Wednesday, May 29, 2013

உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம் வாய்ந்த வற்றாப்பளை அம்மன்.



இலங்கையில் கண்ணகி அம்மன் வரலாறு

கி.பி 171ஆம் ஆண்டு தொடக்கம் கி.பி 193ஆம் ஆண்டு வரை அனுராதபுர நகரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற மன்னால் கண்ணகி அம்மன் வழிபாடு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக இராஜவாளி என்ற சிங்கள நூல் எடுத்துரைக்கிறது. கஜபாகு மன்னனின் ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராக விளங்கிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் இருந்து கண்ணகிக்கு சிலை செய்து கோவில் அமைத்து பெருவிழா எடுத்தான் எனவும் அறிய முடிகிறது. கிபி 178ஆம் ஆண்டில் நடந்த அவ்விழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பனாகிய கஜபாகு இங்கிருந்து அங்கு சென்று விழாவில் கலந்து கொண்டான்.

இவ்விழாவில் பாண்டிய மன்னன் வெற்றிவேற் செழியனும், சோழ அரசன் பெருநற்கிள்ளியும், கொங்குதேச அரசன் இளங்கோ அடிகளும் மற்றும் மகத தேச மன்னரும் கலந்துகொண்டாதாக துரை ஜெயநாதன் அவர்கள் ஆதி திராவிடரும் அழிந்துபோன சங்கங்களும் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

விழாவில் கலந்துகொண்ட கஜபாகு மன்னன் பத்தினித் தெய்வமான கண்ணகியின் அற்பதங்களைக் கண்டு வியந்தது மாத்திரமல்லாமல் செங்குட்டுவனைப்போல் கண்ணகியை நித்தியபூசை செய்து வலம் வந்து தன் நாட்டிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என்று கண்ணகியை உள்ளம் உருகப் பிரார்த்தித்தான். அவன் விரும்பியபடி எல்லாம் நடக்குமென கண்ணகியிடம் ஆசி கேட்டு கஜபாகுவின் உள்ளம் நெகிழ்ந்ததுடன் கண்ணகி மேல் கூடிய நம்பிக்கை கொண்டான் எனவும் நாம் அறிய முடிகிறது.

அதற்கமைய இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்ப தன் விருப்பத்தை செங்குட்டுவனிடம் கஜபாகு தெரிவித்தான். செங்குட்டுவன் சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையையும் ஒரு காற்சிலம்பையும் சந்தனமரப் பேழையில் வைத்து கஜபாகுவிடம் பரிசாக கையளித்தான் என வரலாற்று ஆசிரியர்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

கஜபாகு மன்னன் கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும்போது தன்னுடன் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல்குடிமக்களையும் அழைத்து வந்தான். பழங்காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட மாதகலுக்கு அருகேயுள்ள சம்புகோள துறைமுகத்தில்தான் அவன் கண்ணகி சிலையுடன் வந்திறங்கினான். யானை மேல் சிலையை வைத்து பல யானைகள் பின்னே வர ஊர்வலமாய் பல இடங்களுக்கு அக்கண்ணகி சிலையை எடுத்துச்சென்றான். ஊர்வலம் நின்ற இடமெல்லாம் கண்ணகி வழிபாடு தோன்றிற்று என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

கஜபாகு மன்னனால் யாழ்ப்பாணத்தில் அங்கணாகடவை என்ற இடத்தில் முதலாவது கண்ணகி அம்மன் கோவில் ஸ்தாபிக்கப்பட்டது. அங்கணா என்பது அம்மனை குறிக்கும் ஒரு சொல்லாகும். ஆனாலும் அக்கண்ணகி கோவிலும் அம்மன் சிலையும் ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் யானையால் சிதைக்கப்பட்டதாக நாம் அறிகிறோம்.

நூல் ஆசிரியர் மூத்ததம்பி அவர்களின் யாழ்ப்பாண சரித்திரம் என்ற புத்தகத்தில் முதற் கண்ணகி அம்மன் கோவில் நாவற்குளியில் உள்ள வேளம்பாடியில் தோன்றியதென குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் எங்கு முதலில் கண்ணகி அம்மனுக்கு கோவில் தோன்றியதென்பதற்கு தக்க ஆதாரங்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.

