வீசும் காற்றின் திசையையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையும் பொறுத்து தென்றல், வாடை என பிரித்தனர் நம்மவர்கள். தென்கோடிக்கரையில் இருந்தாலும் குமரியில் இருந்து தென்றல் வீசுவதாக கூறுவதில்லை. பொதிகையில் இருந்து அது புறப்படுவதாகத்தான் பேச்சு.
‘சூரியனோடும், தமிழோடும் தோன்றிய மலை‘ என வில்லிபுத்தூரார் பாடியது தற்புகழ்ச்சியோ, உயர்வு நவிற்சியோ அல்ல. பூமி தோன்றிய போதே தோன்றிய போதே பொதிகையும் இருந்திருக்கலாம் என நிலவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். மலையில் வாழும் மனித குல முன்னோர்களான மந்திகளை பார்த்த உயிரியல் வல்லுநர்களும் இதை ஒத்துக்கொள்கின்றனர்.
உலகில் பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்த 18 மலைத்தொடர்களில் அஸ்ஸாம் முதல் சிக்கிம் வரை உள்ள வடகிழக்கு மலைத்தொடரும், குஜராத் முதல் குமரி வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலையும் அடங்கும். ஆனால், ஆன்மீக சிறப்பும் மூலிகை செழிப்பும் பொதிகையின் புகழை பல அடி உயர்த்தியுள்ளன.
தமிழ் தோன்றிய இடமாகக் கருதப்படுவதால் பொதிகை தமிழ் கூறும் நல்லுலகின் தனிக்கவனம் பெறுகிறது. அருவிகள் ஆர்த்தெழும் திருக்குற்றாலம் அடங்கலாக பொதிகை மலைத்தொடர் அகன்று அமைந்திருக்கிறது. இத்தொடரின் முத்தாய்ப்பாக அகத்தியர் தங்கிய ஏக பொதிகை இலங்குகிறது. குற்றாலம் தேனருவிக்கு மேலே உள்ள பரதேசி புடவு தமிழ் தோன்றிய இடம் இது என்பதற்கு சான்றாக உள்ளது. இங்கு பொறிக்கப்பட்டுள்ள 15 எழுத்துக்களை இதுவரை யாராலும் படித்தறிய முடியவில்லை. அந்த எழுத்துக்கள் தமிழின் வட்டெழுத்து, தமிழிக்கு முந்தைய ஆதி எழுத்துக்களாக அறியப்பட்டுள்ளன.
பாபநாசம் மேலணையில் படகு சவாரியோடு தொடங்குகிறது பொதிகை பயணம்.
மேலணைக்கு மேலே தமிழரின் ஆதி ஐங்குடிகளில் ஒரு குடியினரான பாணர்களின் தாகம் தீர்த்த பாணதீர்த்தம் உள்ளது. இது சித்தர்கள் தியானம் செய்த இடமாக கருதப்படுகிறது. இதையடுத்த கல்யாணி தீர்த்தம் அருகே உள்ள பாறையில் விஷ்ணு, ஆஞ்சநேயர், அகத்தியர் உருவச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
பாணதீர்த்தத்துக்கு மேலே துலுக்க மொட்டை அமைந்துள்ளது. இங்குதான் இசுலாமியராக மாறி யாக்கோபு என பெயர்மாற்றம் பெற்ற சதுரகிரி சித்தர் ராமதேவர் தவம் செய்தார். இசுலாமியராக மதமாறியதால் இவர் மற்ற சித்தர்களால் ஒதுக்கப்பட்டதாக வரலாறு.
துலுக்கமொட்டையை அடுத்து காணிகள் வசிக்கும் இஞ்சிக்குழி உள்ளது. காணிகள் அகத்தியரால் தாங்கள் வடக்கிலிருந்து அழைத்து வரப்பட்டதாக கூறுகிறார்கள். குறவர், பளியர்கள் வரிசையில் தமிழக பழங்குடி மக்களாக குறிக்கப்பட்டாலும் மலையாளமே தங்களின் தாய்மொழி என்கின்றனர். பங்கிப்புல், ஆவோலை வேய்ந்த குடிசைகளில் வசிக்கும் இவர்களுக்கு கையில்லம், மூட்டில்லம் என குலப்பிரிவுகள் உள்ளன. இல்லம் பார்த்தே இல்லறம் நடத்துகின்றனர். இல்லம் மாறி காதலித்தால் காதலர்களை குனிய வைத்து முதுகில் கல் ஏற்றி தண்டிப்பார்கள். மணப்பெண்ணுக்கு தாவள்ளிக்கொடியில் தாலி அணிவிப்பது வழக்கம். ஆனால் கால வெள்ளத்தில் தங்கள் பழமையிலிருந்து மாறிவிட்டனர். காணிகளின் குலதெய்வம் தம்பிரமுத்தானின் கோயில் கண்ணாடி புல் பாறையருகே உள்ளது. தம்பிர முத்தானை கொக்கரை வாத்தியம் இசைத்து வழிபடுகிறார்கள்.
