Wednesday, May 6, 2020

சின்ன பிரச்சனை

உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. நாள்தோறும் ஒரு முயல் அந்த தோட்டத்திற்குள் நுழைந்து இலை, காய்கறி பிஞ்சுகளை தின்று வந்தது. அதை பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல் அவனிடம் சிக்கவே இல்லை.

எப்படியாவது முயலைப் பிடித்தாக வேண்டும் என்று நினைத்த உழவன் அரசனிடம் சென்றான். அரசரே... என் தோட்டத்தை முயல் ஒன்று வீணாக்குகிறது. நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றான். சிரித்த அரசன் ஒரு முயலைப் பிடிக்க உன்னால் முடியவில்லையா? என்று கேட்டான்.

நான் முயலை பார்த்து கல்லையோ, கட்டையையோ வீசினாலும் அவை அதன் மீது படுவது இல்லை என்றான் அவன். நாளையே வேட்டை நாய்களுடன் நான் அங்கு வருகிறேன். முயலின் மாய மந்திரம் எதுவும் என் வேட்டை நாய்களிடம் செல்லாது. அந்த முயலை பிடித்த பிறகுதான் நான் அங்கிருந்து திரும்புவேன் என்றான் அரசன்.

மறுநாள் படை வீரர்கள், வேட்டைக்காரர்கள், நாய்கள் சூழ அரசன் அங்கு வந்தான். எல்லோரையும் வரவேற்ற உழவன் அவர்களுக்கு சிறப்பாக விருந்து வைத்தான். விருந்து முடிந்தது. மகிழ்ச்சி அடைந்த அரசன் இன்னும் சிறிது நேரத்தில் அந்த முயல் என்ன கதி ஆகிறது பார்... என்று வேட்டையாடப் புறப்பட்டான்.

பின்பு வேட்டை நாய்கள் பயங்கரமாக குரைத்துக் கொண்டே தோட்டத்திற்குள் பாய்ந்தன. புதரில் மறைந்திருந்த முயல் அச்சத்துடன் வெளியே வந்தது. அங்கிருந்த வேலியை நோக்கி ஓடியது.

அதைப் பார்த்த அரசன், அந்த முயலைத் தப்ப விடாதீர்கள். பிடியுங்கள் என்று கத்தியபடி வேலிப்பக்கம் ஓடினான். வேட்டைக்காரர்களும், வீரர்களும் அரசனைத் தொடர்ந்து ஓடினார்கள். தப்பிக்க நினைத்த முயல் தோட்டத்திற்குள் அங்கும், இங்கும் ஓடியது.

அவர்கள் அனைவரும் அதைத் துரத்தினார்கள். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் ஒரு வேட்டை நாய் பாய்ந்து அந்த முயலைக் கவ்விப்பிடித்தது. வெற்றிப் பெருமிதத்துடன் அந்த முயலை உழவரிடம் காட்டினான் அரசன்.

இவர்களின் முயல் பிடிக்கும் முயற்சியில் தன் அழகான தோட்டம் முற்றிலும் நாசமாகிவிட்டதை அறிந்து வருந்தினான் உழவன். ஒரு முயல் என்ன?... ஆயிரம் முயல்கள் பல நாட்கள் வந்திருந்தாலும் இப்படிப்பட்ட அழிவை ஏற்படுத்தி இருக்க முடியாதே. என் முட்டாள் தனத்தால் பேரழிவைத் தேடிக் கொண்டேன் என்று வருந்தினான் உழவன்.

நீதி : சின்ன பிரச்சனைகளுக்கு பெரிய முடிவு எடுக்கக்கூடாது.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...