Thursday, April 18, 2013
விடாது துரத்தும் காட்டு முனி
விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தை தொடுகின்ற இந்த நவீன காலத்திலும், பல கிராமங்களில் காத்து, கருப்பு, பேய், பிசாசு, ஆவி, முனி பற்றி அச்சமூட்டும் தகவல்கள் உலவி கொண்டுதான் இருக்கின்றன. அப்படி முனி பயத்தால் ஒரு கிராம மக்கள் ஊர்ஊராக அலைந்து கொண்டு இருக்கின்றனர். இடம் பெயர்ந்து சென்றாலும் முனியின் அட்டகாசம் தொடர்ந்தபடியே இருக்கிறது என்று சொல்லி திகிலூட்டுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது உத்தனப்பள்ளி. இப்பகுதியில் கூடு மாக்கனப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. 250-க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களது மூதாதையர்கள் வனத்தை ஒட்டிய பகுதியில் வாழ்க்கை நடத்தி வந்தவர்கள். கிராமத்தில் தற்போது மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் இருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதி பழைய கூடு மாக்கனப்பள்ளி எனப்படுகிறது. 4 தலைமுறைக்கு முன்பு இந்த காட்டில்தான் மக்கள் வசித்து வந்திருக்கின்றனர். காடுகளில் கிடைக்கும் தேன், பழம் போன்ற பொருட்களை சேகரித்து பிழைத்தவர்கள். அந்த காலத்தில் ஆரம்பித்த முனியின் சேட்டைகளை மக்கள் இன்னும் அச்சத்தோடு சொல்கிறார்கள்.. அடர்ந்த காட்டை ஒட்டிய பகுதியில் சின்ன சின்ன மர வீடுகள் இருந்தன. மின்சார வசதி கிடையாது. மாலை 6 மணிக்கே கும்மிருட்டு சூழ்ந்துவிடும். ஓநாய்களின் ஊளை சத்தம் காதை பிளக்கும். திடீரென காட்டில் இருந்து கொடிய விலங்குகள் வெளியேறி, ஊருக்குள் புகுந்துவிடும். கண்ணில் படும் ஆடு, மாடுகளை கடித்து குதறி விடும். மனிதர்களை பார்த்தாலும் விடாது. விலங்குகளிடம் சிக்கி பலர் இறந்திருக்கிறார்கள்.
இந்த சூழலில்தான் அந்த பயங்கரம் அரங்கேற ஆரம்பித்தது. ஒருநாள் நள்ளிரவு நேரம். அடர்ந்த காட்டில் இருந்து அந்த மர்ம உருவம் ஊருக்குள் புகுந்தது. ஆடு, மாடுகளை அடித்து போட்டு, அவற்றின் ரத்தத்தை குடித்தது. எதிரில் பட்ட மனிதர்கள் அதே இடத்தில் ரத்தம் கக்கி இறந்தார்கள். இந்த பயங்கரம் அடுத்தடுத்த நாட்களும் நடந்தது. மர்ம உருவத்தால் தாக்கப்பட்டு மனிதர்களும் ஆடு, மாடுகளும் பலியாவது தொடர்கதையானது. கிராமம் பதறியது. ஊர் கூட்டம் கூட்டி பேசினர். மாந்திரீகரை அழைத்து ஆரூடம் கேட்டனர். ‘‘இது காட்டு முனியின் வேலை. இடத்தை காலி செய்துவிட்டு ஓடிவிடுவதுதான் உங்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் யாருமே மிஞ்ச மாட்டீர்கள். காட்டு முனி தேடிவருவதற்குள் ஓடிவிடுங்கள்’’ என்றார் மந்திரவாதி.
மக்கள் பீதியடைந்தார்கள். சாமான்களை அள்ளிக் கொண்டார்கள். குழந்தை, குட்டிகளை தூக்கிக் கொண்டார்கள். தாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடுகளுடன் அந்த இடத்தை காலி செய்து புறப்பட்டார்கள். அங்கிருந்து 2 கி.மீ. தூரம் நடந்து வந்து தங்கினார்கள். செம்மண்ணால் வீடு கட்டி அங்கு வசிக்க ஆரம்பித்தார்கள். குடிநீருக்காக சிறிய கிணறு, ஊர் பஞ்சாயத்து பேச ரட்சை மண்டபம், வழிபடுவதற்கு அம்மன் கோயில் ஆகியவற்றையும் அமைத்தார்கள். சிறிது காலம் அமைதியாக போய்க் கொண்டிருந்தது. மக்களின் நிம்மதியும் மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை. ஆடு, மாடுகள் சாக ஆரம்பித்தன. ரத்தம் கக்கி பலர் செத்து விழுந்தார்கள். காட்டு முனி அவர்களை துரத்திக் கொண்டு அங்கும் வந்தது தெரியவந்தது. அந்த இடத்தையும் காலி செய்துகொண்டு இடம் பெயர்ந்தார்கள் மக்கள். ஊர் பராமரிப்பின்றி போனது. வீடுகள், கோயில், பஞ்சாயத்து ரட்சை மண்டபம் ஆகியவை இடிந்து பாழடைந்தன.
இப்படி எங்கள் மூதாதையர்களை காட்டு முனி தொடர்ந்து விரட்டி வந்திருக்கிறது. அதன் பின்னர், பழைய கூடு மாக்கனப்பள்ளியில் இருந்து வெகு தூரம் நகர்ந்து வந்துவிட்டார்கள். மெல்ல செம்மண் வீடுகள் மறைந்தன. ஓட்டு வீடு, கான்கிரீட் வீடுகளில் குடியேற ஆரம்பித்தார்கள்.. என்று விவரிக்கின்றனர் அப்பகுதியினர். தனது சிறு வயது திகில் அனுபவங்கள் குறித்து புதிய கூடு மாக்கனப்பள்ளியை சேர்ந்த 95 வயது பாட்டி தொட்டியம்மா கூறியது.. ‘‘கூடு மாக்கனப்பள்ளி காட்டுப் பகுதியில இருந்தப்போ.. திடீர் திடீர்னு மர்ம வியாதி வந்து நெறய பேரு செத்து போனாங்க. ஊருக்குள்ள நடுராத்திரி நேரத்தில மர்ம உருவம் அடிக்கடி உலாத்தும். அதை பார்த்து மிரண்டு போயி ஆடு, மாடுங்க கத்தும். சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்தவங்க ரத்தம் கக்கி செத்தாங்க. இதனால் பயந்துபோயி ஊர காலி பண்ணாங்க. அவங்க எந்த இடத்துக்கு போனாலும் காட்டு முனி கூடவே துரத்திச்சு. இப்பகூட காட்டு முனி அப்பப்ப சேட்டை பண்ணுறாப்புல இருக்கு. பல தலைமுறையா எங்க மக்களை காட்டு முனி துரத்திக்கிட்டே வருது..’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
No comments:
Post a Comment