இஞ்சிக்குழிக்கு மேலே ஈத்தங்காடு நிறைந்த பூங்குளம் அமைந்துள்ளது. பொருநையாகிய தாமிரபரணி இங்கிருந்து தான் பாணதீர்த்தத்துக்கு வருகிறது. எழுத்தச்சன் மலையாளத்தை உருவாக்கியது போல் அகத்தியர் தமிழை இயற்றியதாக பலரும் தவறாக எழுதுகின்றனர். அவருக்கு முன்பே சிவனாலும் முருகனாலும் வளர்க்கப்பட்டதல்லவா தமிழ்? அகத்தியர் அவர்களிடம் இருந்து கற்றிருக்கலாம். அவரது அகத்தியத்திலேலே எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல், இலக்கியத்திலிருந்து இலக்கணம் இயற்றப்படுவதாக கூறியுள்ளார். அவர் எழுதியது இலக்கண நூல் என்பதால் அதற்கு முன்பே இலக்கியம் இருந்திருப்பது உறுதியாகிறது. அகத்தியர் தமிழ் கற்றது பற்றி இருவேறு புராணக்கதைகள் கூறப்படுகின்றன. சிவபெருமான் திருமணத்துக்கு தேவர், முனிவரெல்லாம் கூடியதால் இமயம் தாழ்ந்தது. தெற்கே செல்ல அகத்தியருக்கு இறைவன் ஆணையிட்டார். ‘அங்குள்ள மொழி தெரியாதே‘ என்று தயங்கியதால் இறைவன் அவருக்கு தமிழறிவித்தாராம். இது ஒரு கதை.
காசியில் வட மொழி வல்லுநர்களோடு மாறுபட்ட அகத்தியர் வேறு மொழி கேட்டு முருகனை வணங்க, தென்மூலையில் ஓரிடத்தை காட்டி ‘அதனை எடுக்க‘ என்றாராம். செவ்வேள் சுட்டிய இடத்தில் சுவடிகள் சில கிடந்தனவாம். அந்த இடமே பூங்குளம். இது வேறு கதை. இரு கதைகளும் தமிழை வளர்த்த அகத்தியனை ‘வேற்றாளாக‘ காட்டவே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. வள்ளுவருக்கு பூணூல் அணிய முயன்ற வன்முறை கூட்டத்தின் இடைச்செறுகலே இவை.
பூங்குளத்தில் அபூர்வமான கருட மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த பூக்களின் எண்ணிக்கையை வைத்தே வறுமையையும் செழுமையையும் காணி மக்கள் கணிக்கின்றனர். அதிகம் பூத்தால் மழை பொழியும் என்றும், குறைவாக பூத்தால் வறட்சி ஏற்படும் என்றும் நம்பிக்கை. இங்கு ஈத்தங்காடு நிறைந்திருப்பதால் அதை விரும்பியுண்ணும் யானைகள் கூடுகின்றன. சின்னச்சின்ன குன்றுகளாக அவை அசைந்து வரும் ஒய்யாரம் காண்போருக்கு கண் கொள்ளாக் காட்சி. பூங்குளத்துக்கு அருகிலேயே நெய்யாற்றுக்கு தண்ணீர் வழங்கும் பேயாறு ஓடுகிறது. கரை தொட்டு நிறைந்து வரும் இதில் ஒரு புத்துணர்ச்சிக்குளியல் போடலாம்.
