இந்தியர்களில் 99.87 சதவீதம்பேர்கள் தாராஷிகோ என்கிற பெயரையே கேள்விப்பட்டதில்லை என்கிற செய்தி என் மண்டைக்குள் உறைக்க நீண்ட நேரம் பிடித்தது. இந்தியர்களிடமிருந்து மறைக்கப்பட்ட மிக முக்கியமான ஒருவன் தாராஷிகோ. நாம் அவனைக் குறித்துத்தான் பள்ளியில் படித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக நாம் படித்ததெல்லாம் கொடுங்கோலர்களின் சரித்திரத்தைத்தான்.
முகலாய அரசருக்கு மிகவும் பிரியப்பட்ட மகனாகவும், அவருக்கு அடுத்தபடியாக அரியணை ஏறியிருக்க வேண்டியவருமான தாரா ஷிகோ அவரது சகோதரரான அவ்ரங்க்ஸிப்பினால் கொல்லப்பட்டார். ஹிந்து மத இலக்கியங்களின் மீது மிகுந்த பற்றுள்ளவராக இருந்த தாரா ஷிகோ, பகவத் கீதையையும், பிரபோத சந்திரோதயா எனப்படும் பத்தாம் நூற்றாண்டு தத்துவ நாடகத்தையும், யோக வஷிஷ்டத்தையும் இந்திய அறிஞர்களின் உதவியுடன் பாரசீக மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்.
அதனுடன் இந்திய தத்துவங்களுக்கு அடிப்படையான ஐம்பத்தி இரண்டு உபநிஷத்துகளையும் பனாரஸ் பண்டிதர்களின் உதவியுடன் பாரசீக மொழியில் எழுதியிருக்கிறார். சிர்-இ-அக்பர் (The Grand Secret) என்கிற தலைப்பில் எழுதி முடிக்கப்பட்ட அந்தப் புத்தகம் ஜூன் 28, 1657-ஆம் வருடம் வெளியிடப்பட்டது. புத்தகம் வெளியிடப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே அவரது சகோதரர் அவ்ரங்க்ஸிப்புடன் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்ட தாரா ஷிகோ பல்வேறு துயரச் சம்பவங்களுப் பின்னர் பிடிபட்டு அவ்ரங்க்ஸிப்பின் உத்தரவின் பேரில் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
தாரா ஷிகோ முகலாய அரியணை ஏறியிருந்தால் இன்றைய இந்திய வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். அவரது பாரசீக மொழிப் புத்தகங்கள் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மேற்கத்திய நாடுகளை அடைந்தது. அவர் இல்லாதிருந்தால் பகவத்கீதை மேற்குலகை அடைந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.
முகலாய அரசர் ஷாஜஹானுக்கும், மும்தாஜுக்கும் பிறந்த நான்கு மகள்களில் மூத்தவளான ஜஹனாராபேகமும், எல்லாவருக்கும் கடைசியான ரோஷனாராபேகமும் மிக முக்கியமானவர்கள். முகலாய அரியணை அரசியலில் ஷாஜஹானும், அவருக்குப் பிரியமான ஜஹானாரா பேகமும், அவரது மூத்தமகனான தாரா ஷிகோவும் ஒரு கட்சிக்காரர்கள் என்றால், ரோஷனாரா பேகமும், அவ்ரங்க்ஸிப்பும் இன்னொரு கட்சிக்காரர்கள். அரண்மனையின் அந்தப்புரத்தில் எடுக்கப்படும் அத்தனை ரகசிய முடிவுகளையும் தக்காணத்தில் இருந்த அவ்ரங்க்ஸிப்பிற்கு ஒற்றர்கள் மூலம்ரோஷனாராபேகம் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அதனை வைத்தே அவ்ரங்க்ஸிப் முகலாய அரண்மனையைக் கைப்பற்ற முடிந்தது என்பதில் சந்தேகமில்லை.
