந்தமாக ‘நிவாரண மருத்துவ முகாம்களுக்கு’ அனுப்பப்பட்டார்கள். அவர்களில் பலர் உடல்நிலை நன்றாக இருந்தவர்களே. ஆனால் பிளேக் இருப்பதாக ராண்டோ அவனது ராணுவ வீரர்களோ சந்தேகிக்கும் எவரும் அரசு மருத்துவமனை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்களில் பலர் திரும்பவே இல்லை. இந்த முகாம்களில் இந்தியர்கள் வேண்டுமென்றே கொல்லப்படுகிறார்கள் என்றும் அவர்கள் உடலில் இருந்து மருந்துகள் செய்யப்பட்டு ஐரோப்பாவிற்கு அனுப்பப்படுவதாகவும் வதந்திகள் பரவின. இந்த வதந்திகள் உண்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் திடகாத்திரமாக மருத்துவமனைகளுக்கு பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டவர்களில் 80 சதவிகிதத்தினர் திரும்பவில்லை என்பதுதான் உண்மை. இர்ரா கெளெய்ன் (Ira Klien) எனும் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்: ’மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஐவரில் நால்வர் இறந்து போயினர்.’[13]

வார்விக் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் அர்னால்ட் தெற்காசிய வரலாற்றை பயில்பவர். அவர் இந்த காலகட்டம் குறித்து ஒரு சித்திரத்தை விவரிக்கிறார். அதில் அவர் சொல்வது என்ன? பூனாவிலும் பம்பாயிலும் பிளேக் சோதனைக்காக வீடு வீடாக ஏறிய பிரிட்டிஷ் வீரர்கள் இந்தியர்களை ஏதோ விலங்குகள் போல தாக்கினர். இது மக்களிடையே கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. பூனா நகரத்தைப் பொறுத்தவரையில் அந்த நகரத்தில் எப்போதும் பிரிட்டிஷ் எதிர்ப்பு கிளர்ச்சிகள் இருப்பதால் அங்கே உள்ள மக்கள் தாம் வேண்டுமென்றே அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்தனர். இதில் நியாயம் இல்லாமல் இல்லை அது மட்டுமல்ல பிரிட்டிஷ் ராணுவத்தினரால் இந்திய பெண்கள் மானப்பங்கப்படுத்தப்பட்டனர். கிராமமக்களோ ராணுவத்தினரால் அடித்து துன்புறுத்தப்பட்டனர். ராணுவத்தினர் காடுகளுக்கு வேட்டையாட செல்லும் போது இந்திய கிராம மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கேட்டால் ‘ஏதோ காட்டு மிருகம் என தவறாக நினைத்து சுட்டுவிட்டோம்.’ என பதில் கிடைக்கும். இதற்கெல்லாம் பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கு மிக அற்பமான சில தண்டனைகளே கொடுக்கப்பட்டன. பூனாவில் வீடு வீடாக பிளேக் சோதனை செய்ய ஆயிரம் ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டது ’ஒன்று திட்டமிட்ட தூண்டுதல் அல்லது இந்தியர்களின் உணர்வுகளை வேண்டுமென்றே உதாசீனப்படுத்துதல்’.[14] பிரிட்டிஷ் ராணுவவீரர்கள் நடந்துகொள்ளும் விதம், ஏழை எளிய மக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வாழ்வாதாரமான குடிசைகள் அழிக்கப்படுவது, பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்படுவது, பெண்களை நடுத்தெருவில் இழுத்து அவர்களுக்கு நோய் இருக்கிறதா என சோதனை செய்வது… இவற்றை திலகரின் கேசரி கண்டிக்கிறது. ஜூன் 1897 இல் திலகரது பேச்சு கேசரியில் வெளியிடப்படுகிறது. இதில்தான் அவர் சிவாஜி அப்சல்கானை கொன்றதை சுட்டிக்காட்டினார். வீர சிவாஜியின் செயலை பிரிட்டிஷ் இந்திய பீனல் கோடோ அல்லது மனு ஸ்மிருதியோ மதிப்பிட முடியாது. தேசம் அடிமைப்பட்டு மிலேச்சனிடம் கஷ்டப்படும் போது வீர புருஷர்கள் செய்யும் செயல்களை எந்த சட்டமும் தவறு என சொல்லிவிட முடியாது என கூறினார்[15] திலகர். ஜூன் 22 1897 இல் வீர சபேக்கர் சகோதரர்களால் ராண்ட் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஆனால் நோயைத் தடுக்க அறிவியல் செயல்பாடுகளை ஆதரிக்கவும் ஆராயவும் திலகர் தயங்கவில்லை. அன்று புதிதாக பிளேக்குக்காக தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இது குறித்தும் மக்களிடையே குழப்பம் நிலவியது. 1899 இல் டாக்டர்.விஷ்ராம் கோலே என்பவர் கேசரியில் தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை ஆதரித்திருந்தார். ஆனால் 1902 இல் தடுப்பூசி போடப்பட்ட 19 கிராம மக்கள் இறந்துவிட்டனர். குஜராத்தில் மல்கோவால் மாவட்டத்தில் இது நடந்தது. இதற்கு காரணம் ஊசி சரியான விதத்தில் தூய்மை செய்யப்படவில்லை என்பதுதான். இதனால் டெட்டனஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் இறந்தனர். ஆனால் இது தடுப்பு மருந்து குறித்த ஒரு அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியது. கேசரி தொடர்ந்து மருந்துகள் தூய்மையாக இருக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தது. [16]இந்த பிரச்சாரத்தின் பலனாக மருந்துகள் நிவாரண முகாம்களில் தூய்மை ஆகியவை முன்னேற்றம் அடைந்தன. இந்த செயல்பாடுகளில் உள்ளூர் நிர்வாகங்களுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. ஆனால் அவற்றுக்கான செலவுகளை உள்ளூர் நிர்வாகங்களே ஏற்கவேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கப்பட்டது. கேசரி எழுதிய தொடர் கட்டுரைகளின் பயனாக இங்கு செய்யப்பட்ட அடக்குமுறைகள் குறித்த தகவல் லண்டனை எட்டியது. லண்டன் டெய்லி நியூஸ் எழுதியது: “ இனிமேல் பெண்கள் நடுத்தெருவில் நோய்க்காக சோதனை செய்யப்படக் கூடாது என்று ராண்ட் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். இப்படி ஒரு அறிக்கை விட வேண்டிய அளவு என்ன அவசியம் வந்தது? இதுவரை இப்படி பெண்கள் சோதனை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால் அதை நியாயப்படுத்துவது இயலாத காரியம்.” [17]

