"எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்" : சுந்தரமூர்த்தி நாயனார்
அவர் பெயர் தாயனார். சோழநாட்டில் திருவாரூருக்கும் திருத்துறைப்பூண்டிக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் ஊரான கணமங்கலம் எனும் ஊரில் இருந்த விவசாயி. சொந்தமாக நிலம் வைத்திருந்த பெரும் விவசாயி.
அந்த கணமங்கலம் இப்பொழுது கண்ணந்தங்குடி என அழைக்கப்படுகின்றது.
அந்த தாயனார் மிக அன்பான சிவபக்தர். சிவன் அவரின் ரத்தத்தில் உயிரில் கலந்த கடவுள். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். அன்றாடம் சிவாலயத்தில் அமுது படைப்பது அவரின் முதல் கடமை.
எந்நாளும் குளித்து திருநீறு பூசி, செந்நெல் அமுது படைத்து, செங்கீரை குழம்பும், மாவடுவும் எடுத்து சிவனுக்கு படைத்து வந்தார், சரி, எந்த ஆலயத்தில் படைத்தார்?
கணமங்கலம் அருகில் இருந்த "தண்டலைச்சேரி" ஊரிலிருக்கும் நீள்நெறிநாதர் ஆலயம் எனும் சிவாலயத்தில் அமர்ந்திருக்கும் அந்த சிவனுக்குத்தான் அனுதினமும் படைத்து வந்தார்.
அது சக்திவாய்ந்த சிவாலயம், சோழமன்னனின் குஷ்ட நோய் தீர்த்தது முதல் படிக்காசு புலவர் "தண்டலை சதகம்" பாடியது, திருஞானசம்பந்தர் பாடியது வரை அங்கு ஏகப்பட்ட விஷயம் உண்டு. மிகப் பிரசித்திப் பெற்ற சிவாலயம் அது.
அந்த நீள்நெறிநாதனுக்குத் தான் செந்நெல், செங்கீரை, மாவடு என அனுதினமும் படைத்து வந்தார் தாயனார். அங்கு அப்படிப் படைக்கப்பட வேண்டும் என்பது அந்த ஆலயத்து மரபு.
செந்நெல், கார்நெல் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். செந்நெல், வெண்ணெல், கார்நெல் (கருப்பு நெல்) என ஏகப்பட்ட நெல்வகைகள் அன்று தமிழகத்தில் இருந்தன. அந்நாட்களில் அந்த செந்நெல் அரிசி என்பது உயர்வானது . விளைவிக்கக் கொஞ்சம் சிரமமானது. சுவை அதிகம், சத்தும் அதிகம். விவசாயிடம் உள்ள நெல்லில் மிக உயர்வானதாக அன்று செந்நெல் இருந்தது.
இன்றையக் கணக்கில் பாசுமதி அரிசிக்கு ஈடாக சொல்லலாம்.
சிவனுக்கு செந்நெல்லும் தனக்கு கார்நெல் எனப்படும் சாதாரண அரிசியும் போதும் என வாழ்ந்து வந்தார் தாயனார். இருப்பதில் உயர்வானதை சிவனுக்குக் கொடுப்பதில் மனநிறைவு கொண்டார். அது அந்நாளைய தமிழர் மரபாய் இருந்தது.
விவசாயி என்பவனுக்கு நல்ல விளைச்சல் தான் லாபம், அவனின் முழு உழைப்பின் பலன் அது. அந்த சிறந்த விளைச்சலான செந்நெல்லை காசாக்காமல் சிவனுக்கு அமுதாகப் படைப்பது என்பது தியாகங்களில் உயர்ந்த தியாகம். அன்பில் உயர்ந்த அன்பு.
மிகப்பெரும் விவசாயியாக இருந்தாலும் செந்நெல் சிவனுக்கு , கார்நெல் தனக்கு என தன்னைத் தாழ்த்தி சிவனை உயர வைத்து வணங்கிக் கொண்டிருந்தார்.
அனுதினமும் சிவன் தன்னோடு தன்னை நம்பி இருப்பதாகவும், அவர் செந்நெல் அரிசி உண்டு மகிழ்வாக இருப்பதாகவும் அடிக்கடி நினைத்துக் கொண்டார் தாயனார்.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு தாய் தன் பிள்ளைக்கு கண்ணும் கருத்துமாக உணவூட்டுதல் போல மிக அன்பாகவும் கடமையாகவும் அதைச் செய்து வந்தார்.