ரோஷனாராபேகம் தனது மூத்த சகோதரனான தாரா ஷிகோவிடம் மிகக் கடுமையான வெறுப்பு கொண்டிருந்தாள். அவள் மூலம் தனக்கு அரண்மனைக்குள்ளேயே கடுமையான எதிரிகள் உருவாகியிருப்பதனை தாரா ஷிகோ உணர்ந்திருக்கவில்லை. அதனை அவருக்கு எடுத்துச் சொன்ன அவர்களது நண்பர்களின் பேச்சையும் தாரா ஷிகோ மதிக்கவில்லை. ஷாஜஹானுக்குப் பிறகு தானே ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் போவது உறுதியானது என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்கவில்லை. அதையெல்லாம் விட, தாரா ஷிகோ முகலாய அரசவை முல்லாக்களை தனது எதிரிகளாக்கிப் பெரும் பிழை செய்திருந்தார். எல்லா மதத்தவரையும் மதித்து நடக்கும் அவரை அரசவை முல்லாக்கள் அவரைக் "காஃபிர்" என்று மனதுக்குள் கறுவிக்கொண்டு தாராவைக் கவிழ்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஷாஜஹான் அவரிடம் அரசுப் பொறுப்புகளை ஒப்படைத்த காலத்தில் தாரா ஷிகோ ஏறக்குறைய இஸ்லாமை விட்டு வெளியேறியிருந்தார். வெள்ளைக்கார கிறிஸ்தவ பாதிரிகள் என்னேரமும் அவரைச் சூழ்ந்திருந்தார்கள். தொடர்ந்த மூளைச்சலவையின் காரணமாக தாரா ஷிகோ ஒரு கிறிஸ்தவரைப் போலவே நடந்து கொள்ளத் தலைப்பட்டார். அவர் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டதாகவும் வதந்திகள் உலவின. ஒருவேளை அவர் பதவியேற்றிருந்தால் இந்தியாவை ஆண்ட முதல் கிறிஸ்தவ அரசாராக அவர் இருந்திருக்கலாம். மெல்லக் கசிந்த இந்தச் செய்திகளை முகலாய அரசவை முல்லாக்கள் வெறுத்தார்கள். எனவே இஸ்லாமிய அடிப்படைவாத எண்ணம் கொண்டவராக அறியப்படுகிற, தாரா ஷிகோவினால் "நமாஸி" என்று தமாஷாக அழைக்கப்பட்ட அவ்ரங்க்ஸிப்பிடம் ரகசியமாக தொடர்பு வைத்திருந்தார்கள்.
போரில் தோல்வியடைந்த தாரா ஷிகோவும் அவரது ஏழு வயது மகனான ஷிஃபிர் ஷிகோவும் கைப்பற்றப்பட்டு, தில்லியில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பின்னர் ஒரு சிறிய கட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டார்கள் (அந்தக் கட்டிடம் இன்றைக்கும் தில்லியில் இருக்கிறது). அவரை என்ன செய்வது என்று அவ்ரங்க்ஸிப் அவரது அரசவை பிரதானிகள் மற்றும் சகோதரி ரோஷனரா பேகத்திடம் ஆலோசனை கேட்க, ஒன்றிரண்டு பேர்கள் அவரை மற்ற இளவரசர்களைப் போல குவாலியர் சிறையில் அடைத்து வைக்கலாம் என்று யோசனை சொல்ல, ரோஷனாரா பேகம் மிகக் கோபத்துடன் தாரா ஷிகோவைக் கொல்ல வேண்டும் என்று வாதிடுகிறாள். அவளுக்கு ஆதரவாக அரசவை முல்லாக்களும் சேர்ந்து கொண்டு காஃபிரான தாரா ஷிகோவைக் கொல்வதுதான் சரியானது என்று யோசனை சொல்ல, அவ்ரங்க்ஸிப் அவரைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். அதன்படியே தாரா ஷிகோவைக் கொல்ல அவரது அடிமைகளில் ஒருவனை அனுப்புகிறார்.
