அண்மையில், மதம் மாற்றப்பட்ட மக்கள், தாய் மதத்திற்கு
திரும்பிய நிகழ்வுகளை தொடர்ந்து, பெரும் சர்ச்சை எழுப்பப்பட்டு உள்ளது.
ஊடகங்களை பார்த்தால், பா.ஜ., ஆட்சியில் இருப்பதால் தான் இத்தகய சம்பவங்கள்
நிகழ்கின்றன என்ற தோற்றம் ஏற்படுகிறது. இதில், எவ்வளவு உண்மை உள்ளது?
ஆண்டு 2006: சோனியா தலைமையிலான கட்சி மத்தியில் ஆட்சி செய்த காலகட்டம். டில்லியில், 'இந்திய சமுதாய கழகம்' என்ற அமைப்பு, தனது அறிக்கையில், 'போஜ்புரி பகுதியில் 300 தலித் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தை தழுவியதை அடுத்து, அவர்கள் வழிபாடு நடத்தி வந்த சர்ச், இந்து கோவிலாக மாற்றப்பட்டது' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆண்டு 2008: இந்து மதத்தை கேவலமாக பேசுவதையே கொள்கையாகக் கொண்டுள்ள தி.மு.க., தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம். பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினமும், சித்திரை புத்தாண்டும் இணைந்த அந்த நன்னாளில், அதே தமிழகத்தில், நூற்றுக்கணக்கான தலித்துகள் கிறிஸ்தவத்தை துறந்து இந்து தர்மத்திற்கு வந்தனர். இந்த நிகழ்வு பற்றி செய்தி வெளியிடுகையில், 'ஆசியா நியூஸ்' என்ற கிறிஸ்தவ செய்தி நிறுவனம், 'ஆயிரம் தலித்துகள் இந்து மதத்துக்கு திரும்பினர்' என, தெரிவித்தது. இப்படி, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த, எத்தனையோ தாய் மதம் திரும்புதல் நிகழ்வுகளை உதாரணமாக முன்வைக்கலாம். அதனால், பா.ஜ., ஆட்சியினால் தான் இத்தகய நிகழ்வுகள் நடக்கின்றன என்பது உண்மைக்கு புறம்பானது.
மதமாற்றங்களின் தன்மை:வரலாற்று பதிவுகளின் படி, பலவந்தப்படுத்தப்பட்டோ அல்லது சமூக நிர்பந்தங்களாலோ பல கோடிக்கணக்கான இந்துக்கள் மதமாற்றப்பட்டு உள்ளனர். அதற்கு ஒரு உதாரணம், 'அக்பர் நாமா' நூல். அக்பரின் வரலாறு இந்த நூலில் பதியப்பட்டு உள்ளது. அக்பர் சொல்ல சொல்ல, அபுல் பாஸல் எனும் அரசவை வரலாற்று ஆசிரியர் இதை எழுதினார். அந்த நூலில், தனது மதவெறி மிகுந்த காலகட்டங்களில், தான் இந்துக்களை பலவந்தமாக மதம் மாற்றியதாகவும், பின்பு அந்த அறியாமையின் இருள் தனக்கு நீங்கி விட்டதாகவும், அக்பர் ஆவணப்படுத்தி உள்ளார்.இப்படி வாள்முனையில் நடந்த மதமாற்றங்கள், இன்று, பெரும்பாலும் பொருள் ரீதியாகவும், நெருக்கடி ரீதியாகவும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இஸ்லாமும், கிறிஸ்தவமும், மதமாற்றத்தை ஒருவித இறையியல் போராகவே இந்து சமுதாயத்தின் மீது நடத்தி வருகின்றன. இதற்காக, கிறிஸ்தவ அமைப்புகள், ஒவ்வொரு ஆண்டும், 10,500 கோடி ரூபாயை, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவியாக பெறுகின்றன.ஒரு புறம், போலி -மதச்சார்பின்மையின் பெயரால் இந்து கோவில்களும், இந்து பாரம்பரிய நிறுவனங்களின் பெரும் சொத்துகளும் அரசு கையில் உள்ளன. இதனால், இத்தகய பண பலத்தை எதிர்கொள்ள முடியாமல் இந்து மதம் தவித்து வருகிறது.