சிவனுக்கு அது மிக விருப்பமாக இருந்தது. குழந்தையிடம் தாய் காட்டும் அக்கறை போல தாயனார் தன்மேல் காட்டும் அன்பில் நெகிழ்ந்தார் சிவன்.
ஒவ்வொரு நாளும் தாயனார் அமுது படைக்கும் பொழுது "விடேல் விடேல்" என்ற ஒலி மாவடு கடிக்கும் ஓசையைப் போல் தாயனார் காதில் அசரீரியாய் விழும்.
'விடேல்' எனும் சொல்லுக்கு கைவிட மாட்டேன் என்பது பொருளாகும். 'உன் அமுதை ஏற்றேன். உன்னை கைவிட மாட்டேன் ' என சிவனே தன் காதில் சொல்வதாக மகிழ்ந்தார் தாயனார்.
இப்படியே அவர் அனுதினமும் செந்நெல், செங்கீரை அமுது படைப்பதும், சிவன் அதை ஏற்றுக் கொள்வதும் வழக்கமாயின. இப்படியே தொடர்ந்தால் தாயனார் சாதாரண பக்தராகிவிடுவாரே. பின் எப்படி நாயன்மாராவது?
இந்த நல்ல பக்தனை உலகறிய செய்யாவிட்டால் எப்படி?.. பெரும் அங்கீகாரம் கொடுத்து உயர்த்தாவிட்டால் எப்படி என்று சிவன் புன்னகைத்தார்.
பக்தன் நாயன்மாராவது என்றால் சோதனை வரவேண்டும் அல்லவா? முதல் சோதனையினை வைத்தார் சிவன். ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றாய் குறைய ஆரம்பித்தன.
தங்கம், நிலம், மாடு இவை சேரும் நேரம் நல்லநேரம். இவை ஒவ்வொன்றாக இழக்கும் நேரம் சோதனை காலம்.
அப்படி மாடுகள் முதலில் போனது, சாவும், கொள்ளை நோயுமாக அவை ஒழிந்தன. கொஞ்சம் கொஞ்சமாக நகைகளும் கரைந்தன. நிலமும் விளைச்சல் கொடுக்க மறுத்து எதிர்த்து நின்றது. விளையா நிலம் கைவிட்டுப் போகும் எனும் நியதிக்குட்பட அதுவும் போனது.
பரம்பொருள் நினைத்தால் நொடியில் சேரும் செல்வம், அவன் மாற்றி நினைக்கும் பொழுது பனிபோல் மறையும். தாயனாருக்கு அப்படி மாறியது.
அந்நிலையிலும் செந்நெல் அரிசி, செங்கீரை , மாவடு என தண்டலை நீள்நெறிநாதனுக்கு செய்ய வேண்டியதை செய்துக் கொண்டே இருந்தார், கொஞ்சமும் கலங்கவில்லை.
அப்பொழுது 'விடேல் விடேல்' எனும் ஒலியும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
உழைப்பவனுக்கு சொந்த நிலம் என்ன? கூலி நிலமென்ன? உழைப்பு அவன் கடமை. அதில் கலங்காமல் இருந்தார் தாயனார்.
பெரும் விவசாயியாக வலம் வந்த தாயனார் கூலிவேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அக்காலங்களில் கூலியாக நெல்தான் கொடுப்பார்கள். அப்படி செந்நெல்லும், கார்நெல்லும் மாறி மாறிக் கிடைத்தன.
இதில் செந்நெல்லை சிவனுக்கும், கார்நெல்லை தனக்குமாக வைத்து மகிழ்வோடும் வாழ்ந்து வந்தார். அவரின் சிவத் தொண்டு சிக்கலே இல்லாமல் தொடர்ந்தது. வெயிலோ , மழையோ, வறுமையோ , செழுமையோ எதுவாயினும் அவர் சிவத்தொண்டை பாதிக்கவில்லை.
அதை ஒரு சுமையாக அவர் கருதவில்லை. தாயின் கடமையில் ஒன்று என்பது போல அன்புடனும் ,பாசத்துடனும் சிவனுக்கு அமுது படைத்துக் கொண்டே இருந்தார்.
அவர் அமுது படைக்கும் பொழுதெல்லாம் ' விடேல் விடேல் ' ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது.
