முதல் ஐந்து உற்பவங்களிலும் தனித்த சக்தியாகவே விளங்கிய சக்தி, தக்ஷனின் யாகத்தில் விழுந்து உயிரை விட்ட தாக்ஷாயணியாக அவதரித்தபோது ஈசனாகிய சிவனின் சக்தியான சிவசக்தியின் பஞ்சமுக தத்துவமாகிய கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் மிகக் கொண்டு சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம், தத்புருஷம், அகோரம் என்ற ஐந்து முகங்களாகவும் ஒன்று திரண்டு உருவமற்றுச் சுயம்புவாக உருவான அங்காளம்மன் ஆவாள். இவளே உருவமாக பருவதராஜன் என்ற ஹிமவானுக்கும், மேனைக்கும் புத்திரியாகப் பார்வதி என்ற பெயரில் அவதரித்தாள்
#பிரம்மஹத்தி_தோஷம்
சந்தோபி, சுந்தரன் என்ற இரண்டு அசுரர்களை அழிக்க ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மன் நடத்திய வேள்வியில், திலோத்தமை என்ற தேவமங்கை தோன்றினாள். அவள் அழகில் மயங்கிய பிரம்மன் அவளைத் துரத்தினான். திலோத்தமை கயிலாயத்தில் அடைக்கலம் புகுந்தாள்.
அப்போது அங்கு வந்த அன்னை பார்வதி, ஐந்து தலைகளைக் கொண்ட பிரம்மனைச் சிவபெருமான் என எண்ணி வணங்கினாள். உடனே தன் தவறை உணர்ந்த பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்க, பிரம்மனின் ஆணவத்தை அழிக்க, விஷ்ணுவின் ஆலோசனைப்படி, பிரம்மனது ஒரு தலையை சிவபெருமான் கிள்ளி எடுத்தார். அந்தக் கபாலம் அவரது கையிலேயே ஒட்டிக் கொண்டது. இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. சிவனின் உருவமே பொலிவிழந்தது.
இதனை அறிந்த பிரம்மனின் மனைவியான சரஸ்வதி சிவனுக்கும் பார்வதிக்கும் சாபமிட்டாள்.
இதனால் சிவபெருமான் பிச்சை எடுக்கும் கோலத்தையும், அன்னை பார்வதி அலங்கோல பேய் வடிவத்தையும் பெற்றனர். சக்தியின் இந்த வடிவம் பேய்ச்சி என வணங்கப்படுகிறது.
இதையடுத்து விஷ்ணு, தன் தங்கை பார்வதியிடம், ‘கலங்காதே! நீ மலையரசன் பட்டிணத்தில் (மேல்மலையனூர்) பூங்காவனத்துப் புற்றில் பாம்பு வடிவில் இருக்கும்பொழுது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்’ என வழிகாட்டினார்.
அகோர உருவம் கொண்ட அன்னை பார்வதி நாடெல்லாம் அலைந்து திரிந்து திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள். அங்கிருந்த முனிவரின் ஆலோசனைப்படி, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி எழுந்த போது, அகோர உருவம் நீங்கி, மூதாட்டியின் வடிவம் கிடைத்தது.
அங்கிருந்து மலையனூர் வரும்போது, இரவாகி விட்டதால், தாயனூரில் உள்ள வட்டப் பாறையில் தங்கினாள். பின்னர் அங்கிருந்து வரும் வழியில் அன்னைக்கு தாகம் ஏற்பட, அங்கே கள் இறக்குபவனிடம் தாகம் தீர்க்கத் தண்ணீர் கேட்டாள். அதற்கு அவன் கொடுக்க மறுத்து விட்டான். அந்த அன்னையின் கோபத்தினால் இன்றும் அப்பகுதி ஏரியில் பனைமரங்கள் முளைப்பதில்லை.
மலையரசன் பட்டிணத்தில் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அன்னையின் தாகத்தை தீர்த்து வைத்தனர். அதனால் மனம் குளிர்ந்த அன்னை, அவர்களுக்கு எராளமான மீன்கள் கிடைக்குமாறு வரமளிக்க, அவர்களும் அவற்றை அன்னைக்குப் படையல் செய்தனர்.
அவளை வணங்கிய மீனவனுக்கு ‘நான் சரஸ்வதியின் சாபத்தால் இங்கிருக்கிறேன். எனக்கு நீங்கள் தினமும் பூஜை செய்யுங்கள். உங்களை நான் பாதுகாக்கின்றேன்’ என்று அருள்வாக்கு தந்தாள். (இக்கோயில் இன்றும் மீனவர் சமுதாயத்தவரே பூஜை செய்து வருகின்றனர்).
தொடர்ந்து அன்னை புற்று வடிவமெடுத்து, மேல்மலையனூர் அரண்மனையில் உள்ள பூங்காவனத்தில் ஐந்து தலை நாகமாக வாழ்ந்து வந்தாள்.