இப்படி இந்து மத நிறுவனங்கள் முடக்கப்பட்டு உள்ள நிலையில், மறுபுறம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏழை மக்களுக்கு கொண்டு செல்வதில் அரசு மிகப்பெரிய தோல்வியை அடைந்து உள்ளது. இதை பயன்படுத்தி, ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவ உதவி, வேலைவாய்ப்பு என்ற போர்வையில், கிறிஸ்தவ அமைப்புகள், அழுத்தம் கொடுத்து, மதமாற்றம் செய்கின்றன.இத்தகய மதமாற்றத்தால் பல ஏழைகளின் குடும்பங்கள் உடைகின்றன. ஆனால், இந்த மோசமான மனித உரிமை மீறலை பற்றி எங்கே புகார் செய்ய வேண்டும் என்பது கூட தெரியாத நிலையில் நம் மக்கள் உள்ளனர்.அமெரிக்க கிறிஸ்தவ இறையியல் பல்கலைக்கழகங்களில் இந்துக்களை மத மாற்றம் செய்வது ஒரு செயல்திட்டமாக, ப்ராஜெக்டாகவே வகுக்கப்பட்டு சொல்லிக் கொடுக்கப்படுகிறது.திரிபுராவிலும், அருணாச்சல பிரதேசத்திலும் மதமாற்றம் துப்பாக்கி முனையில் நடக்கிறது. அங்கே கிறிஸ்தவ சபைகளின் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாதிகள், அங்குள்ள பழங்குடியினரை மிரட்டி, அவர்களது மணவிழா, மகர சங்கராந்தி, ஏன் இறுதி சடங்குகள் கூட கிறிஸ்தவ முறைப்படி மட்டுமே நடத்த வேண்டும் என, நிர்பந்திக்கின்றனர். இதை திரிபுராவில் செய்யும் கிறிஸ்தவ பயங்கரவாத அமைப்பின் பெயர் என்.எல்.எப்.டி., இந்த அமைப்பின் அரசியல் கிளையுடன் தான் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தது. இதுதான் நிலை. இங்கு நிகழ்வது ஒரு போர்.போலி மதச்சார்பின்மை கொள்கையை கொண்டுள்ள ஊடகங்கள் இத்தகய மத மாற்றங்கள் குறித்து எதுவும் பேசாமல், வாய் மூடி மவுனம் காக்கின்றன.
தாய் மதம்: இத்தகய சூழலில், இந்து அமைப்புகள் செய்வது மதமாற்றம் அல்ல; தாய் மதம் திருப்புவது மட்டும் தான். இது இன்று துவங்கிய ஒன்றல்ல, மதமாற்றம் துவங்கிய காலத்தில் இருந்தே நடந்து வருகிறது.இஸ்லாமியர்களை, சைதன்ய மகாபிரபு இந்து தர்மத்திற்கு எப்படி கொண்டு வந்தார் என்பதை பற்றி மார்க்சிய வரலாற்றாசிரியர் ஹர்பன்ஸ் முக்கியா எழுதி உள்ளார். அதே போல், சீக்கிய குரு ஹர்கோவிந்தர், மிக பெரிய அளவிலான இஸ்லாமிய மதமாற்றத்தை தடுத்து, தாய் மதத்திற்கு மக்களை திருப்பியது பற்றியும் எழுதி உள்ளார்.
'தபிஸ்தான் -இ- மஸஹிப்' எனும் பாரசீக நூலில், 'குரு ஹர்கோவிந்தரின் இச்செயலால், பஞ்சாபின் கிரத்புரி மலைகளில் துவங்கி, திபெத் எல்லை வரை, ஒரு முஸ்லிம் கூட இல்லாமல் அனைவரும் தாய் மதம் திருப்பப்பட்டனர்' என, பதிவு செய்யப்பட்டு உள்ளது.மார்க்சியரான முக்கியா கூட, இவற்றை மதமாற்றம் என சொல்லவில்லை; மாறாக மீள்-மதமாற்றம் என்றே குறிப்பிடுகிறார்.