தாயனாரின் அன்பில் கரைந்தார் சிவன் . ஆயினும் சோதனைகளை இறுக்கினார்.
நிலம் போனாலும் கூலிவேலை செய்து செந்நெல் கொண்டு வருகின்றான். இனி கூலியில் அடித்தால்? அவன் உணவான கார்நெல் கிடைக்காமல் செய்தால் அவன் தன் உணவில் கைவைப்பானா? இல்லை . சிவத் தொண்டை விடுவானா?
உணவா, சிவமா என முடிவெடுக்கும் நிலையில் அவன் என்ன செய்வான் என சோதிக்க முடிவெடுத்தார்.
பரமன் விரும்பியபின் என்னாகும். விளைவதெல்லாம் செந்நெல்லாக விளைய, கார்நெல்லுக்கு வழியின்றி போனது, செந்நெல் சிவனுக்கு என்பதால் அதிலிருந்து ஒரு நெல் மணியினை கூட தொட நாயனார் விரும்பவில்லை. அது சிவனுக்குரியது என்பதில் சரியாக இருந்தார்.
அப்பொழுது அறுவடை முடிந்து விதைப்பு தொடங்கியிருந்தது. சிலகாலம் பொறுத்தால் கார்நெல் கிடைக்கும் என்ற சூழல்.
அக்காலம் இக்காலம் போல நினைத்ததும் அரிசி வாங்கிவிட முடியா காலம், அரிசி வாங்கவும் இவரிடம் பணமில்லை, கார் அரிசிக்கு கையேந்தினால் செந்நெல்லை கொடுக்க வேண்டிவரும்.
அந்த சிவனுக்கான சொத்தை அவர் எப்படி கொடுக்க முடியும்?
ஆம், வீட்டிலோ செந்நெல் இருந்தது. அதை விற்றால் கார்நெல் வாங்கி பசியாறலாம்தான். ஆனால் மூன்று மாதங்கள் சிவனுக்கு அமுது படைப்பது எப்படி? முன்பே சொன்னபடி அக்காலத்தில் நெல்லை தவிர கூலி இல்லை. எல்லா செந்நெல்லும் கூலியாக வந்ததே.
உண்டால் செந்நெல் இல்லையேல் பட்டிணி என இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டார் தாயனார், உன்னத தொண்டனை அந்த கோலத்தில் நிறுத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் சிவன்.
சோறு போடும் விவசாயிக்கு சோற்றிலே சோதனை வைத்தார் சிவன்.
தாயனார் அசரவில்லை, அவரின் மிகப்பெரும் ஆசீர்வாதம் அவர் மனைவி. அது என்னவோ தெரியவில்லை . பரமன் எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுத்து விட்டுத்தான் சோதிப்பான், அப்படிப் பெரும்பான்மை சிவனடியார்களுக்கு நன்மனைவியரே அமைந்திருக்கின்றனர்.
மனைவியின் குணம் அவ்வளவு முக்கியம் என்பது சிவனுக்கும் தெரிந்திருக்கின்றது.
அந்த மகராசி அப்பொழுதும் முகம் மாறினாள் இல்லை. வீட்டின் பின்னால் கீரை இருப்பதைக் கண்டாள் . அதில் இலை மட்டும் எடுத்து கடைந்துக் கொடுத்தாள். செந்நெல் சிவனுக்கு , புழக்கடை கீரை தனக்கு என தன் கடமையினை தொடர்ந்தார் தாயனார்.
அப்பொழுதும் செங்கீரை சிவனுக்கு என விடப்பட்டிருந்தது.
அந்த வறுமையிலும் அமுது படைக்கும் பொழுதெல்லாம் அந்த "விடேல் விடேல்" ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த ஒரு வார்த்தையில் பசி, துன்பம், வறுமை எல்லாம் மறந்து மகிழ்ந்தார் தாயனார் .
வீட்டுக்கீரைச் செடிகளை பக்குவமாய் கையாண்டாள் தாயனார் மனைவி. முதலில் சில நாட்கள் இலைகள் மட்டும் எடுத்தாள் . பின் இலையின்றி தண்டைக் கடைவாள், இப்படி நாட்களை கடத்தினாள். பின் கீரையும் இல்லை.
எறும்புப் புற்றிலிருந்து அரிசி எடுத்து மண் களைந்து கஞ்சி வைத்து அவருக்கு பசியாற்றினார், அதுவும் சில நாட்களில் இல்லை.
