Monday, September 3, 2012

உருத்திராட்ச மணி - சில அபூர்வ தகவல்கள்!


உருத்திராட்ச மரத்தின் பழத்தில் இருந்து இந்த கொட்டைகளை பிரித்தெடுத்து கழுவி உலரவைத்து அவற்றின் அளவைப் பொறுத்து தனித் தனி பயன்பாட்டுக்கென பிரித்தெடுக்கின்றனர். இந்த கொட்டைகளின் அளவு தட்பவெப்ப நிலை, மரத்தின்வகை, வயது மற்றும் பழத்தின் முதிர்ச்சியைப் பொறுத்து மாறு படுகிறது. பொதுவில் பார்ப்பதற்கு மங்கலாய் கருமை அல்லது செம்மையேறிய பழுப்பு நிறத்தில் உருத்திராட்ச மணிகள் காணப் படுகின்றன.

உருத்திராட்ச மணியின் வெளிப்புற பரப்பானது ஒழுங்கற்ற ஆனால் உறுதியான மேடு பள்ளங்களுடனும், பிளவுகளுடனும் காணப் படுகிறது. இந்த கொட்டைகளை உற்று கவனித்தால் மேலிருந்து கீழாக அழுத்தமான கோடு போன்ற பிளவுகள் இருக்கும். இந்த பிளவுகளையே முகங்கள் என்கின்றனர். இந்த உருத்திராட்ச மணிகளின் வளர்ச்சி மற்றும் திரட்சியைப் பொறுத்து இவற்றில் பிளவுகள் அல்லது முகங்கள் அமைகின்றன. ஒரு முகத்தில் இருந்து 21 முகம் வரையிலான உருத்திராட்ச மணிகள் கிடைக்கின்றன. பொதுவில் 95 விழுக்காடு காய்கள் ஐந்து அல்லது ஆறு முகம் கொண்டவைகளாகவே இருக்கின்றன.

இந்த காய்களில் உள்ள முகங்களின் அழுத்தம் மற்றும் இடைவெளியைப் பொறுத்தே இந்த உருத்திராட்ச மணிகளின் எடை அமைகிறது. நெருக்கமான இடைவெளியை உடைய காய்கள் பாரமானதாகவும், அகன்ற ஆழமான இடைவெளியுள்ள காய்கள் பாரம் இல்லாமல் லேசானதாகவும் இருக்கும். இத்தகைய காய்கள் மட்டும் நீரில் மிதக்கும்.

மிக அபூர்வமாய் இரண்டு காய்கள் ஒன்றோடு ஒன்று இனைந்தது முகங்கள் ஏதும் இல்லதது போலிருக்குமாம். இந்த வகை மணிகளை “கவுரி சங்கர்”என்கின்றனர். ஒரு முகம் மட்டும் அமைந்துள்ள காய்கள் தோற்றத்தில் முழுமையாக விளைச்சலை அடையாத காய்களைப் போலிருக்கும். ஏகமுகம், இரண்டு முகம், மூன்று முகமுடைய உருத்திராட்ச மணிகளும் அபூர்வமானதாகவும், சக்தி உடையவனாகவும் கருதப் படுகிறது. இந்த கருத்தாக்கங்கள் யாவும் நம்பிக்கையின் பாற்பட்டதே.

உருத்திராட்ச காய்களின் அளவை வைத்து மூன்று தரமாக பிரிக்கின்றனர். நெல்லிக்காய் அளவு உருத்திராட்சம், இலந்தைப் பழ அளவு உருத்திராட்சம், கடலை அளவு உருத்திராட்சம் என மூன்றாக பொதுமைப் படுத்தப் பட்டிருக்கிறது. நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சங்கள் பூரண பலனையும், இலந்தைப் பழ அளவிளான காய்கள் மத்திம பலனையும், கடலை அளவுள்ளவை அதம பலனையும் தருமென கூறப் பட்டிருக்கிறது.

பொதுவில் ருத்திராட்சங்கள் மாலைகளாய் கோர்த்தே பயன் படுத்தப் படுகிறது. நூல் கயிறு முதல் உலோக கம்பிகள் வரை மாலைகளாய் கோர்க்க பயன் படுத்தப் படுகிறது. இப்படி மாலைகளாய் கோர்ப்பதில் பல தனித்துவமான முறைகள் கையாளப் படுகின்றது. நான்கு வகையிலான எண்ணிக்கையில் இந்த மாலைகள் கோர்க்கப் படுகின்றன. 1, 27, 54, 108 என்கிற எண்ணிக்கையிலான மாலைகளே பயன் பாட்டில் இருக்கிறது. இப்படி மாலையாக கோர்க்கும் போது ஒரே வகையான முகங்களைக் கொண்ட உருத்திராட்சங்களையே பயன் படுத்திட வேண்டுமாம். ஆனால் வர்த்தக ரீதியாக மாலை கட்டுவோர் இவற்றை கவனத்தில் கொள்வதில்லை.

