உயிர்களின் தலையாய கடமை இறைவனை அடைவதே. அவ்வாறு உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் இறைவன அடையும் வழிமுறைகளையும் இறைவனே வகுத்துத் தந்துள்ளான். அவ்வழி முறைகளுள் மனிதர்கள் தங்கள் உடலைச் சுற்றியுள்ள திருவாசி என்னும் ஒளி வட்டத்தை தூய்மைப் படுத்தி விருத்தி செய்வது ஆன்மீகத்தின் அரிச்சுவடியாக அமைகிறது.
திருக்கோயில்களில் உள்ள சகஸ்ர லிங்க மூர்த்திகளே நமது திருவாசியை தூய்மைப்படுத்த உறுதுணை புரியும் தெய்வ மூர்த்திகளை. இம்மூர்த்திகளை சித்தர்கள் அருளியுள்ள முறைகளில் தொடர்ந்து வழிபடுவதால் மனிதர்கள் மட்டும் அல்லாது தேவர்கள், ரிஷிகள், தெய்வ தேவதா மூர்த்திகளும் தங்கள் ஒளி வட்டத்தை விருத்தி செய்து கொள்ள முடியும். அனைத்து லோகங்களுக்கும் உரித்தான திருவாசி விருத்தி மூர்த்திகளே சகஸ்ர லிங்க மூர்த்திகள் என்பதை நினைவில் கொள்ளவும்.
சகஸ்ர லிங்க மூர்த்திகள் திருவாசி ஒளி வட்டத்தை வளப்படுத்தும் அருட் சக்திகளை வாரி வழங்கும் தன்மை பெற்றவர்கள் ஆனாலும் அவர்களுடைய திருவருட் கிரணங்களை நேரிடையாகப் பெரும் அளவிற்கு மனித உடலும் மனமும் தேவையான புனிதத் தன்மையைப் பெறாததால் சகஸ்ர லிங்கங்கள் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களில் பல திருவாசி ஈர்ப்புப் பெட்டகங்களை இறைவனே நிர்மாணித்துள்ளார். உதாரணமாக, திருச்சி அருகே உள்ள திருவாசி திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சகஸ்ர லிங்க மூர்த்தியின் அருட் கிரணங்களை ஈர்த்து மக்களுக்கு அருளும் திருப்பணியை அக்கோயிலில் விளங்கும் அன்னமாம் பொய்கையும், விபூதித் தூண்களும் நிறைவேற்றி வருகின்றன.
No comments:
Post a Comment