இனி தண்ணீரைத் தவிர உணவு இல்லை. சிவனுக்கான செந்நெல் மட்டும் உண்டு என்ற நிலையில் தண்ணீர் குடித்து வாழ ஆரம்பித்தது அக்குடும்பம்.
வீட்டில் செந்நெல் வைத்துக் கொண்டு பட்டினி கிடந்த அந்த தாயனார் குடும்பத்தை ஊர் கேலிப் பேசிற்று. இவன் நாடகக்காரன் என்றது, அடிமுட்டாள் என்றது.
விவசாயித் தலைவனாக நிலமோடு இருந்தவன் சிவனுக்காக கடைசி கூலிக்காரனாக ஆன போதும் புத்தி வரவில்லை என்றது புத்திமிக்க மக்கள் கூட்டம்.
நானாக இருந்தால் இவனிடம் இருந்த வசதிக்கு இந்த ஊரையே வாங்கியிருப்பேன் என்றான் ஒருவன், நானாக இருந்தால் பக்கத்து ஊரையும் வாங்கியிருப்பேன் என்றான் இன்னொருவன்.
முன்னோர் செல்வம் என்பதால் இவனுக்கு மதிப்பு தெரியவில்லை, சும்மா அழித்துவிட்டான் படுபாவி என்றனர் பங்காளிகள்.
என் மனம் சிவனைத் தவிர யாருக்கும் புரியாத போது இவர்களுக்கு எப்படி புரியும் என கண்களைத் துடைத்துக் கொண்டு திருவமுது படைக்கத் தயாரானார் தாயனார்.
அன்றும் வழக்கம் போல் குளித்து சிவநாமம் ஜெபித்து, நெற்றியில் திருநீறிட்டு, பெட்டியில் சோறு, செங்கீரை , மாவடு என எடுத்து கொண்டு மனைவியுடன் தண்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தார் தாயனார்.
அவர் மனதில் உறுதி இருந்தது, ஆனால் உணவில்லா உடல்? அதுவும் சில நாட்களாக சாப்பிடாத உடல் என்ன செய்யும்? செல்லும் வழியில் அறுவடை முடிந்த வயலொன்றின் வரப்பில் நடந்தபொழுது அவருக்கு மயக்கம் வந்தது . நினைவு சுழல தரையில் வீழ்ந்தார், ஓடிச் சென்று தாங்கினாள் மனைவி.
அவர் விழுமுன் திருவமுதும் ,செங்கீரையும் , மாவடும் விழுந்தன. முதன் முறையாகப் படைக்கப்பட்ட அமுது கீழே வைக்கப்படும் பொழுது எப்பொழுதும் கேட்ட 'விடேல் விடேல்' எனும் ஒலி இல்லை.
உயிரற்ற உடல் போல் அதிர்ந்து நின்றார் தாயனார், கண்களில் நீர் பெருகிற்று.
"இறைவனுக்காக அமுதுப் படைத்து அதைக் கவனமாகக் கொண்டு வரத் தெரியாப் பாவி நான் . இதோ எல்லாம் வீழ்ந்தது. தெய்வத்துக்கான மாலை கூடத் தெருவில் விழக்கூடாதே . உணவு விழுந்தால் அது எவ்வளவு பெரும் தவறு?"
நினைக்கையிலே நெஞ்சு விம்மிற்று. அதுவும் 'விடேல் விடேல்' ஒலி கேட்காததது அவரை வெடித்து அழ வைத்தது.
தன் வறுமையில் கூடக் கலங்காத, தன் சொத்துக்களெல்லாம் அழியும் போதும் அழாத, தன் கடும்பசியில் கூடக் கலங்காத தாயனார், சிவன் இப்பொழுது கைவிட்டான் என கலங்கி அழுதார்.
அழுகையென்றால் அப்படி ஒரு அழுகை. மொத்தத் துன்பத்துக்கும் சேர்த்து அழுதது போல் இருந்தது அந்தக் கதறல்.
கதறி முடித்தப்பின் அமைதியானார், அவர் முகத்தில் ஒரு தெளிவு வந்தது. ஒரு புன்சிரிப்பும் வந்தது. கண்களில் உறுதியும், முகத்தில் வைராக்கியமும், உதடுகளில் ஏளன புன்னகையும் வர , அவர் கைகள் இடுப்பில் இருக்கும் அரிவாளைத் தொட்டன.
பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்கு ஏதோ விபரீதம் நடப்பது புரிந்தது, "சிவனுக்கான அனுதினக் கடமையில் இருந்து தவறி, அவருக்கான உணவினை பத்திரமாகக் கொண்டு செல்லமுடியாத அளவு பாவம் செய்துவிட்டேன்.
நிச்சயம் என் ஏதோ ஒரு தவறு சிவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் உணவினை ஏற்கவில்லை. இப்படிச் சிந்திப் போகும்படி செய்துவிட்டான். நான் இனி வாழத் தகுதியற்றவன்" எனச் சொல்லி அரிவாளைத் தொட்டார்.
ஒரு மனிதன் எது தன் உச்சப்பட்ச நம்பிக்கையோ, எதன் மேல் முழு அன்பும், ஆசையும் வைத்திருந்தானோ அது இல்லை எனும் பொழுதுதான் சாகத் துணிவான்.
தாயனாரின் முழு மனமும், உள்ளமும், ஆன்மாவும் சிவன் மேல் இருந்ததால் இனி சிவன் தனக்கு இல்லை , தன் தொண்டை ஏற்க முடியாமல், தன் அன்பின் அமுதை ஏற்க மனமில்லாமல் தள்ளி விட்டான் என மனம் நொந்து, சிவத்தொண்டனாக இல்லாத வாழ்வு முடியட்டும் எனக் கழுத்தை அறுத்து சாகத் துணிந்தார்.
கழுத்தை அறுத்து சாக விரும்புபவன் நிதானத்திலின்றி வெறியாகக் கடும்வேகத்தில் அரிவாளை எடுப்பான். அந்த ஆக்ரோஷத்தில் அவர் அரிவாளை எடுத்துக் கழுத்துக்குச் செலுத்த, மனைவி ஓடிவரும் முன் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
திடீர் வெளிச்சம் ஏற்பட்டது. நறுமணமும் வெண்புகையும் சூழ்ந்தன. இன்னிசை ஒலித்தது, பூமியில் இருந்து ஒரு கை வெளி வந்து தாயனார் கரத்தைப் பிடித்தது தடுத்தது. மிக மிகச் சுகமான பரவசமான உணர்வை அத்தொடுதல் தாயனாருக்குக் கொடுத்தது.
அதன் அருகில் இன்னொரு கரம் முளைத்தது . அது மாவடுவினை தொட்டது. அப்பொழுது "விடேல் விடேல்" எனும் மாவடு கடிபடும் அந்த ஒலி, அனுதினமும் எவ்வொலியைக் கேட்டு தாயனார் மனம் நிறைந்தாரோ, அந்த ஒலிக் கேட்டது.
குழந்தையினைக் கண்ட தாய் போல ஆனந்தக் கண்ணீரின் உச்சியில் மனம் நிறைந்து, " தண்டலை நீள்நெறி எம்பெருமானே" , என்று கைக் கூப்பித் தொழுதார்.
ஆம், சோதனையின் உச்சத்தில் தாயனார் தன்னைத் தானே வெட்டிக் கொள்ளும் முன் வந்து கைப்பிடித்து ஆட்கொண்டார் சிவன்.
அதுவும் எந்த மண்ணில் செந்நெல் விளைவித்துத் தனக்கு ஊட்டினானோ, அந்த மண்ணே கரமாக மாறி அவரைத் தடுத்து அவரின் அமுதையும் ஏற்றது.
கண்ணெல்லாம் நீராக, தேகமெல்லாம் ஒடுங்கியிருக்க , மனமெல்லாம் நிறைந்திருக்கக் கரங்களை தாயனாரும் அவர் மனைவியும் பார்த்துக் கொண்டிருந்த பொழுதே சிவன் அங்கு பார்வதியுடன் தோன்றினார்.
"மிகக் கொடிய வறுமையிலும் நீ என் மேல் கொண்ட அன்பினை விடாமல் பிடித்ததாலும், எனக்காக உயிர்விடத் துணிந்ததாலும் உன் அன்பில் நாம் கரைந்தோம், இனி கயிலாயத்தில் எம்மோடு இருக்கக் கடவாய்" என அவர்கள் இருவரையும் அழைத்து சென்றார் சிவன்.