பூங்குளத்தை கடந்தால் சங்குமுத்திரையை அடையலாம். திருவாங்கூர் சமஸ்தான எல்லையான அங்குள்ள பாறையில் சங்கு சக்கர முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மேலேறினால் ஏக பொதிகையை அடையலாம். சங்கு முத்திரையை அடையாளமாக கொண்டு பார்க்கும் போது ஏக பொதிகை தமிழக எல்லைக்குள் தென்பட்டாலும் அது கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அகத்தியரை தரிசிக்க செல்வோர் அம்மாநில அரசின் அனுமதியை பெறவேண்டியுள்ளது. கேரளாவிலிருந்து சுற்றுலா வருவோரும் நமது பகுதி வழியாகவே பொதிகைக்கு ஏற வேண்டியுள்ளது. இதனால் இதுவரை அனுமதி மறுக்கவில்லை. ஆனால், மங்கல தேவி கண்ணகியை வழிபட விடாமல் வழிமறிக்கும் நிலை வராமலிருக்க சரியாக அளந்து எல்லையை மறுநிர்ணயம் செய்தால் நல்லது. பழனி, கருவூர் என பல ஊர்கள் சித்தர்கள் சமாதியடைந்ததால் சிறப்பு பெறுகின்றன. ஆனால் பொதிகையோ அகத்தியர் வாழ்ந்ததால் பெருமையடைகிறது. அவர் சமாதியடையாமல் அரூபியாக காற்றில் உலாவுவதாகவும், தைப்பூசம் முதல் சித்ரா பவுர்ணமி வரை நிறைநிலா நள்ளிரவுகளில் தரிசனம் தருவதாகவும் ஆன்மீகவாதிகள் நம்புகின்றனர்.
பொதிகையின் தென்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் கல்லால் மூடப்பட்ட குகை ஒன்று உள்ளது. அகத்தியர் ஏடுகள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள
ஏக பொதிகையை அகத்திய கூடம் என்றே கேரளத்தினர் அடையாளம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் அகத்தியர் கதையும் அவ்வை கதையும் பலவித அனுமானங்களை ஏற்படுத்துகின்றன. மதுவுண்டு களித்த அதியமானின் தோழி, காதலை பாடிய இளமங்கை என இலக்கியத்தில் பல தோற்றம் தருகின்ற அவ்வையை கம்பூன்றிய மூதாட்டியாக கடற்கரையில் நிறுத்தியது போல், மொழியிலக்கணம் இயற்றிய புலவர், நிருதர்களையும் இராவணனையும் விரட்டிய ஈஸ்வரனின் தளபதி என புராணங்களில் பல அவதாரம் எடுத்த அகத்தியரை கமண்டலம் ஏந்திய குறுமுனியாகவே மலையில் நிறுத்தியுள்ளனர். இலக்கியங்களை ஆராய்ந்தால் பத்துக்கு மேற்பட்ட அவ்வைகளையும் அகத்தியர்களையும் காணமுடிகிறது. இருவரை பற்றியும் கட்டுக்கதைகளே அதிகம் புனையப்பட்டுள்ளன.
பொதிகை மலைத்தொடரில் தான் தமிழகம் எங்கும் கோயில் கொண்டுள்ள சாஸ்தாக்களுக்கெல்லாம் மூல சாஸ்தாவான சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. ஐயப்பன் பிறப்பும் வளர்ப்பும் இங்கு நிகழ்ந்ததாக கர்ண பரம்பரை கதை உள்ளது. கல்லில் தோன்றி கடலில் கலக்கும் வரையில் பொருநையில் நூற்றுக்கு மேற்பட்ட தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. அவற்றுள் மலையடிவாரத்தில் உள்ள தாமிரபரணி, வேத தீர்த்தங்களும், மலை மீது உள்ள கல்யாண, பைரவதீர்த்தங்களும் முக்தியும் சித்தியும் அளிக்கும் என்பது பக்தர்கள் எண்ணம். இராவணன் மாவீரன், இசைவாணன் என்பதோடு சிறந்த சித்த மருத்துவனும் கூட. அவன் பொதிகை மலைக்கு பலமுறை வந்ததாக புராணங்கள் மூலம் தெரியவருகிறது.
புவிப்பரப்பில் முதலில் தோன்றிய நுண்ணுயிர் முதல் மனிதனுக்கு முந்தைய மந்தி வரை பொதிகையில் உள்ளன. இது குறித்து வனத்துறை துணை இயக்குநர் பத்திரசாமி கூறுகையில்,‘ இந்த பிரபஞ்சத்தில் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வெடிப்பில் விழுந்த சிறு துண்டாகிய பூமி 500 கோடி வருடங்களுக்கு முன் குளிர்ச்சியடைந்தது பூமியானது. அதில் 300 கோடி வருடங்களுக்கு முன்பு உயிர்த்தோற்றம் உண்டானது என்கின்றனர். பூமி குளிர்ந்து ஒருவித வடிவத்துக்கு வந்து உயிர்கள் உருவான காலத்திலேயே பொதிகைகையும் தோன்றியிருக்கலாம். பொதிகை மலை 6000 சதுர கிமி பரப்பு கொண்டது. இதில் அகத்திய மலையின் உயரம் 1868 மீட்டர். நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் தமிழ்நாட்டில் 76 உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் 121 உள்ளன. 27 வகை மீன், 9 வகை தவளைகள் பொதிகையில் மட்டுமே காணப்படுகின்றன. 177 ஊர்வனவற்றில் 157 வகைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டும் உள்ளன. 39 வகை இங்கு மட்டுமே வாழ்கின்றன. கரும்பு, சோளம், கம்பு, ராகி போன்ற உணவு தானியங்கள் 260ல் 60க்கு மூலவித்து இங்குள்ளது. மீன்வகை 165. இங்கோ 218 உள்ளன.‘ என்றார்.
