"சம்பந்தப் பெருமான் தேவாரம்"
குறிப்பு: "நண்டாங்கோயில்", என்று தற்காலத்தே அழைக்கப் பெறுகிறது,
இது தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காவிரி வடகரை வழியே மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள "திருவியலூர்" என்ற பாடல் பெற்ற தலத்திற்கு வடக்கே 2கிமீ தொலைவில் அமைந்துள்ளது
இது "அம்பிகை நண்டுருவில் இறைவனை வழிபட்ட தலம், இந்திரனுங் கூட தன்னிலை மறந்து ஆலயத்தை சுற்றி அகழி ஒன்றில் தாமரை மலர்களை பயிரிட்டு அம்மலர்களை கொண்டு இத்தல இறைவரை வழிபட்டு வந்தனன்"
ஒருமுறை நண்டு உருவில் இருந்த அம்பிகை இந்திரனது காவலில் இருந்த தாமரை மலரைபறித்து வந்து இறைவனுக்கு சாற்ற முயன்று பெருமானது திருமேனியில் ஏறி படர்ந்து சென்றதனை கண்ட இந்திரன்,
தன் கைவாளால் நண்டினை ஓங்கி வெட்டினன், ஆனால் வெட்டு நண்டின் மேல் விழாமல் சுவாமியின் திருமேனி மீது விழுந்தது
இரண்டு வெட்டிற்கு தப்பித்த நண்டு மூன்றாவது வெட்டின் போது சிவலிங்கத் திருமேனியின் உச்சியில் ஏறியிருந்தது, "அச்சமயம் இந்திரன் நண்டினை வெட்ட முயன்ற போது இறைவன், லிங்க உச்சியில் ஒரு வளையை உண்டு பன்னி அதனுள் நண்டுருவில் இருந்த அம்பிகையை ஐக்கியப் படுத்தி கொண்டனர்"
உடனே அம்பிகை தன் பழமையான நண்டுருவு நீங்கி இறைவனுடன் காட்சி தரவே "தேவேந்திரன் மனந்திருந்தினன்" ஆதலால் இத்தலம் "திருந்து தேவன்குடி" என்று அழைக்கப் பெருகிறது
திருந்து தேவன்குடி தற்காலத்தில் மக்கள் வாழும் பகுதியாக இல்லாமல் நஞ்சை நிலப்பகுதியாக உள்ளது, நஞ்சை நிலங்களுக்கு மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது, காலையும் மாலையும் மட்டும் அருகிலுள்ள திருவியலூரில் இருந்து அர்ச்சகர் ஒருவர் வந்து வழிபாடு பன்னுகிறார்
நண்டு வழிபட்ட இறைவர் ஆதலால் "கற்கடகேஸ்ரர்" எனப்படுகிறார், சுவாமி திருமேனியில் இந்திரனது வெட்டு தழம்பும் நண்டுவளையும் இன்றுங் காணத்தக்கது
"ஆடிப்பூரமும் அமாவாசையும் கூடிய நந்நாளில் இருபத்தியொரு குடம் பசுப்பாலால் அபிசேகித்தால் வளையில் இருந்து நண்டு வெளிப்பட்டு காட்சி அளிக்கும் என்று "வசிஸ்ட்ட மாத்மியம்" என்ற நூல் கூறுகிறதாம்"
மேலும், உவேசாமி நாதையர் அவர்கள், "ஒரே நிறம் கொண்ட காராம் பசுப்பால் பத்து கலம் கொண்டு பெருமானை அபிசேகித்தில் லிங்க உச்சியில் பொன்னிற வண்டு ஊர்வது போல காட்சி கிடைக்கும் என்கிறார்கள்"
"திருஞானசம்பந்தப் பெருமான் தமது காவிரி வடகரை தலயாத்திரையில் திருவியலூரை வணங்கி செங்கண் விடையார் திருவேடங் காட்டும் திருந்து தேவன்குடி வந்தடைந்தனர்
"திருந்து தேவன் குடி மன்னும் சிவபெருமான் கோயில் எய்திப் பொருந்திய காதலிற் புக்குப் போற்றி வணங்கிப் புரிவார் மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று அருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில் ஞானத்து அமுது உண்டார்" என்பது சேக்கிழார் பெருமானது திருவாக்கு
"மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை புரிந்து கேட்கப் படும் புண்ணியங்கள் இவை அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே!!" என்று இறைவனது திருவேடச்சிறப்பினை குறிக்கும் சிறப்பு பொருந்திய பதிகத்தினை பிள்ளையார் இங்கருளியமையை சேக்கிழார் பெருமான் குறிப்புணர்த்துவது எண்ணுந் தொறும் இனிமை செய்வதாம்
"வேடங் கைதொழ வீடு எளிதாமே!!" என்ற அப்பரடிகள் வாக்கிற்கு இணங்க திருவேடத்தின் சிறப்பே இப்பதிகம் முழுதும் ஓதப்படுகின்றது
"மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான் நாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லையாம் பாவமே" என்று ஸ்ருதிபலன் கூறும் பதிகப் பாடல்கள் இவை
பண்: கொல்லி
பாடல்
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன்குடித் தேவர் தேவெய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே.
வீதி போக்காவன வினையை வீட்டுவ்வன
ஓதியோர்க்கப் படாப் பொருளை ஓர்விப்பன
தீதில் தேவன்குடித் தேவர்தேவு எய்திய
ஆதி அந்தம்மிலா அடிகள் வேடங்களே.
மானம் ஆக்குவ்வன மாசு நீக்குவ்வன வானை உள்கச்செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும்வண்டும் மிசை பாடுந் தேவன்குடி
ஆனஞ்சாடும் முடி அடிகள் வேடங்களே
பொருள்
திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும், தேவர்கட் கெல்லாம் தேவனாக விளங்குபவனும் , அருந்தவத்தோர்களால் தொழப்படுபவனுமான சிவபெருமானின் திருவேடங்கள் ( திருநீறு , உருத்திராக்கம் , சடாமுடி ) மருந்து வேண்டுபவர்க்கு மருந்தாகவும் , மந்திரங்கள் விரும்புவார்கட்கு மந்திரமாகவும் , சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும் .
தேவர்கட்கெல்லாம் தேவனாக , தீமையில்லாத திருந்து தேவன்குடியில் வீற்றிருக்கும் ஆதியந்தமில்லாச் சிவ பெருமானின் சிவவேடங்கள் கோயிலுக்குச் செல்லும்போது அணியப்பட்டு அழகு தருவன . தீவினைகளைப் போக்குவன . கற்று ஆராய்ந்தறிய முடியாத ஞானநூல்களின் நுண்பொருள்களைத் தெளிவாக உணரும்படி செய்வன
தேன் மணமும் , வண்டுகள் இன்னிசையும் விளங்கும் திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும் , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் சிவ பெருமானின் சிவவேடங்கள் , மன்னுயிர்களின் பெருமையை மேம்படச் செய்வன . வினைகட்குக் காரணமான அஞ்ஞானமான மாசினை நீக்குவன . முக்திக்குரிய வழிகளைக் காட்டுவன .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment