Sunday, May 31, 2020

நம்பெருமாள்

1310 ஆம் ஆண்டு மாலிக் கபூர் படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர்...

ஆனால், 1323 ஆம் ஆண்டு முகம்மது பின் துக்ளக்கின் படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்துவிட்டு, உற்சவர் அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி தம்முடன் எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு  கி.பி. 1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்)  திருவரங்கத்திற்கு 48 ஆண்டுகள் கழிந்து மீண்டும் எழுந்தருளினார். இதுவே அரங்கனின் வனவாசம் என்று வர்ணிக்கப்படுகிறது....

1323 ஆம் ஆண்டு சென்ற அழகிய மணவாளன், 48 ஆண்டுகள் கழித்து  மீண்டும் திருவரங்கம் வந்தபோது கிட்டத்தட்ட அனைவரும் அவரை மறந்தே விட்டனர் (அதாவது வரலாறு மறந்துவிட்டது). ஏற்கனவே படையெடுப்பின் போது பலர் கொல்லப்பட்டதால், வந்தவர் திருவரங்கத்தில் இருந்த அசல் அழகிய மணவாளன் தான என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது.

தங்கள் சந்தேகத்தை எப்படி தீர்த்துக்கொள்வது என்று வழி தெரியாது தவித்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அழகிய மணவாளனின் வஸ்திரங்களை துவைத்த ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் சென்றால் இதற்கு ஏதேனும் விடைக்கிடைக்கலாம் என்றும் தெரிந்தது. அவரை தேடிச் சென்றபோது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் அந்த சலவைத் தொழிலாளிக்கு வயது 90 என்பது மட்டுமல்ல அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை வேறு கிடையாது.

பார்வை இல்லாத நிலையில் எப்படி இவர் தான் அசல் அரங்கன் என்று அடையாளம் கூற முடியும்?

இவர்கள் வந்த நோக்கத்தை தெரிந்த கொண்ட அந்த தொழிலாளி, “கவலைப்படாதீர்கள்… எனக்கு புறக்கண் தான் இல்லையே தவிர அரங்கன் தந்த அகக்கண் இன்னமும் உள்ளது” என்று கூறியவர், “அரங்கனின் மேனியில் கஸ்தூரி அதிகளவு , பயன்படுத்தப்பட்டிருக்கும். அவரது ஆடையை நான் துவைப்பதற்கு முன், அந்த ஆடையை நனைத்து அதை பிழிந்து அந்த நீரை பருகிவிட்டே தான் ஒவ்வொரு முறையும் சலவை செய்வது வழக்கம், எனவே அரங்கனுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்துவிட்டு அந்த ஈர ஆடையை என்னிடம் கொடுங்கள் போதும்!” என்றும் கூறினார்.

அவர்களும் அதே போன்று அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்து ஈர ஆடையை தர, அதை கண்களில் ஒற்றிக்கொண்டு பிழிந்து பருகிய அந்த சலவைத் தொழிலாளி, “இவரே நம் பெருமாள்!” என்று உற்சாகத்துடன் கூக்குரலிட்டார். அன்று முதல் தான் திருவரங்கத்தில் உற்சவருக்கு ‘நம்பெருமாள்’ என்று பெயர் ஏற்பட்டது.

ஒரு ஏழை சலவைத் தொழிலாளி சூட்டிய பெயரையே இன்றளவும் வைத்துக்கொண்டு நம்பெருமாள் அருள்பாலித்து வருவதில் வியப்பேதும் இருக்க முடியாது. ஏனெனில்… அவர் தான் ‘நம்’ பெருமாளாயிற்றே!


No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...