மதமாற்றங்களை நியாயப்படுத்துபவர்கள், 'ஜாதி கொடுமைகளால் மதம் மாறுகின்றனர்' என பிரசாரம் செய்கின்றனர். உண்மை என்னவென்றால், ஜாதி கொடுமைகளை நீக்குவதாக சொல்லி மதமாற்றம் செய்யும் மதங்களில், ஜாதியம் அப்படியே நீடிக்கிறது. அதாவது, இது பச்சையான ஏமாற்று வேலை. ஜாதியம் இந்து சமுதாயத்தில் இருப்பதை விட கொடுமையாகவே இந்த 'அமைதி' மற்றும் 'அன்பு' மதங்களில் உள்ளன.டாக்டர் அம்பேத்கர், 'ஒடுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவராகவோ, இஸ்லாமியராகவோ மாறும் போது தங்கள் தேசிய தன்மையை இழந்துவிடுகின்றனர்' என்று கூறியுள்ளார். பவுத்தம், சீக்கியம், சமணம் போன்ற பாரதிய மரபுகளுக்குள் செய்யப்படும் மதமாற்றங்கள் பிரச்னைகளை ஏற்படுத்துவதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.அம்பேத்கரால் மிகவும் மதிக்கப்பட்டவரும், 'ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர்' என பாராட்டப்பட்டவருமான சுவாமி சிரத்தானந்தர், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மதம் மாறிச் சென்றவர்களை தாய் மதம் திருப்புவதை தலையாய காரியமாக செய்து வந்தார்.இந்த வரலாற்று பின்னணியில் தான், இன்றைய தாய் மதத்திற்கு திருப்பும் நிகழ்வுகளையும் பார்க்க வேண்டும். சில நாடுகளின் ராணுவ பட்ஜெட்டிற்கு நிகரான நிதியை பெறும் இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகளின் நிதி ஆதாரத்தோடு, இந்து அமைப்புகளின் சொற்பமான நிதி ஆதாரத்தை ஒப்பிடக் கூட முடியாது. அதனால், அவற்றின் தாய் மதத்திற்கு திருப்பும் முயற்சிகள் பற்றி இவ்வளவு பெரிய சர்ச்சையை கிளப்புவது, போலி மதச்சார்பின்மை ஊட கங்களின் மிகைப்படுத்துதல் வேலை தான்.
நிறைவாக...:டாக்டர் அம்பேத்கர், 'இந்து மதம், எப்போது தன் மிஷினரி தன்மையை இழந்ததோ, அப்போது தான் அதில் ஜாதியமும், சமுதாய தேக்கமும் ஏற்பட்டன' என, சொல்லுவார். துவக்கத்தில் 2006ல் தாய் மதம் திரும்பிய போஜ்புரி தலித் சகோதரர்கள் தங்கள் வாழ்விடத்தில் இருந்த கிறிஸ்தவ சர்ச்சை, இந்து கோவிலாக மாற்றியதை பார்த்தோம். அலிகாரில், 1995ல், கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றப்பட்ட 72 தலித்துகள், இந்த ஆண்டு, தாய் மதம் திரும்பினர். அங்கும் அவர்கள் பயன்படுத்திய சர்ச், சிவன் கோவிலாக மாற்றப்பட்டது.எனவே, இது மதமாற்றம் அல்ல; தாய் வீடு திரும்புதல். பைபிளில் ஏசு ஒரு கதை சொல்லுவார். தன் தாய், -தந்தை வீட்டை துறந்து, ஊர் ஊராக அலைந்து கஷ்டப்பட்ட மகன், மீண்டும் தன் சொந்த வீட்டை வந்து அடைவான். 'Prodigal Son' எனும் அக்கதை மிகவும் பிரசித்தம். இன்று நிகழ்வது அதுவே தான்.
-- அரவிந்தன் நீலகண்டன் -
சமூகவியல் எழுத்தாளர்.
இந்திய சமூகவியல் குறித்து பல நூல்களை எழுதி உள்ளார்
சமூகவியல் எழுத்தாளர்.
இந்திய சமூகவியல் குறித்து பல நூல்களை எழுதி உள்ளார்
Spl Thanks to http://www.tamilthamarai.com
No comments:
Post a Comment