Saturday, April 20, 2013

திருநீற்றுப் பதிகம்




மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே
திருநீறானது, மந்திரச் சொல் போன்று அச்சம் நீக்கி, வேண்டிய நற்பயனைத் தருவது ஆகும். வானவர்கள் திருநீற்றைஅணிகின்றனர். மனிதர்களுக்கு இது, வானவர்களை விட மேலானதாகி விளங்குவது. அழகினைத் தந்து பொலியும்திருநீறு, துதிக்கப் படும் பொருளாக உள்ளது. உமையவளைப் பாகங் கொண்ட ஆலவாய் அண்ணலாகிய ஈசனின்திருநீறு இத்தகையது ஆகும்.

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
வேதத்தால் போற்றப் படுகின்ற பெருமையுடையது திருநீறு. உலக வாழ்க்கையில், ஏற்படும் பிணிகளையும், மனதால் ஏற்படும் துயரங்களையும், தீர்ப்பது திருநீறு ஆகும். நல்லறிவு தருவதும், அறியாமை மற்றும் பழி முதலியவற்றால் நேரும் புன்மைகளை அகற்றுவதும் திருநீறு ஆகும். திருநீற்றின் செம்மை, ஓதத் தகுந்த பெருமையுடையதும், உண்மைப் பொருளாய் எக்காலத்திலும் விளங்குவதாகும். இது திருவாலவாய் அண்ணலாக விளங்கும் ஈசனுக்கு உரிய திருநீறு.


முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே
திருநீறு, முக்தி இன்பத்தை தருவது. முனிவர் பெருமக்கள் அணியும் பெருமை உடையது. எக்காலத்திலும்மேலானதாக விளங்கி நலம் தருவது. இத்தகைய திருநீற்றின் மகிமை அறிந்து, சிவனடியார்கள் போற்றுகின்றனர்.திருநீறானது மன்னுயிர்களுக்கு, சிவபக்தியைத் தருவதாகும். அதனைப் போற்றி வாழ்த்த இனிமை நல்கும். எட்டு வகையான சித்திகளைத் தரவல்லது. அது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.


காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே
திருநீறு அணிந்தவர்களைக் காணும் அன்பர்கள் இனிமைக் கொள்வார்கள். அத்தகைய திருநீற்றை விரும்பி அணிபவர்களுக்கு பெருமை கொடுக்கும். வல்லமை தரும். இறப்பினைத் தடுக்கும். நல்லறிவைத் தரவல்லது திருநீறு. மன்னுயிர்களுக்கு உயர்வைத் தரும் ஆற்றல் உடையது இத்திருநீறு. இது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.


பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே
திருநீறு மெய்யில் பூசி அணிய, இனிமை சேர்க்கும். புண்ணியம் சேர்க்கும். திருநீற்றின் பெருமை பேச இனியது. உலக பந்தத்தால் உண்டாகும் ஆசைகளை நீக்கி, உயர்ந்த நிலைக்கு செல்ல வழி வகுக்கும். எல்லாவற்றிர்க்கும் அந்தமாகத் திகழ்வது திருநீறு. தேசமெல்லாம் புகழ்ந்து போற்றும் சிறப்புடைய இத்திருநீறு, இது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.


அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே
பொன்போன்ற பெரிய செல்வமாக விளங்குவது திருநீறு, அவலமாகும் துன்பத்தைப் போக்குவதும், மனத்தில் வருத்திக் கொண்டிருந்து துன்புறுத்தும் நெஞ்சக் கனலைத் தணித்து விளக்குவதும், சிறப்பினை அளிப்பதும், எல்லாநிலைகளிலும் பொருந்தி விளங்கிச் சிறப்பு தருவதும் திருநீறு. புண்ணியத் தன்மை கொண்டதுடன், புண்ணியம் செய்த பெருமக்கள் விரும்பி பூசி, மேலும் பொலிவு கொள்வதற்கும் காரணமாவது திருநீறு. செல்வம் மிக்க மாளிகைகள் சூழ்ந்த திரு ஆலவாயில் வீற்றிருக்கும் ஈசனார்க்கு உரிய திருநீறு, இத்தகைய சிறப்பினை உடையதாகும்.


எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே
முப்புரத்தை எரித்துச் சாம்பலாக்கியது திருநீறு. இம்மை, மறுமை, ஆகிய இரண்டினுக்கும் உயிர்களுக்குத் துணையாக இருப்பது திருநீறு. நித்தியமாயும், உயர்ந்த பொருளாயும் பயின்று , நுகரும் பொருளாக உடையது நீறு. அது பாக்கியமாக இருந்து விளங்கும் சிறப்புடையது. மாயையின் வயப்பட்டும் சோர்வுற்றும் தடைப்படுத்தும் உறக்க உணர்வினைத் தடுத்து புத்துணர்ச்சி தந்து தூய்மைப்படுத்தும் இயல்புடையது. அத்தகைய திருநீறு, கூர்மையான சூலப் படையுடைய திரு ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.



இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவதுநீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் கும்திரு மேனி ஆலவா யான்திருநீறே
இராவணன் திருநீறு அணியப் பெருமையுறச் செய்தது. எண்ணத்தால் தகுதியாக்கிப் போற்றி வழி படுவதற்கு உரியது திருநீறு. பராபரனைப் போன்று துதிக்கப் படும் பொருளாக விளங்குவதும், பாவத்தைப் போக்குவதும் திருநீறு.தராவனமாக இருப்பது திருநீறு. அது தத்துவமாகவும் விளங்கி நிற்பது. அத்தகையது, அரவம் அணைந்து விளங்கும்திருமேனியராகிய திரு ஆலவாய் அண்ணலுக்கு உரியதாகிய திருநீறு ஆகும்.


மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே
திருமாலும், பிரம்மனும் அறிவதற்கு அரியதாகிய வண்ணத்தை உடையது திருநீறு. தேவர்கள் தமது மெய்யில் பூசிமகிழ்வது திருநீறு. பிணிகளை நீக்கி இன்பத்தை தரவல்லது திருநீறு. அத்தகைய சிறப்புடையது, நஞ்சினை உண்டமிடற்றுடைய ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.


குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயன் திருநீறே
சமணர்களும், சாக்கியர்களும் திகைக்கும் தகைமையில் காட்சி தருவது திருநீறு. திருநீற்றை நெஞ்சில் பதித்த போதும் இனிமையைத் தரவல்ல அத்தகைய தெய்வீகம் உடையது. எண் திசையில் உள்ள சிவமாகிய மெய்ப் பொருளைச் சரணடைந்த பெருமக்களும் ஏத்தும் சிறப்புடையது திருநீறு. அத்தகையது, தேவர்கள் பணிந்து ஏத்தும் திரு ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.


ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
வலிமை மிக்க இடப வாகனத்தில் விளங்குகின்ற ஆலவாய் அண்ணலாரின் திருநீற்றைப் போற்றித் துதித்தஞானசம்பந்தர், மன்னவனாகிய கூன் பாண்டியனுடைய தீமையான பிணி யாவும் தீரும் வகையில் தேற்றிச் சாற்றிய இத் திருப் பதிகத்தை ஓத வல்லவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வார்கள்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...