இப்படி மாலையாக கட்டும் போது ஒரு உருத்திராட்சம் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்த உருத்திராட்சத்தை தொட்டுக் கொண்டிருக்க கூடாதாம்.
உருத்திராட்ச மணிகளைத் தரும் உருத்திராட்ச மரம் என்பது ஒரு மூலிகைத் தாவரம். சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இவை மருந்துப் பொருட்களாக பயன் படுத்தப் படுகின்றன. மிகவும் அரிதான சில தகவல்களை மட்டும் இங்கே தொகுத்து பகிர்ந்திருக்கிறேன்.

உருத்திராட்ச மரத்தின் பழமானது கடினமான ஓட்டுடன் கருநீலமாய் இருக்கும் என முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இதன் உள்ளே இருக்கும் சதைப் பகுதியானது புளிப்பான சாறு நிறைந்திருக்கும். மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப் படுவதால் உருவாகும் “காக்காய் வலிப்பு” என்கிற epilepsy க்கு இந்த பழத்தின் சாறு அருமருந்தாக கூறப் படுகிற்து. மேலும் cough, bronchitis, nerve pain, migraine போன்ற வியாதிகளுக்கு நல்ல பலனை தருகிறது.

ஒருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் ஆஸ்த்துமா, எலும்புருக்கி நோய், மூட்டுவலி, பக்கவாதம், கண்களில் ஏற்படும் பிரச்சினைகளின் தீவிரத்தை தணிக்க முடியும்

இருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் தீக்காயங்களின் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் கவனசிதறல், மன அழுத்தம், குழந்தைபேறு இல்லாதவர்கள் இருமுக மணியை உடலில் அணிவதன் மூலம் நல்ல பலன் பெறமுடியும்.

மூன்று முக மணியினை அணிவதால் ஆயுதங்களினால் ஏற்படும் காயங்களின் பாதிப்பினை குறைக்கலாமாம். மேலும் தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை சிந்தனையுடைய்வர்களுக்கு நல்ல பலனை அளிக்குமாம்.

நான்கு முக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் இருமல் தொல்லைகளில் இருந்து தீர்வு பெறலாம். மேலும் இரத்த ஓட்டம் சிற்ப்பாகும்.

ஐந்துமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் உடல்பருமன் பிரச்சினைகள் மற்றும் இதயக் கோளாறு உடையவர்களுக்கு நல்ல பலனைத் தருமாம்.

ஆறுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் குழந்தையின்மை, வலிப்பு மற்றும் பேச்சாற்றல் திறன் பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

ஏழுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் மூச்சுக் கோளாறு மற்றும் கால்களில் பாதிப்புடையவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

எட்டுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சினைகள், தோல்வியாதிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

ஒன்பதுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் தன்னம்பிக்கை பெருகி உடல் ஆரோக்கியம் மிளிரும்

பத்துமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் உறுதியான மனநலம் வாய்க்கும்.

பொதுவில் உருத்திராட்ச மணிகள் தங்களை சுற்றியுள்ள வெப்பத்தை கிரகித்துக் கொண்டு சுற்றுப் புறத்தினை குளிர்விக்கும் தன்மையுடைவை. இதனை நம் உடலில் அணிவதால் தேகம் குளிர்ச்சியாகும் என கூறப் படுகிறது. நம் துறவிகள் ஏராளமான உருத்திராட்ச மணிகளை அணிந்தன் பின்னால் இத்தகைய அறிவியல் இருந்திருக்கக் கூடும்.

நாம் அருந்தும் நீரில் உருத்திராட்ச மணியை ஐந்து நிமிடம் ஊற வைத்து அந்த நீரைப் பருக உயர் குருதி அழுத்தம் கட்டுக்குள் வருமாம். தீராத காய்ச்சல் உள்ளவர்களுக்கு பழைய உருத்திராட்ச மணியை தேனில் உரைத்துக் கொடுக்க காய்ச்சல் குறையுமாம். இதைப் போலவே உருத்திராட்சக் கொட்டையினை குடிக்கும் நீரில் ஐந்து நிமிடம் ஊற விட்டு அந்த நீரில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக் கலக்கி அருந்தினால் எத்தகைய இருமல் மற்றும், வாந்தி தணியுமாம்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...