இன்றும் இளவாலை, மண்டதீவு, பளை, வீமன்காமம், தெல்லிப்பளை, மாசியப்பிட்டி, கச்சாய், பருத்தித்துறை, புலோலி, காரைநகர் ஆகிய இடங்களில் உள்ள கோவில்கள் மூலம் யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்த பல கண்ணகி அம்மன் கோவில்கள் நாளடைவில் நாக அம்பாள், இராஜேஸ்வரி அம்பாள், முத்துமாரி அம்பாள் என்ற பெயரில் வணங்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

காரணப்பெயர்

முல்லைத்தீவில் உள்ள பிரசித்தம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் கஜபாகு மன்னனால் ஸ்தாபிக்கப்பட்ட பத்தாவது கண்ணகி ஆலயம் என்பது ஒரு சாராருடைய கருத்தாகும். கண்ணகி மதுரையை எரித்த பின்னர் ஈழத்தின் பல இடங்களுக்கும் சென்று பத்தாவது தலமான வற்றாப்பளையை அடைந்தாள் என்பது இன்னோரு சாராருடைய கருத்தாகும்.

பளை எனறால் தங்குமிடம் என பொருள் கொள்ள முடியும். எது எப்படி என்றாலும் கண்ணகியம்மாள் வந்து அமர்ந்த இடமாகிய பத்தாம்பளை என்பது மருவி பேச்சுவழக்கில் வற்றாப்பளையாயிற்று என்பது வரலாறு ஆகும்.

அமைவிடம்

முல்லைத்தீவு பிரதான வீதியில் இருந்து கிட்டத்தட்ட 3 கிலோ மீற்றர் தூரம் உள்ளே நந்திக்கடல் அருகே அழகிய திருக்கோவிலில் இருந்து தம் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் வற்றாப்பளை கண்ணகி அம்மன் என்பது பலருடைய நம்பிக்கையாகும். மூலமூர்த்தியாக கண்ணகியம்பாள் வீற்றிருக்க, விநாயகர், நாகதம்பிரான் முதலான மூர்த்திகள் பரிவாரத்தில் உள்ளனர்.

செவிவழியான மரபுக்கதை

முன்னொரு காலத்தில் முல்லைத்தீவு நந்திக்கடல் ஓரத்தில் உள்ள பரந்த நிலப்பரப்பில் சில ஆட்டிடையர் குல சிறுவர்கள் ஒரு முதுமை நிரம்பிய அம்மையைக் கண்டனர். அந்த முதுமைமிக்க அம்மையார் தனக்குத் தங்குவதற்கு ஒரு குடிசை வேண்டும் என இடையர் குல சிறுவர்களிடம் கேட்டதற்கு இணங்க அவர்கள் ஒரு சிறு குடில் அமைத்துக் கொடுத்ததுடன் பொங்கலும் செய்து கொடுத்தார்கள். மாலை மயங்கும் பொழுதில் அச்சிறுவர்கள் குடிசைக்குள் விளக்கு எரிப்பதற்கு எண்ணெய் இல்லையே என மனம் வருந்த கடல் நீரில் திரி வைத்து விளக்கு எரியுங்கள் என்று அம்மூதாட்டி கூறினார். இதன் காரணத்தாலே கடல் நீர் எடுத்து அதன் மூலம் விளக்கு எரிக்கும் பாரம்பரியம் அன்று தொடங்கியது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

அது மாத்திரம் அல்லாமல் அம்மூதாட்டி அந்த சிறுவர்களை பார்த்து தனக்குப் பேன் பார்த்துவிடும்படி கூறினார். அவர் தலை முடியை வகுந்த சிறுவர்கள் தலையெல்லாம் கண்களாக இருக்கக்கண்டு பயந்து அலற நான் ஒரு வைகாசித்திங்கள் வருவேன் என்று கூறி அம்மூதாட்டி மறைந்தார். சிறுவர்கள் ஊருக்குள் ஓடிச்சென்று ஊர் மக்களிடம் விடயத்தைச்சொல்ல ஊரே திரண்டுவந்து வணங்கி கண்ணகி அம்மன் கோவிலைக் கட்டினார்கள் என்பது செவி வழியாக மொழி வழியாக கூறப்படும் கதையாகும்.

