ஜென் ஞானிகளில் ஒருவரான சீகோவைக் காண ஓர் இளைஞன் வந்தான். அவரிடம், "சுவாமி! என்னை தாங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றார். "ஏன்?'' என்ற குருவின் கேள்விக்கு, " நானும் தங்களைப்போல் பிறருக்கு உதவியாக வாழவேண்டுமென்று விரும்புகிறேன்'' என்றான். அவ்விளைஞனிடம், "அப்படியானால் அருகில் இருக்கும் கிணற்றில் என்ன தெரிகிறது?' எனப் பார்'' என்றார்.
கிணற்றை எட்டிப் பார்த்துவிட்டு வந்த இளைஞன், "சுவாமி! எந்த கலங்கலும் இல்லாத தெள்ளிய நீரில் எனது முகம் தெரிந்தது'' என்றான். அதனைக் கேட்டதும் ஞானி சிரித்தார். #மகரயாழ்
இளைஞனுக்கு ஞானியின் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. ஞானி அந்த இளைஞனிடம், "மீண்டும் அந்தக் கிணற்றை தெளிவாகப் பார்த்துவிட்டு வா'' என்றார். இளைஞன் வெகுநேரம் அக்கிணற்றினைப் பார்த்துவிட்டுத் தெளிவோடு வந்தான். "சுவாமி! இப்பொழுது அக்கிணற்றில் அழகிய மீன்கள் துள்ளி விளையாடுவதைக் கண்டேன். கிணற்று நீரின் அடியில் பல வண்ணக் கூழாங்கற்களையும் கண்டேன்'' என்றான். அந்த இளைஞனை ஆரத் தழுவிக்கொண்ட குரு, "தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவனால் இந்த உலகில் வேறு எவருக்கும் உதவி செய்ய முடியாது. அன்பு உள்ளமும், இரக்க குணமும் இருப்பவர்களால் மட்டுமே மற்றவர்களுக்கு உதவியாக வாழ முடியும். அவர் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகும் இந்த உலகத்தாரால் நினைக்கப்படுவார்'' என்றார். ..
No comments:
Post a Comment