Saturday, April 20, 2013

தீரா நோய்களும் தீரும் திருத்தலம்



எத்தகைய கொடிய நோய்களுக்கும் நிவாரணம் அளிக்க வல்லதே திருவாசி சகஸ்ரலிங்க வழிபாடாகும். அஸ்வினி நட்சத்திரமும் செவ்வாய்க் கிழமையும் கூடும் நாட்களில் இத்தலத்தில் உள்ள சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்டு குறைந்தது 21 பொட்டலங்கள் தக்காளி சாதம் தானமாக அளித்தலால் இரத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட கொடிய நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும். சிறப்பாக அஸ்வினி நட்சத்திரத்தில் அங்காரக மூர்த்திகளில் இயற்றப்படும் இத்தகைய வழிபாடு நிவாரண பலன்களை துரிதப்படுத்தும். சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்ட பின்னர் அன்னமாம் பொய்கையையும், விபூதித் தூண்களையும் (தற்போது நவகிரக மூர்த்திகளுக்கு வலது புறத்தில், ஆலயத்தின் தெற்கு திசையில் எழுந்தருளியுள்ள தூண்கள்) வலம் வந்து வணங்கினால்தான் வழிபாடு பூரணமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 30 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வேழவேந்தன் என்ற ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவருடைய ஒன்பது வயது பையன் தன்னுடைய ஆட்டைத் தேடி ஒரு உயரமான பாறையின் மீது ஏறிச் சென்றபோது கீழே விழுந்து விட்டான். தலையில் பலமான அடிபட்டு மிகுந்த ரத்த போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்து விட்டான். உடனே அருகிலுள்ள வைத்தியரிடம் கொண்டு சென்று வைத்தியம் பார்த்தனர். அவனைப் பரிசோதித்த வைத்தியர், இனி அவனுக்கு நினைவு திரும்பாது என்று சொல்லி அனுப்பி விட்டார். படுத்த படுக்கையாக சிறுவன் ஆகி விட்டான். மூச்சு விடுவதைத் தவிர வேறு எந்த செய்கையையும் அவனிடம் காண முடியவில்லை.

செய்வதறியாது திகைத்த அந்த ஏழை விவசாயி தினந்தோறும் திருவாசி சென்று இறைவனை வழிபட்டு வந்தான். ஒரு நாள் இறைவன் அருளால் கருவூர் சித்தரை திருக்கோயிலுக்குச் செல்லும் வழியில் காண நேர்ந்தது. அந்த ஏழை விவசாயிடம் அவனுடைய மைந்தனின் நிலையைக் கேட்டு அறிந்தார். இது பூர்வ ஜன்ம வினையின் விளைவே என்பதை எடுத்துக் கூறி, சகஸ்ர லிங்க வழிபாட்டை இயற்றும் முறையை அவனுக்கு விளக்கிக் கூறினார். அதிருஷ்ட வசமாக அடுத்து வந்த ஒரு செவ்வாய்க் கிழமை அஸ்வினி நட்சத்திரம் கூடும் நாளாக அமைந்தது. அந்த ஏழை விவசாயியும் மூன்று கூடை நிறைய செந்நிற அரளிப் பூக்களைக் கொண்டு வந்து மாலைகள் தொடுத்து, சகஸ்ர லிங்க மூர்த்திக்கும், எல்லா விபூதித் தூண்களுக்கும் மாலைகள் அணிவித்து வணங்கினான்.

அன்னமாம் பொய்கையிலிருந்து தீர்த்தம் எடுத்து பிரசாதம் செய்து அங்கிருந்த ஏழைக் குழந்தைகளுக்கு பிரசாதமும் அளித்து விட்டு வீட்டிற்குத் திரும்பினான்

என்ன ஆச்சரியம், அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. அப்பா என்று கூவிக் கொண்டு அவனுடைய ஒன்பது வயது மகன் ஓடி வந்து தந்தையைக் கட்டிக் கொண்டான். இரண்டு வருடங்களாக படுத்து படுக்கையாக கண்களைக் கூடத் திறக்காது மயங்கிக் கிடந்த சிறுவன் ஒரே நாளில் பரிபூரண குணம் அடைந்தது கண்டு அந்த ஊரே அதிசயத்தில் ஆழ்ந்தது.

திருச்சி அருகே உள்ள அந்த கிராமம் எது தெரியுமா? ஆம், திருவாசிதான் அந்த சஞ்சீவ சக்தி பெற்ற கிராமம். ஆதிமூல சகஸ்ர லிங்கம் எழுந்தருளியுள்ள கிராமம். எத்தகைய கொடிய நோய்களையும் தீர்க்க வல்ல திருத்தலம் என்பதால்தான் குரு மங்கள கந்தர்வா, ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமத்தின் சார்பில் இத்திருத்தலத்தில் முதல் இலவச மருத்துவ முகாம் சேவையை ஆரம்பித்து தமிழகம் எங்கும் நூற்றுக் கணக்கான கிராமங்களில் லட்சக் கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு தன்னுடைய தொண்டர் குழாம் மூலம் அற்புத நோய் நிவாரண திருப்பணிகளை நிறைவேற்றி வந்தார்கள்.

அது மட்டும் அல்லாது தமிழகத்தின் புனித நதியான காவிரி ஆற்றின் வட, தென் கரைகளில் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களில் உழவாரத் திருப்பணி, ஹோம யக்ஞம், அன்னதான மகோத்சவம் போன்ற அருட் பணிகளையும் நிறைவேற்றியபோது முதன் முதலில் உழவாரத் திருப்பணியை நிறைவேற்றிய திருத்தலமும் திருவாசிதான் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...