இதற்கிடையே, தன்னையும் தன் மகனையும் விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சிய தாரா ஷிகோ தன்னுடைய உணவைத் தானே சமைத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு, தனது மகனுடன் பேசியபடியே ஒரு சிறிய பாத்திரத்தில் பருப்பை (lentils) வேகவைத்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் கதவை உடைத்துக் கொண்டு நான்கு பேர் உள்ளே புகுந்திருக்கிறார்கள். தாரா ஷிகோ உடனே சிறுவனைத் தூக்கி அணைத்துக் கொண்டு, "நம்மைக் கொல்வதற்காக வந்திருக்கிறாகள் மகனே" எனக் கூறியபடி சமையலறையிலிருந்த சிறிய கத்தியை எடுத்துக் கொண்டு அவர்களுடன் சண்டையிடுகிறார்.
தன்னுடைய நேரம் வந்துவிட்டதை உணர்ந்த தாரா ஷிகோ சத்தமாக "முகமது எனக்கு இறப்பைத் தந்தார்; தேவனின் பிள்ளை என்னைக் காப்பார்" எனப் பாரசீக மொழியில் மீண்டும் மீண்டும் சத்தமாகச் சொல்கிறார்,
"He found the Prince in his apartment raising his eyes to heaven, and repeating these words: [Mahammad ma-ra mikushad, ibn Allah Maryam mibashaid, Pers.], which is, "Mahomet gives me death, and the Son of God [and Mary] will [are necessary to] save me." - Bernier, Page 102
ஷிஃபிர் ஷிகோவை தாரா ஷிகோவிடமிருந்து ஒருவன் வலுக்கட்டாயமாகப் பிடுங்குகிறான். மற்ற மூன்று பேர்களும் தாரா ஷிகோவின் மீது பாய்ந்து அவரை அடித்துத் தரையில் வீழ்த்திக் கழுத்தை அறுத்துத் தலையைத் துண்டித்து எடுக்கிறார்கள். இது அத்தனையும் அந்தச் சிறுவனின் முன்பு நடக்கிறது. அந்தச் சிறுவன் மனது என்ன பாடுபட்டிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
துண்டித்த தலையைக் கழுவி, ஒரு தட்டில் வைத்து அவ்ரங்க்ஸிப்பின் முன் வைக்கிறார்கள். அவ்ரங்க்ஸிப் மிகச் சந்தோஷமாகத் தனது வாளின் முனையால் அந்தத் தலையைத் தொட்டுப் பார்க்கிறார். அதே வாளால் தலையின் ஒரு கண்ணைத் திறந்து பார்த்து அது சரியானதுதான் என உறுதி செய்து கொண்டு உடனடியாக அந்தத் தலையை ஒரு பெட்டியில் வைத்து மூடி "பாதுஷாவின் பரிசாக" சிறைப்பட்டிருக்கிரும் அவரது தந்தையான ஷாஜஹானிடம் அனுப்பி வைக்க உத்தரவிடுகிறார் அவ்ரங்க்ஸிப் (Page 103).
பெட்டியில் என்ன இருக்கிறது என்பதனை அறியாத ஷாஜஹான் சந்தோஷமாக "இப்போதாவது அந்தக் கொடியவனுக்கு இந்த அப்பனின் நினைவு வந்ததே" என்று சொல்லிக் கொண்டு பெட்டியைத் திறந்து பாத்து அவரது பிரியமான மகனின் வெட்டப்பட்ட தலையைப் பார்த்துக் கதறி அழுகிறார்.
பின்னர் அந்தத் தலையையும், தாரா ஷிகோவின் உடலையும் ஹுமாயூனின் கல்லறையில் புதைக்க உத்தரவிடுகிறார் அவ்ரங்க்ஸிப். சிறுவன் ஷிஃபிர் ஷிகோ அவ்ரங்க்ஸிப்பை எதிர்த்த பிற இளவரசர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த குவாலியர் சிறைக்குக் கொண்டு போய் சிறையில் அடைக்கப்படுகிறான்.
No comments:
Post a Comment