Monday, June 15, 2015

துக்க நிவாரண அஷ்டகம்


மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் களிமுகம் கொண்டநல் கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

கான் உறுமலர் எனக் கதிர் ஒளிகாட்டிக் காத்திட வந்திடுவாள்
தான் உறு தவஒளி தார்ஒளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
மான் ஊறு லிழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

தணதண தந்தண தவில் ஒலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுபாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

துக்க நிவாரண அஷ்டகம் முற்றும்.....

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...