மூலிகைகளின் மூல ஸ்தானம் பொதிகை மலை.‘ மூட்டு வலியை போக்கும் பளிங்கு காய், தாமிரத்தை பஸ்பமாக்கும் கல் தாமரை விஷம் முறிக்கும் கீரிக்கிழங்கு, சர்க்கரை நோயை போக்கும் பொன்கொரண்டி, என பல்வேறு மூலிகைகள் பொதிகையில் உள்ளன. மருத்துவ குணம் நிரம்பிய கள் சுரக்கும் ஆலம், சாலம், காந்தம், கூந்தல் உள்ளிட்ட 7 வகை பனைகள், 10 ஆண்டுகளில் காய்த்து, காயில் உள்ள விதையால் கர்ப்பப்பை புற்றை அகற்றும் கல்வாழை, பட்டையால் பாம்பிம் நஞ்சை இறக்கும் ஞாறவாழை உள்ளிட்ட 7 வகை வாழைகள் இங்கு வளர்கின்றன. உலகில் உள்ள பூக்கும் தாவரங்கள் 5640ல் 2654 வகை இங்கு உள்ளன. 600க்கு மேற்பட்ட மூலிகைகள் இங்கு மட்டுமே வளர்கின்றன.‘ என்கிறார் தமிழ் மருத்துவக்கழக தலைவர் மைக்கேல் செயராசு.
வார்னிஷ் தயாரிக்க உதவும் குலவு, விஷக்கடி வீரியத்தை போக்கும் புலவு, சிறுநீர்ப்பை கல்லடைப்பை நீக்கும் சர்க்கரை வேம்பு, தெம்பூட்டும் பாப்பிக்கொடி,தலைமுடியை கருகருவென வளர வைக்கும் கருநீலி, வசியம் செய்ய பயன் படும் மயிற்கண் போன்ற மயிற்சிறகை, சர்க்கரை வ் உதவும் கட்டுக்கொடி, கட்டியை உடைக்கவும், சத்ரு சம்ஹாரத்துக்கும் பயன்படுத்தும் செருப்படை போன்ற மூலிகைகள் இங்கு கொழித்துக்கிடப்பதாக விக்கிரமசிங்கபுரம் ஜெயராஜ் சுவாமிகள் கூறுகிறார்.
மானிடனின் முன்னோடிகளான குரங்கு, தேவாங்கு, மந்திகளோடு சிங்கவால் குரங்கும் இங்கு உண்டு. 895 சதுர கிலோ மீட்டரில் பரந்துள்ள களக்காடு&முண்டன்துறை வனவிலங்கு சரணாலயம் பறக்கும் அணில், மரநாய் முதல் யானை, புலி, கரடிகளுக்கு வாச ஸ்தலமாக இருக்கிறது. சிங்கங்களும் இங்கு இருந்திருக்கலாம் . சிங்கம்பட்டி, சிங்கம்புணரி என சிங்கப்பேர் கொண்ட சுற்றுப்புறக்கிராமங்களே இதற்கு சாட்சி. சிங்கம்பட்டி ஜமீனின் ராஜ முத்திரையும், இதே மலையின் தொடர்ச்சியான ஸ்ரீபாத மலை என்னும் ஆதம் மலையை கொண்ட இலங்கை அரசின் இலச்சினையும் சிங்கமாக இருப்பது அசைக்க முடியாத சான்று. மேலும், இலங்கையிலும் இங்கும் வாழும் மனித இனம் மட்டுமல்ல, உயிரினங்களும் ஒன்றே என்று உயிரியல் உறுதிப்படுத்துகிறது.
முன்னமே சொன்னது போல் அமைதியான தென்றலும், அமுதமான தமிழும், அருசுவையான மூலிகை நீரும் அருந்தி ஆரவாரமான நகர சூழலை விட்டு சொர்க்கானுபவம் பெற பொதிகை சுற்றுலா பொருத்தமாக தோன்றுகிறதல்லவா?
No comments:
Post a Comment