கயிலையில் முகம் முகமாக எந்நேரமும் சிவனைத் தரிசிக்கும் வாய்ப்புப் பெற்றார் தாயனார். அவரின் அன்பு அவரை சிவனின் தலத்துக்கே கொண்டு சேர்த்தது.
அரிவாளால் தன்னை வெட்ட முயன்ற நாயனார், அரிவட்டாய நாயனார் என்றானார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவருமானார்.
இன்றும் திருவாரூர் பகுதி திருத்துறைப்பூண்டி பகுதியில் அரிவட்டாய நாயனார் வரலாறு மிகப் பிரசித்தம். அவர் சித்தி அடைந்த, சிவனைக் கண்ட நாளான தைமாதம் திருவாதிரை நாள் அவருக்கான குருபூஜையாகும்.
அன்று அப்பகுதி மக்கள் செந்நெல் அமுதுப் படைத்த அரிவட்டாய நாயனார் நினைவாக அதே தண்டலை நீள்நெறிநாதர் ஆலயத்தில் அமுது படைத்து மகிழ்வார்கள். அந்த சம்பிரதாயம் காலங்காலமாக நடைபெறும்.
தண்டலைக்கும் கண்ணந்தங்குடி கிராமத்திற்கும் இடையில் மண்ணில் கரம் தோன்றி அரிவட்டாய நாயனாரை காத்த இடத்தில் ஒரு நினைவு லிங்கம் உண்டு, அங்கேயும் வழிபடுவார்கள்.
இன்றும் அந்த கோவிலில் அரிவட்டாய நாயனாருக்கு சிலை உண்டு. அவர் கழுத்தை அறுத்த பொழுது சிவன் வந்து காத்த அந்தக் காட்சியும் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தைமேல் தாய் வைத்த அன்பினை போல் அரிவட்டாய நாயனார் சிவன்மேல் வைத்து அமுதூட்டி அந்த கைலாயம் ஏகினார். அவர் சிலை அந்த ஆலயத்திலே வைக்கப்பட்டிருக்கின்றது.
"எந்நிலையிலும் கடவுளுக்கான காரியத்தைக் கைவிடாதே. எந்த சூழலிலும் கைவிடாதே. முடிந்தமட்டும் அதை தொடர்ந்துவிடு. எந்நிலையிலும் அதை முன்னெடுத்து வந்தால் தாங்க முடியா சோதனையில் அந்த தெய்வமே உன்னை வந்து காக்கும்" என்பதே அரிவட்டாய நாயனார் வாழ்வு சொல்லும் தத்துவம்.
வேதமும், மந்திரமும், சாஸ்திரமும் , சம்பிரதாயமும் , வழிபாடும், பாடலும் , இசையும் எதுவுமே தெரியாத ஒரு கிராமத்து விவசாயிக்கு பெரும் அருள்நிலையும், தீராப் புகழும் கொடுத்தது அவனின் சுத்தமான சிவ அன்பு.
சிவனில் கரைந்து விட்ட அந்த அன்பு அவருக்கு அப்பெரும் பாக்கியத்தை கொடுத்தது.
திருவாரூர் பகுதி விவசாயிகள் போல எல்லா விவசாயிகளும் நினைவில் கொள்ளவேண்டியவர் அந்த அரிவட்டாய நாயனார்,. அவர் பெயரைச் சொல்லி விதைத்தால் மும்மடங்கு விளையும்.
திருத்துறைப்பூண்டி பக்கம் சென்றால் அந்த தண்டலை நீள்நெறிநாதர் ஆலயம், அந்த கண்ணத்தாங்குடி , அரிவட்டாய நாயனார், அரிவட்ட நாயனாரின் நினைவாக கட்டபட்ட நினைவிடங்களுக்கெல்லாம் செல்ல தவறாதீர்கள்.
ஒருமுறை அந்த ஆலயம் சென்று நீள்நெறிநாதரை தரிசித்துவிட்டு, அரிவட்ட நாயனார் செந்நெல் அரிசியோடு உலாவிய பகுதிகளை பார்த்து வணங்கிவிட்டு வாருங்கள். அதன் பின் உங்கள் வீட்டில் அரிசி எனும் செல்வம் ஒரு நாளும் குறையாது. உங்கள் தலைமுறையே அரிசிக்கு கையேந்தி நிற்காது
இது சத்தியம்...
No comments:
Post a Comment