ஆக ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது திராவிடர் கழக பொய் பிரச்சாரகர்கள் சொல்வது போல ‘எலி விநாயகரின் வாகனம் எனவே அதை கொன்று பிரிட்டிஷ் அதிகாரிகள் நம் மதத்தை இழிவுப்படுத்தி விட்டார்கள்’ என்பது போன்ற அற்பமான இல்லாத காரணங்களுக்காக திலகர் பிரிட்டிஷ் பிளேக் நிவாரண செயல்பாடுகளை எதிர்க்கவில்லை. மாறாக மக்களை கேவலப்படுத்தும் அடக்குமுறையான நடவடிக்கைகள். அடித்தட்டு மக்களை பாதிக்கும் நடவடிக்கைகள் இவற்றுக்கு எதிராகத்தான் பாலகங்காதர திலகர் எழுதினார். இன்றைய நிலையில் அவரது சில நிலைபாடுகள் நமக்கு ஏற்புடையதாக இல்லாதிருக்கலாம். அவரது மிக நெருங்கிய சீடர்கள் ஏன் பக்தர்களே அதில் அவருடன் மாறுபட்டிருக்கிறார்கள். அவரும் அதை உணர்ந்திருக்கிறார். ஆனால் அவரது தியாகமும் தேசபக்தியும் வரலாற்று ஆராய்ச்சியும் இலக்கிய தேர்ச்சியும் ஒவ்வொரு பாரத குடிமகனின் வணக்கத்துக்கும் உரியது. என்றென்றும் தேசபக்தி வானில் சுடர் விடும் திலகர் எனும் சூரியனைக் கண்டு திராவிட கும்பல்கள் குரைப்பது வானை நோக்கி எச்சில் உமிழ்வது போலத்தான். லோகமான்ய பாலகங்காதர திலகரின் தேச பக்தி என்றென்றும் நம்மை வழிகாட்டும்.

- அரவிந்தன் நீலகண்டன் 

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...