தெய்வ வழிபாடு, மனித வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக சொல்லப் பட்டுள்ளது. தெய்வ பக்தி இல்லாத மனித வாழ்க்கை, மிருகங்கள், தாவரங்களுக்குச் சமமானது. மனிதர்களுக்கு ஆடை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானது தெய்வ பக்தியும்.
எவ்வளவு தான் பணமும், செல்வாக்கு மிகுந்தாலும், தெய்வம், தெய்வ வழிபாடு என்ற எண்ணமும் இருந்தால் தான், மனிதன் ஓரளவுக்காவது பாவ புண்ணியங்களுக்கு பயந்து, நடந்து கொள்வான். நாகரிகம் மிகுந்த நாடுகளில் கூட, தெய்வ வழிபாடு நடைபெறுகிறது. பல கோவில்கள், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்படுகின்றன. அவர்களது வழிபாட்டு முறை, ஆசார அனுஷ்டானங் களில் மாற்றம் இருக்கலாம்; ஆனால், உள்ளத்தில் ஏற்பட்டுள்ள பக்தியில், வித்தியாசம் இருக்காது.
பகவானிடம் உள்ள பக்தியின் காரணமாகவும், நம்பிக்கையின் காரணமாகவும் தான், அந்த காலத்து மன்னர்கள் கூட, பகவானுக்கு பெரிய அளவில் கோவில்கள் அமைத்து, தினசரி வழிபாட்டுக்கும் வழி செய்து வைத்தனர். நாமும், அவற்றைப் பயன்படுத்தி நலம் பெற வேண்டும்.
தெய்வங்களில் ஆண் உருவமும் உண்டு, பெண் உருவமும் உண்டு. உருவம் தான் மாறுபடுகிறதே தவிர எல்லாமே, "சக்தி’ என்பதிலிருந்து ஏற்பட்டது தான். சிவனை வழிபட்டாலும் சரி, பரமேஸ்வரியை வழிபட்டாலும் சரி, அந்த பரம்பொருளை வழிபடுவதாகத் தான் அர்த்தமாகிறது. அருள் செய்வதும் அந்த பரம் பொருள் தான்.
"என்னை யார் எந்த உருவத்தில் வழிபடுகின்றனரோ, அந்த உருவத்தில் நான் தோன்றுகிறேன்…’ என்றார் கண்ணன். ஆண் உருவில் உள்ள தெய்வங் கள், பெண் உருவில் உள்ள தெய்வங்கள் என்று இரண்டு வகை உள்ளது.
இவ்விரண்டையுமே ஆண்களும், பெண்களும் வழிபடலாம். வழிபாட்டு முறையில் வித்தியாசம் இருப்பதால், சில தெய்வங்களை ஆண்களும், சில தெய்வங்களை பெண்களும் வழிபாடு செய்யும்படி ஏற்பாடு செய்து கொண்டுள்ளனர். அந்த தெய்வங்களுக்கான விசேஷ தினங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
மனிதன் மேன்மை அடைய பல மார்க்கங்களைக் காட்டியிருக்கின்றனர். மேன்மை என்பது, எதை முக்கியமாகக் குறிக்கும் என்றால், இந்த வழிபாடு களினால் புண்ணியம் கிடைக்கும். புண்ணியம் செய்த ஜீவன், பகவானை அடைகிறது. மீண்டும் பிறவி இல்லை என்றுள்ளது.
இதே போல, சில ஷேத்திரங்களுக்குப் போய், அங்குள்ள தெய்வங்களை தரிசித்தாலும், மறுபிறவி இல்லை என்று சொல்லப்படு
கிறது. மறுபிறவி வேண்டாம் என்பது தான் பலருடைய வேண்டுகோள். அதற்காகத்தான் பாடுபட வேண்டும். இதற்கு, பக்தி தான் சிறந்த மார்க்கம். பக்தியே முக்திக்கு வித்தாகும்.
No comments:
Post a Comment