வைகாசி விசாகப்பொங்கல்

கண்ணகி அம்மன் அங்கு தரித்த தினமான வைகாசியில் பெளர்ணமி தினத்தன்று அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். ஆதிகாலத்தில் அம்மன் காட்சி கொடுத்த ஆடு மேய்க்கும் பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் இக்கோவில் பூசை வழிபாடுகளில் பிரதான பங்கு வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகாசிப் பொங்கலுக்கு ஒரு கிழமைக்கு முன்னர் கோவில் பூசகர், கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் ஒரு பித்தளைக் குடத்தை எடுத்துக் கொண்டு மேளதாளத்துடன் சிலாவத்தை என்னும் கடற்கரைக்குச் சென்று குடத்தில் தண்ணீர் எடுப்பது காலங்காலமாக கைக்கொள்ளப்படும் மரபாகும். கடல் அலை பொங்கி வரும்போது குடத்தை சரித்து நீரை ஒரே தடவையில் மொண்டு அள்ள வேண்டும். பின்னர் அக்குடத்து நீரை முள்ளியவளையில் உள்ள காத்த விநாயகர்ஆலயத்தில் வைப்பார்கள்.

வைகாசி பொங்கல் தினத்தன்று இக்குடத்து நீரை வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் அம்மனுக்கு பய பக்தியோடு விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.

வைகாசி தினத்தன்று பொங்கல் நடுச்சாமம் 12 மணிக்கு ஆரம்பமாகும். பிராமணர்கள் மந்திரங்களை ஒலிக்க கட்டாடி உடையார் (நூல் கட்டி ஆடுபவர் - கட்டாடி உடையார்) என வழங்கப்படும் ஒருவர் பொங்கல் பானையை மடியில் வைத்து அதை வழுந்து சுற்றி மாவிலைகளையும் கட்டி அப்பானையை அடுப்பில் வைப்பார். அந்த சந்தர்ப்பதில் அக்கட்டாடி உடையாருக்கு தெய்வ சக்தியின் அருளாலே உரு வருவதுடன் அடியவர்கள் கொடுக்கும் அரிசியை ஒவ்வொரு திசைக்குமாக வானத்தை நோக்கி உயர வீசுவார். அவர் அவ்வாறு அரிசியை வீசுவது அம்மனின் தோழிகளைச் சென்றடையும் எனவும் நம்பப்படுவதுடன் எறிந்த அரிசி மண்ணிலோ அல்லது பக்தர்களின் தலையிலோ விழுவதில்லை. இதுவும் அம்மனின் அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தல விருட்சம்

திருக்குறளில் மென்மைக்கு உதாரணமாகக் கூறப்படும் மலர் அனிச்சம் மரலாகும். வற்றாப்பளை அம்மன் கோவில் மூலஸ்தனத்தின் அருகில் அனிச்ச மரம் என்று ஒரு மரம் உண்டு. அந்த மரத்துக்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் ஒரு அதிகாரி உங்கள் அம்மனுக்கு அற்புதம் செய்ய முடியுமா? என்று பரிகாசம் செய்தாராம். ஒரு முறை அவ்வதிகாரி அகம்பாவத்துடன் குதிரையில் கோவிலைத் தாண்டி செல்லும்போது இந்த அனிச்சம் மரம் பயங்கரமாக குரைத்ததுடன் அனிச்சம் காய்கள் பயங்கர காற்றுடன் அந்த அதிகாரி மேலே வீசி எறியப்பட்டனவாம். அந்த போர்த்துக்கேய அதிகாரி இந்த தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தரையில் விழுந்தாராம். இதற்கு பிறகு அந்த அனிச்சம் மரம் இன்று வரையில் பூப்பதும் இல்லயாம். காய்ப்பதும் இல்லையாம்.இதுவும் அம்பாளின் அற்புதமாக கருதப்படுகிறது.

வழிபாட்டு நம்பிக்கை

பத்தினித் தெய்வமான கண்ணகியின் காற்சிலம்பிற்கு சின்னம்மை, பெரியம்மை, சின்னமுத்து, கூவக்கட்டு, குக்கல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் அதிசயமான சக்தியுண்டு என்பது மக்களின் பொதுவான நம்பிக்கையாகும். அதற்காக கண்ணகி அம்மன் வழிபாட்டு முறையில் மரபு வழியாக கோவில்களில் காவடி, பால் காவடி, பறவைக்காவடி, தீ மிதித்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்தி முறைகள் மக்களால் நம்பிக்கையுடன் காலங்காலமாக கைக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு பத்தினித் தெய்வமான கண்ணகி அம்மன் தனது பத்தாம் பளையான வற்றாப்பளையில் இருந்துகொண்டு தன்னை பக்தியுடன் வழிபடும் அடியவர்களுக்கு சிற்றாடை இடை உடுத்தி சின்னஞ்சிறு பெண்போல அம்மன் காட்சி தருகிறாள்.

படித்தவா்கள் பகிருங்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம் வாய்ந்த வற்றாப்பளை அம்மனின் பெருமையை உலகறிய செய்வோம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...