பூங்காவனத்தில் பெரிய புற்று இருப்பதைக் கண்டு, மலையரசன் அதனை இடிக்க ஆள் அனுப்பினான். அந்த ஆட்கள் அனைவரையும் அன்னை புற்றுக்குள் மறைத்தாள். மீண்டும் ஆள் அனுப்ப, அவர்களும் புற்றுக்குள் மறைந்தனர். இதைக் கண்டு அஞ்சிய மலையரசன், தன் தவறை உணர்ந்து புற்றை வணங்கி, நின்றபோது அன்னை காட்சி கொடுத்தாள்
#சிவன்சாபம்நீங்குதல்
ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில் அம்பிகையானவள் பிக்ஷை போட்டு அந்த பிக்ஷையை ஏற்கும்போது எந்த ஊரில் மண்டை ஓடு அகலுமோ அங்கே பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும் என்று புரிந்த ஈசன் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் சென்று கபாலத்தில் பிக்ஷை வாங்கிச் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக இந்த தண்டகாரண்யம் என்னும் மேல் மலையனூருக்கு வந்தார்.
மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை. அங்காளியானவள் அன்று தன் பூரண வலுவோடும், பலத்தோடும் இருந்தாள். அப்போது உலகெங்கும் சுற்றி வந்த சிவன் அங்கே வந்து சேர்ந்தார்.
அச்சமயம் மலையனூர் வந்த சிவனின் குரல் கேட்ட பார்வதி, விஷ்ணுவை மனதில் நினைத்து தியானம் செய்தாள். விஷ்ணுவின் ஆலோசனைப்படி, விநாயகப் பெருமானைக் காவல் நிற்க செய்து விட்டு, அன்னபூரணி மூலம் சுவையான உணவைச் சமைத்து, அதை மூன்று கவளமாக்கினாள்.
அங்காளியம்மன் சூரையின் முதல் கவளத்தை பிரம்ம கபாலத்தில் இட, பிரம்மஹத்திக்கு உணவு கிடைக்க அது சாப்பிடுகிறது. இரண்டாவது கவளமும் கபாலத்திலேயே அன்னை இட்டாள். உணவின் சுவையில் மயங்கிய கபாலம் அதையும் ஆசை தீர உண்டது.
மூன்றாவது கவளத்தை வேண்டுமென்றே கீழே தவறவிட, சுவையில் மயங்கிய கபாலம் தரையிறங்கியது. உடனே சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி சுயநிலையை அடைந்தார்.
சிவன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடி, தாண்டேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்தார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக அமர்ந்தார்.
பிரம்ம கபாலத்தினுள் புகுந்த பிரம்மாவின் பிரம்மஹத்தியானது சாப்பிட்டு முடிந்ததும் ஈசனைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு விண்ணில் பறக்க ஆயத்தமானது.
அங்காளி இதைக் கண்டு கோபம் கொண்டு அதற்கும் மேல் தானும் விஸ்வரூபம் எடுத்து பிரம்மாவின் கபாலத்தை பிரம்மஹத்தியோடு சேர்த்து அழுத்தித் தன் கால்களால் மிதித்தாள். அவள் கோபத்தைக் கண்டு மஹாவிஷ்ணு தலையை மிதித்த அங்காளியை அவ்வண்ணமே பூமிக்குள் தள்ளி மூடி மறைத்துவிட்டார். சற்று நேரத்தில் பூமிக்கு மேல் சுயம்புவாகப் புற்று உருவாகி அதில் ஒரு நாகமும் குடிகொண்டது.
இந்த நாகத்தின் படம் சுருங்காமலே பல யுகங்கள் இருந்ததாயும் கலி யுகத்திலே தேவர்கள் அனைவரும் தேர் உருவில் வந்து வணங்கவும் நாகத்தின் படம் சுருங்கி உள்ளே சென்று அங்காளம்மனாக அமர்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
அங்காள பரமேஸ்வரியின் கருணை செயலை கண்டு மகிழ்ந்த சிவபிரான் அங்காள பரமேஸ்வரிக்கு சிவலிங்கம் பரிசு அளித்தார். இந்த சிவலிங்கம் மூலம் நான் உன்னுடன் ௭ப்போதும் இருக்கிறேன் ௭ன்று கூறினர். ௮ம்மை சிவலிங்கத்தை நெற்றி வகிட்டில் வைத்துக்கொண்டார். (ஞான-கிரியா வடிவமாகிய சித் சக்தி).
இந்த ஐதீகத்தை நினைவுப்படுத்தும் வகையிலேயே மஹாசிவராத்திரி முடிந்த அமாவாசை அன்று அனைத்து ஊர் மயானங்களிலும் மயானக்கொல்லை உற்சவம் நடத்தப்படுகிறது. ஆவேசமும் கோபமும் கொண்டிருந்த அன்னையை சாந்தப்படுத்த, தேவர்களும் முனிவர்களும் தேரை உருவாக்கி அதில் அன்னையை அமரச்செய்து பவனி வரச் செய்தனர். இதனால் அன்னையின் கோபம் தணிந்து, மேல்மலையனூரிலேயே தங்கியிருந்து அருளாசி வழங்கி வருகின்றாள்.
எங்கு அநீதி நடந்தாலும் முதலில் அங்கு போய் நீதி கிடைக்கச் செய்வது அங்காள பரமேஸ்வரியின் குணம். அதனால்தான் பெரும்பாலும் அங்காளப் பரமேஸ்வரியின் ஆலயம் ஊரின் எல்லையிலேயே அமைந்திருக்கிறது
No comments:
Post a Comment